Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

previous padalam   10 - தருமகோபன் வதைப் படலம்   next padalamDharumagOban vadhaip padalam

Ms Revathi Sankaran (8.92mb)




(நாலாநாள் இரவு தருமகோபன் வதை நிகழ்ந்ததாகும்)

(முடிவுறு புதல்வரை)

முடிவுறு புதல்வரை முன்னி முன்னியே
     இடரினை உழந்திடும் இறைவன் தன்முனம்
          படியறு நல்லறப் பகைஞன் போந்திடா
               அடிமுறை பணிந்துநின் றறைதல் மேயினான். ......    1

(மன்னவர் மன்னநீ)

மன்னவர் மன்னநீ மனத்தில் இவ்வகை
     இன்னல்செய் தாற்றவும் இரங்கு வாயெனில்
          துன்னலர் மகிழுவர் சுரர்கள் யாவரும்
               நன்னகை செய்குவர் நமரும் வெள்குவார். ......    2

(முந்துறு மாற்றலர்)

முந்துறு மாற்றலர் முனைவெம் போரிடைத்
     தந்தையர் விளியினுந் தமர்கண் மாயினும்
          மைந்தர்கள் விளியினும் மான வீரர்கள்
               சிந்தைகொள் வன்மையிற் சிறிதுந் தீர்வரோ. ......    3

(ஏற்றிகல் புரிந்திடும்)

ஏற்றிகல் புரிந்திடும் எமரை வௌவிய
     கூற்றுளன் தொன்மைபோற் படைத்துக் கூட்டுவான்
          நாற்றிசை முகனுளன் நாமு ளோம்நம
               தாற்றலும் இருந்துள அயர்வும் வேண்டுமோ. ......    4

(அந்தமில் வெறுக்கை)

அந்தமில் வெறுக்கையும் அழிவில் ஆயுளும்
     நந்தலில் வன்மையும் நடாத்தும் ஆணையும்
          இந்திர ஞாலமும் இருக்க எந்தைநீ
               புந்தியில் அமரர்போற் புலம்ப லாகுமோ. ......    5

(விண்ணவர் சிறை)

விண்ணவர் சிறையினை விடாது வைத்திடக்
     கண்ணிய விரதமுங் கழிந்த மானமும்
          நண்ணலர் தங்களை நலியுந் தன்மையும்
               எண்ணலை இடையறா திடுக்கண் போற்றுமோ. ......    6

(மாற்றல ராகிய)

மாற்றல ராகிய அமரர் மானவர்
     கோற்றொடி மடந்தையர் குழவிப் பாலகர்
          ஆற்றிடு துயருனக் காவ தன்றெனாத்
               தேற்றினன் அமைச்சருள் தீமை மிக்குளான். ......    7

வேறு

(ஆற்றிடு தருமம் நீத்த)

ஆற்றிடு தருமம் நீத்த அமைச்சன்வந் தினைய வாற்றால்
     தேற்றிடு கின்ற காலைச் சிறிதுதன் அவலம் நீத்துக்
          கூற்றென யானே சென்று கூடலர் தொகையை விண்மேல்
               ஏற்றுவ னென்று சீறி அவுணர்கோன் எழுந்து சென்றான். ......    8

(சென்றிடு மன்னர்)

சென்றிடு மன்னர் மன்னன் சேவடி முறையிற் றாழா
     இன்றிவண் இருத்தி யானும் அனிகமும் இன்னே யேகி
          வன்றிறற் பகைஞர் தம்மை வளைத்துவல் விரைந்து சாடி
               வென்றியுற் றிடுவ னென்ன வேண்டினன் அமைச்சர் மேலோன். ......    9

(அறந்தவிர் அமைச்ச)

அறந்தவிர் அமைச்சன் வேண்ட அவுணர்கள் முதல்வன் மீண்டு
     சிறந்திடு மடங்க லாற்றுஞ் செம்பொன்செய் பீட மேவி
          உறைந்தனன் அனைய காலை ஒல்லையில் விடைகொண் டேகிப்
               புறந்தனில் வந்து வல்லே போர்ப்பெருங் கோலங் கொண்டான். ......    10

