| ......... மூலம் .........
செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை சிந்தப் புராரி யமிர்தந்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள் தீவிஷங் கொப்புளிப்பச்
சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல சங்கார கோர நயனத்
தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு சண்டப்பர சண்டமயிலாம்
விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய விருத்தன் திருத்த ணிகைவாழ்
வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை வெளிப்பட வுணர்த்தி யருளித்
துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச் சுவாமிவா கனமா னதோர்
துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.
......... சொற்பிரிவு .........
செக்கர் அளகேச சிகர ரத்நம் புரி ராசிநிரை சிந்தப் புராரி அமிர்தம்
திரும்பப் பிறந்தது என ஆயிரம் பகுவாய்கள் தீ விஷங் கொப்புளிப்பச்
சக்ரகிரி சூழ வரு மண்டலங்கள் சகல சங்கார கோர நயனத்
தறுகண் வாசுகி பணாமுடி எடுத்து உதறும் ஒரு சண்டப் பரசண்ட மயிலாம்
விக்ரம கிராதகுலி புனமீது உலாவிய விருத்தன் திருத்தணிகை வாழ்
வேலாயுதன் பழவினைத் துயர் அறுத்து எனை வெளிப்பட உணர்த்தி அருளித்
துக்க சுக பேதம் அற வாழ்வித்த கந்தச் சுவாமி வாகனமானது ஓர்
துரக கஜ ரத கடக விகட தட நிருதர் குல துஷ்டர் நிஷ்டூர மயிலே.
......... பதவுரை .........
ராசி நிரை ... (வாசுகியின்) வரிசையாக அமைந்துள்ள படங்களின் கூட்டம்,
செக்கர் அளகேச ... சிவந்த நிறமுள்ள குபேரனின் செல்வத்தைப் போன்ற,
புரி சிகர ரத்ன ... விளங்குகின்ற முடியிலுள்ள நாக ரத்னங்களை,
சிந்த ... சிதற,
புராரி அமிர்தம் ... திரிபுர சம்ஹாரியான சிவனார் முன்பு அமிர்தம் போல் உண்ட ஆலகால விஷம்,
திரும்பப் பிறந்தது என ... மீண்டும் தோன்றி விட்டதோ என அனைவரும் அஞ்ச,
ஆயிரம் பகு வாய்கள் ... பிளவு பட்ட ஆயிரம் வாய்களும்,
தீ விஷம் கொப்புளிப்ப ... நெருப்பைப் போல் எரியும் விஷத்தைக் கக்க,
சக்ர கிரி சூழ வரு மண்டலங்கள் ... சக்ரவாளகிரியால் சூழப்பட்ட தேசங்கள் யாவையும்,
சகல சங்கார ... ஒரே மூச்சில் அழிக்க வல்ல,
கோர நயன ... கொடூரமான பார்வையை உடைய,
தறுகண் வாசுகி ... வீரமும் கொடூரமும் உள்ள வாசுகியின்,
பணாமுடி எடுத்து உதறும் ... படக்கூட்டங்களை ஒரே அடியாகத் தூக்கி வீசுகிற,
சண்டப் பிரசண்ட மயிலாம் ... உக்ரமும் வேகமும் கொண்ட மயில்
(அது யாருடையது என வினாவினால்)
விக்ரம கிராதகுலி ... வீரம் மிக்க வேடர் வம்சத்தில் வளர்ந்து வந்த,
புன மீது உலாவிய ... வள்ளி புனத்திற்கு சென்று உலாவி வந்த,
விருத்தன் ... கிழ ரூபம் எடுத்த மேலோன்,
திருத்தணிகை வாழ் வேலாயுதன் ... சானித்தியம் கொண்டு திகழும் திருத்தணித் தலத்தில் வாழும் வேலாயுதக் கடவுள்,
பழ வினை துயர் அறுத்து ... என்னுடைய பூர்வ ஜென்ம வினைகள், துன்பத்தை ஒழித்து,
எனை வெளிப்பட உணர்த்தி அருளி ... நான் யார் என்பதை எனக்கு உபதேசம் மூலமாக உணர்த்தி அருளி,
துக்க சுக பேதமற வாழ்வித்த கந்த சுவாமி ... இன்ப துன்பங்களை கடந்த அத்துவித நிலையில் என்னை இருத்தி அருளிய கந்த சுவாமி,
வாகனமானது ... வாகனமாக திகழும்,
ஓர் ... ஒப்பற்ற,
துரக ரத கஜ கடக ... குதிரை, தேர், யானை காலாட் படைகளைக் கொண்ட,
விகட தட ... பெருமை உள்ளதும் அகன்றதுமான,
நிருதர் குல துஷ்டர் ... அசுரர்குல தீயோர்களை
நிஷ்டூர மயிலே ... கொடுமையை காட்டி அழிக்கின்ற மயிலே தான் அது.
