| ......... மூலம் .........
பங்கமா கியவிட புயங்கமா படமது பறித்துச் சிவத்தருந்திப்
பகிரண்ட முழுதும் பறந்துநிர்த் தங்கள்புரி பச்சைக் கலாப மயிலைத்
துங்கமா யன்புற்று வன்புற் றடர்ந்துவரு துடரும் பிரேத பூதத்
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும் துண்டப் படக் கொத்துமாம்
மங்கையா மளைகுமரி கங்கைமா லினிகவுரி வஞ்சிநான் முகிவராகி
மலையரையன் உதவமலை திருமுலையில் ஒழுகுபால் மகிழ அமுதுண்ட பாலன்
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னுநர சிங்கமாய் இரணியனுடல்
சிந்தஉகி ரிற்கொடு பிளந்தமால் மருமகன் சேவற் றிருத் துவசமே.
......... சொற்பிரிவு .........
பங்கமாகிய விட புயங்க மா படம் அது பறித்துச் சிவத்து அருந்திப்
பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி பச்சைக் கலாப மயிலைத்
துங்கமாய் அன்புற்று வன்புற்று அடர்ந்துவரு துடரும் பிரேத பூதத்
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும் துண்டப் படக் கொத்துமாம்
மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி வஞ்சி நான்முகி வராகி
மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால் மகிழ அமுதுண்ட பாலன்
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர சிங்கமாய் இரணியன் உடல்
சிந்த உகிரில் கொடு பிளந்த மால்மருமகன் சேவல் திருத் துவசமே.
......... பதவுரை .........
பங்கமாகிய விட ... கொடுமையைச் செய்யும் விஷமுள்ள,
புயங்க மா படமது ... பாம்பின் பெரிய படத்தை,
பறித்து ... கொத்தி,
சிவத்தருந்தி ... சினத்துடன் அதை உணவாகக் கொண்டு,
பகிரண்ட முழுதும் பறந்து ... வெளி அண்டங்கள் எல்லாவற்றிலும் பறந்து,
நிர்த்தமிடும் ... களி நடனம் புரியும்,
பச்சைக் கலாப மயிலை ... பச்சை நிறத் தோகைகளை உடைய மயிலுடன்,
துங்கமாய் அன்புற்று ... தூய அன்பு கொண்டு,
வன்புற்று ... வலிமையுடன்,
அடர்ந்து வரும் ... நெருங்கி வரும்,
துடரும் ... தொடர்ந்து வரும்,
பிரேத பூத தொகுதிகள் ... பிணப் பேய்களின் கூட்டங்கள்,
பசாசுகள் ... பிசாசுகளையும்,
நிசாசரர் அடங்களம் ... அசுரர் கூட்டங்கள் அனைத்தையும்,
துண்டப் பட கொத்துமாம் ... துண்டு துண்டாகச் சிதறும்படிக் கொத்தும்
(அது எது என வினாவினால்)
மங்கை ... மங்கையும்,
யாமளை ... யாமளையும்,
குமரி ... குமாரியும்,
கங்கை ... கங்கையாக இருப்பவளும்,
மாலினி ... மாலைகளை அணிந்திருப்பவளும்,
கவுரி ... பொன்னிறமாக இருப்பவளும்,
வஞ்சி ... கொடி போன்றவளும்,
நான்முகி ... நான்கு முகங்களை உடையவளும்,
வராகி ... வராகியும்,
மலை அரையன் உதவு அமலை ... இமவான் தந்த அப்பழுக்கற்றவளும்,
திரு முலையில் ஒழுகு பால் ... ஆகிய பார்வதி தேவியின் திருமார்பிலிருந்து ஒழுகிய பாலமுதத்தை,
மகிழ அமுதுண்ட பாலன் ... மகிழ்ச்சியோடு உண்ட சிறுவன், (திருஞானசம்பந்தர் - முருகன்)
செங்கணண் ... (கோபத்தால்) சிவந்த கண்களை உடைய திருமால்,
மதலையிடம் இங்குளான் என்னும் ... இதோ தூணில் இருக்கிறான் என்று பிரகலாதனால் சுட்டிக் காட்டப்பட்டவன்,
நரசிங்கமாய் இரணியனுடல் ... நரசிங்க அவதாரம் எடுத்து இரணியன் உடலை,
சிந்த உகிரில் கொடு பிளந்த மால் மருமகன் ... ரத்தம் சிந்த கை நகத்தால் பிளந்து சம்காரம் செய்த மகா விஷ்ணுவின் மருமகன்
சேவல் திருத் துவசமே ... (ஆகிய) குமாரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலே தான் அது.
......... விளக்கவுரை .........
முருகனுடைய மயிலுக்கும் சேவலுக்கும் இடையே காணும் நட்பை மயில் வகுப்பிலும்,
கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே
... என்று கூறுவார் அருணகிரியார்.
மதலை
இங்கு 'மதலை' என்ற சொல்லுக்கு தூண் என்று பொருள். இதே பொருளுடன், 'நீல மயில் சேரும்' எனத்தொடங்கும் பேறைநகர் திருப்புகழிலும் (பாடல் 545),
கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யுடெ ழுந்த கோபவரி நார சிங்கன் மருகோனே
... என்கிறார்.
| |