(போதகத் தரசு)

போதகத் தரசு தம்முட் புண்டரீ கப்பேர் பெற்ற
     மாதிரக் களிற்றை அன்னோன் வல்லையிற் கொணர்தி ரென்னாத்
          தூதுவர்க் குரைத்த லோடுந் துண்ணென அனைய ரோடி
               மேதகு நிகளம் நீக்கி விடுத்துமுன் னுய்த்து நின்றார். ......    11

(புந்தியிற் குறிப்பி)

புந்தியிற் குறிப்பிற் செல்லும் புண்டரீ கப்பேர் பெற்ற
     தந்தியந் தலைவன் மீது தருமத்தை வெகுளும் வெய்யோன்
          அந்தமில் படைக ளேந்தி அமைச்சர்கள் பலருஞ் சூழ
               இந்திரன் இவன்கொ லென்ன ஏறினன் எழிலி போல்வான். ......    12

(அறைந்தன படகம்)

அறைந்தன படகம் பேரி ஆர்த்தன விரலை தீபஞ்
     செறிந்தன கரிதேர் வாசி தெழித்தன அவுணர் தானை
          நிறைந்தன பதாகை ஈட்டம் நெருங்கிய கவிகை வானம்
               மறைந்தன எழுந்த பூழி மாதிரம் இருண்ட அன்றே. ......    13

(எண்ணிலா வெள்ள)

எண்ணிலா வெள்ள மாவும் இபங்களும் இவுளித் தேரும்
     வெண்ணிலா எயிற்றுச் செங்கண் வீரரும் புடையிற் சுற்றப்
          புண்ணுலா முகத்துப் பேழ்வாய்ப் புண்டரீ கத்தை யூர்ந்தே
               அண்ணல்மா நகரம் நீங்கிப் போயினன் அறத்தை நீத்தோன். ......    14

(அண்டர்மற் றித)

அண்டர்மற் றிதனை நோக்கி அம்மவோ அறத்தை நீத்த
     கண்டகன் சிலையொன் றேந்தி மாதிரக் களிறு தன்னுள்
          புண்டரீ கத்தை ஊர்ந்து பொருமெனில் இவனை யாற்றல்
               கொண்டிடல் அரிதாம் என்ன இரங்கினர் குலைந்த மெய்யார். ......    15

(ஆவணம் அனந்த)

ஆவணம் அனந்தம் நீங்கி அனிகமும் தானு மேகி
     மூவிரு முகத்து வள்ளல் முழுதருள் பெற்ற சேனை
          காவலன் வெகுண்டு நின்ற களத்திடை அணுக லோடும்
               மேவலர் எதிர்ந்தார் என்னா வியன்கழற் பூதர் ஆர்த்தார். ......    16

(பொற்றைக ளேந்தி)

பொற்றைக ளேந்தி ஆர்க்கும் பூதரை இலக்கர் தம்மைச்
     சுற்றுறு துணையி னோரைத் தொல்லைநாள் நகரஞ் செற்ற
          கொற்றவன் தன்னை அன்னோர் வலியினைக் கொடியோன் நோக்கி
               இற்றது கொல்லோ நந்தம் வாழ்க்கையென் றிரங்கிச் சொல்வான். ......    17

வேறு

(பகைஞர்க ளாயி)

பகைஞர்க ளாயினோர் பரவித் தன்மிசை
     இகல்செய வருவரேல் இரங்கி ஏங்குதல்
          மிகுபழி இங்கிது வினவின் மானவர்
               நகைசெய்வர் பொருவதே நன்று போலுமால். ......    18

(எச்சமில் சேனையும்)

எச்சமில் சேனையும் படையும் ஈண்டிய
     கைச்சிலை இருந்தது கரியும் ஒன்றுள
          தச்சுறு கின்றதென் ஆவ தாகுமால்
               பொச்சையர் கடன்நனி பொருமல் கொள்வதே. ......    19

(வெல்லினும் செறுநர்)

