| ......... மூலம் .........
பூவிலியன் வாசவன் முராரிமுநி வோரமரர் பூசனைசெய் வோர்மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆடஅமு தூறஅநு போகபதி னாலுலகமும்
தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு தானதவ நூல்தழையவே
தாள்வலிய தானபல பேய்கள் அஞ்சச் சிறகு கொட்டிக் குரற்பயிலுமாம்
காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழைகமு காடவிகள் பரவுநடனக்
காரணமெய்ஞ் ஞானபரி சீரணவ ராசனக் கனகமயில் வாகனனடற்
சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு சிகாமணி சரோருகமுகச்
சீதள குமாரகிரு பாகர மனோகரன் சேவற் றிருத் துவசமே.
......... சொற்பிரிவு .........
பூவில் அயன் வாசவன் முராரி முநிவோர் அமரர் பூசனை செய்வோர் மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற அநு போக பதினாலு உலகமும்
தாவு புகழ் மீறிட நிசாசரர்கள் மாள வரு தான தவ நூல் தழையவே
தாள் வலிய தான பல பேய்கள் அஞ்சச் சிறகு கொட்டிக் குரல் பயிலுமாம்
காவு கனி வாழை புளி மாவொடு உயர் தாழை கமுகு அடவிகள் பரவு நடனக்
காரண மெய்ஞ் ஞானபரி சீர் அணவ அர அசனக் கனக மயில் வாகனன் அடல்
சேவகன் இராசத இலக்கண உமைக்கு ஒரு சிகாமணி சரோருக முகச்
சீதள குமார கிருபாகர மனோகரன் சேவல் திருத் துவசமே.
......... பதவுரை .........
பூவில் அயன் ... தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மன்,
வாசவன் ... இந்திரன்,
முராரி ... திருமால்,
முனிவோர் ... தவம் செய்யும் முனிவோர்கள்,
அமரர் ... தேவர்கள்,
பூசனை செய்வோர் ... நித்தம் இறைவனை வழிபாடுகள் புரியும் அடியவர்கள்,
மகிழவே ... இவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் பொருட்டு,
பூதரமும் எழுகடலும் ஆட ... மலைகளும் ஏழு கடல்களும் ஆட்டம் காணவும்,
அமுதூற ... பூவுலகில் இன்பம் நிறைந்து விளங்கவும்,
அநுபோக பதினாலு உலகமும் ... எல்லாவித அநுபோகங்களைத் தரும் பதினான்கு உலகங்களிலும்,
தாவு புகழ் மீறிட ... பரந்து கிடக்கும் தனது புகழ் முதன்மையாக விளங்கி நிற்கவும்,
நிசாசரர் மாள ... அரக்கர்கள் மடிந்து அழியவும்,
வரு தான தவ நூல் தழையவே ... விளங்கும் ஒழுக்க நெறிகளைக் கூறும் தர்ம இலக்கிய நூல்கள் தழைத்து ஓங்கவும்,
தாள் வலியதான பல பேய்கள் அஞ்ச ... கெட்ட வலிமை பொருந்திய செயல்களைச் செய்யும் பல பேய்கள் பயந்து ஓடவும்,
சிறகு கொட்டிக் குரல் பயிலுமாம் ... தனது சிறகுகளைத் தட்டி அடித்துக்கொண்டு பெரிய கூக்குரல் எழுப்பும்
(அது எது என வினாவினால்)
காவு ... சோலைகள்,
கனி வாழை ... நல்ல பழங்களைத் தரும் வாழை மரங்கள்,
புளி ... புளிய மரம்,
மாவொடு ... மா மரம் இவைகளுடன்,
உயர் தாழை ... வானளாவ உயர்ந்த தென்னை மரங்கள்,
கமுகு ... பாக்கு மரங்கள் (இவைகளுடன் கூடிய),
அடவிகள் ... அடர்ந்த காடுகளில்,
பரவு நடன ... பரந்த நடன வகைகளைக் காட்டும்,
காரண மெய் ஞான பரி ... முருகன் ஆட்கொண்ட காரணத்தால் மெய் ஞானத்தை அடைந்த வாகனமானதும்,
சீர் அணவு ... சிறப்பு மிக்கதும்,
அர அசன ... பாம்பை உணவாகக் கொள்வதும் ஆன,
கனக மயில் வாகனன் ... செம் பொன் மயிலை வாகனமாகக் கொண்டவன்,
அடல் சேவகன் ... வலிமை மிக்க மா வீரன்,
இரசத இலக்கண ... இராசத இலட்சணம் பொருந்திய,
உமைக்கு ஒரு சிகாமணி ... பார்வதி தேவிக்கு ஒப்பற்ற சிரோ ரத்னம்,
சரோருக முக ... தாமரை போன்ற முக அழகு கொண்டவன்,
சீதள ... தண்மையான குணாளன்
குமார ... என்றும் இளையவன்,
கிருபாகர ... கருணைக் கடல்
மனோகரன் ... அடியார்கள் மனதில் அனுதினமும் மகிழ்ச்சியைத் தருபவன் (ஆகிய கந்தக் கடவுளின்),
சேவல் திருத் துவசமே ... கொடியில் உள்ள சேவலேதான் அது.
......... விளக்கவுரை .........
காரண மெய் ஞான பரி
முருகப் பெருமான் சூரபத்மனுக்கு போர்க் களத்தில் தனது விஸ்வ ரூப தரிசனத்தைக் காட்டினதாலும், முன் ஜென்மத்தில் முருகனை அடைய வேண்டும் எனக் கடும் தவம் செய்ததாலும் மயிலாக மாறி மெய்ஞானம் பெற்றான் என்பதையே 'காரண மெய்ஞானம்' எனக் கூறுகிறார்.
உலகு ஏழும் அதிர அரற்று கோழியும் .. மறவேனே
... 'கதியை விலக்கு' எனத் தொடங்கும் பழநித் திருப்புகழ் (பாடல் 128).
| |