Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

previous padalam   15 - நகரழி படலம்   next padalamnagarazhi padalam

Ms Revathi Sankaran (7.66mb)




(ஆசுறும் அவுண)

ஆசுறும் அவுண வெள்ளம் ஐம்பது முடித்தோன் ஐஞ்ஞூ
     றோசனை அளவை யான்றே ஒராயிர மும்ப ரேகித்
          தேசுறு மேரு வென்னச் சிகரமோ ரிலக்கஞ் சூடி
               வீசுபொன் சுடர நின்ற வேரமொன் றங்கட் கண்டான். ......    1

(புறத்திருள் இரிய)

புறத்திருள் இரிய வைகும் பொலஞ்சுடர்ப் பொன்செய் வேரந்
     திறத்தியல் கோயில் முன்னஞ் சேர்ந்தது தன்னை வீரன்
          பறித்தொரு கரத்தின் ஏந்திப் பதகனாஞ் சூர பன்மன்
               அறத்தியல் இழுக்கி வைகும் அவைக்களம் வீசி ஆர்த்தான். ......    2

(பன்மணி செறிந்த)

பன்மணி செறிந்த பொற்பிற் பாயொளி எரிபொன் வேரம்
     மன்னவன் உறையுஞ் செம்பொன் மாயிரு மன்றில் போதல்
          மின்னவிர் மேரு வாதி வெற்பெலாம் மிகலின் ஒன்றிப்
               பொன்னகர் பொடிப்பச் செல்லுந் தன்மையைப் போலும்அம்மா. ......    3

(வார்த்தரு கழற்கால்)

வார்த்தரு கழற்கால் வீரன் வானுரும் ஏறும் உட்க
     ஆர்த்திடு துழனி யேகி அரசன்மே வியவத் தாணி
          சேர்த்தவர் கன்னத் தூடு செறியுமுன் எறித லுற்ற
               பேர்த்திடு செம்பொன் வேரம் பேரவை மிசையுற் றன்றே. ......    4

(விற்செறி தூபி)

விற்செறி தூபிச் செம்பொன் வியன்மணி கஞலும் வேரங்
     கற்செறி பெருந்தோள் வீரன் எறிதலுங் கடிது நண்ணிப்
          பொற்செறி மார்பிற் சூரும் புதல்வருஞ் சிலரும் வைகுஞ்
               சிற்சில இடையே அன்றி மன்றெலாஞ் சிந்திற் றாமால். ......    5

(தடத்தனி வேர)

தடத்தனி வேரங் கீண்டு தபனியத் தவைக்கண் ஓச்சி
     இடித்தனன் ஒருதான் நிற்கும் எம்பிரா னேவல் தூதன்
          படைத்தளித் திறுதி வேலைப் பசும்பொனார் தசும்பின் அண்டம்
               உடைத்துல கழித்து நிற்கும் ஒருபெருங் கடவுள் ஒத்தான். ......    6

(புலவுகொள் அலகு)

புலவுகொள் அலகு வெவ்வாய்ப் புட்செறி பொதும்பர் தன்னில்
     பலமுடை உருமு வீழப் பட்டதோர் பரிச தென்னத்
          தொலைவகன் மைந்தன் விட்ட சூளிகை தகர்ப்பத் தொல்சீர்
               மலிவுறு சனங்க ளோடு மன்றமங் குற்ற தம்மா. ......    7

(இடிந்தன மிசையின்)

இடிந்தன மிசையின் எல்லை இற்றபித் திகையின் சூழல்
     பொடிந்தன உத்தி ரங்கள் போதிகை பூழி யாகி
          முடிந்தன மதலை யாவும் முரிந்தன கபோதம் வீழ்ந்த
               மடிந்தன திருவுஞ் சீரும் மன்றழி வுற்ற தன்றே. ......    8

(பீடிகை புரைந்த)

பீடிகை புரைந்த பொற்பிற் பேரவை தகர்த லோடும்
     பாடுற அரசர் சூழ்ந்த பரிசனர் தம்முட் சில்லோர்
          ஓடினர் சிலவர் மெய்யூ றுற்றனர் சிலவர் நெக்கு
               வீடினர் சிலவர் ஆற்ற மெலிந்தனர் புலம்ப லுற்றார். ......    9

(நெக்கது பொதி)

நெக்கது பொதியி லாக நிரந்தது செம்பொற் பூழி
     திக்கொடு புவியும் வானுஞ் செறிந்தன அவுண ராகித்
          தொக்கனர் உடைந்து மாய்ந்து தொகைபிரிந் தழிந்தார் தொல்லைத்
               தக்கனின் உணர்வு தீர்ந்த தகுவர்கோன் இவற்றைக் கண்டான். ......    10