வெல்லினும் செறுநர்முன் வெரிந தீயினும்
     அல்லது விளியினு மாக யானினி
          மல்லலம் படையொடு மாற்ற லார்மிசைச்
               செல்லுவ தன்றியே இரங்கல் சீரிதோ. ......    20

வேறு

(கண்ணுறு படையை)

கண்ணுறு படையை நோக்கிக் கருத்திடைக் கவலை எய்தி
     எண்ணிநின் றயர்தல் வீரர் இயற்கைய தாமோ பின்னர்
          நண்ணிய வாறு நண்ண நானினித் தளரேன் என்னாத்
               துண்ணெனத் தேறிச் சென்றான் சூரனுக் கமைச்சன் ஆனோன். ......    21

(இங்கிது பொழுது)

இங்கிது பொழுது தன்னில் எங்கணும் இருட்டு ழாஞ்சூழ்
     கங்குலும் பகலும் மாலைக் காலமும் கலந்த தென்ன
          அங்கவன் தானை வெள்ளத் தவுணரும் பூதர் தாமும்
               பொங்கொலிக் கடல்போல் ஆர்த்துப் பொள்ளென அமரின் ஏற்றார். ......    22

வேறு

(தலைப்பட எழுக்க)

தலைப்பட எழுக்களில் தண்டில் தாக்கினார்
     இலக்குற நேமிகள் கணிச்சி ஏவினார்
          மலைக்குவை எறிந்தனர் மரங்கள் வீசினார்
               சிலைத்தனர் வயிர்துடி செறிவெம் பூதரே. ......    23

(வில்லுமிழ் சரத்தி)

வில்லுமிழ் சரத்தினில் வேலில் வாளினில்
     கல்லினில் நாஞ்சிலில் கழுமுள் ஆயதில்
          வல்லையந் தனில்உடை வாளில் வச்சிரச்
               செல்லினின் நுதிகெழு திகிரி நேமியில். ......    24

(தண்டினில் தோமர)

தண்டினில் தோமரம் தன்னில் சங்கினில்
     பிண்டிபா லத்தினில் ஆற்றப் பீடுமேல்
          கொண்டதோர் எழுவினில் பிறவில் கொட்புறா
               அண்டரும் அவுணரும் அணிந்து போர்செய்தார். ......    25

(அயர்ப்புறு தானவர்)

அயர்ப்புறு தானவர் அமைச்சர் யாவரும்
     வியர்ப்பினில் வந்திடு வெங்கண் வீரரும்
          வயப்பெரும் சிலையினை வணக்கி வாளிதூய்ப்
               புயற்படு பெயலெனப் பொழிந்து போர்செய்தார். ......    26

(பெய்வதொத் தெங்க)

பெய்வதொத் தெங்கணும் பெரிதும் வீழ்தலால்
     உய்வதெத் தன்மையென் றுலகம் அச்சுற
          இவ்வகைத் திறத்தினர் இரண்டு சாரினும்
               தெய்வதப் படைகளும் மரபில் சிந்தினார். ......    27

(மாய்ந்தனர் பூதரும்)

மாய்ந்தனர் பூதரும் வரம்பில் தானவர்
     சாய்ந்தனர் கரங்களும் தலையும் சிந்தினர்
          வீந்தன கரிபரி விளிந்த தேர்நிரை
               பாய்ந்தன செம்புனல் பரந்த கூளியே. ......    28

(நொந்தனர் இலக்க)

நொந்தனர் இலக்கரும் நோன்மை நீங்கினார்
     முந்துறும் அமைச்சர்போர் முயன்று நின்றனர்
          அந்திலவ் வேலையில் அதனை நோக்கியே
               வெந்திறல் வெய்யவன் வெகுண்டு சென்றனன். ......    29

(இடித்தென உரப்பினன் இமை)

இடித்தென உரப்பினன் இமைப்பில் எய்திமுன்
     வடித்திடு சிலையினை வாங்கித் தானவர்
          முடித்தலை பனித்திட முழுதும் யாக்கைகள்
               பொடித்தென வழுத்தினன் புங்க வாளியே. ......    30

