| ......... மூலம் .........
யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம் உதித்ததென் றயன் அஞ்சவே
ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள லோகமும் பொற்குவடுறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு விசும்பிற் பறக்க விரிநீர்
வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை வீசிப் பறக்கு மயிலாம்
நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ நந்தனன் முகுந்தன் மருகன்
முககோடி நதிகரன் குருகோடி அநவரதம் முகிலுலவு நீலகிரிவாழ்
முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட மூரிக் கலாப மயிலே.
......... சொற்பிரிவு .........
யுக கோடி முடிவில் மண்டிய சண்டமாருதம் உதித்தது என்று அயன் அஞ்சவே
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள லோகமும் பொன் குவடு உறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்து இரு விசும்பில் பறக்க விரிநீர்
வேலை சுவறச் சுரர் நடுக்கங் கொளச் சிறகை வீசிப் பறக்கு மயிலாம்
நககோடி கொண்ட அவுணர் நெஞ்சம் பிளந்த நர கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ நந்தனன் முகுந்தன் மருகன்
முககோடி நதிகரன் குருகு ஓடி அநவரதம் முகில் உலவு நீலகிரி வாழ்
முருகன் உமை குமரன் அறுமுகன் நடவு விகட தட மூரிக் கலாப மயிலே.
......... பதவுரை .........
யுக ... திரேதா யுகம், கிருதா யுகம், துவார யுகம், கலி யுகம் என்கிற சதுர் யுகங்களின்,
கோடி முடிவில் ... எல்லையின் முடிவு காலங்களில்,
மண்டிய ... உக்ரமாக வீசும்,
சண்ட மாருதம் ... சூராவளிக் காற்று,
உதித்ததென்று ... இப்போதே வந்து விட்டதோ என்று,
அயன் அஞ்சவே ... பிரமன் நடுக்கமுற,
ஒரு கோடி அண்டர் அண்டங்களும் ... கோடிக்கணக்கான தேவலோகங்களும்,
பாதாள லோகமும் ... கீழ் உலகங்களும்,
பொன் குவடு உறும் ... பொன் மயமான சிகரங்களை உடைய,
வெகு கோடி மலைகளும் ... கோடிக் கணக்கான மலைகளும்,
அடியினில் ... மயில் அடி வைக்கும் பொழுதே,
தகர்ந்து ... பொடியாகி,
இரு விசும்பில் ... பெரிய ஆகாசத்தில் தூளாக பறக்கவும்,
விரி நீர் வேலைச் சுவற ... பரந்த நீர்ப் பரப்பை உடைய கடல் வற்றிப் போகவும்,
சுரர் நடுக்கங் கொள ... தேவர்கள் பயப்படவும்,
சிறகை வீசிப் பறக்கும் மயிலாம் ... தன்னுடைய தோகைகளை வீசிப் பறக்கும் மயில்
(அது யாருடையது என வினாவினால்)
நககோடி கொண்டு ... எண்ணிலடங்காத நகங்களைக் கொண்டு,
அவுணர் நெஞ்சம் பிளந்து ... அரக்கர்களின் மார்பைப் பிளந்த,
நரகேசரி ... நரசிங்க மூர்த்தி,
முராரி ... முரன் எனற அசுரனைக் கொன்றவர்,
திருமால் ... மேக வண்ணன்,
நாரணன் ... பாற்கடலில் வசிப்பவர்,
கேசவன் ... கேசி என்ற அசுரனை வதைத்தவர்,
சீதரன் ... மஹாலட்சுமியை தனது திரு மார்பில் தரித்துள்ளவர்,
தேவகீ நந்தனன் ... தேவகியின் திருக் குமாரர்,
முகுந்தன் ... முக்தியையும் உலக நலங்களையும் வழங்குபவர்,
மருகன் ... ஆகிய மஹா விஷ்ணுவின் மருமகனும்,
முககோடி நதிகரன் ... ஆயிரம் முகங்களை உடைய கங்கையினால் சுமக்கப்பட்ட ஜோதி வடிவினன்,
குருகு ஓடி ... வெள்ளை நிறமாக பரவிச் செல்லும்,
அநவரதம் முகிலுலாவு ... மேகங்கள் எப்பொழுதும் தவழ்கின்ற,
நீலகிரி வாழ் ... திருத்தணி மலையில் வீற்றிருக்கும்,
முருகன் உமை குமரன் அறுமுகன் ... முருக மூர்த்தி, பார்வதி பாலன், ஆறுமுகக் கடவுள்,
நடவு ... செலுத்துகின்ற,
விகட ... அழகும்,
தட ... பெருமையும்,
மூரிக் கலாப மயிலே ... மிக்க வலிமையும் கொண்ட தோகைகளை உடைய மயிலே அது.
......... விளக்கவுரை .........
நக கோடி .. நரகேசரி
இரணியனை மட்டுமல்லாமல் வேறு பல அசுரர்களையும் நரசிங்க அவதாரம் எடுத்து மஹாவிஷ்ணுவானவர் மார்பைப் பிளந்து சம்ஹாரம் செய்தார் என்பது பாரதத்தில் வரும் செய்தியாகும்.
முக கோடி நதிகரன்
கங்கை ஆயிரம் முகங்களைக் கொண்டவள் என்பதை
.. ஆயிர முகத்து நதி பாலனும் ..
... என திரு வேளைக்காரன் வகுப்பில் கூறுவார்.
நீலகிரி
மயில் விருத்தத்தில் வரும் முதல் பாடலான 'சந்தான புஷ்ப ..' எனத் தொடங்கும் பாடலைத் தவிர மற்ற பத்து பாடல்களிலும் திருத்தணி பற்றிய குறிப்பு வருவதால் இந்த விருத்தம் பூராவும் திருத்தணியில் பாடப்பட்டது எனக் கொள்ளலாம்.
| |