| ......... மூலம் .........
மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற மலைகள்கிடு கிடுகிடெனவே
மகுடகுட வடசிகரி முகடுபட படபடென மதகரிகள் உயிர்சிதறவே
ககனமுதல் அண்டங்கள் கண்டதுண் டப்படக் கர்ச்சித் திரைத்தலறியே
காரையா ழிந்நகரர் மாரைப் பிளந்துசிற கைக்கொட்டி நின்றாடுமாம்
சுகவிமலை அமலைபரை இமையவரை தருகுமரி துடியிடைய னகையசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதை இபவநிதை துணைவனென திதயநிலையோன்
திகுடதிகு டதிதிகுட தகுடதித குடதிகுட செக்கண செகக்கணஎனத்
திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன் சேவற் றிருத் துவசமே.
......... சொற்பிரிவு .........
மகர சலநிதி சுவற உரகபதி முடி பதற மலைகள் கிடுகிடுகிடு எனவே
மகுட குட வடசிகரி முகடு பட படபட என மதகரிகள் உயிர் சிதறவே
ககன முதல் அண்டங்கள் கண்ட துண்டப் படக் கர்ச்சித்து இரைத்து அலறியே
காரையாழிந் நகரர் மாரைப் பிளந்து சிற கைக்கொட்டி நின்று ஆடுமாம்
சுகவிமலை அமலை பரை இமைய வரை தரு குமரி துடி இடை அனகை அசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழை வநிதை இப வநிதை துணைவன் எனது இதய நிலையோன்
திகுட திகுட திதி குட தகுட தித குட திகுட செக்கண செகக்கண எனத்
திருநடனம் இடுமயிலில் வரு குமரகுருபரன் சேவல் திருத் துவசமே.
......... பதவுரை .........
மகர சலநிதி சுவற ... மகர மீன்கள் வாழும் கடல் வற்றிப் போகவும்,
உரகபதி முடி பதற ... சர்ப்ப ராஜனான ஆதிசேஷனின் ஆயிரம் முடிகளும் பதறவும்,
மலைகள் கிடுகிடுகிடெனவே ... மலைகள் கிடு கிடு என நடுங்கவும்,
மகுட ... சிகரங்களைக் கொண்ட,
குட ... குடம் போன்ற திரட்சி உடைய,
வட சிகரி ... மேரு மலையின்,
முகடு படபடப டென ... உச்சிகள் படபடென நடுங்கவும்,
மத கரிகள் உயிர் சிதறவே ... மத யானைகளின் உயிர் பயத்தால் பிரியவும்,
ககன முதல் ... தேவலோகம் முதல்,
அண்டங்கள் கண்ட துண்டப் பட ... எல்லா உலகங்களும் துண்டு துண்டாகச் சிதறவும்,
கர்ச்சித்து இரைத்து அலறியே ... பெருத்த ஆரவாரம் செய்து,
காரையாழிந் நகரர் ... சமுத்திரக் கரையில் உள்ள காரையாழி நகரில் வாழ்ந்த அசுரர்களின்,
மாரைப் பிளந்து சிறகைக் கொட்டி நின்று ஆடுமாம் ... மார்பைப் பிளந்து தன்னுடைய சிறகுகளை அடித்துக்கொண்டு களிப்புடன் நடனம் ஆடுமாம்
(அது எது என வினாவினால்)
சுக விமலை ... சுக சொரூபியானவள்,
அமலை ... மலமற்றவள்,
பரை ... பராசக்தி,
இமயவரை தரு குமரி ... இம ராஜன் தந்தருளிய மடந்தை,
துடி இடை ... உடுக்கை போன்ற இடுப்யை உடையவள்,
அனகை ... பயமற்றவள்,
அசலை ... மலை போன்று சலனமில்லாமல் இருப்பவள்,
சுதன் ... இப்பேர்ப்பட்ட பார்வதி தேவி தந்த திருக் குமாரன்,
முருகன் ... ஞானமும் அறிவும் இளமையும் உடையவன்,
மதுர மொழி உழை வநிதை ... தேன் போன்ற இனிய மொழியை பகரும் மான் மகளான வள்ளிப் பிராட்டி,
இப வநிதை ... ஐராவதம் வளர்த்த தேவசேனை,
துணைவன் ... இவர்களின் துணைவன்,
எனது இதய நிலையோன் ... எனது உள்ளத்தில் என்றும் நிலைத்து இருப்பவன்,
திகுட .. செகக் கண ... எனும் ஒலியுடன்,
திரு நடனம் இடு மயிலில் ... நடனமிடும் மயில் வாகனத்தில்,
வரு குமரகுருபரன் ... பவனி வரும் குமரகுரு மூர்த்தியின்
சேவல் திருத் துவசமே ... கொடியில் உள்ள சேவலே தான் அது.
......... விளக்கவுரை .........
சேவலுக்கு மலைகள் முதல் பிரபஞ்சத்தில் வலுவுள்ள அனைத்தையும் தகர்க்கும் ஆற்றல் உண்டு என்பதை, கந்தர் அலங்காரத்தில் வரும் 12 வது பாடலில்,
சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந் துடைபட்ட தண்ட கடாக முதிர்ந்த துடுபடலம் இடைபட்ட குன்றமு மமேரு வெற்பு மிடிபட்டவே
... என்கிறார்.
காரையாழிந் நகரர்
இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள 'காரை' என்கிற நகரில் பழம் காலத்தில் இராவணனுடைய வம்சத்தினரான அரக்க குலத்தினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அனைவரையும் முருகனுடைய சேவல் அழித்துவிட்டது என்பது இதன் கருத்து. (இந்த வரலாறு எந்தப் புராணத்தில் உள்ளது என்று தெரியவில்லை).
| |