(நீண்டதோர் சிலீ)

நீண்டதோர் சிலீமுகம் நெடிது மேலவன்
     தூண்டிய காலையில் துணிந்த கையினர்
          வீண்டிடு தலையினர் விளிந்த மெய்யினர்
               மாண்டனர் அமைச்சர்கள் வறந்த தானையே. ......    31

(துறக்கம தலைத்திடு)

துறக்கம தலைத்திடு தொலைவில் தானவர்
     மறுக்கமுற் றசைந்தனர் வந்து போர்செய
          விறற்படு சாரதர் வெகுண்டு மேற்செலா
               இறப்புறு வரைபல எடுத்து வீசினார். ......    32

(வீசிய வேலையில்)

வீசிய வேலையில் வெதும்பி விம்மியே
     மாசுறு தானவர் வாகை சிந்தியே
          ஆசறு போனகத் தட்டில் சூடுறு
               பூசைய தாமென உடைந்து போயினார். ......    33

(இடைந்தனர் ஆகி)

இடைந்தனர் ஆகியே அவுணர் யாவரும்
     உடைந்தனர் போதலும் உலப்பில் பூதர்கள்
          படர்ந்தனர் தெழித்தனர் பையுள் மாலையில்
               தொடர்ந்தனர் பற்றினர் தொலைத்தல் மேயினார். ......    34

(கண்டனன் ஆங்க)

கண்டனன் ஆங்கவை அறத்தைக் காய்பவன்
     புண்டிகழ்ந் தனையகட் பூதர் மேற்செலா
          விண்டொடர் பெருந்தனு வாங்கி வெவ்வுயிர்
               உண்டிடு சரந்தெரீஇ உலப்பின் றேவினான். ......    35

(ஏவிய நோன்கணை)

ஏவிய நோன்கணை யாவும் ஏன்றெழு
     தீவிழிப் பூதர்பால் சேறல் இந்திரன்
          வாவிய வூர்திகள் வாரி நேமியில்
               தூவிய துள்ளியின் தோற்றம் போன்றதே. ......    36

(கைச்சிலை உகை)

கைச்சிலை உகைத்திடு கணைகள் யாவையும்
     நச்சென விடுத்தலும் நடுங்கிப் பூதர்கள்
          அச்சுற மெலிந்தனர் அமரர் கோமகன்
               வச்சிரம் எய்திய வரைகள் மானவே. ......    37

வேறு

(வானவர்கள் கோமக)

வானவர்கள் கோமகன் வயக்களிறி தென்னத்
     தானவர்கள் போற்றுதரு மப்பகைஞன் ஊர்ந்த
          ஆனையது பூதர்தமை அங்கைகொடு வாரி
               ஊனொடுயிர் சிந்திட உடற்றியதை அன்றே. ......    38

(கோடதொரு நான்)

கோடதொரு நான்குகொடு குத்தியது தாளின்
     ஊடுறமி தித்தவண் உழக்கியது வாலால்
          பாடுற எறிந்தது பனைக்கைய துகொண்டே
               வீடுறமுன் எற்றியது வீரர்படை தன்னை. ......    39

(மாறகலும் வெங்கரி)

மாறகலும் வெங்கரியிவ் வாறடல்செய் காலை
     வீறுகெழு சாரதர்கள் வெற்புமிசை வீசி
          ஊறுசெய அங்கதின் உலப்பில்கணை ஓச்சி
               நாறுநடு வார்தொகையின் நண்ணினர்கள் வீரர். ......    40

(காயமுழு தொன்றி)

காயமுழு தொன்றிய கணக்கில்படை யாவும்
     மூயதவ ளக்களிறு முற்றுமெழு சோரி
          பாயவணை கிற்பது பணிக்குழுவு கவ்வச்
               சேயபணி சுற்றமறை திங்கள்படர்ந் தென்ன. ......    41

(வெந்திறல்கொள்)

