| ......... மூலம் .........
தானா யிடும்புசெயு மோகினி இடாகினி தரித்தவே தாளபூதம்
சருவசூ னியமுமங் கிரியினா லுதறித் தடிந்துசந் தோடமுறவே
கோனாகி மகவானும் வானாள வானாடர் குலவுசிறை மீளஅட்ட
குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள் கொட்டியெட் டிக்கூவுமாம்
மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு மாதேவ னற்குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவக்கிரகம் வாழ்நாள் அனைத்தும் அவனாம்
சேனா பதித்தலைவன் வேதா வினைச்சிறைசெய் தேவாதி கட்கரசுகட்
டேனான மைக்கடலின் மீனான வற்கினியன் சேவற் றிருத்து வசமே.
......... சொற்பிரிவு .........
தானாய் இடும்பு செயு மோகினி இடாகினி தரித்த வேதாள பூதம்
சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித் தடிந்து சந்தோடம் உறவே
கோனாகி மகவானும் வானாள வானாடர் குலவு சிறை மீள அட்ட
குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள் கொட்டி எட்டிக் கூவுமாம்
மானாகம் அக்கு அறுகு மான் உடையன் நிர்த்தம் இடு மாதேவன் நல் குருபரன்
வான் நீரம் அவனி அழல் காலாய் நவக்கிரகம் வாழ்நாள் அனைத்தும் அவனாம்
சேனாபதித் தலைவன் வேதாவினைச் சிறைசெய் தேவாதி கட்கு அரசு கள்
தேன் ஆன மைக் கடலின் மீனானவற்கு இனியன் சேவற் றிருத்து வசமே.
......... பதவுரை .........
தானாய் ... ஒருவரின் தூண்டுதல் இல்லாமல்,
இடும்பு செய்யும் ... துன்பங்களை விளைவிக்கும்,
மோகினி ... மோகினி எனும் பெண் பேய்களும் (நடு நிசியில் தனி வழியில் செல்லும் ஆடவரை பிடித்துக்கொள்ளும் இவ்வகை மோகினிப் பேய்),
இடாகினி ... பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேய்கள்,
தரித்த வேதாள பூதம் ... இவைகளுடன் கூடி இருக்கும் வேதாளங்கள் பூதங்கள்,
சர்வ சூனியமும் ... எல்லாவிதமான ஏவல் சூன்யங்கள் அனைத்தையும்,
அங்கிரியினால் உதறி ... பாதத்தினால் எடுத்து உதறி,
தடித்து ... அவைகளை தண்டித்து,
மகவானும் ... இந்திரனும்,
சந்தோடமுறவே ... மகிழ்ச்சியுற்று,
கோனாகி ... மீண்டும் தேவலோகத்திற்கு அதிபனாகி,
வானாள ... தேவலோகத்தை அரசு ஆளவும்,
வானாடர் குலவு சிறை மீள ... அந்த தேவர்களுக்கு நேர்ந்த சிறை நீங்கவும்,
அட்ட குல கிரிகள் ... எட்டு திசைகளில் உள்ள மலைகள்,
அசுரர் கிளை பொடியாக ... அரக்கர்களின் கூட்டங்கள் பொடி பொடியாகப் போகவும்
வெஞ்சிறைகள் எட்டிக் கூவுமாம் ... கொடிய சிறகுகளை படபடவென அடித்துக் கொண்டு எட்டிக் குதித்து பெருங் குரலிட்டுக் கூவும்
(அது எது என வினாவினால்)
மானாகம் ... பெரிய வாசுகி எனும் நாகப் பாம்பு,
அக்கு அறுகு மான் உடையன் ... எலும்பு மாலை, அருகம்புல் இவைகளை அணிந்துகொண்டு,
நிர்த்தம் இடு மா தேவன் ... நடனம் செய்யும் பரமேஸ்வரனுக்கு,
நற்குருபரன் ... நல்ல குரு மூர்த்தி,
வான் ... ஆகாயம்,
நீரம் ... நீர்,
அவனி அழல் காலாய் ... பூமி, நெருப்பு காற்று முதலான பஞ்ச பூதங்களையும்,
நவக்கிரகம் ... ஒன்பது கிரகங்களையும்
வாழ் நாள் அனைத்தும் அவனாம் ... காலம் என்று சொல்லப்படும் தத்துவங்கள் அனைத்தும் எல்லாமாய் இருக்கும் முருகக் கடவுள்,
சேனாபதித் தலைவன் ... தேவ சேனாபதி,
வேதாவினை சிறை செய் ... பிரம்மனை சிறையில் அடைத்தவரும்
தேவாதிகட்கரசு ... தேவ லோக சக்ரவர்த்தி,
கள் தேன் ஆன ... மது, தேன் போன்று இனிமை உடையவன்,
மைக் கடலில் மீனானவற்கு இனியன் ... இருண்ட கடலில் மீன் உருவத்தில் இருந்த நந்தி தேவருக்கு மகிழ்ச்சியை அளித்தவன்
சேவல் திரு துவசமே ... இப்பேற்பட்ட குமாரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலே தான் அது.
