| ......... மூலம் .........
எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ திலங்கிய திருத்த ணிகைவாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு நம்பிரா னான மயிலைப்
பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன் பகர்ந்தஅதி மதுர சித்ரப்
பாடல்தரு மாசறு விருத்தம் ஒருபத்தும் படிப்பவர்கள் ஆதி மறைநூல்
மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர் வாணிதழு வப்பெ றுவரால்
மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர் வாரிச மடந்தை யுடன்வாழ்
அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர் அமுதா சனம்பெ றுவர்மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர் அழியா வரம்பெ றுவரே.
......... சொற்பிரிவு .........
எந்நாளும் ஒரு சுனையில் இந்த்ர நீலப்போது இலங்கிய திருத்தணிகை வாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும் ஒரு நம்பிரான் ஆன மயிலைப்
பன்னாளும் அடிபரவும் அருணகிரிநாதன் பகர்ந்த அதிமதுர சித்ரப்
பாடல் தரு மாசறு விருத்தம் ஒரு பத்தும் படிப்பவர்கள் ஆதி மறை நூல்
மன் நான்முகன் பெறுவர் அன்னம் ஏறப் பெறுவர் வாணி தழுவப் பெறுவரால்
மகராலயம் பெறுவர் உவணம் ஏறப் பெறுவர் வாரிச மடந்தையுடன் வாழ்
அந்நாயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர் அமுதாசனம் பெறுவர் மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர் அழியா வரம் பெறுவரே.
......... பதவுரை .........
எந்நாளும் ... ஒரு நாள் கூட தவறாமல் எப்பொழுதும்,
ஒரு ... ஒப்பற்ற,
சுனையில் ... நீர் மடுவில்,
இந்திர நீலப்போது இலங்கிய ... இந்திரநீலம் எனப்படும் நீலோற்பல மலர் விளங்குகின்ற,
திருத்தணிகை வாழ் ... தணிகாசலத்தில் வாழும்,
எம் பிரான் ... எமது தெய்வமாகிய கந்தக் கடவுள்,
இமையவர்கள் தம்பிரான் ... தேவர்களின் தலைவன்,
ஏறும் ... ஊர்தியாக ஏறும்,
ஒரு நம்பிரான் ஆன மயிலை ... ஒப்புவமை இல்லாத நாம் வழிபடும் தெய்வமான மயில் வாகனத்தை,
பன்னாளும் அடி பரவும் ... பல நாட்களாக துதித்து வணங்கும்,
அருணகிரி நாதன் ... அருணகிரிநாதனாகிய நான்,
பகர்ந்த ... இயற்றிய,
அதிமதுர ... இனிமை நிறைந்ததும்,
சித்ர ... விசித்ரமான அழகுகள் நிறைந்ததும்,
பாடல் தரு ... இசைக்குரிய பாடலாகச் சொன்ன,
மாசறு ... எவ்வித குற்றமும் இல்லாத,
விருத்தம் ஒரு பத்தும் ... இந்த பத்து விருத்தப் பாக்களையும்,
படிப்பவர்கள் ... தினமும் பாராயணமாக ஓதி உணர்ந்தவர்கள்,
ஆதி மறை நூல் ... மிகவும் பழமையான வேதங்கள்,
மன் ... நிலை பெற்று விளங்கும்,
நான்முகம் பெறுவர் ... பிரம தேவனின் சொரூபத்தை அடைவார்கள்,
அன்னம் ஏறப் பெறுவர் ... பிரம்மனின் அன்ன வாகனத்தில் ஏறும் பாக்யத்தைப் பெறுவார்கள்,
வாணி தழுவப் பெறுவர் ... கலைவாணியாகிய சரஸ்வதி தேவியின் திருவருளைப் பெற்று அவருடன் கூடி வாழ்வார்கள்,
மகராலயம் பெறுவர் ... சுறா மீன்கள் வாழும் சமுத்திரத்தின் தலைவனாகிய வருண பதவியை அடைவார்கள்,
உவணம் ஏறப் பெறுவர் ... கருட வாகனத்தில் ஏறுவார்கள்,
வாரிச மடந்தையுடன் வாழ் அந்நாயகம் பெறுவர் ... செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியுடன் வாழும் சிறந்த தலைமைப் பதவியை பெறுவார்கள்,
அயிராவதம் பெறுவர் ... தேவேந்திரனுடன் அயிராவதத்தின் மேல் பவனி வருவார்கள்,
அமுதாசனம் பெறுவர் ... தேவர்கள் போல் அமுதத்தை அருந்தி மகிழ்வர்,
மேல் ஆயிரம் பிறை தொழுவர் ... அதற்கு மேலும் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்யப் பெறுவார்கள்,
சீர் பெறுவர் பேர் பெறுவர் ... மிகச் சிறந்த பெருமையும் புகழும் அடைவார்கள்,
அழியா வரம் பெறுவர் ... முடிவில் அழிவில்லாத முக்தி சாம்ராஜ்யத்தை அடைவார்கள்.
......... விளக்கவுரை .........
