| ......... மூலம் .........
சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி நயதுல்ய சோம வதன
துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம சுந்தரி பயந்த நிரைசேர்
ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள் யாவுங் கொடுஞ்சி றகினால்
அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே அணைக்குங் கலாப மயிலாம்
நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியா குலன்சங் குவாள்
மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன் மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன் வரமுதவு வாகை மயிலே.
......... சொற்பிரிவு .........
சோதி இம வேதண்ட கன்னிகையர் தந்த அபி நய துல்ய சோம வதன
துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம சுந்தரி பயந்த நிரைசேர்
ஆதி நெடு மூதண்ட அண்ட பகிரண்டங்கள் யாவும் கொடும் சிறகினால்
அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே அணைக்கும் கலாப மயிலாம்
நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியாகுலன் சங்கு வாள்
மா திகிரி கோதண்டம் தண்டம் தரித்த புயன் மாதவன் முராரி திருமால்
மதுகைடவாரி திரு மருகன் முருகன் குமரன் வரமுதவு வாகை மயிலே.
......... பதவுரை .........
சோதி ... ஒளிவடிவினளாய்,
இம வேதண்ட ... இமய மலையின்கண்,
கன்னிகையர் தந்த ... தோழியர்கள் பாதுகாத்து வந்த,
அபிநய ... மிகுதியான அலங்காரம் உடையவளும்,
துல்ய ... பரிசுத்தம் மிகுந்தவளும்,
சோம வதன ... சந்தரன் போல் தண்ணொளி வீசும் முகம் உடையவளும்,
துங்க ... சிறந்த,
திரிசூலதரி ... மூன்று முனைகளை உடைய சூலாயுதத்தைக் கையில் கொண்டவளும்,
கங்காளி ... எலும்பு மாலையை அணிந்தவளும்,
சிவகாம சுந்தரி ... சிவபெருமானையே எப்பொழுதும் நாடி விரும்பி இருக்கும் பார்வதி தேவி,
பயந்த ... படைத்த,
நிரை சேர் ... ஒழுங்குமுறையும் வரிசை கொண்டதுமான,
ஆதி நெடு ... புராதனமானவையும் பரந்துள்ளதுமான,
மூதண்ட அண்டம் ... மிகப் பெரிய பிரபஞ்ச படைப்புகளான உலகங்கள் எல்லாமும்,
பகிரண்டம் யாவும் ... வெளி உலகங்கள் யாவையும்,
கொடும் சிறகினால் ... வளைந்த தனது சிறகினால்,
அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே ... ஒரு ஆண் மயில் தனது பேடை மயிலின் முட்டைகளைக் காப்பது போல்,
அணைக்கும் கலாப மயிலாம் ... அகில பிரபஞ்களையும் பாதுகாக்கும் மயில்
(அது யாருடையது என வினாவினால்)
நீதிமறை ... பல தர்மங்களை உணர்த்தும் வேதங்கள்,
ஓது ... வர்ணிக்கும்,
அண்ட ... வெளி உலகங்களில் வாழும்,
முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு ... 33 கோடி தேவர்களும் துதித்து வணங்கும்
கிரியாம் ... மலையாகிய,
நீலகிரி வேலவன் ... திருத்தணியில் வாழும் வேலாயுதக் கடவுள்,
நிராலம்பன் ... தனக்கென்று ஒரு பற்றுக் கோடும் இல்லாதவன்,
நிர்பயன் ... பயமில்லாதவன்,
நிர்வியாகுலன் ... மனத் துன்பம் இல்லாதவன்,
சங்கு ... பாஞ்ச சனியம் எனும் சங்கு,
வாள் ... நாந்தகம் எனும் வாள்,
மா திகிரி ... பெருமை மிக்க சுதர்சனம் எனும் சக்ரம்,
கோதண்டம் ... சாரகங்கம் எனும் வில்,
தண்டம் ... கெளமேதகம் எனும் கதை,
தரித்த புயன் ... ஆகியவைகளை ஏந்தியுள்ள புயங்களை உடையவனும்,
மாதவன் முராரி திருமால் ... மாதவனும் முராரியும் திருமாலும்,
மதுகைட வாரி ... மது கைடவன் என்ற இரு அசுரர்களை அழித்தவனாகிய திருமாலினுக்கும்,
திரு ... மகாலட்சுமிக்கும்,
மருகன் ... மருமகன்,
முருகன் குமரன் ... முருகவேள் குமரக் கடவுளின்,
வரமுதவு வாகை மயிலாம் ... வேலும் மயிலும் துணை என்கிற மகா மந்திரத்தின் பொருளாக நின்று அதை ஜெபிக்கும் அடியார்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுக்கும் வெற்றி மயில் தான் அது.
......... விளக்கவுரை .........
ஜோதி
முருகன் ஜோதி வடிவினன். அவன் ஜெகஜோதித் தம்பிரான். பல இடங்களில் முருகனை, 'தீப மங்கள ஜோதி', 'ஜோதி நடமிடும் பெருமாள்', 'நிர்த்த ஜெக ஜோதி பெருமாள்' எனக் கூறுவார். அவருடைய தாயாரும் ஜோதி வடிவினளே என இங்கு குறிப்பிடுகிறார்.
