| ......... மூலம் .........
தீரப் பயோததி (க) திக்குமா காயமுஞ் செகதலமு நின்று சுழலத்
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத் தீக்கொப் புளிக்க வெருளும்
பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம் பதைபதைத் தேநடுங்கப்
படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு பச்சைப்ர வாள மயிலாம்
ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர அமிர்தகல சக்கொங் கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர மாநந்த வல்லி சிறுவன்
கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார குருதரு திருத்தணி கைவேள்
கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி குடிபுகுத நடவு மயிலே.
......... சொற்பிரிவு .........
தீரப் பயோததி திக்கும் ஆகாயமும் செகதலமும் நின்று சுழலத்
திகழ்கின்ற முடி மவுலி சிதறி விழ வெம் சிகைத் தீக்கொப்புளிக்க வெருளும்
பாரப் பணாமுடி அநந்தன் முதல் அரவெலாம் பதைபதைத்தே நடுங்கப்
படர் சக்ரவாளகிரி துகள் பட வையாளி வரு பச்சை ப்ரவாள மயிலாம்
ஆர ப்ரதாப புளகித மதன பாடீர அமிர்த கலசக் கொங்கையாள்
ஆடு மயில் நிகர் வல்லி அபிராம வல்லி பர மாநந்த வல்லி சிறுவன்
கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார குரு தரு திருத்தணி கைவேள்
கொடிய நிசிசரர் உதரம் எரி புகுத விபுதர் பதி குடி புகுத நடவு மயிலே.
......... பதவுரை .........
தீர ... மிகவும் நன்றாக,
பயோததி ... சமுத்திரங்களும்,
திக்கும் ... எட்டுத் திசைகளும்,
ஆகாயமும் ... மேல் வானமும்,
செக தலமும் ... பூவுலகும்,
நின்று சுழல ... நின்ற நிலையில் சுழற்சி அடையவும்,
திகழ்கின்ற ... விளங்குகின்ற,
முடி மவுலி ... ஆயிரம் பணாமுடிகளும் கீழே விழுந்து சிதறவும்,
வெம் சிகை தீக் கொப்புளிக்க ... கொடிய உச்சியின் மேல் உள்ள படங்கள் நெருப்பைக் கக்கவும்,
வெருளும் ... பயத்தை அடைந்த,
பாரப் பணாமுடி ... கனத்தப் படக் கூட்டங்களை உடைய,
அநந்தன் முதல் அரவெலாம் ... ஆதிசேடன் முதலான சர்ப்பக் கூட்டங்கள்,
பதை பதைத்து நடுங்க ... பட படவென்று அச்சமுற்று நடுங்கவும்,
படர் சக்ரவாளகிரி ... எங்கும் பரந்துள்ள சக்ரவாளகிரி,
துகள் பட ... தூள் தூளாகப் போகவும்,
வையாளி வரு ... பயணத்திற்கு ஏற்றபடி சவாரிக்கு வரும்,
பச்சைப் பிரவாள மயிலாம் ... பச்சை நிறத்தையும் பவள நிறத்தையும் உடைய தோகைகளைக் கொண்ட மயில்
(அது யாருடையது என வினாவினால்)
ஆர ... மிக்க கீர்த்தி உடையதாய்,
புளகித ... புளகாங்கிதம் கொண்டதாய்
மதன ... ஒளி மிகுந்ததாய்,
பாடீர ... சந்தனப் பூச்சுக்கள் அணியப் பெற்றதாய்,
அமிர்த கலச கொங்கையாள் ... அமிர்தம் நிறைந்த குடத்தைப் போன்ற தன பாரங்களைக் கொண்டவள்,
ஆடு மயில் நிகர் வல்லி ... தோகையை விரித்து ஆடும் மயிலைப் போன்றவள்,
அபிராம வல்லி ... பேரழகு உடையவள்,
பரமானந்த வல்லி ... பேரானந்தத்தில் திகழ்ந்து கொண்டிருப்பவள்,
சிறுவன் ... இப்பேற்பட்ட பார்வதி தேவியின் திருக்குமரன்,
கோர த்ரிசூல ... கோரமான முத்தலை சூலத்தை ஏந்தியவரும்,
த்ரியம்பக ... முக்கண்ணரும்
ஜடாதார ... நிமிர் சடையானும்,
குரு ... லோக குருவாகிய சிவபெருமான்,
தரு ... தந்தருளிய,
திருத்தணிகை வேள் ... தணிகேசன்,
கொடிய நிசிசரர் உதிரம் எரி புகுத ... கொடிய செயல்களையே செய்து வந்த அசுரர்களின் வயிற்றில் எரி புகவும்,
விபுதர் பதி குடி புகுத ... தேவர்கள் அமராவதி நகரில் குடியேறவும்,
நடவு மயிலே ... செலுத்திய மயிலே தான் அது.
......... விளக்கவுரை .........
ஆரப்ரதாப ... கலச கொங்கையாள்
அம்பிகையின் தன பாரங்கள் கீர்த்தி மிக்கவை என்பதற்கு காரணம் என்ன?
நுகரவித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு நுவல்மெய்புள பாலன் னென்றிடு மிளையோனே
... என்று சம்பந்தப் பெருமான் உமையம்மையின் திருமுலைப் பால் அருந்தி ஞானம் அடைந்ததை 'பகர்தற்கு அரிதான' எனத் தொடங்கும் பழநித் திருப்புகழில் (பாடல் 173), அருணகிரியார் கூறுகிறார். ஆதி சங்கரரும் தான் இயற்றிய 'செளந்தர்ய லஹரி' யில் வரும் 75 வது செய்யுளில்,
தவ ஸ்தன்யம் மன்யே
(இதன் பெருள் உன்னுடைய தன பாரங்களை நான் வணங்குகிறேன்) என்பார். மேலும் அவர்,
.. திராவிட சிசுவாகிய ஞானசம்பந்தர் உனது பாலைப் பருகி கவி இயற்றுவதில் அதி உன்னத பதவியைப் பெற்றார் ..
... என்பார்.
ஆடு மயில் நிகர் வல்லி
உமையாளுக்கும் மயிலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. மயில் கரிய மழை மேகத்தைக் உற்சாகமடைந்து ஆடுவதைப் போல அம்பாளும் சுவாமியின் நீல கண்டத்தை நோக்கி அதன் சிறப்பை உணர்ந்து மயிலனைய பார்வதி தேவி உற்சாகத்துடன் நடனமாடுகிறாள். இதனாலேயே, 'திருமயிலை', 'மயிலாடுதுறை' போன்ற திருத்தலங்களில் உமாதேவியார் மயில் ரூபமாக சிவபெருமானை பூஜிக்கும் திருக்கோலத்தில் அடியார்களுக்கு காட்சி தருகிறாள்.
குரு
உலகுக்கெல்லாம் குருவாகத் திகழ்பவர் தட்சிணாமூர்த்தி என்பதால் சிவபெருமானை குரு என்கிறார். இப்பேற்பட்ட குருமூர்த்திக்கும் பிரணவ மந்திரத்தை உபதேசித்து, குருநாதராகத் திகழ்பவர் முருகன் என்பதால் அவருக்கு 'குருபரன்' எனும் திருநாமம் ஏற்பட்டது.
கொடிய நிசிசரர் ... குடிபுகுத
கடைசி வரிகளான இவைகளின் கருத்தை, சீர் பாத வகுப்பில்,
இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி றெரிபுகுத
... என்கிற அடிகளில் காணலாம்.
| |