| ......... மூலம் .........
கரிமுரட் டடிவலைக் கயிறெடுத் தெயிறுபற் களையிறுக் கியு முறைத்துக்
கலகமிட் டியமன்முற் கரமுறத் துடருமக் காலத்தில் வேலு மயிலும்
குருபரக் குகனுமப் பொழுதில்நட் புடன்வரக் குரலொலித் தடிய ரிடரைக்
குலைத்தலறு மூக்கிற் சினப்பேய்க ளைக்கொத்தி வட்டத்தில் முட்ட வருமாம்
அரியகொற் கையனுடற் கருகும்வெப் பகையையுற் பனமுறைத் ததமி கவுமே
வமணரைக் கழுவில்வைத் தவருமெய்ப் பொடிதரித் தவனிமெய்த் திட அருளதார்
சிரபுரத் தவதரித் தவமுதத் தினமணிச் சிவிகைபெற் றினிய தமிழைச்
சிவனயப் புறவிரித் துரைசெய்விற் பனனிகற் சேவற் றிருத்து வசமே.
......... சொற்பிரிவு .........
கரி முரட்டடி வலைக் கயிறு எடுத்து எயிறு பற் களை இறுக்கியும் முறைத்துக்
கலகமிட்டு எமன் முன் கரம் உற துடரும் அக் காலத்தில் வேலும் மயிலும்
குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வரக் குரல் ஒலித்து அடியர் இடரைக்
குலைத்து அலறு மூக்கில் சினப்பேய்களைக் கொத்தி வட்டத்தில் முட்ட வருமாம்
அரிய கொற்கையன் உடற் கருகும் வெப் பகையை உற் பனம் உரைத்து அதம் மிகவும் ஏவும்
அமணரைக் கழுவில் வைத்தவரும் மெய்ப் பொடி தரித்து அவனி மெய்த்திட அருளதார்
சிரபுரத்து அவதரித்து அமுதத் தினமணிச் சிவிகை பெற்று இனிய தமிழைச்
சிவன் நயப்புற விரித்து உரைசெய் விற்பனன் இகல் சேவற் றிருத்து வசமே.
......... பதவுரை .........
கரி ... கரிய நிறத்துடனும்,
முரட்டடி ... முரட்டு குணத்துடனும்,
வலை ... பாச வலையான்,
கயிறு எடுத்து ... கயிற்றை ஏந்திக் கொண்டு,
எயிறு பற்களை ... கோரைப் பற்களை,
இருக்கியும் ... நற நற என கடித்துக் கொண்டு,
கலகமிட்டு ... கலக்கத்தைத் தரும்,
எமன் ... எம ராஜன்,
முன் ... என் முன்னால் தொடர்ந்து வந்து,
கரமுற தொடரும் ... கையால் பிடித்து கொண்டு போகும்,
அக் காலத்தில் ... அந்த அந்திம காலத்தில்,
வேலும் மயிலும் ... ஞானத்தைத் தரும் சக்தியாகிய வேலாயுதமும் ஓங்கார ரூபமான மயில் வாகனமும்,
குருபரக் குகனும் ... குரு சிரேஷ்டனாகிய குகப் பெருமானும்,
அப்பொழுதில் நட்புடன் வர ... அந்த அபாயகரமான நேரத்தில் என் முன் கருணையுடன் தோன்றும்படி,
குரல் ஒலித்து ... கூவி அழைத்து,
அடியர் இடரை ... அடியவர்களின் மரண துன்பத்தை,
குலைத்து ... அடியோடு நீக்கி,
அலறு மூக்கில் ... உலகேழும் அதிர அரற்றும் மூக்கினால்,
சினப் பேய்களை ... கோபம் மிக்க பேய்களை,
கொத்தி ... கொத்திக் குதறி,
வட்டத்தில் முட்ட வருமாம் ... சுற்றிச் சுற்றி வட்டமிட்டு முட்ட வரும்
(அது எது என வினாவினால்)
அரிய கொற்கையன் ... அருமை மிக்க கொற்கைப் பாண்டியன்,
உடல் கருக ... தேகத்தைக் கருக்கி விட்ட,
வெப்பகையை ... மிகவும் வெப்ப நோயை (சுரத்தை),
உற்பனம் உரைத்து ... மூல காரணத்தை எடுத்துச் சொல்லி,
அதம் மிகவும் ஏவும் அமணரை ... கொலைச் செயல்களை செய்து வந்த சமணர்களை,
கழுவில் வைத்து ... வாது புரிந்து கழுவில் ஏற்றி,
மெய்ப் பொடி தரித்தவர் ... ஒரு சிலரை உண்மைப் பொருளாகிய சிவத்தைச் சுட்டிக் காட்டும் விபூதியை அணியச் செய்து,
அவனி மெய்த்திட ... உலகம் முழுவதும் உண்மைப் பரம் பொருளை அறியும்படி செய்து,
அருளதார் ... அருள் புரிந்தவரும்,
சிரபுரத்து அவதரித்து ... சீர்காழி தலத்தில் திரு அவதாரம் செய்து,
அமுதத் தினமணி ... அமிர்தம் போன்ற குளுமையையும் சூரியனைப் போன்ற பிரகாசத்தையும் உடைய,
சிவிகை பெற்று ... முத்துப் பந்தலை சத்தி முத்தம் என்ற தலத்தில் பெற்று,
இனிய தமிழை ... இனிமையான தமிழில் தேவாரப் பாக்களை,
சிவன் நயப்பு உற விரித்து உரை செய் ... சிவ பெருமான் விருப்பத்துடன் கேட்கும்படிப் பாடி அருளிய
விற்பனன் ... ஞான சம்பந்த மூர்த்தியான ஆறுமுகப் பெருமான்,
இகல் சேவல் திருத் துவசமே ... வெற்றியைத் தரும் கொடியிலுள்ள சேவலே தான் அது.