(ஆயிர நாமத் தண்ணல்)

ஆயிர நாமத் தண்ணல் அனையவன் வன்மை காணா
     ஆயிரம் வடவை யேபோல் அழன்றுதன் னயலின் நின்ற
          ஆயிர நெடுந்தோள் ஐஞ்ஞூ றானனங் கொண்ட தீயோர்
               ஆயிரர் தம்மை நோக்கி அடலுரும் ஏற்றிற் சொல்வான். ......    11

(விழிப்பரு நிவப்பின்)

விழிப்பரு நிவப்பின் ஓங்கும் வேரமொன் றதனைக் கீண்டே
     தெழிப்பொடு குமரன் தூதன் செலுத்தினன் செம்பொன் மன்றம்
          இழிப்புறத் தகர்ந்து வீழ்ந்த தீண்டுசில் லிடமே அன்றிப்
               பழிப்பெனக் கிதன்மேல் உண்டோ பட்டதென் புகழும் மன்னோ. ......    12

(கோறலே கொற்ற)

கோறலே கொற்ற மன்றால் ஒற்றனைக் குறுகி நீவிர்
     மாறுபோர் இயற்றி யேனும் மற்றவன் வழாத வாற்றால்
          ஈறுசெய் திடாது பற்றி எம்முனர்த் தருதிர் மெய்யின்
               ஊறுசெய் தவனை வானோ ருடன்சிறை உய்ப்ப னென்றான். ......    13

(அன்னவர் அதனை)

அன்னவர் அதனைக் கேளா அரசவீ தருளிக் கேண்மோ
     ஒன்னலன் தூதன் சோரி உயிரொடு குடித்தற் குற்றாம்
          நின்னருள் ஆணை நாடி நெஞ்சகம் புழுங்கி யஞ்சி
               இன்னதோர் பொழுதுந் தாழ்த்தேம் இனியது புரிது மென்றார். ......    14

(என்றனர் வணக்க)

என்றனர் வணக்கஞ் செய்ய இனிதென உவகை பூத்துக்
     கன்றிய அவுணர் தங்கள் காவலன் விடுப்ப அங்கட்
          சென்றனர் பத்து நூற்றுத் திறலுடை மொய்ம்பர் முன்னம்
               நின்றிடு வீர வாகு நிலைமையை உரைக்க லுற்றாம். ......    15

வேறு

(வேரம தெறிந்தவை)

வேரம தெறிந்தவை வீட்டி நின்றுளான்
     சூருறை நகர்வளந் தொலைச்சிச் சூழுநர்
          சேருறும் இருக்கையுஞ் சிதைப்பன் இன்றெனா
               ஓருறு புந்தியில் உன்னி னானரோ. ......    16

(மறிப்பிணை முதலிய)

மறிப்பிணை முதலிய மான்கள் புள்ளினஞ்
     சிறப்புறு தண்டலை மணியிற் செம்பொனிற்
          குறிப்பினர் குயிற்றுசெய் குன்றம் யாவையும்
               பறித்தனன் திசைதொறும் பரவ வீசினான். ......    17

(வரைவயி றுயிர்த்தி)

வரைவயி றுயிர்த்திடு மாசில் பல்பகை
     அரதன நிரைகளின் அணிய செம்பொனின்
          மரபினில் இயற்றிய வரம்பில் தெற்றிகள்
               விரைவொடு தொட்டனன் எடுத்து வீசினான். ......    18

(முடிவகல் பேழையின்)

முடிவகல் பேழையின் மூட்டு நீக்கியே
     அடியுறு கொள்கலம் அவற்றைச் சாய்த்தெனப்
          படியுறு மண்டபம் பலவுந் தொட்டெடா
               இடிபுரை ஓதையான் யாண்டும் வீசினான். ......    19

(மலரயன் மிசையுறு)

மலரயன் மிசையுறு மாயற் புல்லுவான்
     நிலமகள் கைகளை நீட்டி யென்னவான்
          உலகெலாம் இகந்துமேல் ஓங்கு கோபுரம்
               பலபல பறித்தனன் பாங்கர் ஓச்சினான். ......    20

(மூளுறும் எரிசிகை)

மூளுறும் எரிசிகை முடித்துத் தானவர்
     கேளொடு தமித்தமி கெழுமி யுற்றென
          வாளுறு மாமணி வயங்கு தூபிகைச்
               சூளிகை பலபல தொட்டு வீசினான். ......    21

(கற்றிடும் விஞ்சை)

கற்றிடும் விஞ்சையின் கழகம் பல்கடைத்
     தெற்றிகள் வேதிகை சிறந்த சாலைகள்
          துற்றிடு பழுமரச் சோலை வாவிகள்
               மற்றுள பிறவொடும் மட்டித் தானரோ. ......    22