வெந்திறல்கொள் புண்டரிக வேழமிது தன்மை
     நொந்ததெனி னுந்தனது நோன்மையழி யாதாய்
          முந்தியிடு சேனையை முருக்கவது நோக்கித்
               தந்திநிரை சாரதர் தமைத்தடித லுற்ற. ......    42

(கண்டைகெழு தாரி)

கண்டைகெழு தாரினொலி கல்லென விரைப்ப
     அண்டமுடைந் தென்னநனி ஆர்த்தவுணன் ஊரும்
          புண்டரிக வெங்களிறு போர்த்தொழில் இயற்ற
               உண்டைகெழு பூதநிரை ஒய்யென உடைந்த. ......    43

(தண்டமுடை கின்ற)

தண்டமுடை கின்றசெயல் தன்னைவிறல் வெய்யோன்
     கண்டனன் அழன்றுதன கார்முகம தொன்று
          கொண்டனன் எடுத்தது குனித்தழலின் வாளி
               அண்டர்பகை யூர்தியின் அடைச்சிநனி ஆர்த்தான். ......    44

(ஆர்த்தடரும் வேலை)

ஆர்த்தடரும் வேலையில் அடற்களிறும் அங்கோர்
     மூர்த்தமயர் வுற்றது முனிந்தவுணர் கோமான்
          பார்த்திறையின் நூறுகணை பாலமிசை ஓச்சத்
               தேர்த்துலவு சோரியொடு தேர்மிசை இருந்தான். ......    45

(இருந்ததிற லோன்)

இருந்ததிற லோன்மிசையொ ரெஃகமது வாங்கி
     விரைந்துதரு மப்பகை விடுத்திடலும் நோக்கி
          மருந்தெனமுன் வந்துதிறல் வாசவன்அவ் வைவேல்
               முரிந்துதுணி யாகவொர் முரட்கணை தொடுத்தான். ......    46

(மத்தகய மன்ன)

மத்தகய மன்னதிறல் வாசவன் விரைந்தே
     பொத்திரம தொன்றுகொடு போரயில் முருக்கிக்
          குத்திரம தொன்றவுணர் கூவிவெருக் கொள்ள
               அத்திரமென் மாரிகொட வன்றனை மறைத்தான். ......    47

(மறைத்தலும் மறப்ப)

மறைத்தலும் மறப்பகைஞன் வாளிமழை தூவிக்
     குறைத்தனன் அளப்பில்கணை ஏனவை குழீஇப்போய்ச்
          செறுத்தவன தாகமிசை சென்றுசெருக் கின்றி
               விறற்கவச நக்குபு விளிந்துபுடை வீழ்ந்த. ......    48

வேறு

(மீண்ட வேலையின்)

மீண்ட வேலையின் வெய்ய சூழ்ச்சியோன்
     மாண்டு ளானென வாகை வீரன்மேல்
          பூண்ட யங்குறு பொன்னந் தண்டமொன்
               றீண்ட வீசினான் யாரும் அஞ்சவே. ......    49

(எழுவின் நீள்கதை)

எழுவின் நீள்கதை இமைப்பில் சென்றவன்
     பழுவின் மார்பகம் பட்ட வேலையின்
          விழும நோயுறா விம்மி னானரோ
               வழுவை மேலையோன் வயத்தின் மேவவே. ......    50

(கருத்தில் நல்லற)

கருத்தில் நல்லறங் காய்ந்த வன்செயல்
     தெரித்து நின்றிடும் திறல்கொள் வாகினான்
          உருத்து நோக்கியே உரையும் தன்னுளக்
               கருத்தும் பிற்படக் கடிது செல்லுவான். ......    51

(நின்னில் ஐயநின்)

நின்னில் ஐயநின் நேர லன்புயந்
     தன்னை யாத்துநிற் றருவம் யாமெனப்
          பன்னு மானவர் பௌவம் நீத்தொராய்
               முன்னு தானவர் முதல்வன் நேர்புக. ......    52

(எதிரி லாமையால்)

எதிரி லாமையால் யாரும் அஞ்சவே
     அதிரு நோன்கழல் ஆடல் மொய்ம்பனை
          மதியில் தானவன் மழைகள் மின்குழுச்
               சிதறி யென்னத்தீச் சிந்த நோக்கினான். ......    53

