| ......... மூலம் .........
உருவாய் எவர்க்குநினை வரிதாய் அனைத்துலகும் உளதாய் உயிர்க் குயிரதாய்
உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம ஒளியாய் அருட்பொருளதாய்
வருமீச னைக்களப முகனா தரித்திசையை வலமாய் மதிக்க வருமுன்
வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான்முன் வைகுமயி லைப்புகழுமாம்
குருமா மணித்திரள் கொழிக்கும் புனற்கடக் குன்றுதோ றாடல்பழனம்
குழவுபழ முதிர்சோலை ஆவினன் குடிபரங் குன்றிடம் திருவேரகம்
திரையாழி முத்தைத் தரங்கக்கை சிந்தித் தெறித்திடுஞ் செந்தி னகர்வாழ்
திடமுடைய அடியர்தொழு பழையவன் குலவுற்ற சேவற் றிருத் துவசமே.
......... சொற்பிரிவு .........
உருவாய் எவர்க்கும் நினைவரிதாய் அனைத்து உலகும் உளதாய் உயிர்க்கு உயிரதாய்
உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம ஒளியாய் அருட்பொருளதாய்
வரும் ஈசனைக் களப முகன் ஆதரித்து திசையை வலமாய் மதிக்க வரும் முன்
வளர் முருகனைக் கொண்டு தரணி வலம் வந்தான் முன் வைகு மயிலைப் புகழுமாம்
குரு மாமணித்திரள் கொழிக்கும் புனல் கடம் குன்றுதோறாடல் பழனம்
குலவு பழமுதிர்சோலை ஆவினன்குடி பரங் குன்றிடம் திருவேரகம்
திரையாழி முத்தைத் தரங்கக் கை சிந்தித் தெறித்திடும் செந்தில் நகர் வாழ்
திடமுடைய அடியர் தொழு பழையவன் குலவுற்ற சேவல் திருத் துவசமே.
......... பதவுரை .........
உருவாய் ... அடியவர்களுக்கு அனுக்ரகம் செய்யும் பொருட்டும் சில திருவிளையாடல்கள் செய்யும் பொருட்டும் நடராஜ மூர்த்தி தட்சிணாமூர்த்தி முதலிய பல வடிவங்களை எடுத்தும்,
எவர்க்கும் நினைவரிதாய் ... ஆனால் தன்னுடைய சொந்த நிலையான சொரூப நிலையில் எவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவராயும்,
அனைத்துலகும் உளதாய் ... சகல உலகங்களில் வாழும் ஜீவன்களின் சொரூபமாயும்,
உயிருக்கு உயிரதாய் ... அந்தந்த உயிர்களை உள் நின்று இயக்கும் உயிர்ச் சக்தியாயும்,
உணர்வாய் ... அந்த உயிர்களின் அந்தக்கரணமான அறிவு ரூபமாயும்,
விரிப்பரிய உரைத் தேர் ... விரித்துச் சொல்வதற்கு அரிதான வேத மொழிகளால் ஆராய்ந்து நிச்சயிக்கப்படும்,
பரப் பிரம ஒளியாய் ... மேலான அனைத்தையும் கடந்த பிரம்மப் பொருளாய்,
அருட் பொருளதாய் ... அருட் பொரும் ஜோதியாய்,
வரும் ஈசனை ... நின்று விளங்கும் சிவ பெருமானை,
களப முகன் ... யானை முகக் கணபதி,
ஆதரித்து ... அன்பு பாராட்டி,
முன் திசையை வலமாய் மதிக்க வரு முன் ... முன் ஒரு காலத்தில் எட்டு திசையில் உள்ளோரும் மதிக்கும்படி அந்த ஈசனை வலம் வரும் சமயத்தில்,
வளர் முருகனைக் கொண்டு ... விளங்கும் முருகனைத் தன் முதுகில் சுமந்து கொண்டு,
தரணி வலம் வந்தான் ... பூமியைச் சுற்றி வந்த (அந்த முருகனின்),
முன் ... முன்பாக,
வைகும் மயிலைப் புகழுமாம் ... வீற்றிருக்கும் மயிலைப் புகழ்ந்து பேசுமாம்
(அது எது என வினாவினால்)
குரு ... ஒளி வீசுகின்ற,
மா மணித்திரள் ... ரத்னக் குவியல்களை,