......... விளக்கவுரை .........
ரத்நம்
ஆயுட்காலம் முழுவதும் யாரையுமே தீண்டாமல் விஷத்தையும் கக்காமல் இருக்கும் நாக சர்ப்பத்தின் அந்த விஷமே ரத்னமாக மாறிவிடுகிறது. இதையே விஞ்ஞானிகளும் மாணிக்கமும் கரியின் (carbon) ஒரு மாற்று ரூபமே என்கிறார்கள். விஷமும் கரியின் ஒரு வகை மாற்று ரூபமே.
புராரி அமிர்தம்
திருப் பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் கடைந்த சமயம் வெளி வந்த 'மஹாலட்சுமி', 'ஐராவதம்', 'வைஸ்ரவஸ்' போன்ற மதிப்புள்ளவைகளை திருமால் முதலிய தேவர்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால் அதி பயங்கரமான 'ஆலகால விஷம்' வெளி வந்தபோது அதை பெற்றுக் கொள்ளுவதற்கு யாரும் முன் வரவில்லை. மாறாக அவர்கள் அஞ்சி சிவபெருமானிடத்தில் சென்று முறையிட்டனர். சிவபெருமானும், சிறு குழந்தைகளின் சுய நலத்தைக் கண்டு புன் சிரிப்பு செய்யும் தந்தையைப்போல் அந்த விஷத்தை ஏற்று உண்டுவிடுகிறார். இந்த 'தியாகத்தை' அவர் செய்ததால்தான் அவருக்கு 'தியாகேசன்' என்கிற திருநாமம் ஏற்பட்டது. வேதத்தில், 'தியாகம் செய்பவனே அழிவற்ற நிலையை அடைகிறான்' என கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப, விஷத்தை உண்ட ஈசருக்கு மரணம் கிடையாது. ஆனால் அமிர்தம் உண்ட தேவர்கள் 'சதுர் யுக' முடிவில் மாண்டு விடுகிறார்கள்.
வாசுகி
திருவேளைக்காரன் வகுப்பில்,
வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும் வாசுகியெ டுத்துதறும் வாசிக் காரனும்
... என இதே கருத்தை கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
விருத்தன்
வேல் வகுப்பில்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தனென துளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே
... எனும் அடிகளில் விருத்தன் என வரும் சொற்றொடரைக் காணலாம்.
பழவினை
வேலாயுதக் கடவுள் அருணகிரியாரை ஆட்கொண்டு, தொடர்ந்து வந்த பழைய வினைகள் இனியும் தொடராமல் அற்றுப் போகும்படிச் செய்து, 'ஜீவாத்மா பரமாத்வாவேதான்' என்கிற பரம ரகசியத்தை உபதேசம் செய்து, இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட அநுபூதி நிலையில் நிலை பெற்றிருக்கச் செய்தார். இதைத், 'தேனுந்து முக்கனிகள்' எனத் தொடங்கும் கையிலைமலைத் திருப்புகழில்(பாடல் 518),
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ சீவன் சிவச்சொரூப மெனதேறி நானென்ப தற்றுயிரோ டூனென்ப தற்றுவெளி நாதம் பரப்பிரம வொளிமீதே ஞானஞ் சுரப்பமகி ழானந்த சித்தியோடெ நாளுங் களிக்கபத மருள்வாயே
... என விவரிக்கிறார். இக்கருத்தை கந்தர் அலங்காரத்திலும்,
இன்பம் துன்பம் கழித்து ஓடுவது எக்காலம்?
... என வேண்டியதை அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் அருளினார் என்பதை பல இடங்களில் காணலாம்.
| |