(நோக்கி நீகொலோ)

நோக்கி நீகொலோ நோன்மை யோடெனைத்
     தாக்கு மாறுவந் தனையை யானுனை
          யாக்கை சிந்திய அமைந்து நின்றனன்
               காக்க வல்லையேல் காத்திநீ யென்றான். ......    54

(மொழியும் ஆடல்சேர்)

மொழியும் ஆடல்சேர் மொய்ம்பன் கேட்டிது
     விழுமி தாரினும் வெற்றி பெற்றனன்
          அழிவ னேநினக் காடல் கொள்வன்யான்
               கழியை நீந்துதல் கடலில் பாடதோ. ......    55

(மற்றுன் வன்மையும்)

மற்றுன் வன்மையும் மதர்ப்பும் நின்பெருங்
     கொற்ற மானதும் வரத்தின் கொள்கையும்
          இற்றை வைகலே ஈறு செய்வன்நீ
               கற்ற போரினைக் கடிது செய்கென. ......    56

வேறு

(கானக்களி வரிபம்)

கானக்களி வரிபம்பிய கமழ்தார்புனை அகலம்
     வானக்கிறை தனதூர்திகள் மரபோடுசென் றிசைக்கும்
          தீனக்குர லெனநாணொலி திசையெங்கணும் செல்லக்
               கூனற்சிலை தனையொல்லையில் தருமப்பகை குனித்தான். ......    57

(மற்கொண்டிடும் மிடல்)

மற்கொண்டிடும் மிடல்மொய்ம்புள மதியில்லவன் ஒருபால்
     ஏற்கோண்டெழு களிற்றின்மிசைச் சிலைவாங்கினன் இருத்தல்
          கற்கொண்டதொர் வெள்ளிக்கிரி மிசைகாணிய கணைதூய்
               விற்கொண்டொரு பசுங்கார்முகில் மேவுற்றென லாமால். ......    58

(அதுவன்றியும் அவனு)

அதுவன்றியும் அவனுந்திய அடுவெங்களி றலர்தண்
     கதிரின்குழு முழுதொன்றுபு ககனந்தனில் எழுசெம்
          மதியந்தன தொருபங்கையொர் வயவெம்பணி நுகரப்
               புதிதொண்பிறை யதுவொன்றிடை புகநின்றது பொருவும். ......    59

(முந்தேயவன் எடுக்கி)

முந்தேயவன் எடுக்கின்றதொர் முரண்வெஞ்சிலை குனியாக்
     கந்தேயென நிமிர்தோளுடைக் கடுஞ்சூழ்ச்சியன் ஒழுகும்
          செந்தேனுறழ் குணத்திற்சரம் செலுத்தாத்திறன் மொய்ம்பற்
               கந்தேயுமெய் வெளியின்றென அவனைக்கரந் தார்த்தான். ......    60

(கரக்கின்றவன் விடு)

கரக்கின்றவன் விடுவாளிகள் கந்தன்படை ஞன்மெய்
     அரக்குன்றுபட் டயின்மாய்ந்தவை அயல்வீழ்ந்தன கண்டான்
          இரக்கின்றவர்க் குதவான்கரந் தேற்காத்திரு வினர்பால்
               பரக்கும்பொரு ளுகுத்தன்னதிற் பயன்பெற்றிலன் எனவே. ......    61

(அயில்சிந்திட முரண்)

அயில்சிந்திட முரண்வெங்கணை அயல்வீழ்தலும் அடுபோர்
     முயலுந்திறல் கெழுமொய்ம்பினன் முனிந்தெஃகமொன் றெடுத்துப்
          புயலன்னதொர் வடிவத்தவன் பூணாருநெஞ் செறியச்
               செயலன்னது கண்டாங்கெதிர் தீவாளிகள் உய்த்தான். ......    62

(உய்க்குஞ்சுடர் வடி)

