| ......... மூலம் .........
அச்சப்ப டக்குரல் முழக்கிப் பகட்டியல றிக்கொட்ட மிட்டம ரிடும்
அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி அறுகுழை களைக்கொத் தியே
பிச்சுச் சினத்துதறி எட்டுத்திசைப் பலிகள் இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர்ச்சிறகு தட்டிக் குதித்தியல் பெறக்கொக் கரித்து வருமாம்
பொய்ச்சித் திரப்பலவும் உட்கத் திரைச்சலதி பொற்றைக் கறுத் தயில்விடும்
புத்திப்ரி யத்தன்வெகு வித்தைக் குணக்கடல் புகழ்ச்செட்டி சுப்ர மணியன்
செச்ைப் புயத்தன்நவ ரத்னக்ரி டத்தன்மொழி தித்திக்கு முத்த மிழினைத்
தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன் சேவற் றிருத்து வசமே.
......... சொற்பிரிவு .........
அச்சப்படக் குரல் முழக்கிப் பகட்டி அல றிக் கொட்டமிட்டு அமரிடும்
அற்பக் குறப் பலிகள் வெட்டுக்கள் பட்டு கடி அறுகுழைகளைக் கொத்தியே
பிச்சுச் சினத்து உதறி எட்டுத் திசைப் பலிகள் இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர்ச் சிறகு தட்டிக் குதித்து இயல் பெறக் கொக்கரித்து வருமாம்
பொய்ச் சித்திரப் பலவும் உட்கத் திரைச்சலதி பொற்றைக் கறுத்து அயில் விடும்
புத்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல் புகழ்ச் செட்டி சுப்ரமணியன்
செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி தித்திக்கும் முத்தமிழினைத்
தெரிய வரு பொதிகை மலை முநிவர்க உரைத்தவன் சேவல் திருத் துவசமே.
......... பதவுரை .........
அச்சப்பட ... பகைவர்கள் அஞ்சும்படி,
குரல் முழக்கி ... பெருத்த சப்தம் செய்து,
பகட்டி ... விரட்டி,
அலறி ... கூக்குரலிட்டு,
கொட்டமிட்டு ... ஆர்ப்பாட்டத்துடன்,
அமரிடும் ... போர் செய்யும்,
அற்பக் குறப் பலிகள் ... அற்பமான சிறு தேவதைகளுக்கு படைத்திருக்கும், பலி வரிசைகளில்,
வெட்டுக்கள் பட்டு ... வெட்டுக்கள் பட்டு,
கடி அறு குழைகளை ... அந்தச் சிறு தேவதைகள் கடித்துப் போட்டிருந்த, இலைகள் தழைகள் போன்றவைகளை,
கொத்தியே ... மூக்கால் கொத்தி,
பிச்சு சினத்து உதறி ... துண்டு துண்டாக பிய்த்தும், நான்கு பக்கமும் தூக்கி வீசி,
எட்டுத் திசைப் பலிகள் ... எட்டு திசைகளிலும் அடைத்து பலி போடுவது போல்
இட்டு கொதித்து விறலே பெற்று ... பெரும் கிளர்ச்சியுடன் வலிமை பெற்று,
சுடர் சிறகு தட்டி ... ஒளி வீசும் தனது சிறகுகளைத் தட்டிக் கொண்டு,
இயல் பெற கொக்கரித்து வருமாம் ... மிகுந்த லட்சணத்துடன் கொக்கரித்துக் கொண்டு வரும்
(அது எது என வினாவினால்)
பொய்ச் சித்திரப் பலவும் ... பொய்யும் கற்பனைகளும் நிறைந்த புறச் சமயங்கள்,
உட்க ... நடுங்கி பின் வாங்கவும்,
திரைச் சலதி பொற்றை ... அலை வீசும் கடல் மீதும்,
கிரெளஞ்ச கிரி மீதும் கறுத்து ... அவைகள் கருகிக் போகும்படி,
அயில் விடும் ... ஒளி வீசும் வேலாயுதத்தை செலுத்தியவன்,
புத்தி பிரியத்தன் ... அன்பும் அறிவும் நிறம்பப் பெற்றவன்,
வெகு வித்தைக் குணக் கடல் ... சகல கலைகளிலும் கடலென திறமை மிக்கவன்,
புகழ் செட்டி சுப்ரமணியன் ... புகழ் மிக்க செட்டியாகிய சுப்ரமணியக் கடவுள்,
செச்சைப் புயத்தன் ... வெட்சி மாலையை அணிந்தவன்,
நவ ரத்ன க்ரிடத்தன் ... நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை அணிந்துள்ளவன்,
மொழி தித்திக்கும் முத்தமிழினை ... மொழிக்கு மொழி இனிமை மிக்க, இயல், இசை, நாடகம் என்கின்ற மூன்று தமிழையும்,
தெரிய வரு பொதிகை மலை முனிவர்க்கு ... அறிந்து கொள்வதற்காக வந்த பொதிகை மலையில் வாழும் முனி சிரேஷ்டரான அகத்தியனுக்கு,
உரைத்தவன் ... உபதேசம் செய்தவருமாகிய குமாரக் கடவுளின்,
சேவல் திருத் துவசமே ... கொடியில் உள்ள சேவலே தான் அது.
