| ......... மூலம் .........
ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ தண்டமுக டதுபெயரவே
ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி கவுட்கிரி சரம்பெயரவே
வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார் மிக்கப் ரியப்படவிடா
விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம்
மாதாநு பங்கியெனு மாலது சகோதரி மகீதரி கிராத குலிமா
மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த வள்ளிமணி நூபுர மலர்ப்
பாதார விந்தசே கரனேய மலரும்உற் பலகிரி அமர்ந்த பெருமாள்
படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப் பசுந்தோகை வாகை மயிலே.
......... சொற்பிரிவு .........
ஆதார பாதளம் பெயர அடி பெயர மூதண்டம் முகடது பெயரவே
ஆடும் அரவம் முடி பெயர எண் திசைகள் பெயர எறி கவுள் கிரிசரம் பெயரவே
வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார் மிக்க பிரியப்பட விடா
விழி பவுரி கவுரி கண்டு உளமகிழ விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம்
மாதாநு பங்கியெனும் மால் அது சகோதரி மகீதரி கிராத குலி
மாமறை முநி குமாரி சாரங்கம் நம் தனி வந்த வள்ளி மணி நூபுர மலர்ப்
பாதார விந்த சேகரன் நேயம் மலரும் உற் பலகிரி அமர்ந்த பெருமாள்
படைநிருதர் கடகம் உடை பட நடவு பச்சைப் பசுந்தோகை வாகை மயிலே.
......... பதவுரை .........
ஆதார ... இப்பூவுலகுக்கெல்லாம் ஆதாரமாய் உள்ள,
பாதாளம் பெயர ... பாதாள லோகம் அசையவும்,
அடி பெயர ... மயில் தனது அடியை எடுத்து வைத்த உடனேயே,
மூதண்ட முகடது பெயரவே ... மிகவும் பழமையான பிரமாண்டத்தின் உச்சிக் கூரையானது அசைவு பெறவும்,
ஆடரவ முடி பெயர ... இப்பூவுலகத்தைத் தாங்கும் ஆதிசேடனின் ஆடுகின்ற ஆயிரம் முடிகளும் அசைந்து கொடுக்கவும்,
எண்திசைகள் பெயர ... எட்டுத் திக்குகளும் நடுக்கமுறவும்,
எறி கவுள் கிரிசரம் பெயரவே ... மத நீரை சிந்தி எறிகின்ற கன்னங்களை உடைய அஷ்ட திக்கு கஜங்களும் (யானைகளும்) இடம் பெயரவும்,
வேதாள தாளங்களுக்கு இசைய ஆடுவார் ... வேதாள கணங்கள் தாளம் போட அதற்குத் தகுந்த வகையில் நடனமாடும் நடராஜப் பெருமான்,
மிக்கப் பிரியப் பட ... மிகவும் அன்புடன் பாராட்டவும்,
விடா விழி பவுரி கெளரி கண்டு ... வைத்த கண்களை அகற்றாதபடி மயிலின் நடனத்தைக் கண்ட பார்வதி தேவி,
உள மகிழ ... உள்ளத்தில் களிப்புகொள்ளவும்,
விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம் ... பலவிதமான நடன வகைகளைக் காட்டி விளையாடுகின்ற மயில்
(அது யாருடையது என வினாவினால்)
மாதானு பங்கி எனும் மாலது சகோதரி ... திருவள்ளுவர் என பெருமை மிக்கவரின் சகோதரியானவள்,
மகீதரி ... மலையில் பிறந்தவள்,
கிராதகுலி ... வேடர் வம்சத்தில் வளர்ந்தவள்,
மாமறை முநி குமாரி ... சிறந்த வேதங்களில் வல்லவராகிய சிவ முனிவரின் புத்திரி,
சாரங்கம் ... மான் வயிற்றில்,
தனி வந்த ... ஒப்பற்ற வகையில் உதித்த,
நம் வள்ளி ... நமது வள்ளித் தாயரின்,
மணி நூபுர மலர் ... கிண்கிணிகளும் சிலம்பும் அணிந்துள்ள தாமரை மலர் போன்ற,
பாதார விந்த சேகரன் ... பாதங்களை திருவடியில் அணிந்த முருகனின்,
நேயம் ... அன்பிற்கு உகந்ததாய்,
மலரும் ... பூத்திருக்கும்,
உற்பல கிரி ... நீலோற்பல புஷ்பங்கள் நிறைந்த திருத்தணியில்,
அமர்ந்த பெருமாள் ... வீற்றிருக்கும் பெருமையை உடையவன்,
படை நிருத ... படையுடன் வந்த அசுரர்களின்,
கடகம் உடைபட ... சேனைகள் சிதறிப் போகும்படி,
நடவு ... நடத்துகின்ற,
பச்சைப் பசும் தோகை வாகை மயிலே ... பச்சை நிறமான தோகையை உடைய வெற்றி மயிலே அது.