......... விளக்கவுரை .........
கலகமிட்டு
கடைசிக் காலத்தில் எமதர்மன் வந்து நம் முன் நிற்பது, வெளி மனிதர்களின் கண்களுக்குத் தெரியாது. ஆனால், உயிர் பிரியும் அந்த ஆத்மாவுக்கு மட்டும் தெரியும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அந்தப் பயத்தில் உடம்பெல்லாம் கலக்கம் அடைந்து, மலம் கூட திரவமாக ஒழுகும் என அருணகிரியார், 'தொந்தி சரிய' எனத் தொடங்கும் திருச்செந்தூர்த் திருப்புகழில் (பாடல் 68),
.. எமப் படர்கள் நின்று சருவ மலமே ஒழுக ..
... என்கிறார்.
அச்சமயம் ஆச்சார்ய மூர்த்தியாக, இதுகாலும் ஆன்மக் குகையில் வீற்றிருந்த குகன் மானுட சட்டை தாங்கி, குரு மூர்த்தமாய் வந்து, பிரணவ உபதேசம் செய்து, பிரம்ம ஞானத்தைக் கொடுத்து அருள வேண்டும் என நமக்காக சேவல் கூவி அழைக்கிறது.
அரிய கொற்கையன்
கொற்கை பாண்டிய நாட்டின் துறைமுகப் பட்டணம். அதன் சிறப்பு கருதியே பாண்டிய மன்னர்களுக்கு கொற்கைப் பாண்டியன் எனும் பெயரும் ஏற்பட்டது. இங்கு குறிப்பிடப் படுவது மதுரையை ஆண்ட கூன் பாண்டியன். அவன் உண்மைச் சமயமாகிய சைவத்தை விட்டு நீங்கி, புறச்சமயமாகிய சமணத்தைச் சேர்ந்ததாலும், சமணர்கள் திருஞானசம்பந்தர் அங்கு இருந்த மடத்திற்கு தீ வைத்த போது,
.. பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே ..
... என பாடியதால் அத் தீ கடுமையான வெப்ப நோயாக மாறி கூன் பாண்டியனைப் பற்றியது. நோய்க்கு காரணமாக இருந்த இந்த செய்கையை பாண்டிய மன்னருக்கு எடுத்துச் சொன்னார். இதையே 'உற்பனம்' என்கிறார்.
மெய்ப்பொடி
பல மாற்று சமயங்களின் பொய்மையை ஒழித்து, உண்மைச் சமயமான சைவ சமயத்தின் திருச் சின்னமாகிய எல்லோருக்கும் கொடுத்தருளினார் ஞானசம்பந்தமூர்த்தி. இக்கருத்தை, 'சுருதி முடி மோனம்' எனத் தொடங்கும் பழநிமலைத் திருப்புகழில் (பாடல் 160),
.. மெய்ப் பொருளதாக நவில் ..
... எனக் கூறுவார்.
சிரபுரம்
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்த போது வெளி வந்த அமுதை திருமால் பங்கீடு செய்யும் சமயம் 'சிலம்பன்' என்ற அசுரன் திருட்டுத்தனமாக தேவர்களின் மத்தியில் அமர்ந்து உண்டான். இந்த உண்மையை உணர்ந்த சூரியனும் சந்திரனும் திருமாலுக்கு கண் ஜாடையாக சொல்ல, அவர் சட்டுவத்தால் அசுரனின் தலையை வெட்டி விடுகிறார். அமுதம் புசித்த காரணத்தால் அவன் இறக்கவில்லை. வெட்டுப் பட்ட தலை பாகம் சீர்காழியில் விழுந்து, அங்குள்ள சிவபெருமானை வழிபட்டு 'ராகு' எனப் பெயர் பெற்று நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆகையால் இத்தலத்திற்கு 'சிரபரம்' என பெயர் உண்டாயிற்று.
சிவிகை
சோழ மன்னர்களின் தலை நகரங்களில் ஒன்றானதும், பார்வதி தேவி சிவ பெருமானை முத்தமிட்டு வழிபட்ட காரணத்தினால் 'சத்திமுத்தம்' என பெயர் கொண்ட இத் திருத்தலத்தில் ஞானசம்பந்தர் எழுந்தருளிய சமயம், ஆதவனின் கொடுமையினால் உடலில் வேர்வை உண்டானதைக் கண்ட சிவ பெருமான், தன் பூத கணங்கள் மூலம் குளிர்ச்சி மிகுந்த முத்துப் பந்தலைக் கொடுத்து அனுப்புகிறார். சம்பந்தர் அந்த முத்துப் பந்தலில் பட்டீஸ்வரத்திற்கு வருவதை அறிந்த சிவனார், தன் வாகனமான நந்தியை விலகி இருக்கச் சொல்லி காண்கிறார். இப்போதும் நந்தியம் பொருமான் பட்டீஸ்வரத்தில் சிவ பெருமானுக்கு நேரில் இருக்காமல் விலகியே இருப்பதைக் காணலாம்.
| |