......... விளக்கவுரை .........
பொய்ச் சித்திரப் பலவும் உட்க
பல விதமான மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட புறச் சமயங்களின் பொய்மை நிலையை உண்மை ஞானமாகிய வேலாயுதத்தால் அகற்றி விடுகிறான் முருகன்
செட்டி
தினைப் புனத்தில் வளையல் விற்கும் செட்டியாராக கந்தக் கடவுள் வந்த காரணத்தினாலும், மதுரையில் தனபதி செட்டியாருக்கு ருத்திர ஜென்மனாக பிறந்ததாலும், முருகனுக்கு 'செட்டி' என்ற திருநாமம் ஏற்பட்டது. 'செட்டு' என்றால் தமிழில் வியாபாரம் என்று பெயர். அடியார்களிடமிருந்து பக்தி என்கிற பொருளை வாங்கிக் கொண்டு, முக்தியைக் கொடுக்கும் பண்டமாற்று செட்டி முருகன்.
சொக்கநாதப் புலவர் தனது சிலேடை வெண்பாவில்,
வெங்காயம் சுக்கானால் வெந்தயத் தாலாவதென் இங்கு ஆர் சுமப்பார் இச்சரக்கை? .. மங்காத சீரகம் தந்திரேல் வேண்டேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியாரே.
இதன் பொருள், கொடிய வினைகளினால் உண்டான இந்த உடம்பு, வறுமையினால் வற்றிப் போய்விட்டால், கடை நாளில் செத்து போகின்ற இந்த தேகத்தால் என்ன பயன்? இப்படிப்பட்ட பிரயோஜனமற்ற சரக்கை வைத்து யார் தான் வியாபாரம் செய்வார்கள்? என்றும் அழியாத சிறந்த இருப்பிடமான முக்தி என்கிற வீட்டை நீர் தரவில்லை என்றால் இனிமேல் இந்தப் பொய்யான உடலை நான் நாட மாட்டேன், ஏரகத்தில் வீற்றிருக்கும் சுப்ரமணிய செட்டியாரே.
பொதிகை மலை முநிவன்
அகத்தியனுக்கு முத்தமிழை உபதேசம் செய்ததை, பூத வேதாள வகுப்பில்,
அரசரிய வாமனமு நிக்கொருத மிழ்த்ரயமும் அபரிமித மாகவிவ ரித்தகட வுட்புலவன்
... என்கிறார்.
சுப்ரமணியன்
சு ... ஒளி நிறைந்த பரமணியம் ... பெரிய பொருள்
சுப்ரமணியன் என்கிற சொல்லுக்கு 'ஒளி வடிவினன்' எனப் பொருள் படும். இக் கருத்தையே கச்சியப்ப சிவாச்சாரியரும் கந்த புராணத்தில் 'அருவமும் உருவமாகி' எனத் தொடங்கும் பாடலில்,
பிரம்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பு அது ஓர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும் கரமது பன்னிரண்டும் கொண்டு ..
... என்பார்.
| |