......... விளக்கவுரை .........
கிரி சரம்
யானைகள் மூன்று இனத்தன அவை
1. ஆற்றுப் படுகையில் பிறந்தவைகள் 'நதிசரம்' எனப்படும் 2. காட்டில் பிறந்தவைகள் 'வனசரம்' எனப்படும் 3. மலைகளில் பிறந்தவைகள் 'கிரிசரம்' எனப்படும்.
எண் திசைகள்
எட்டு திசைகளில் இருக்கும் மலைகளில் வசிக்கும் யானைகள் அஷ்டதிக் கஜங்கள் எனப்படும். அவைகள் முறையே,
ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், புஷ்படந்தம், அஞ்சனம், சார்வபெளமம், சுப்ரதீகம்.
இந்த புண்டரீகத்தைப் பற்றிய குறிப்பு கந்த புராணத்தில் வருகிறது. சூரபத்மா தேவலோகத்தை பிடித்தபோது அவனுடைய மந்திரி தர்ம கோபன், இந்த புண்டரீகத்தைப் சிறை பிடித்து, தன்னுடைய ஊராகிய மகேந்திரபுரிக்கு கொண்டு செல்கிறான். வீரபாகுத் தேவர் தூது சென்றபோது, சூர சேனைகளுடன் போரிட்டு, இந்த புண்டரீகத்தை மீட்டு வருகிறார்.
வேதாள தாளங்களுக்கிசைய ஆடுவார்
பூத கணங்கள் தாளம் போட ஈசன் ஆடுவதை திருஞானசம்பந்தர் தன்னுடைய தேவாரப் பதிகத்தில்,
பல்லியல் பாணி பரிடம் ஏத்த நடமிடும் ஈசன் ..
... என்பார்.
மிக்க பிரியப்பட
நடனத்தில் வல்லுரனான நடராஜப் பெருமான் மகிழும்படி, மயில் நடனமாடியதை, 'விடமளவி யரிபரவு' எனத் தொடங்கும் பொதுப்பாடல்கள் திருப்புகழில் (பாடல் 1096),
.. உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர வுரகர்பில முடியவொரு பதமோடி
உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர வுயரவகி லபுவனம திரவீசிக்
கடககர தலமிலக நடனமிடு மிறையவர்மகிழ் கருதரிய விதமொடழ குடனாடுங்
கலபகக மயில் ..
... என அழகாக வர்ணிக்கிறார்
மாதாநுபங்கி
பெற்ற தாயைப் போல் இதமாக ஒழுக்கத்தை போதிப்பதால் திருவள்ளுவருக்கு மாதாநுபங்கி என்கிற பெயர் உண்டு. இவர் பிரம்ம தேவனின் அவதாரம் என்பர். பிரமனுக்கு வள்ளி தங்கை என்பதை,
விதியானவன் இளையாள் எனதுள மேவிய வள்ளி நாயகி ..
