| ......... மூலம் .........
எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம ராட்சதர்கள் மிண்டுகள் செயும்
ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை ஈனப் பசாசு களையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர் ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகியல றிடஉகிர்க் கரத்தடர்த் துக்கொத் துமாம்
தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி சமணர்கிடு கிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலினெ னச்சிறிய சரணஅழ கொடுபுரி யும்வேள்
திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள் தெரியும்அரன் உதவு குமரன்
திமிரதின கரமுருக சரவண பவன்குகன் சேவற் றிருத்து வசமே.
......... சொற்பிரிவு .........
எரி அனைய வியன் நவிரம் உள கழுது பல பிரம ராட்சதர்கள் மிண்டுகள் செயும்
ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை ஈனப் பசாசுகளையும்
கரி முருடு பெரியமலை பணை எனவும் முனையின் உயர் ககனமுற நிமிரும் வெங்கண்
கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர் கரத்து அடர்த்துக் கொத்துமாம்
தரணிபல இடம் என வன மத கரிகள் தறிகள் பணி சமணர் கிடு கிடு என நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலின் எனச் சிறிய சரணம் அழகொடுபுரியும் வேள்
திரிபுரம் அது எரிய நகை புரியும் இறையவன் மறைகள் தெரியும் அரன் உதவு குமரன்
திமிர தினகர முருக சரவணபவன் குகன் சேவல் திருத் துவசமே.
......... பதவுரை .........
எரி அனைய ... நெருப்பு போல் தோன்றி,
வியன் ... படர்ந்துள்ள,
நவிரம் உள கழுது ... தலை முடிகளை உடைய பேய்கள்,
பல பிரம்ம ராட்சதர்கள் ... பலவகைப்பட்ட பிரம்ம ராட்சதர்கள்,
மிண்டுகள் செயும் ... குறும்புகள் செய்யும்,
ஏவல் பிசாசுகள் ... பிறரால் ஏவப்பட்ட பிசாசுகள்,
நனி பேயில் பிசாசுகள் ... தனித் தன்மைகள் வாய்ந்த பிசாசுகள்,
கொலை ஈனப் பிசாசுகளையும் ... கொலைகளைப் புரியும் துஷ்ட பிசாசுகளையும்,
கரி ... கரு நிறம் வாய்க்கப்பெற்று,
முரடு ... கரடு முரடான,
பெரிய மலை ... பெரிய மலை போலவும்,
பணை எனவும் ... மூங்கில்கள் போலவும்,
முனையின் ... முயன்று,
உயர் ககனமுற நிமிரும் ... உயர்ந்து ஆகாச வரையிலும் நிமிர்ந்து நிற்கும்,
வெங்கண் கடிகளையும் ... கொடிய பார்வையை உடைய பூதங்களையும்,
மட மடென மருகி அலறிட ... மட மட என்கிற சப்தத்துடன் பயந்து அலறும்படி,
உகிர்தடர்ந்து கொத்துமாம் ... கையில் உள்ள நகங்களால் கொத்தித் தாக்கும்.
(அது எது என வினவினால்)
தரணி பல இடம் என ... பல மலைப் பிரதேசங்களில் வசித்து வந்த,
வன மத கரிகள் ... மதம் பிடித்த காட்டு யானைகள் போலவும்,
தறிகள் ... தூண்கள் போலவும்,
பணி ... வாழ்க்கை நடத்தி வந்த,
சமணர் கிடு கிடு என ... அமணர் கூட்டம் கிடு கிடு என நடுங்கும்படி,
தண்டைகள் சிலம்புகள் ... காலில் அணிந்துள்ள தண்டைகளும் சிலம்புகளும்,
சிறிய சரண அழகொடு நடனம் புரியும் வேள் ... தனது சின்ன திருவடிகள் அழகு பெறும்படி நர்த்தனம் புரியும் ஞானசம்பந்தப் பெருமான்,
திரிபுரம் அது எரிய ... முப்புரங்களும் எரிந்து சாம்பலாகும்படி
நகை புரியும் இறையவன் ... புன்முறுவல் பூத்த இறைவரும்,
மறைகள் தெரியும் அரன் ... வேதங்களால் அறிவிக்கப்படும் சிவபெருமான்,
உதவு குமரன் ... உலகத்திற்கு நன்மை செய்யும் பொருட்டு அருளிய குமாரக் கடவுள்,
திமிர தினகர முருக ... அஞ்ஞான இருளை நீக்கும் ஞான சூரியனான முருகன்,
சரவணபவன் குகன் ... நாணல் பொய்கையில் அவதாரம் செய்தவன், அடியார்களின் இதயக்குகையில் வீற்றிருப்பவன் ஆகிய குமாரக் கடவுளின்,
சேவல் திருத்துவசமே ... கொடியில் விளங்கும் சேவலே தான் அது.
......... விளக்கவுரை .........
மதகரிகள்
கரிய நிறங்கொண்டு காடுகளில் திரியும் சமணர்களை மதயானை என ஞானசம்பந்தப் பெருமான் கூறுவார். அது பாணியை அருணகிரியாரும் இங்கு பின்பற்றுகிறார்.
தறிகள்
திகம்பர சமணர்கள் என்கிற பிரிவினர் நிர்வாணமாக இருப்பர். இவர்கள் இவ்வாறு நாணமில்லாமல் திரிவதினால் இவர்களை தூண் போல இருக்கிறார்கள் என்கிறார்.
| |