| ......... மூலம் .........
வந்தார்ப் பரிக்குமம் மிண்டுவகை தண்டதரன் வலியதூ துவர்ப்பில்லி பேய்
வஞ்சினாற் பேதுற மகாபூதம் அஞ்சிட வாயினும் காலினாலும்
பந்தாடி யேமிதித் துக்கொட்டி வடவைசெம் பவளமா கதிகாசமாப்
பசுஞ்சிறைத் தலமிசைத் தனியயிற் குமரனைப் பார்த்தன் புறக்கூவுமாம்
முந்தா கமப்பலகை சங்காத மத்தர்தொழ முன்பேறு முத்தி முருகன்
முதுகா னகத்தெயினர் பண்டோ டயிற்கணை முனிந்தே தொடுத்த சிறுவன்
சிந்தா குலத்தையடர் கந்தா எனப்பரவு சித்தர்க் கிரங்கறுமுகன்
செயவெற்றி வேள்புநிதன் நளினத்தன்முடி குற்றி சேவற் றிருத் துவசமே.
......... சொற்பிரிவு .........
வந்து ஆர்ப்பரிக்கும் அம் மிண்டுவகை தண்டதரன் வலிய தூதுவர்ப் பில்லி பேய்
வஞ்சினால் பேதுற மகாபூதம் அஞ்சிட வாயினும் காலினாலும்
பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவை செம் பவளமாக அதிகாசமாப்
பசுஞ் சிறைத் தலமிசைத் தனி அயிற் குமரனைப் பார்த்து அன்பு உறக் கூவுமாம்
முந்து ஆகமப்பலகை சங்காக மத்தர் தொழ முன்பேறு முத்தி முருகன்
முதுகா னகத்து எயினர் பண்டோடு அயில் கணை முனிந்தே தொடுத்த சிறுவன்
சிந்தா குலத்தை அடர் கந்தா எனப் பரவு சித்தர்க்கு இரங்கு அறுமுகன்
செய வெற்றி வேள் புநிதன் நளினத்தன் முடி குற்றி சேவற் றிருத் துவசமே.
......... பதவுரை .........
வந்து ... எதிரே வந்து,
ஆர்ப்பரிக்கும் ... பெரும் ஆரவாரத்துடன்,
அம் மிண்டுவகை ... அந்த மதத்துடன் நெருங்கித் தொடரும் வகையில்,
தண்டதரன் வலிய தூதுவர் ... தண்டாயுதம் ஏந்தியுள்ள யமனின் பலமிக்க தூதுவர்கள்,
பில்லி பேய் ... பிறரால் ஏவப்படும் பிசாசுகள் (இவைகளை),
வஞ்சினால் பேதுற ... வலிய சினத்துடன் அவைகளை புத்தி மயங்கும்படி செய்தும்
மகா பூதம் அஞ்சிட ... மிகப் பெரிய பூதங்களும் பயந்து நடுங்கும்படி,
வாயினும் காலினாலும் ... தன்னுடைய மூக்கினாலும் காலினாலும்,
பந்தாடியே மிதித்து ... கால் பந்து போல் அவைகளை உதைத்து மிதித்து,
கொட்டி ... அடித்து,
வடவை செம் பவளமா ... வடவாமுகாக்கினியை பவளமணி போல் கொத்தி எடுத்து
அதிகாசமாய் ... பெரிய நகை புரிந்து,
பசும் சிறை தல மிசை ... பசிய சிறைகளின்மேல் முதுகில் வீற்றிருக்கும்
தனி அயில் குமரனை ... ஒப்பற்ற வேலாயுதக் கடவுளை,
பார்த்து அன்பு உற கூவுமாம் ... நோக்கி அன்புடன் குரல் கொடுக்கும்
(அது எது என வினாவினால்)
முந்து ... முற்பட்டு விளங்கும்,
ஆகமப் பலகை ... கல்வியின் அளவை நிர்ணயிக்கும் சங்கப் பலகையின் மேல்,
சங்காக மத்தர் தொழ ... கல்வியில் வல்லவர்களான 49 புலவர்களும் வணங்க,