கொழிக்கும் ... வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரும்,
புனல் ... அருவிகளும்,
கடம் ... காடுகளும் விளங்கும்,
குன்றுதோறாடல் ... பல மலைகள்,
பழனம் ... பல வயல்கள்,
குலவு பழமுதிர் சோலை ... பிரகாசம் பொருந்திய சோலை மலை,
ஆவினன்குடி ... திருவாவினன்குடி,
பரங் குன்றுறிலும் ... திருப்பரங்குன்றிலும்,
திருவேரகம் ... சுவாமிமலை,
திரை ஆழி முத்தை ... கடல் அலைகள் முத்துக்களை,
தரங்கக்கை சிந்தி ... சமுத்திரம் தன் கைகளினால்,
தெறித்திடும் ... வீசி எறிந்திடும்,
செந்தில் நகர் வாழ் ... திருச்செந்தூரில் வாழும்
திடமுடைய அடியர் தொழு ... திடமான பக்தியைக் கொண்ட அடியார்கள் போற்றி வணங்குகின்ற,
பழையவன் ... பழம் பொருளாகிய முருகப் பெருமான்,
குலவுற்ற ... கையில் தரித்திருக்கும்,
சேவல் திருத் துசவமே ... கொடியில் உள்ள சேவலேதான் அது.
......... விளக்கவுரை .........
பாடலின் முற்பகுதில் ஈசனின் பரத்துவம் பேசப்படுகிறது. பக்தர்களுக்காக பல ரூபங்களை ஈசன் எடுத்தாலும், ஜ்வயம் ஜோதியாய், பரத்துவமாய், அருட் பிரகாசமாய் இருப்பதை அருணகிரியார் உணர்வு பூர்வமாக விவரித்திருப்பதையே காண்கிறோம்.
'மனமே உனக்குறுதி' எனத் தொடங்கும் தில்லைத் திருப்புகழில் (பாடல் 513),
மயில் வாகனக் கடவுள் .. அவரே பரப் பிரம்மம்
... என்கிறார்.
ஆன்றோர் கருத்துக்கு இணங்க ஐந்து முகச் சிவனும் ஆறுமுகச் சிவனும் இருவரல்ல ஒருவரே.
திரையாழி முத்தை ..
திருச்செந்தூரில் கடல் அலைகளால் முத்துக்கள் தெறிக்கப்படுவதை, கந்தர் அலங்காரத்தில், 'கொள்ளி தலையில் .. ' எனத் தொடங்கும் 107வதுப் பாடலில்,
ஒரு கோடி முத்தம் தெள்ளக் கொழிக்கும் செந்தில் ..
... என்பதைக் காணலாம்.
பழையவன்
இச் சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் காணலாம். சிவபெருமான் ஆதியில் ஆறு முகங்கள் தரித்திருந்தார் என்பதும் அதில் உள்ள 'அதோ .. ' முகத்தை யோகிகள் மட்டுமே தரிசித்தனர் எனத் தெரிகிறது. ஆதலினால் ஈசனின் ஆறுமுக அவதாரத்தில் பாமரரும் தரிசிக்கும் வண்ணம் அருள் புரிகிறார் என்கிற இக்கருத்தை, 'இருவர் மயலோ' எனத் தொடங்கும் திருவண்ணாமலைத் திருப்புகழில் (பாடல் 400),
.. பழைய வடிவாகிய வேலா ..
... என்கிறார்.
தரணி வலம் வந்தான் முன் வைகு மயிலை புகழும்
முருகனின் மயில் அகல சராசரங்களையும் ஒரு நொடியில் சுற்றி வந்த சமயம் கணபதியான யானை பிளிறிற்று என்பதை, 'வதை பழக மறலி' எனத் தொடங்கும் பொதுப்பாடல் திருப்புகழில் (பாடல் 1095),
பதயுகள மலர்தொழுது பழுதில் பொரி அவல்துவரை பயறுபெரு வயிறு நிறை யவிடாப்
பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை பரியதனி யெயிறுகொடு குருநாடர்
கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய கடலுலகு நொடியில்வரு மதிவேகக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத பெருமாளே.
... எனக் கூறுவார் நமது அருணகிரியார்.
| |