| ......... மூலம் .........
சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல கிரியெனவும் ஆயிரமுகத்
தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண் திங்கள்சங் கெனவும்ப்ரபா
நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய நின்றமா முகில் என்னவே
நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு நீலக் கலாப மயிலாம்
அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள் அடியவர்கள் மிடிய கலவே
அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில் அலங்கற் குழாம் அசையவே
மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய வல்லவுணர் மனம்அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய வையாளி யேறு மயிலே.
......... சொற்பிரிவு .........
சிகர தமனிய மேருகிரி ரசதகிரி நீல கிரி எனவும் ஆயிரமுகத்
தெய்வநதி காளிந்தி என நீழல் இட்டு வெண் திங்கள்சங்கு எனவும் ப்ரபா
நிகர் எனவும் எழுதரிய நேமி என உலகடைய நின்ற மாமுகில் என்னவே
நெடிய முது ககன முகடு உற வீசி நிமிரும் ஒரு நீலக் கலாப மயிலாம்
அகரு மருமணம் வீசு தணிகை அபிராம வேள் அடியவர்கள் மிடி அகலவே
அடல் வேல் கரத்து அசைய ஆறிரு புயங்களில் அலங்கல் குழாம் அசையவே
மகர கன கோமளம் குண்டலம் பல அசைய வல் அவுணர் மனம் அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசைய எண் திசை அசைய வையாளி ஏறு மயிலே.
......... பதவுரை .........
தமனிய சிகர ... பொன் நிறமான சிகரங்களை உடைய,
மேருகிரி ... மேரு மலை என்று சொல்லும்படியாகவும்,
ரசதகிரி ... கைலாய மலை எனும்படியாகவும்,
நீலகிரி ... நீலோற்பல மலர்கள் வளரும் தணிகை மலை எனும்படியும் (இவ்வாறு பல நிறங்களைப் பெற்று)
ஆயிரமுக தெய்வ நதி ... ஆயிரம் கிளை நதிகள் கொண்ட கங்கை,
காளிந்தி என ... யமுனை நதி போல,
நீழல் இட்டு ... ஒளி வீசும்,
வெண்திங்கள் சங்கு எனவும் ... வெண்நிலா போன்ற சங்கின் நிறத்தைப் போலவும்,
ப்ரபா நிகர் எனவும் ... தேவர்களின் சிலைகளை அலங்கரிக்கும் திருவாச்சி போலவும்,
எழுதரிய நேமி என ... எழுதுவதற்கு அரிதான வட்ட வடிவமான சக்ரம் போலவும்,
உலகடைய நின்ற மாமுகில் என்னவே ... உலகம் முழுவதும் பரந்திருக்கும் பெரிய மேகக் கூட்டம் போலவும்,
நெடிய முது ககன முகடு ... நீண்ட பழமையான அண்டத்தின் உச்சி வரையிலும்,
வீசி நிமிரும் ... தோகையை வீசி நிமிர்ந்திருக்கும்,
ஒரு ... ஒப்பற்ற,
நீல கலாப மயிலாம் ... நீல நிறத் தோகையைக் கொண்ட மயில்
(அது யாருடையது என வினாவினால்)
அகரு மரு மணம் வீசு ... அகில் மருக் கொழுந்து மணம் வீசும்,
தணிகை அபிராம வேள் ... திருத்தணிகையில் வீற்றிருக்கும் பேரழகன்,
அடியவர்கள் மிடி அகலவே ... தன்னுடைய பக்தர்களின் வறுமை நீங்கும்படி,
அடல் வேல் கரத்தசைய ... திருக் கரத்தில் வலிமை வாய்ந்த வேலாயுதம் விளங்கி நிற்கவும்,
ஆறிரு புயங்களில் அலங்கற் குழாம் அசையவே ... பன்னிருத் திருத் தோள்களில் பலவித மலர்களில் தொடுக்கப்பட்ட மாலைகள் அசையவும்,
மகர கன ... மீன் வடிவமுள்ள பொன்நிறமான,
கோமள குண்டலம் பல அசைய ... அழகிய காதில் குண்டலங்கள் அசையவும்,
வல் அவுணர் மனம் அசைய ... கொடிய அரக்கர்களின் மனம் சஞ்சலப் படவும்,
மால் வரை அசைய ... மயக்கம் தரும் கிரவுஞ்ச கிரி நடுங்கவும்,
உரகபிலம் அசைய ... பாதாள லோகம் கிடுகிடென நடுங்கவும்,
எண் திசை அசைய ... எட்டுத் திக்குகளும் அசைவுறவும்,
வையாளி ஏறும் மயிலே ... பவனிக்காக சவாரிக்கு புறப்படும் மயிலே தான் அது.