......... விளக்கவுரை .........
மான் உடையன்
சிவ பெருமானுக்கு புலித் தோலான ஆடை தவிர மான் தோலினால் ஆன ஆடையும் உண்டு என்பதை
.. புள்ளி மான் உரி உடையீர் ..
... எனும் ஞான சம்பந்தரின் தேவார வாக்கிலும் காண முடிகிறது.
மைக் கடலில் மீனானவற்கு இனியன்
ஒரு சமயம் கயிலையில் சிவபெருமான் அம்பிகைக்கு வேத ஆகமங்களை உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது, தேவி அங்குள்ள தடாகத்தில் உள்ள மீனைக் கண்டு தன் கவனத்தை அங்கு திருப்பியதால், கோபமுற்ற ஈசன், அம்பிகையை மீனவர் பெண்ணாக பிறக்கும்படி சபிக்கிறார். அம்பிகைக்காக பரிந்து வந்த நந்தியை மீனாக ஆகும்படி சபிக்கிறார். தேவி கடற்கரையில் அழகிய பெண் குழந்தை உருவில் கிடந்ததைக் கண்ட செம்படவத் தலைவன், அவளை எடுத்து வளர்த்து வருகிறான். நந்தியும் பெரிய மீன் உருவில் யாருக்கும் அகப்படாமல் உலாவுகிறது. வலைஞர் தலைவன் யார் அந்த மீனைப் பிடிக்கிறாரோ அவருக்கே தன் மகளை மணம் செய்து தருவதாகச் சொல்ல, பல பேர் முயன்றும் அந்த மீனைப் பிடிக்க முடியவில்லை. சாபம் முடியப்போகும் தருணத்தில் சிவபெருமான் செம்படவன் உரு எடுத்து, ஒரே வலை வீச்சினால் அந்த மீனைப் பிடித்து சாப நிவர்த்தி அளிக்கிறார். அவர் பின் தேவியை மணந்து, உத்திரகோசமங்கையில் மீண்டும் ஆகம உபதேசம் செய்விக்கிறார். இந்த அற்புத வரலாற்றை, 'நகரம் இரு பாதமாகி' எனத் துவங்கும் பஞ்சாட்சர (பொதுப்பாடல்கள்) திருப்புகழில் (பாடல் 1165),
குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி குறையகலை வேலை மீது தனியுருங்
குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு குலவுதிரை சேரு மாது தனைநாடி
அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி அரியமண மேசெய் தேக வலைதேடி
அறுமுகவன்மீகரான பிறவி யமராசை வீசும் அசபை செகர்சோதி நாத பெருமாளே.
... எனக் கூறுவதைக் காணலாம்.
இதே வரலாற்றை இன்றும் சிதம்பரத்தில் நடக்கும் தேர்த் திருநாளில் நடத்திக் காண்பிக்கப்படுவதைக் காணலாம். மேற்கு ரத வீதியில் வந்த ரதம் அங்கேயே நிற்கும். பிற்பகல் 3 மணி அளவில் செம்படவர் சேரியில் இருந்து மாப்பிள்ளை சீர் கொண்டு வந்து சமர்ப்பணம் செய்வித்த பின்னரே தேர் அங்கிருந்து நகரும்.
| |