திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 36 நாதா குமரா |
தமிழில் பொருள் எழுதியது 'திருப்புகழ் அடிமை' திரு சு. நடராஜன் (சென்னை) Meanings in Tamil by 'Thiruppugazh Adimai' Thiru S Nadarajan (Chennai) | PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
பாடல் 36 ... நாதா, குமரா நம (சிவபெருமானுக்கு உபதேசித்த பொருள் எது?) நாதா, குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்? வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பத சேகரனே. ......... பதவுரை ......... வேதா முதல் விண்ணவர் ... பிரம்ம தேவன் முதலிய தேவர்கள், சூடும் மலர் பாதா ... தங்கள் தலையில் சூடிக் கொள்ளும் தாமரைபோன்ற பாதங்களை உடையவனே, குற மின் பத சேகரனே ... மின்னல் கொடிபோன்ற வள்ளி பிராட்டியின் பாதங்களை தமது தலையில் சூட்டிக் கொண்டவனே, அரனார் ... சிவ பெருமான், நாதா ... நாதனே, குமரா நம ... குமரனே போற்றி என உன்னை வணங்கி, ஓதாய் என ... எனக்கு உபதேசி என விளம்ப, ஓதியது எப் பொருள் தான்? ... நீ அவருக்கு உபதேசித்த பொருள் எது? (அதை நீ எனக்கு உபதேசித்து அருள் புரிய வேண்டும்). ......... பொழிப்புரை ......... பிரம்மன் முதல் சகல தேவர்களும் தன் சிரத்தில் சூடிக் கொள்ளும் மலர்போன்ற பாதங்களை உடையவனே. குறக் கொடியாகிய வள்ளியின் பாதங்களை தன் தலையில் தரித்திருப்பவனே. சிவனார், எல்லாருக்கும் தலைவனே, அழியா இயற்கையனே, உனக்கு நமஸ்காரம், எனக்கு உபதேசிப்பாய்' என்று வேண்ட உபதேசித்தது எத்தகைய பொருளோ? ......... விளக்கவுரை ......... இங்கு நயமாக கேட்பதை 'சயில அங்கனைக்கு' எனத் தொடங்கும் மதுராந்தகம் திருப்புகழில், (பாடல் 719) .. சிறியேன் தனக்கு உரை செயின் சற்று உன் குருத்துவம் குறையுமோ தான்? .. ... என்று பிடிவாதமாகவும் கேட்கிறார். முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பாடலின் பின் பாதியில் பதிலையும் தருகிறார். தன்னை அன்புடன் விடாமல் பற்றிக்கொள்ளும் அடியவர்களுக்கு தான் என்றும் எளியவன் என்ற தத்துவத்தை வள்ளி திருமணத்தின் மூலம் உலகறிய வெளிப்படுத்தி விட்டார். இக்கருத்தை 24ம் கந்தர் அலங்காரத்தில், .. குன்னங் குறிச்சி வெளியாகி விட்டது .. ... என்பார். இந்த ரகசியத்தையே சிவனார் மனம் குளிர உபதேசம் செய்கிறார். .. வள்ளிசன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க வல்லைக்கு ளேற்று மிளையோனே .. ... என்பார் 'கள்ளக் குவால் பை' எனத் தொடங்கும் வள்ளிமலை திருப்புகழில் (பாடல் 534). வள்ளிப் பிராட்டியார் மேற் கொண்ட தீவிர அன்பு நெறி, வள்ளி சன்மார்க்கம் எனப்படுகிறது. சிவனாருக்குக் கிடைத்த இந்த விளக்கமே தனக்கும் உபதேசிக்கப்பட்டது. இதை, 'கின்னம் குறிச்சி .. ' எனத் தொடங்கும் 24ம் அலங்காரத்தில் குறிப்பிடுகிறார். தனது சுற்றத்தாரை எல்லாம் விட்டு நீங்கி இதயமாகிய பரண் மீது நின்றுகொண்டு, காம குரோதாதிகளாகிய பறவைகள் வந்து தனது பக்திப் பயிரை பறித்துப் போகாத வண்ணம், நாவாகிய கவுணில் முருகா முருகா' எனும் சொற்களாகிய கற்களை எறிந்து அந்தப் பறவைகளை ஓட்டி, தவம் செய்து வந்தாள் வள்ளி. முருகன் தானே வலிய வந்து ஆட்கொண்டான். இதுவே வள்ளி சன்மார்க்கம். நான், எனது' என்கிற பற்றுகளை விட்டு முருகனிடம் பரிபூரண சரணாகதி அடையும்போது முருகன் தனது உயர் நிலையைவிட்டு நம் நிலைக்கு வலிய வந்து ஆட்கொள்வான் என்பதே இந்த ரகசிய உபதேசம். இனி சிவபெருமான் முருகப் பெருமானிடம் பிரணவ உபதேசம் பெற்றார் என்பதின் தத்துவத்தை ஆராய்வோம். சிவனாருக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததா? 