எந்நாளும் ஒரு சுனையில்
இறைவன் கோயில் கொண்டுள்ள திருத்தலங்களின் பெயர்களை ஓதுவது புண்ணியம் பயக்கும். சைவ சமயத்தவர்களுக்கு தில்லையைப்போல், முருகனின் அடியார்களுக்கு ஆறு படைச் சேத்திரங்கள் நினைந்து ஓதுவதற்கு தகுந்தவைகளாகும். இத்தலங்களைத் திருப்புகழ் முதலான ஒன்பது படைப்புகளிலும் விஷேசமாகக் கூறுவார் அருணகிரிநாதர். உதாரணமாக
திருச் செந்திலை உரைத்துய்ந்திட அறியாரே
- 'தரிக்குங்கலை' - திருச்செந்தூர்த் திருப்புகழ் (பாடல் 64),
உனது குவளைச் சிகரி பகரப் பெறுவேனோ
- 'சொரியும் முகிலை' - திருத்தணித் திருப்புகழ் (பாடல் 271),
... என்று குறிப்பிடுவார்.
திருத்தணிக்குப் பல சிறப்புகள் இருந்தாலும் அதற்கு பெரிய பேற்றினைச் சேர்ப்பது நீலோற்பன சுனையாகும். இந்திரன் தன் நன்றியைத் தெரிவிப்பதற்காக ஐராவத யானையையும் ஒரு பெரிய சந்தனக் கல்லையும் திருத்தணிக்கு நல்கி ஒரு தடாகம் நிர்மாணித்து அதில் தேவலோகத்தில் இருந்து தான் கொண்டு வந்த நீலோற்பன செடியையும் வைத்தான். அச்செடியில் காலை, மதியம், மாலை .. இம் மூன்று வேளைகளிலும் ஒவ்வொரு பூ மட்டும் பூக்கும். அந்த மலர் தணிகேசனுக்கு அணிவிக்கப்பட்டு வழிபாடு நடக்கும். இத்தொண்டு பலயுகங்களாக நடந்து வந்ததை, 'பகல் இராவினும்' எனத் தொடங்கும் திருத்தணித் திருப்புகழில் (பாடல் 279),
சகல லோகமும் புகல நாடொறுஞ் சறுகிலாதசெங் கழுநீருந்
தளவு நீபமும் புனையு மார்பதென் தணிகை மேவுசெங் கதிர்வேலா
... எனக் கூறுவார்.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் வரையிலும் இக் கைங்கரியம் ஒரு தடையுமில்லாமல் நடந்து வந்திருக்கிறது என்பதை பல பெரியோர்கள் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் கலியின் கொடுமையினால் இன்று இந்த அற்புத நிகழ்ச்சி நின்று போய்விட்டது. இதை மீண்டும் புதுப்பிக்கும் சிவ புண்ணியம் எந்தப் பாக்கியவானுக்கு கிடைக்குமோ?
அடியார் ஒருவர் பிரம்மப் பதவி, வைகுண்டப் பதவி, சிவலோகப் பதவி பெற்ற பிறகு சதாபிஷேகம் செய்யப் படுவதாக பொருள் காண்பது நடைமுறைக்குப் பொருத்தமாக இல்லை. ஆகையால் அந்தக் கடைசி அடிகளுக்கு பொருத்தமாக வேறு ஒரு பொருளும் காணலாம்.
ஆதி மறை நூல் மன் நான்முகம் பெறுவர் ...
பிரமதேவனைப் போல் வேதங்களில் பண்டித்யம் பெறுவார்கள்,
அன்னம் ஏறப் பெறுவர் ...
தமது இல்லத்தில் அன்னக் கொடி ஏற்றி வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்யும் பேறு பெறுவார்கள்,
வாணி தழுவப் பெறுவார்கள் ...
நாவில் சரஸ்வதி கடாட்சம் பெற்று சகலகலா வல்லுனர்களாகத் திகழ்வார்கள்,
மகராலயம் பெறுவர் ...
கடல் கடந்து உள்ள நாடுகளிலும் தனது புகழ் பரவும்படியான நற்செய்கைகளையே செய்யும் பேறு பெறுவார்கள்,
உவணம் ஏறப் பெறுவர் ...
ஆகாய விமானத்தில் பறந்து சென்று எல்லா விதமான நற்செயல்களையும் செய்யும் பேறு பெறுவார்கள்,
வாரிச மடந்தையுடன்வாழ் அந்நாயகம் பெறுவர் ...
லட்சுமி கடாட்சத்துடன் பதினாறு செல்வங்களையும் பெற்று வாழ்வார்கள்,
அயிராவதம் பெறுவர் ...
தேவேந்திரனைப்போல் எவ்விடத்தும் தனது ஆட்சியை செலுத்துவார்கள்,
அமுதாசனம் பெறுவர் ...
உண்ணும் உணவெல்லாம் நீண்ட ஆயுளும் ஆரோக்கியம் அமையப் பெற்று, சீறும் சிறப்போடு வாழ்ந்து, சதாபிஷேகம் செய்யப் பெற்று, முடிவில் முக்தி வீடும் பெறுவார்கள்.
| |