| ......... மூலம் .........
சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச் சகல லோகமு நடுங்கச்
சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ் சஞ்சலப் பட உமையுடன்
கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த காரம் பிறந்திட நெடுங்
ககனகூட முமேலை முகடுமூ டியபசுங் கற்றைக் கலாப மயிலாஞ்
சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள சித்ரப் பயோ தரகிரித்
தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன் திருத்தணிமகீரதன் இருங்
கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய க்ருபாகரன் கார்த்தி கேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி கிழிபட நடாவு மயிலே.
......... சொற்பிரிவு .........
சங்கார காலம் என அரி பிரமர் வெருவுற சகல லோகமும் நடுங்க
சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும் சஞ்சலப்பட உமையுடன்
கங்காளர் தனி நாடகம் செய்த போது அந்த காரம் பிறந்திட நெடும்
ககனகூட மும் மேலை முகடு மூடிய பசும் கற்றைக் கலாப மயிலாம்
சிங்கார குங்கும படீர ம்ருக மத யுகள சித்ரப் பயோதர கிரித்
தெய்வ வாரண வநிதை புனிதன் குமாரன் திருத்தணி மகீரதன் இருங்
கெங்காதரன் கீதம் ஆகிய சுராலயன் க்ருபாகரன் கார்த்திகேயன்
கீர்த்தி மாஅசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி கிழி பட நடாவு மயிலே.
......... பதவுரை .........
சங்கார காலமென ... நான்கு யுகங்களின் முடிவில் எல்லாம் அழிவடையும் இறுதி காலம் வந்து விட்டதோ என்று,
அரி பிரமர் வெருவுற ... திருமாலும் பிரமனும் அச்சப்பட்டு நடுங்கவும்,
சகல லோகமும் நடுங்க ... எல்லா உலகங்களும் அச்சப்படவும்,
சந்திர சூரியர் ஒளித்து ... சந்திரனும் சூரியனும் பயத்தால் ஒளிந்து கொள்ளவும்
இந்திராதி அமரரும் சஞ்சலப்பட ... இந்தராதி அமரர்கள் குழப்பமடையவும்,
உமையுடன் கங்காளர் ... உமாதேவியுடன் எலும்பு மாலை அணிந்த சிவனார்,
தனி நாடகம் செய்த போது ... ஒப்பற்ற சர்வ சங்கார நடனம் செய்த சமயம்,
அந்தகாரம் பிறந்திட ... பிரளய இருள் மூடி இருந்தது போல்,
நெடுங் ககன கூடமும் ... விரிந்த மேல் உலகத்தின் உச்சியும்,
மேலை முகடும் ... வானத்தின் உச்சியும்,
மூடிய ... மறையும்படி செய்த
பசுங்கற்றை கலாப மயிலாம் ... பசிய தோகையை உடைய மயில்
(அது யாருடையது என வினாவினால்)
சிங்கார ... பேரழகுடைய,
குங்கும் படீர ... குங்கும நிறங் கொண்ட சாந்துக் கலவையையும்,
ம்ருக மத ... கஸ்தூரியையும் புனைந்த,
யுகள சித்ர பயோதர கிரி ... இரண்டு விஸ்தாரமும் அழகும் உடைய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட,
தெய்வ வாரண வனிதை ... தெய்வீகம் பொருந்திய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தேவயானையின்,
புனிதன் ... மணவாளனாகிய பரிசுத்த மூர்த்தியான,
குமரன் ... குமரக் கடவுள்,
திருத்தணி மகீதரன் ... திருத்தணி மலையில் வாழ்பவன்,
இரும் கங்காதரன் ... பெரிய கங்கா நதியில் பொறி ரூபமாக ஏந்தப்பட்டவன்,
கீதம் ஆகிய சுராலயன் ... இசைக்கு ஆதாரமான ஏழு சுரங்களுக்கும் இருப்பிடம் ஆனவன்,
கிருபாகரன் ... கருணைக் கடல்,
கார்த்திகேயன் ... கிருத்திகை மாதர்களின் புதல்வன்,
கீர்த்தி மா அசுரர்கள் மடிய ... வலிமை மிக்க சூரபத்மாதிகள் மடியவும்,
க்ரவுஞ்ச கிரி கிழிபட ... கிரவுஞ்ச மலை பிளவுபடவும்,
நடாவு மயிலே ... போர்க்களத்தில் குமரக் கடவுள் ஏறி வந்த மயிலே தான் அது.
......... விளக்கவுரை .........
உமையுடன் கங்காளர்
'பேரூழி' காலத்தில் உமையுடன் சிவனார் நடனமாடுவதை, 'சாங்கரி பாடியிட' எனத் தொடங்கும் பொதுப்பாடல் திருப்புகழில், (பாடல் 1240),
சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக தாண்டவ மாடியவர்
... எனக் கூறுகிறார்
'சர்வ சங்கார' காலத்தில் ஈசன் பிரம்ம விஷ்ணுவாதியர்களின் எலும்புகளை மாலையாகத் தரித்திருப்பதை அப்பர் சுவாமிகள் தேவாரத்தில்,
பெருங்கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய் இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ண களேபர மும்கொண்டு கங்காளராய் வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.
... என்கிறார்.
இருங் கங்காதரன்
சிவனாரின் நெற்றிக் கண்களிலிருந்து எழுந்த பொறிகளை அக்னி தேவனிடம் கொடுக்க, அவன் அப் பொறிகளின் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் கங்கா நதியில் விடுகிறான். கங்காதேவி அப்பொறிகளை சுமந்து வந்து சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்கிறாள். அதனால் முருகனுக்கு 'காங்கேயன்' எனும் திருநாமம் ஏற்படுகிறது. அதனால் இங்கு 'இருங் கங்காதரன்' என குறிப்பிடுகிறார்.
கீதம் ஆகிய சுராலயன்
சங்கீதத்திற்கு ஆதாரமான, 'சட்ஜம்', 'ரிஷபம்', 'காந்தாரம்', 'மத்யமம்', 'பஞ்சமம்', 'தைவதம்' எனப்படும் ஆறு சுரங்களும் முருகப் பெருமானின் ஆறு திருமுகங்களிலிருந்து தோன்றியவைகளாகும். ஏழாவது சுரமாகிய 'நிஷாதம்' முருகப் பெருமானின் வாகனமாகிய மயிலிலிருந்து தோன்றியது.
| |