| ......... மூலம் .........
சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி பட்டுக் ரவுஞ்ச சயிலந்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு தனிவெற்பும் அம்புவியும் எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு சித்ரப் பதம்பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி பத்மப் பதங் கமழ்தரும்
பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய பரம உபதேசம் அறிவிக்
கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு கந்தச்சுவாமி தணிகைக்
கல்லார கிரியுருக வருகிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே.
......... சொற்பிரிவு .........
சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்து வெளி பட்டு க்ரவுஞ்ச சயிலம்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும் எழு தனி வெற்பும் அம்புவியும் எண்
திக்கும் தடங்குவடும் ஒக்கக் குலுங்க வரு சித்ரப் பதம் பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல் புரி வெம் சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சை பசும் கவுரி பத்ம பதம் கமழ் தரும்
பாகீரதிச் சடில யோகீசுரர்க்கு உரிய பரம உபதேசம் அறிவிக்
கைக்குச் செழும் சரவணத்தில் பிறந்த ஒரு கந்தச்சுவாமி தணிகைக்
கல்லாரகிரி உருக வரு கிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே.
......... பதவுரை .........
சக்ர ப்ரசண்ட கிரி ... சக்ரவாளம் என்கிற பெரிய வலிமை உடைய மலை,
முட்டக் கிழிந்து ... அடியோடு பிளவுபட்டு,
வெளி பட்டு ... வெளியில் சிதறவும்,
க்ரவுஞ்ச சயிலம் தகர ... கிரவுஞ்ச மலை பொடியாகப் போகவும்,
பெரும் கனகச் சிலம்பும் ... பெரிய தங்க நிற மயமான பெரிய சிகரங்களை உடைய மேரு மலையும்,
எழு தனி வெற்பும் ... சூரனுக்குக் காவலாக இருந்த ஏழு மலைகளும்,
அம்புவியும் ... அழகிய பூவுலகும்,
எண் திக்கு தடம் குவடும் ... எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட குல கிரியும்
ஒக்க குலுங்க ... ஒன்று பட்டு சேர்ந்து குலுங்கவும்,
வரு சித்ரப் பதம் பெயரவே ... அடி எடுத்து வருகின்ற அழகிய கால்கள் மெதுவாக வந்தவுடனேயே,
சேடன் முடி திண்டாட ... ஆதிசேஷனின் திருமுடிகள் கலங்க,
ஆடல் புரி வெம் சூரர் திண்டாட ... போர் புரியும் அசுரர் திண்டாட,
திடுக்கிட நடிக்கும் மயிலாம் ... திகைத்து நடுக்கமுற நடனம் செய்யும் மயிலாகும்
(அது யாருடையது என வினாவினால்)
பக்கத்தில் ஒன்று படு ... தனது இடப்பக்கத்தில் சேர்ந்திருக்கும்,
பச்சைப் பசும் கவுரி ... பச்சை நிறமுடைய பார்வதி தேவியின்,
பத்மப் பதம் கமழ் தரும் ... தாமரை போன்ற திருவடிகளின் நறு மணம் வீசும்,
பாகீரதி சடில ... கங்கையை புனைந்திருக்கும் ஜடா முடியை உடைய,
யோகீசுரர்க்கு ... யோக மூர்த்தியாகிய சிவபெருமானுக்கு
உரிய பரம உபதேசம் அறிவிக்கைக்கு ... தகுந்த பிரணவ உபதேசம் செய்வதற்காக,
செழும் சரவணத்தில் பிறந்த கந்த சுவாமி ... வளமான சரவணப் பொய்கையில் அவதரித்தக் கந்தக் கடவுளின்,
தணிகை ... திருத்தணிகையில்,
கல்லார கிரி உருக ... செங்கழுநீர்மலை உருகும்படி,
வருகிரண ... போரொளி பொருந்திய,
மரகத ... மரகத நிறம் உடைய,
கலாபத்தில் இலகு மயிலே ... தோகைகளை உடைய மயிலே அது.
......... விளக்கவுரை .........
சிவபெருமான் தன்னுடைய நிமிர் ஜடாமுடியில் கங்கையை வைத்திருப்பதை உணர்ந்த பார்வதி தேவி கோபமடைந்து ஊடலை அடைகிறாள். அதைத் தணிப்பதற்காக சிவபெருமான் அவள் திருப்பாதங்களில் விழும்போது அவள் திருவடிகளில் வீசும் நறுமணம் சிவபெருமான் முடியிலும் சேர்ந்து வீசுகிறது என்பதை,
பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி பத்மப் பதங் கமழ்தரும் பாகீரதிச் சடில யோகீசுரர்
... எனச் சிவபெருமானை அழகு பட விவரிக்கிறார் அருணகிரியார்.
| |