| ......... முன்னுரை .........
சித்தாந்த கருத்தின்படி ஆணவ மலம் எப்பொழுதும் பூரணமாய் நசிந்து விடுவதில்லை. அதன் பலம் குன்றி, ஒடுங்கி இருக்குமே தவிர பூராவும் மறைவதில்லை. அதன்படி ஆணவ மலத்தின் முழு சொரூபமாக விளங்கிய சூரபத்மா, மா மரமாய் வளர்ந்து நின்ற பொழுது, முருகப் பெருமான் தனது வேலாயுதத்தால் அவனை இரு பிளவுகளாக பிளந்து விடுகிறார். ஆனால் சூரன் மாயவில்லை. மயில் .. சேவல் உருவமெடுத்து எதிர்க்கிறான். அவன் முன் செய்த தவத்தின் பலன் கிட்டும் நேரம் வந்ததால், ஆறுமுகப் பெருமான் அவைகளின் மேல் அருட்கண் பாலித்து ஆட்கொள்ளுகிறார்.
பாம்பன் சுவாமிகளின் கருத்துப்படி, சேவலை சுத்த மாயையின் 'ஊர்த்துவ' பாகத்திலும், மயிலை 'அதோ' பாகத்திலும் வைத்திருக்கிறார்.
சேவல் மேலே நின்று கொண்டு உலக மக்களை அழைக்கிறது. உங்கள் அகங்காரத்தை விட்டு முருகனை அடைக்கலம் அடையுங்கள். உங்களின் நாற்ற உடம்பை விட்டு, நாத உடம்பை அடையுங்கள் என்று நாதம் எழுப்புகிறது. மயில் என்னைப்போல் முருகனின் பாத தீட்சை பெற்று ..
ஓம் எழுத்தில் மிக அன்பு ஊறி ஓவியத்தில் அந்தம் பெற வாரீர்
... என்று அழைப்பு விடுகிறது. இதன் பிறகு ஞானமாகிய வேலாயுதம், அந்த பக்குவ ஆன்மாவை குக மயமாக செய்து விடுகிறது.
இந்த கருத்தைக்கொண்டுதான் அருணகிரிநாதர் எல்லோருக்கும் தெரிந்த 'நாதம் விந்து கலை .. ' என்று அதே வரிசையில் சொல்லி இருக்கிறார் போலும். நாத விந்து - பழநித் திருப்புகழ், (பாடல் 170).
| |