முன்பேறு முத்தி முருகன் ... முன்பு ஒரு சமயம் ஏறி வீற்றிருந்து மோட்ச சாம்ராஜ்யத்திற்கு வழி காட்டியான முருகன்,
முது கானகத்து எயினர் ... பழமையான காடுகளில் வசிக்கும் வேடர்கள்,
பண்டோடு ... முன்பு பின் வாங்கி,
அயிற் கணை முனிந்தே தொடுத்த சிறுவன் ... கூரிய வேலாயுதத்தை சினத்துடன் செலுத்திய முருகன்,
சிந்தாகுலத்தை அடர் கந்தா ... மன வியாகுலத்தை நீக்கும் கந்தக் கடவுள்,
எனப் பரவு ... என்று துதிக்கும்,
சித்தர்க்கு இரங்கு அறுமுகன் ... உள்ளத்தை உடைய பக்தர்க்கு இரங்கி கருணை புரியும் சண்முகப் பெருமான்
செய வெற்றி வேள் ... வெற்றியையே காணும் முருகன்,
புனிதன் ... பரிசுத்த மூர்த்தி,
நளினத்தன் முடி குற்றி ... தாமரை மலரில் வசிக்கும் பிரம்மனை சிரசில் குட்டி தண்டித்த முருகப் பெருமானின்,
சேவல் திரு துவசமே ... கொடியில் விளங்கும் சேவலே தான் அது.
......... விளக்கவுரை .........
முந்து ஆகம பலகை
சிவபெருமான் அருளிச் செய்த இறையனார் அகப் பொருளுக்கு 49 கடைச் சங்க புலவர்கள் உரை எழுதி தம் தம் உரையே சிறந்தது என கலகம் விளைவிக்க, சோமசுந்தரப் பெருமான் கொடுத்த அசரீரி வாக்கின்படி மதுரையில் தனபதிச் செட்டியாரின் திருமகனாக அவதாரம் செய்த முருகப் பெருமானாகிய 'ருத்ர ஜென்மன்' என்கிற பாலகனை அழைத்து வந்து, அவனிடம் அபிப்ராயம் கேட்கப்படுகிறது. அவனும் சங்கப் பலகையில் வீற்றிருந்து ஜாடை மூலமாக நக்கீரர், பரணர், கபிலர் ஆகிய மூவரின் உரையே தலைசிறந்தது என உணர்த்துகிறார். இச் சம்பவத்தையே அருணகிரியார் இங்கு விவரிக்கின்றார்.
முது கானகத்து எயினர் .... சிறுவன்
முருகப் பெருமான் வள்ளியைக் கவர்ந்து கொண்டுச் சென்ற பொழுது வேடர்கள் அவரைப் பின் தொடர்ந்து வந்து அவருடன் போர் புரிந்தனர். தன்னுடைய கொடியில் வீற்றிருக்கும் சேவலின் முழக்கத்தால் வேடர்கள் மயக்கமுற்று செயலற்றதாக கந்த புராணம் கூறும். அருணகிரியார் சற்று மாறுபட்ட கருத்தாக வேலாயுதத்தால் வேடர்களுடன் போரிட்டார் என்கிறார். இக்கருத்தை, 'நீல முகில் ஆன' எனத் தொடங்கும் கோடி (குழகர் கோயில்) திருப்புகழில் (பாடல் 842),
சோலைபரண் மீதுநிழ லாகதிளை காவல்புரி தோகைகுற மாதினுட னுறவாடிச்
சோரனொன நாடிவரு வார்கள்வன வேடர்விழ சோதிகதிர் வேலுருவு மயில்வீரா
... என்கிறார்.
பசுஞ்சிறை தலமிசை
பசிய சிறைகளின் மீதுள்ள முருகன் என்று கூறி இருப்பது பொருத்தமாக இல்லை. இந்த அடிக்கு பாட பேதம் ஒன்று உண்டு. அதுவே மிகவும் பொருத்தமாக அமைகிறது.
பசுஞ் சிறை தலம் அசைத்து அசைத்து அன்பரைப் பார்த்து அன்புறக் கூவுமாம்.
| |