| ......... மூலம் .........
நிராசத விராசத வரோதய பராபர னிராகுல னிராமய பிரா
னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி நிலாவிய உலாசஇ தயன்
குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல் குராநிழல் பராவு தணிகைக்
குலாசல சராசரம் எலாமினி துலாவிய குலாவிய கலாப மயிலாம்
புராரிகும ராகுரு பராஎனும் வரோதய புராதன முராரி மருகன்
புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக லாகும் அயி லாயுதனெடுந்
தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல சாதனன் விநோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ் ஷடாநநன் நடாவு மயிலே.
......... சொற்பிரிவு .........
நிராசத விராசத வரோதய பராபரன் நிராகுலன் நிராமய பிரான்
நிலாது எழுதலால் அறமிலான் நெறியிலான் நெறி நிலாவிய உலாச இதயன்
குராமலி விராவு உமிழ் பராரை அமரா நிழல் குராநிழல் பராவு தணிகைக்
குலாசலம் சராசரம் எலாம் இனிது உலாவிய குலாவிய கலாப மயிலாம்
புராரி குமரா குருபரா எனும் வரோதய புராதன முராரி மருகன்
புலோமசை சலாமிடு பலாசன வலாரி புக லாகும் அயி லாயுதன் நெடும்
தராதல கிராதர்கள் குல ஆதவ அபிராம வல சாதனன் விநோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரி இத படா திகழ் ஷடாநநன் நடாவு மயிலே.
......... பதவுரை .........
நிராசத ... 'நி' + 'ராஜத', மூன்று குணங்களில் ஒன்றான ராஜத குணம் அற்றவன்,
விராசத ... 'வி' + 'ராஜத', ராஜத குணத்திற்கு எதிரான சாத்வீக குணமுடையவன்,
வரோதய ... அடியவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருபவன்,
பராபர ... பரமேஸ்வரன்,
நிராகுலன் ... மன வருத்தம் இல்லாதவன்,
நிராமயன் ... 'நிர்' + 'அமயம்' (நோய்), நோய் இல்லாதவன்,
பிரான் ... தலைவன்,
அறமிலான் நெறியிலான் நில்லாது எழுதலால் ... தர்ம நெறி அற்றவர்களும் ஒழுக்க நெறி அற்றவர்களும் தன்னிடம் சேராததினால்,
நெறி நிலாவிய உலாச இதயன் ... நன்நெறி பூண்டு ஒழுகி மனக்களிப்புடன் எப்போதும் இருப்பவன்,
குராமலி ... குரா மரங்களில் தோன்றி,
விராவு உமிழ் ... கலந்து வெளிப்பட்டு விளங்கும்,
பராரை ... பருத்த அடிமரத்தின் கீழ்,
அமரா ... (திருவிடைக்கழியில்) சானித்தியத்துடன் விளங்குபவன்,
நிழல் ... ஒளி வீசும்,
குரா நிழல் ... குரா மரங்களின் நிழலில்,
பராவு ... படர்ந்திருக்கும்,
தணிகை குலாசல ... திருத்தணிகை முதலிய சிரேஷ்டமான மலை முதல்,
சராசரம் ... பூவுலகெங்கும்,
இனிது உலாவிய ... களிப்புடன் திரிந்து,
குலாவிய கலாப மயிலாம் ... குலாவுகின்ற தோகை மயில்
(அது யாருடையது என வினாவினால்)
புராரி குமரா ... திரிபுரமெரித்த சிவ பெருமானின் மைந்தா,
குருபரா ... சிவ குருமூர்த்தியே,
எனும் ... என்று துதித்து வணங்கும்,
வரோதய ... அடியவர்களுக்கு வேண்டிய வரங்களை நல்குபவன்,
புராதன முராரி மருகன் ... பழம் பெரும் கடவுளானவரும், 'முரன்' என்ற அசுரனைக் கொன்றவரும் ஆன திருமாலின் மருமகன்,
பலாசன புலோமசை ... (பழங்களையே உண்டு வாழும்) கிளி போன்ற இந்திராணியால்,
சலாமிடு ... வணங்கப்படுகின்றவன்,
வலாரி புகலாகும் அயிலாயுதன் ... இந்திரனுக்கு சரணாகதி அளித்த வேலாயுதக் கடவுள்,
நெடும் தரா தல ... நீண்ட பூமியின் கண் உள்ள மலைகளில் வாழும்,
கிராதர்கள் குல ஆதவ ... வேடுவர்களின் குலத்திற்கு சூரியனைப் போல்,
அபிராம ... மாப்பிள்ளையாகிய பேரழகன்,
வல சாதனன் ... வலிமையை சாதித்தவன்,
விநோத சமரன் ... போர் புரிவதை விளையாட்டாகச் செய்பவன்,
தடாரி ... மலையான கிரவுஞ்சத்தை அழித்தவன்,
விகடாசுரன் ... தொந்தரவுசெய்து வந்த சூரபத்மாவை,
குடாரி ... கோடாரியைப் போல் மார்பை இரு கூறாகப் பிளந்தவன்,
இதபடா திகழ் ஷடாநநன் ... நன்மையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஆறுமுகப் பெருமான்,
நடாவு மயிலே ... செலுத்துகின்ற மயிலே தான் அது.
......... விளக்கவுரை .........
நிராமய
இறைவன் தன்னுடைய சொந்த நிலையில் குணமற்றவனாக இருந்தாலும் அடியார்களுக்காக 'அர்ச்சாவதாரம்' எடுக்கும் பொழுது 'எண்குணபஞ்சர'னாக பல அருட் குணங்களை ஏற்றுக்கொள்கிறான்.
புலோமசை
முருகப்பெருமானின் அவதார நோக்கங்கள் பலவற்றுள் முக்கியமானதொன்று இந்திராணியின் திருமாங்கல்யத்தை காத்து, இந்திரலோகத்தை வாழ்விப்பது. இச்செய்தியை முதல் மயில் விருத்தத்தில்,
இந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண
... என அழகு பட முருகனை விளிக்கிறார்.
கிராதர் குல ஆதவ
இப் பூவுலகில் பற்பல குலங்கள் இருப்பினும் வேடர் குலத்திற்கு விஷேசமாக அநுக்ரகம் செய்ததின் காரணம், மற்ற குல மக்கள் பல தெய்வங்களை வழிபாடு செய்வார்கள், வேடர் குல மக்கள் முருகனைத் தவிர வேறு தெய்வத்தை கனவிலும் கூட வணங்க மாட்டார்கள். இக்கருத்தை, 'வஞ்சக லோப மூடர்' எனத் தொடங்கும் குன்றுதோறாடல் திருப்புகழில் (பாடல் 306) இப்படியாகக் கூறுவார்.
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு குன்றவர்சாதி கூடி வெறியாடி
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு குன்றுதொ றாடல் மேவு பெருமாளே.
வேடுவர்கள் 'தாமச' வழிபாடாகிய 'வெறியாடல்' செய்து முருகனை வணங்குபவர்களாக இருந்தாலும், அவர்களுடைய தீவிரமான பக்திக்கு இரங்கி, அவர்களின் குலக் கொழுந்தான வள்ளிப் பிராட்டியாரை காந்தர்வ மணம் புரிந்து, அவர்களுடனே சேர்ந்து வாழ்பவன் முருகப் பெருமான்.
| |