உய்க்குஞ்சுடர் வடிவாளிகள் ஒருங்கேதவ முருக்கி
     மைக்கொண்டலை நிகர்மேனியன் மனந்துண்ணென அணுகி
          மெய்க்கொண்டதொர் நெடுஞ்சாலிகை விளியும்படி வீட்டிப்
               புக்குள்ளுற மூழ்கித்தனி புறம்போந்தது விரைவில். ......    63

(புறம்போதலும் இகல்)

புறம்போதலும் இகல்மந்திரி பொருமிப்புகை உயிர்த்து
     நிறம்போகிய செந்நீரொடு நினைகின்றி லன்இருப்ப
          மறம்போகிய தனிவெங்கரி மகிணன்செய லோரா
               அறம்போகிய மனத்தான்றனை அடவுற்றதை யன்றே. ......    64

(முந்துற்றிடு கரிதிண்)

முந்துற்றிடு கரிதிண்டிறல் மொய்ம்பன்னி ரதத்தைத்
     தந்தத்தொகை கொடுதாக்குபு சமரத்திடை இட்ட
          கந்தொத்ததொ ரெழுவொன்றது கைக்கொண்டவன் வலவன்
               சிந்தப்புடைத் ததுகாண்டலுஞ் செந்தீயெனக் கனன்றான். ......    65

(வையந்தன தீறாத)

வையந்தன தீறாதலும் வறிதேயயல் பாயா
     மெய்யங்கைய தொன்றாலவன் மேல்வந்திடும் வேழக்
          கையங்குறப் பற்றாக்கடங் கலுழுங்கவுண் மோதி
               ஒய்யென்றெடுத் தப்பாலையின் உலகம்புக உய்த்தான். ......    66

(எறிந்தானெடுத் தது)

எறிந்தானெடுத் ததுகாலையில் இபம்விண்ணிடை யேகிப்
     பிறிந்தாகவம் இயற்றெல்லையில் பெயர்காலையின் அமைச்சன்
          அறிந்தான்கயம் இழந்தேன்கொலென் றயராவத னோடு
               மறிந்தான்புனை கலந்தன்னொடு மணிமாமுடி சிந்த. ......    67

(வீழ்கின்றதொர் களி)

வீழ்கின்றதொர் களிறாற்றவும் வெருவிப்பதை பதைத்து
     மாழ்கின்றது புடைபோகிய மதியில்லவன் எழுந்தே
          காழ்கொண்டதொர் கதையொன்றுதன் கைக்கொண்டுரத் தெறியத்
               தாழ்கொண்டதொர் கரத்திற்கடுத் தலைகொண்டது தறித்தான். ......    68

(வலிகொண்டதொர்)

வலிகொண்டதொர் தனித்தண்டது மடிவாதலும் மற்றோர்
     குலிசந்தனை விடவாங்கெதிர் குறுகக்கரம் பற்றிப்
          புலிகண்டதொர் கலைமானெதிர் புக்காலென அவுணர்
               தலைவன்றனை அடல்மொய்ம்பினன் தடமார்பிடைப் புடைத்தான். ......    69

(மூளாவுருத் தறை)

மூளாவுருத் தறைகின்றுழி முதலற்றிடு தருப்போல்
     வாளாபுவி மிசைவீழ்தலும் வயமிக்கவன் ஒருகால்
          தாளாலுதைத் தனன்அத்துணை தருமப்பகை வீழ்ந்தான்
               கேளாகிய அவுணப்படை கெட்டோடிய தன்றே. ......    70

வேறு

(விழுந்தயர் புண்டரீ)

விழுந்தயர் புண்டரீக வெங்கரி உயிர்த்து மெல்ல
     எழுந்தது தரும கோபன் இறந்தபா டதனை நோக்கி
          அழுந்திடும் இன்னல் வேலைக் ககன்கரை கிடைத்தா லென்னத்
               தொழுந்திறல் வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும். ......    71

(செய்யலை வெகுளி)