......... விளக்கவுரை .........
மயிலின் வர்ணனை
சிகர தமனிய
முருகப் பெருமானின் ஒப்பற்ற வாகனமாகிய மயில் பல விதமான நிறங்களையும் வடிவங்களையும் கொண்டது. இவைகளுக்கு ஒப்புவமையாக உலகில் காணும் பற்பல பொருட்களின் பட்டியலை இங்கு காணலாம். 'இலகுகனி மிஞ்சு' எனத் தொடங்கும் பழநித் திருப்புகழில் (பாடல் 120),
பலநிறமி டைந்த விசிறைய மர்ந்த பருமயில டைந்த குகவீரா
... என்பார்.
ரசதகிரி
'தமனியகிரி', 'ரசதகிரி', 'நீலகிரி' எனும் வர்ணனையை, 'அனகனென அதிகனென' எனத் தொடங்கும் பொதுப்பாடல் திருப்புகழில் (பாடல் 1092), கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்.
இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில மெனவிமலை யமுனை யென நிழல்வீசிக்
ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி கதுவியெழில் பொதியமிசை படர்கோல
கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத பெருமாளே.
ஆயிரமுக தெய்வ நதி காளிந்தி
'அமல வாயு' எனத் தொடங்கும் பொதுப்பாடல் திருப்புகழிலும் (பாடல் 1045), மயிலின் இவ்வகையான வர்ணனையைக் காண்கிறோம்.
விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு விபுத மேக மேபோல வுலகேழும்
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல வெகுவி தாமு காகாய பதமோடிக்
கமல யோனி வீடான ககன கோள மீதோடு கலப நீல மாயூர இளையோனே
வெண்திங்கள் சங்கெனவு ப்ரபா நிகரெனவும்
'குடருமல சலமுமிடை' எனத் தொடங்கும் பொதுப்பாடல் திருப்புகழிலும் (பாடல் 1093), மயிலின் வர்ணனை (கீழ்க்கண்டவாறு) மிகவும் அழகாக கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய வடிவுகொளு நெடியவிறல் மருவாரை
வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென மகரசல நிதிமுழுகி விளையாடிக்
கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில ககனமுக டுறநிமிரு முழுநீலக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத பெருமாளே.
அடியவர்கள் மிடி அகலவே
தன்னைத் விரும்பித் தொழும் அடியவர்களின் வறுமை, மற்ற துன்பங்களை ஒழிப்பதில் முருகப்பெருமானின் திருக் கைவேல் விதிர்ந்து விதிர்ந்து வளைவாகி வருவதை, வேல் வகுப்பில்,
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை உடுத்தபகை யறுத்தெரிய வுறுக்கியெழு மறத்தை நிலை காணும்
தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும்
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கோர்துணை யாகும்
சுரர்க்குமுநி வரர்க்மக பதிக்கும்விதி தனக்குமரி தனக்குநரர் தமக்குமுறும் இடுக்கண்வினை சாடும்
... என்பார். மேற்கூறிய வரிகள் முருகப்பெருமானின் கொடைத்திறத்தையும் ஏராளமான மாலைகளை அணிந்திருப்பது ஜீவாத்மாவாகிய நாயகிகளை எப்போதும் மணம்புரிய தயாராக இருக்கும் ஆன்ம நாயகன் தானே என்பதையும், நிறைய பொன் ஆபரணங்களைத் தரித்திருப்பது தனது ப்ரபத்வத்தை அதாவது தானே, Lord of everything, என்பதையும் காண்பிக்கிறது.
| |