| ......... மூலம் .........
வீறான காரிகதி முன்னோடி பின்னோடி வெங்கட் குறும்புகள் தரும்
விடுபேய்க ளேகழுவன் கொலைசாவு கொள்ளிவாய் வெம்பேய் களைத்துரத்திப்
பேறான .. சரவண பவா .. என்னுமந்திரம் பேசியுச் சாடனத்தாற்
பிடர்பிடித் துக்கொத்தி நகநுதியி னாலுறப் பிய்ச்சுக் களித்தாடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம் மகோதரம் பெருவியாதி
வாதபித் தஞ்சிலேற் பனங்குட்ட முதலான வல்லபிணி களைமாற்றியே
சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர் சித்தத் திருக்கு முருகன்
சிலைகள்உரு விடஅயிலை விடுகுமர குருபரன் சேவற் றிருத் துவசமே.
......... சொற்பிரிவு .........
வீறான காரி கதி முன்னோடி பின்னோடி வெம் கண் குறும்புகள் தரும்
விடுபேய்களே கழுவன் கொலை சாவு கொள்ளிவாய் வெம்பேய்களைத் துரத்திப்
பேறான .. சரவண பவா .. என்னும் மந்திரம் பேசி உச்சாடனத்தால்
பிடர் பிடித்துக் கொத்தி நகநுதியினால் உறப் பிய்ச்சுக் களித்து ஆடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம் மகோதரம் பெருவியாதி
வாத பித்தம் சிலேற்பனம் குட்ட முதலான வல்ல பிணிகளை மாற்றியே
சீறாத ஓராறு திரு முகம் மலர்ந்து அடியர் சித்தத்தில் இருக்கு முருகன்
சிலைகள் உருவிட அயிலை விடு குமரகுருபரன் சேவற் றிருத் துவசமே.
......... பதவுரை .........
வீறான ... மிடுக்குடைய,
காரி கதி ... பைரவர் போகும் வழியில்,
முன்னோடி பின்னோடி ... முன்னும் பின்னும் ஓடி தொடர்ந்து வந்து,
வெங்கண் குறும்புகள் தரும் ... சிவந்த கண்களை உடையனவாய் சேஷ்டைகள் புரியும்,
விடு பேய்களே ... தனித்திருக்கும் பேய்களையும்,
கழு ... கொடிய கழுகுகளையும்,
வன்கொலை சாவு ... வன்மையான கொலைகளுக்கும் சாவுகளுக்கும் காரணமான,
கொள்ளி வாய் ... நெருப்பைக் கக்கும் வாய்களை உடைய,
வெம் பேய்களைத் துரத்தியே ... கொடிய பேய்களைத் துரத்திச் சென்று,
பேறான ... தவத்தால் கிடைப்பதான,
சரவணபவா என்னும் மந்திரம் ... சரவணபவா என்கிற சடாட்சர மந்திரத்தை,
பேசி ... சொல்லி,
உட்சாடனத்தால் ... உட்சாடத்தினால் பிரயோகம் செய்யும் வகையில்,
பிடர் பிடித்துக் கொத்தி ... அவைகளுடைய கழுத்தைப் பிடித்து மூக்கினால் கொத்தி,
நக நுதியினால் உற பிச்சி ... கூர்மையான நகமுனையினால் பிய்த்து,
களித்து ஆடுமாம் ... மகிழ்ச்சியுடன் நடனம் புரியும்
(அது எது என வினாவினால்)
மாறாத முயலகன் ... நீங்காத வியாதியான காக்காய் வலிப்பு,
வயிற்று வலி ... வயிற்று வலி,
குன்மம் ... வயிறு உளைப்பு (சூலை நோய்),
மகோதரம் ... பெரு வயிறு,
பெரு வியாதி ... பால் வினை நோய்கள்,
வாதம் பித்தம் ... வாதம் பித்தம்,
சிலேற்பனம் ... சிலேத்துமம்,
குட்டம் ... குஷ்டம்,
முதலான ... இவை போன்ற,
வல்ல பிணிகளை மாற்றியே ... கொடிய நோய்களை நீக்குபவரும்,
சீறாத ... அடியவர்களின் கோடி குறைகள் கருதினாலும் வேறு முனிய அறியாதவரும்,
ஓராறு திருமுகம் மலர்ந்து ... தனது ஆறு திருமுகங்களும் மகிழ்ச்சியுடன்,
அடியர் சித்தத்திருக்கும் முருகன் ... தியானிக்கும் அடியவர்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும் முருகன்,
சிலைகள் உருவிட ... கிரவுஞ்ச கிரியும் மற்ற ஏழு மலைகளும் உருவிச் சென்று அழித்த,
அயிலை விடு ... கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய,
குமர குருபரன் ... குமாரப் பரமேஸ்வரனின்,
சேவல் திரு துவசமே ... கொடியில் வீற்றிருக்கும் சேவலே தான் அது.
......... விளக்கவுரை .........
...
| |