'அம்பொத்த விழி' எனத் தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழில் (பாடல் 24), .. கொன்றைச் சடையருக்கு ஒன்றைத்தெரிய கொஞ்சித் தமிழில் பகர்வோனே .. ... என தமிழிலேயே உபதேசம் செய்தார் என்று கூட கூறியுள்ளார். இதன் உண்மை என்ன? சிவம் என்கிற பரம் பொருள் தனது சொரூப நிலையில் அருவாய் நிர்விகாரமாய் இருக்கும். அதற்கு நான் என்கிற தன்மையே இல்லை. வேதாந்தத்தில் பிரம்மம் மாயையின் பிரதிபலிப்பாய் ஈஸ்வரன் என்கிற நிலைக்கு வருகிறது. பிரம்மப் பொருள் தன்னோடு அபின்னமாய் இருக்கும் சக்தியின் அதிஷ்டானத்தால் உருவம் பெறுகிறது. அபின காளி தானாட .. ' என்று அருணகிரியார் குறிப்பது இதைத் தானோ? சிவம் சிவன் ஆகிறது. இந்த சக்தியின் தன்மைக்கு சலன ரூபமாய் (vibrations) இருக்கும். அசைவு இருந்தால் ஓசையும் வரும். சிவத்திலிருந்து சக்தி பிரியும்போது உண்டாகும் அசைவே பிந்து என்றும் அதன் ஓசையே நாதம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஓசையே பிரணவம். கிரேக்க தேசத்தவரும் இதையே (sphota) என்கிறார்கள். இதன்படி நிர்விகாரமாய் இருந்த பிரம்மம் சலனமாகும்போது எழும் நாதமே பிரணவம். முருகன்தான் அந்த நாதத் தத்துவம். 'நாதத் தொனியோனே' என்பார் அருணை முனிவர். தன்னிடத்தில் இருந்த ஆதி நாதமாகிய பிரணவத்தை சலன நிலையில் விரிந்ததை சிவன் கேட்டான் என்பதுதான் சிவன் முருகனிடம் உபதேசம் பெற்றான் என்பதன் உட்பொருள். அரணியில் இருந்த நெருப்பு அதைக் கடையும்பொழுது வெளிப்படுவதுபோல் சிவத்தில் ஒடுங்கிக் கிடந்த நாதம் சக்தியின் அதிஷ்டானத்தால் முருகனாக விரிந்தது. அப்படி விரிந்த அந்த பிரணவ நாதத்தை சிவனே முதல் முதலில் கேட்டார் என்பதே தத்துவம். முருகனின் ஆறுமுக தத்துவத்திலும் கந்த புராணத்திலும் சிவபெருமான் சொல்லுவதை நாம் மறக்கக்கூடாது. சிவபெருமான் சக்தியை நோக்கி கூறுவது, .. என்னுடைய ஐந்து முகத்தோடு உன்னுடைய முகமும் சேர்ந்ததே முருகனின் ஆறு முகமாகும் .. சிவபெருமானின் ஐந்து முகம் பிந்து. சக்தியின் ஒருமுகம் நாதம். இவைகளின் கூட்டே முருகனின் வடிவு. 63ம் கந்தர் அலங்காரத்தில், .. பாதித் திரு உரு பச்சென்றவர்க்கு தன் பாவனையை போதித்த நாதன் .. ... என்கிறார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 4.675 pg 4.676 pg 4.677 WIKI_urai Song number: 36 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.10mb to download |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.27mb to download |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) பாடகர் பக்கத்திற்கு to singer's page |
பதிவிறக்க 0.45mb to download |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |