| ......... மூலம் .........
சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா
சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக சத்யப்ரி யாலிங்கனச்
சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி யம்பக விநாயகன்முதற்
சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம்
மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத்
திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ ரத்னக் கலாப மயிலே.
......... சொற்பிரிவு .........
சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச் சரண யுகள அமிர்த ப்ரபா
சந்த்ர சேகர மூஷிகா ஆருட வெகு மோக சத்ய ப்ரிய ஆலிங்கன
சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி யம்பக விநாயகன் முதல்
சிவனை வலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம்
மந்தாகிநி பிரபவ தரங்க விதரங்க வனசரோதய கிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்தி அ வர அசலன் குலிசாயுதத்து
இந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல் வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரி மகன் ஏறு நீலக்ரீவ ரத்னக் கலாப மயிலே.
......... பதவுரை .........
சந்தான ... தேவ லோக விருட்சங்களில் ஒன்றான சந்தான மர புஷ்பத்தின்,
பரிமள ... நறு மணம் வீசுவதும்,
கிண்கிணி முக ... சதங்கையை தன்னிடத்தில் கொண்டதும்,
அமிர்த ப்ரபா ... அமிர்த ஒளியை வீசுவதும் ஆகிய,
சரண யுகள ... இரண்டு திரு அடிகளை உடையவரும் (யுகள - இரண்டு),
சந்திர சேகர ... பிறைச் சந்திரனை அணிந்தவரும்,
மூஷிக ஆரூட ... மூஷிக வாகனரும்,
வெகு மோக சத்ய பிரிய ஆலிங்கன ... மிகப் பிரியத்துடன் சத்ய நெறியையே தழுவிக் கொண்டிருப்பவரும்,
சிந்தாமணி ... தேவ லோகத்து மணியாகிய சிந்தாமணி போல் அடியார்களுக்கு நினைத்ததை அள்ளிக் கொடுப்பவரும்,
கலச கர ... தனது தாய் தந்தையர்களுக்கு அபிஷேகம் செய்வதற்காக ரத்ன கலசத்தை திருக் கரத்தில் ஏந்தி இருப்பவரும்,
கட கபோல ... மத நீர் பெருகும் கன்னங்களை உடையவரும்,
த்ரியம்பக விநாயகன் ... முக் கண்ணை உடையவருமாகிய கணபதி,
முதல் ... முன்னொரு காலத்தில்,
சிவனை வரும் அளவில் ... கனிக்காக போட்டி இட்டு சிவபெருமானைச் சுற்றி வரும் அதே நேரத்தில்,
உலகடைய நொடியில் வரு ... சராசலங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் சுற்றி வந்த,
சித்ர கலாப மயிலாம் ... அழகான தோகைகளை உடைய மயில்
(அது யாருடையது என வினாவினால்)
மந்தாகினி பிரபவ ... கங்கையில் உதித்தவரும்,
தரங்க விதரங்க ... மனக் கவலைகளை பிளந்து எறிபவரும்,
வன சரோதய ... சரவணத்தில் உதித்தவரும்,
கிர்த்திகா வர புத்ர ... கிருத்திகை மாதர்களின் சிறந்த புதல்வரும்,
ராஜிவ பரியங்க ... தாமரை மலரைத் தனது கட்டிலாகக் கொண்டவரும்,
தந்தி அ வர அசலன் ... பாம்பு வடிவமான அந்த சீர்மிகு நாகாசல வேலவனும்,
குலிசாயுதத்து இந்திராணி ... வஜ்ராயுதத்தை உடைய இந்திரனின் மனைவியாகிய இந்திராணியின்,
மாங்கல்ய தந்து ரட்சாபரண ... மாங்கல்ய நூலை காப்பாற்றினவரும்,
இகல் வேல் விநோதன் ... போரிட வல்ல வேலாயுதத்தை ஏந்தி இருக்கும் பேரழகை உடையவனும்,
அருள் கூர் ... அருளைச் சுரக்கும்,
இமயகிரி குமரி மகன் ... இமவான் மடந்தை பார்வதியின் திருக் குமாரனாகிய முருகக் கடவுள்
ஏறு நீலக்ரீவ ரத்ன கலாப மயிலே ... வாகனமாக ஏறி வரும் நீல நிறமான கழுத்தையும் பச்சை நிறமாக ஒளி வீசும் தோகைகளை உடைய மயிலே அது.
......... விளக்கவுரை .........
தேவ லோகத்து ஐந்து வகையான மரங்கள்,
1. சந்தானம் 2. ஹரி சந்தானம் 3. மந்தாரம் 4. பாரிஜாதம் 5. கற்பகம்
... எனப்படும்.
விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொல்லாமல் தன்னுடைய அருளுக்குப் பாத்திரமாக தனது வாகனமாகக்கொண்டது அவரது தனிப் பெருங் கருணையே.
இங்கு ஒரு யோகக் கருத்தும் உண்டு. விநாயகர் மூலாதாரக் கடவுள். பிரணாயாமத்தால் குண்டலிணியை மூலாதாரத்தில் இருந்து எழுப்பும்போது, அது இரவில் மூஞ்சுறு 'குறு குறு' என ஒலிக்கும் சத்தத்தை உண்டாக்கும். இது ஞானிகளின் அநுபவமாகும்.
சிந்தாமணி விநாயகர்
விநாயக மூர்த்தங்களில் 'சிந்தாமணி விநாயகர்' மூர்த்தமும் ஒன்று. கபில முனிவர் பாதாளத்தில் தவம் செய்துகொண்டிருக்கும்போது, தன்னைத் துன்புறுத்திய சகரர் 60,000 பேரையும் எரித்து விடுகிறார். பின்பு தன்னிடம் வந்த இந்திரனுக்கு அறுசுவை உணவை இட்டு உபசரித்தபோது பெரும் உவப்படைந்த இந்திரன், தனக்கு திருப் பாற்கடல் கடையப்பட்டபோது கிடைத்த 'சிந்தாமணி' என்கிற ரத்தினத்தை பரிசாகத் தருகிறார். பின்பு ஒரு சமயம் 'கணன்' என்கிற மன்னன் வேட்டையாடி வரும்போது முனிவரிடம் இருந்த சிந்தாமணியை வலிய கவர முயற்சி செய்கிறான். இதனால் வருந்தி கபிலர் விநாயகப் பெருமானை துதித்து இறைஞ்ச, அவர் நேரில் தோன்றி அந்த மன்னனை அழிக்கிறார். களிப்படைந்த கபிலர் அந்த சிந்தாமணி எனும் ரத்தினத்தை விநாயகருக்கு கொடுக்க, அவர் அதை அணிந்து கொள்கிறார். அவரே சிந்தாமணி விநாயகர்.
சிவனை வலம் வருமளவில்
கணபதி சிவபெருமானை சுற்றி வந்த அதே நேரத்தில் முருகனும் தனது மயில் வாகனத்தில் உலகைச் சுற்றி வந்தார் என்பதை பல இடங்களில் அருணகிரியார் நயம் பட கூறுவார்.
இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும் இலகுவெகு கடவிகட தடபார மேருவுடன் இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற எழுபுவியை யொருநொடியில் வலமாக வோடுவதும்
... என்பார் சீர் பாத வகுப்பில்.
'வன சரோதய' என்னும் சொல்லுக்கு 'வேடனாக உரு மாறி வந்தவர்' எனவும் பொருள் கொள்ளலாம். 'வன' + 'சரர்' + 'உதய' என இச் சொல் பிரியும்.
சரவணப் பொய்கையில் ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகள் வடிவம் எடுத்து தாமரை மலரில் பள்ளி கொண்டதை,
.. ராஜீவ பரியங்க ..
... என அழகுபட கூறுவார் அருணகிரியார். 'பரியங்க' என்ற சொல்லுக்கு 'கட்டில்' என்பது பொருள்.
| |