| ......... மூலம் .........
உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல உரியபர கதிதெ ரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும் இருள்கள்மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு கடினமுற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற கைக்கொட்டி நின்றா டுமாம்
மலைகள்நெறு நெறுநெறென அலைகள்சுவ றிடஅசுரர் மடியஅயில் கடவு முருகன்
மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுற வரிசையின மகளவ ளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச் சிறுவன்அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகுசினமொ டடியுதவும் அறுமுகவன் சேவற் றிருத்துவசமே.
......... சொற்பிரிவு .........
உலகில் அநுதினமும் வரும் அடியவர்கள் இடர் அகல உரிய பரகதி தெரியவே
உரகமணி என உழலும் இருவினையும் முறைபடவும் இருள்கள் மிடி கெட அருளியே
கலகமிடும் அலகை குறள் மிகு பணிகள் வலிமையொடு கடினமுற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கி உடல் தன்னைப் பிளந்து சிற கைக்கொட்டி நின்று ஆடுமாம்
மலைகள் நெறு நெறு நெறு என அலைகள் சுவறிட அசுரர் மடிய அயில் கடவு முருகன்
மகுடவட கிரி அலைய மலையும் முலை வநிதை குற வரிசை இன மகள் அவளுடன்
சிலை குலிசன் மகள் மருவு புயன் இலகு சரவணச் சிறுவன்அயன் வெருவ விரகில்
சிரமிசையில் வெகுசினமொடு அடி உதவும் அறுமுகவன் சேவல் திருத் துவசமே.
......... பதவுரை .........
உலகில் ... இப்பூவுலகில்,
அடியவர் ... முருகப் பெருமானின் அடியவர்களுக்கு,
அனுதினமும் வரும் ... நாள்தோரும் ஏற்படும்,
இடர் அகல ... இடஞ்சல்கள் நீங்கும்படியும்,
உரிய ... அவர்களுக்கு கிடைக்க வேண்டிய லட்சியமாகிய,
பரகதி ... சாயுச்சிய நிலையாகிய முக்தியை,
தெரியவே ... காண்பித்தருளியும்,
மணி உரகம் என ... படத்தில் ரத்தினத்தைத் தாங்கி இருக்கும் சர்ப்பங்கள் போல
உழலும் ... அலைந்து திரிகின்ற,
இருவினையும் முறைபடவும் ... நல்வினை தீவினை இரண்டும் அழியவும்,
இருள்கள் மிடி கெட ... அஞ்ஞான இருளாகிய பொருள் வறுமை அறிவு வறுமை ஆகிய இரண்டும் அழிந்து ஒழியும்படி,
அருளியே ... அருள் செய்யவும்,
கலகமிடும் ... இடஞ்சல்கள் செய்துவரும்,
அலகை குறள் ... பேய்களும் குட்டிச் சாத்தான்களும்,
மிகு பணிகள் ... கொடிய பாம்புகள்,
வலிமையோடு ... மிகுந்த பலத்துடன்,
கடினமுறவரில் ... பெரும் துன்பத்தை தர வந்தால்,
அவைகளை ... அவைகளை எல்லாம்,
கண்ணைப் பிடுங்கி உடல் தன்னைப் பிளந்து ... கண்களைப் பிடுங்கியும் தேகங்களைப் பிளந்தும்,
சிறகைக் கொட்டி நின்று ஆடும் ... தனது சிறகுகளைக் அடித்துக் கொண்டு வெற்றிக் களிப்புடன் நின்று கூத்தாடும்
(அது எது என வினவினால்)
மலைகள் நெறு நெறு நெறு என ... உலகில் உள்ள மலைகள் அனைத்தும் பொடிபடவும்,
அலைகள் சுவறிட ... சமுத்திரம் வற்றி வறண்டு போகவும்,
அசுரர் மடிய ... அரக்கர்கள் அனைவரும் இறந்து மடியவும்,
அயில் கடவு முருகன் ... வேலாயுதத்தைப் பிரயோகித்த முருகப் பெருமான்,
மகுட வட கிரி அலைய ... சிகரங்களை உடைய மேருமலை தோல்வி அடையும்படி,
மலையும் ... எதிர்த்து போர் செய்கின்ற,
முலை வனிதை ... தன பாரங்களை உடைய பெண்ணும்,
குறவர் ... வேடர் குடி மக்களாகிய,
இசை ... புகழ் மிக்க,
இனமகள் அவளுடன் ... அந்த குலத்தில் பிறந்த வள்ளிப் பிராட்டியையும்,
சிலை குலிசன் மகள் ... கோபமுடைய வஜ்ராயுதத்தை ஏந்தியுள்ள இந்திரனின் திருமகளாகிய தேவயானையையும்,
மருவு புயன் ... அணைத்திருக்கும் பன்னிரு திருப்புயங்களை உடையவன்,
இலகு சரவணச் சிறுவன் ... விளங்கும் சரவணப் பொய்கையில் உதித்த குமாரன்,
அயன் வெருவ ... பிரம தேவன் அஞ்சும்படி,
விரகில் ... வெகு சாமர்த்தியமுடன்,
சிரமிசையில் ... தலையில்,
வெகு சினமொடு அடி உதவும் ... மிகுந்த கோபத்துடன் குட்டி அருளிய,
அறுமுகன் ... சண்முகப் பெருமானின்
சேவல் திருத்துவசமே ... கொடியில் அமர்ந்துள்ள சேவலே தான் அது.
......... விளக்கவுரை .........
சைவ சித்தாந்தத்தில் உள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று, 'ஒரு ஜீவன் இரு வினைகளினால் அடிபட்டு அடிபட்டு பக்குவப்படும் சமயம், பராசக்தி அந்த ஜீவனின் இருவினைகளையும் சமன்படுத்தி, மும்மலங்களையும் ஒழித்து, முக்தி நிலைக்கு சேர்ப்பிப்பாள்'. இந்த அரும் பெரும் தொழிலை குமரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலும் செய்து கொடுக்கும் என்பதை அருணகிரியார் முதல் பாடலின் முதல் பாதியிலேயே குறிப்பிடுகிறார்.
சேவல் விருத்தம் பாராயணம் செய்வதினால் 'பில்லி .. சூன்யம்' போன்றவைகளினால் ஏற்படும் துன்பங்களை அது அகற்றிவிடும் என்பது ஒரு பொதுவான கருத்து. அதைத் தவிர, முருகப் பெருமானின் சேவல் அடியார்களை நல்கதிக்கு வழி காண்பித்து, ஆன்மீக மார்க்கத்தில் செல்லும் அவர்களுக்கு ஏற்படும் இடஞ்சல்கள் அனைத்தையும் தீர்த்து, அவர்களுக்கு மோட்ச சாம்ராஜ்யத்திற்கு வழி காட்டும் என்கிற கருத்தும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
| |