செய்யலை வெகுளி எந்தாய் சிறியனை அருளிக் கேண்மோ
     பொய்யென நினையல் வாழி புண்டரீ கப்பேர் உள்ளேன்
          வையகம் போற்றுஞ் சீரேன் மாதிரங் காவல் கொண்டேன்
               கையனித் தரும கோபன் கடுஞ்சிறைப் பட்டேன் பன்னாள். ......    72

(வன்றளை மூழ்கும்)

வன்றளை மூழ்கும் தீயென் மதியிலா அமைச்சற் போற்றி
     இன்றுகா றூர்தியானேன் ஏவின பலவும் செய்தேன்
          ஒன்றுநான் மறுத்த துண்டேல் உயிர்குடித் தூனும் வல்லே
               தின்றிடு மென்றே அஞ்சித் திரிந்தனன் செயல்வே றில்லேன். ......    73

(எட்டுள திசையில்)

எட்டுள திசையில் வைகும் அரக்கர்தன் இகழ்ந்தா ரென்று
     மட்டறு வெகுளி வீங்கி மற்றெனை ஊர்ந்து தொன்னாள்
          கிட்டினன் அவரை யெல்லாங் கிளையொடு முடித்தோன் தன்னை
               அட்டனை நீயே யல்லால் அவனையார் அடுதற் பாலார். ......    74

(புந்தியில் அறத்தை)

புந்தியில் அறத்தைக் காயும் புரைநெறி அமைச்சன் தன்னை
     வந்துநீ அடுத லாலே வானவர் கவலை தீர்ந்தார்
          உய்ந்தனன் சிறந்தேன் எற்கும் ஊதியம் இதன்மேல் உண்டோ
               முந்துறு தளையின் நீங்கி முத்திபெற் றாரை ஒத்தேன். ......    75

(தீதுகொள் பவத்தின்)

தீதுகொள் பவத்தின் நீரால் அவுணர்தஞ் சிறையிற் புக்கேன்
     மாதவஞ் செய்தேன் கொல்லோ மற்றுனை எதிரப் பெற்றேன்
          ஆதலின் உய்ந்தேன் என்றன் ஆசையை அளிக்கு மாற்றாற்
               போதுவன் தமியன் என்று தொழுதது புண்ட ரீகம். ......    76

(புண்டரீ கத்தின்)

புண்டரீ கத்தின் வாய்மை பொருக்கென வினவு வீரன்
     அண்டரும் உவகை பொங்க அகலுதி இருக்கைக் கென்ன
          விண்டொடர் நெறியிற் சென்றாங் கவுணர்க்கு வெருவ லின்றிப்
               பண்டமர் திசையின் நண்ணிப் பரிவற வைகிற் றன்றே. ......    77

(மாதிரங் காவல் பூண்ட)

மாதிரங் காவல் பூண்ட மதக்களிற் றரசு செல்ல
     ஆதியில் அறத்தைக் காயும் அழிதகன் இறுதி நோக்கிப்
          பூதர்கள் ஆர்த்து வீரன் புயவலி புகழ்த லுற்றார்
               தூதுவர் அதுகண் டோடிச் சூரனைத் தொழுது சொல்வார். ......    78

(தண்டக முதல்வ)

தண்டக முதல்வ கேண்மோ தானையும் தானு மேகி
     மண்டமர் புரிந்து வீர வாகுவால் அமைச்சன் மாய்ந்தான்
          உண்டையும் அழித லுற்ற உங்குவன் ஊர்ந்து சென்ற
               புண்டரீ கப்பேர் பெற்ற தந்தியும் போய தென்றார். ......    79

வேறு

(பழுது டைத்திறன்)

பழுது டைத்திறன் மந்திரி பட்டசொல் வினவி
     முழுது சுற்றிய இன்னலம் புணரியின் மூழ்கி
          அழுது யிர்த்துமெய் யுயிர்பதை பதைத்திட அங்கண்
               எழுது சித்திரப் பாவைபோல் உணர்வுபோய் இருந்தான். ......    80

ஆகத் திருவிருத்தம் - 6603



previous padalam   10 - தருமகோபன் வதைப் படலம்   next padalamDharumagOban vadhaip padalam

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]