கன்னிகையர் தந்த
சிவதூஷனை செய்த தட்சணுக்கு மகளாகப் பிறந்த பாவத்தைப் போக்க உமா தேவியார், தனது தேகத்தை தீயில் தகித்துவிட்டு இமய மலையில் சிறு குழந்தையாகத் தோன்றுகிறாள். இமவானும் அவனது துணைவியான மேனையும் பார்வதி தேவியை வளர்த்து, பருவம் அடைந்தவுடன் தேவி சிவபெருமானைக் குறித்து தவம் செய்கிறாள். அவளைப் பாதுகாப்பதற்காக பல தாதிகள் நியமிக்கப்பட்டனர். அதையே இங்கு 'கன்னிகையர் தந்த' என விளிக்கிறார்.
சிவகாம சுந்தரி
அம்பிகை பரமேஸ்வரனை சதா உபாசித்து, கடும் தவம் செய்து, அதனால் பெற்ற அந்த தவத்தின் பலனை தான் படைத்த ஜீவ ராசிகளுக்கே கொடுக்கிறாள். அதனால் அவளுக்கு 'சிவகாம சுந்தரி' என்கின்ற திருநாமம் வந்தது.
மயிலின் விஸ்வரூபம்
பிரபஞ்சத்தில் உள்ள பூரா அண்டங்களையும் தன் பேடையின் முட்டைகள் என எண்ணி அவைகளை அணைத்துப் பாதுகாக்கும் வல்லமை கொண்டது மயில் என கூறப்படுவதினால், மயிலுக்கு விஸ்வரூபம் எடுக்கும் ஆற்றல் உண்டு என்பது தெளிவாகிறது
முப்பத்து முக்கோடி நித்தர்
வசுக்கள் .. 8 ருத்திரர் .. 11 ஆதித்யர் .. 12 அசுவனி தேவர் .. 2
... ஆக மொத்தம் 33
ஒவ்வொருவருக்கும் கோடிக்கணக்கான உபதேவர்கள் இருப்பதால் அவர்களை முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பர். எல்லா தேவர்களும் திருத்தணியில் வந்து கந்தக் கடவுளை வணங்குகிறார்கள் என்பதை,
தலமகள் மீதெண் புலவரு லாவும் தணிகையில் வாழ்செங் கதிர்வேலா
(புலவர் ... தேவர்)
... என்பார் ('கலை மடவார்தம்' எனத் தெடங்கும் திருத்தணித் திருப்புகழில். பாடல் 256).
நித்தர்
இவர்கள் அழிவில்லாமல் என்றும் சிரஞ்சீவிகளாய் வாழும் சித்தர்கள் எனப் பொருள் கொள்ளலாம். இவர்கள் திருத்தணியில் கிரி வலம் வருவதை,
சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர் திக்குகளோர் நாலி ரட்டின் கிரிசூழ
... என 'எத்தனை கலாதி' எனத் தொடங்கும் திருத்தணித் திருப்புகழில் கூறுவார். (பாடல் 247).
நிராலம்பன்
முருகக் கடவுள் சகல லோகங்களுக்கும் தானே பற்று கோடாக இருப்பினும் தனக்கு என ஒரு ஆதாரமும் இல்லாதவன் என்பதை,
தானே வளர்ந்து தானே யிருந்த தார்வேணி யெந்தை யருள்பாலா
... என்ற 'ஊனேறெலும்பு' எனத் தொடங்கும் பொதுப்பாடல் திருப்புகழில் கூறுவார். (பாடல் 1221).
நிர்பயன்
பகைவர்கள் உள்ளவருக்குத்தான் பயம் இருக்கும். முருகனுக்கு மூன்று லோகங்களிலும் எதிரிகளே கிடையாது. ஆதலால் அவனுக்கு பயமும் கிடையாது.
நிர்வியாகுலன்
கந்தர் அநுபூதியில் நிராகுலன் என்பதும் இங்கு நிர்வியாகுலன் என்பதும் ஒரே பொருளைக் கொண்ட இரு சொற்கள். மனக்கவலை அற்றவன் என்பது இதன் பொருளாகும். அதனால் அவன் அடியார்களும் மனக்கவலையற்று வாழவேண்டும் என பிரார்த்திக்கிறார்.
மதுகைடவாரி
'மது', 'கைவடன்' என்கின்ற இரு அசுரர்களும் மஹாவிஷ்ணுவின் செவிகளில் இருந்து தோன்றிய 'அதிபல மகா வீரர்கள்'. அவர்களை எதிர்த்து ஜெயிக்க முடியாமல் திருமால் தத்தளித்த போது அவர்கள் திருமாலை நோக்கி, உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்க, திருமால் அதற்குப் பதிலாக, நீங்கள் என்னால் கொல்லப்பட வேண்டும் என்று கேட்க, அவ்வசுரர்கள் திருமாலின் தொடையில் வந்து ஏற, தன் கதையினால் அவர்களைக் கொன்று விடுகிறார். இந்த 'மது' தான் 'கும்பகர்ண' ணாக பிறக்கிறான். 'கைடவன்' ராவணனின் மகன் 'அதிகாய' னாக பிறக்கிறான்.
| |