... என்பார் 'மதனேவிய கணை' எனத் தொடங்கும் திருப்புகழில் (பாடல் 1186),
திருவள்ளுவருக்கு நான்முகனார் என்கிற பெயரும் உண்டு. ஒரு ருசியான கர்ண பரம்பரை வரலாறு.
'ஆதி' என்பவளுக்கும் 'பகவன்' என்பவருக்கும் பிறக்கும் குழந்தைகளை முன் செய்த நிபந்தனைகளின்படி அவர்கள் பிறந்த உடன் அந்தந்த இடங்களிலேயே விட்டு விடுகின்றனர்.
'பாணாச்சேரியில்' பிறந்த முதல் குழந்தை 'ஒளவை பிராட்டியார்'. தன்னைவிட்டுப் பிரிய மனமில்லாமல் தன் அன்னையைப் பார்த்து,
இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்று எழுதி விட்ட சிவனும் செத்து விட்டானோ முட்டமுட்ட பஞ்சமே வந்தாலும் பாரம் அவனுக்கே அன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ
... என்று பாடுகிறார்.
இரண்டாவது குழந்தை 'வண்ணாச்சேரியில்' பிறந்தது. அவளே 'உறவை' பிற்காலத்தில் 'மாரியம்மன்' ஆகிறாள்.
முன்றாவதாக அந்தணர் 'அக்ரகாரத்தில்' பிறந்தவர் 'கபிலர்'.
நான்காவதாக மன்னர் 'அரண்மனையில்' பிறந்தவர் 'அதியமான்'.
ஐந்தாவதாக 'கள் இறக்குமவர்' சேரியில் பிறந்தவர். அவரே 'உப்பை' பின்பு 'காளி' தேவியாகிறாள்.
'வள்ளிக் காட்டில்' பிறந்தவள் நம் 'வள்ளிப் பிராட்டியார்'.
'நெசவாளர்' சேரியில் பிறந்தவர் 'திருவள்ளுவர்'. இதன் பிரகாரம் திருவள்ளுவர் அவதாரத்திலும் வள்ளிப் பிராட்டியார் திருவள்ளுவரின் சகோதரியே.
நம் தனி வந்த வள்ளி
வைகுந்தத்தில் திருமாலும் மஹாலட்சுமியும் சொக்கட்டான் ஆடும்பொழுது அங்கு வந்த துருவாச முனிவரை மதிக்கவில்லை என்கிற காரணத்தினால் கோபமடைந்த முனிவர், திருமாலை சிவமுனிவராகவும் மஹாலட்சுமியை மானாகவும் ஆக சபிக்கிறார். அதன்படி திருமால் சிவமுனிவராக வள்ளிமலையில் தவமியற்றுகிறார். அங்கு மான் உருவில் வந்த திருமகளை பார்த்த உடனேயே சிவ முனிவரின் கண் பார்வையிலேயே கருவுற்று, வள்ளியை ஈன்று, வள்ளிக் கொடி குழியில் போட்டுவிடுகிறாள். இப்படி ஒரு ஆச்சரியமான வகையில் வள்ளிப் பிராட்டியார் பிறந்ததினால் அவளை நம் அருணை முனிவர்,
.. தனி வந்த வள்ளி ..
... எனக் குறிப்பிடுகிறார்.
ஒரு கற்புடைய மாது தன் கணவரின் சுற்றத்தாரை எல்லாம் அன்புடன் தன் சுற்றமாக கருதி பாவிப்பது போல் அருணகிரியாரும் தனது ஆத்ம நாயகனாகிய முருகப் பெருமானின் சுற்றத்தை எல்லாம் தன் சுற்றமாக கொண்டாடுவார். விநாயகரை 'மம விநாயகர்' என்றும், சிவபெருமானை, 'என் தந்தை சதாசிவ கோத்திரன்' என்றும், பார்வதி தேவியை 'எமதாயி' என்று கூறுவது போல் வள்ளிப் பிராட்டியாரையும் 'நம் வள்ளி' என்கிறார்.
| |