(கந்துக வியனிரை)

கந்துக வியனிரை கரிகள் தேர்த்தொகை
     பந்தியிற் சாலையிற் பயின்று நின்றன
          அந்தமின் றாயின அள்ளி அள்ளியே
               உந்தினன் திசைதொறும் உரற்றி வீழவே. ......    23

(நிலவரை சூழ்தரு)

நிலவரை சூழ்தரு நேமி வெற்பென
     மலிதரு செம்மணி வகையிற் பண்ணிய
          பலவகை இயந்திரப் பதண இஞ்சிகள்
               ஒலிகழற் காலினான் உதைத்து வீட்டினான். ......    24

(பூழியம் பொற்புய)

பூழியம் பொற்புயப் புனிதன் வெய்யசூர்
     வாழுறு கோநகர் வளத்தை யின்னணம்
          ஊழியின் மருத்தென உலாவி யட்டபின்
               சூழுறு கிடங்கருந் தூர்த்திட் டானரோ. ......    25

(அறந்தலை நின்றிடா)

அறந்தலை நின்றிடா அரசன் கோயில்நின்
     றெறிந்திடு சிகரிகள் இலங்கு சூளிகை
          நிறைந்திடு மண்டபம் நெருங்கு காமர்காச்
               செறிந்தன பிறவொடு சென்று சேணெலாம். ......    26

(உளர்ந்திடு வரியளி)

உளர்ந்திடு வரியளி யுலாவு தொங்கலான்
     வளர்ந்திடு பாணியான் மன்னன் செல்வமாய்க்
          களைந்தெறி கின்றன கணிப்பி லாதவுங்
               கிளர்ந்திடு நெடுமுகில் கிழித்துச் சென்றவே. ......    27

(சூரெனும் அவுணர்கோன்)

சூரெனும் அவுணர்கோன் படைத்த தொல்வளஞ்
     சேரிய மிசைவரத் தெரிந்து வானிடைச்
          சாருறு கடவுளர் தம்முள் ஏங்கியே
               ஏரியல் தொகைபிரிந் திரியல் போயினார். ......    28

(ஊனிவர் குருதிவேல்)

ஊனிவர் குருதிவேல் ஒருவன் ஓச்சிய
     தானவர் கோன்வளந் தகைந்து விண்ணவர்
          மேனிகழ் பதங்களை வீட்டி ஏகியே
               வானதி தன்னையும் வல்லை தூர்த்தவே. ......    29

(வெறித்திடு தார்ப்பு)

வெறித்திடு தார்ப்புய விடலை நொய்தினில்
     பறித்தெறி அவுணர்கோன் பலவ ளங்களும்
          எறித்திடு தீங்கதிர் எல்லை வேந்தனை
               மறைத்தன பணிபல மயங்கிச் சூழ்ந்தபோல். ......    30

(சோலையின் மண்டப)

சோலையின் மண்டபத் தொகையிற் சூளிகைப்
     பாலினிற் சிகரியிற் பயின்ற புள்ளெலாம்
          மேலுறு செலவினில் விரைவின் ஏகியே
               மாலயன் புள்ளொடு மருவி வைகிய. ......    31

(செஞ்சுடர்ச் சூளிகை)

செஞ்சுடர்ச் சூளிகை சிகர மாதிகள்
     விஞ்சிய மிசைவர விழித்துத் தாளிலோன்
          எஞ்சிய வுடலமும் இறுங்கொல் இன்றெனா
               அஞ்சினன் அழுங்கினன் அலரி பாகனே. ......    32

(வள்ளுறு வசிகெழு)

வள்ளுறு வசிகெழு வயிர மாமுடி
     உள்ளபல் சூளிகை உம்பர் செல்வன
          பிள்ளைகள் எறிந்திடப் பிறங்கு பம்பரம்
               பொள்ளென ஈண்டிவான் போவ போன்றவே. ......    33

(மீப்படு வியன்முகில்)

மீப்படு வியன்முகில் கிழித்து விண்மிசை
     மாப்பெருஞ் சிகரிகள் வல்லை செல்வன
          நீப்பருங் ககனமான் நெடுங்க துப்பினில்
               சீப்பிடு கின்றதோர் செய்கை போலுமால். ......    34

(பயனுறு பழுமர)

பயனுறு பழுமரப் பைம்பொற் காமர்கா
     வயனெறி தந்திட அகல்விண் செல்வன
          நயனறும் அவுணனூர் நணிய கற்பகம்
               வியனுல கிருந்திட மீள்வ போன்றவே. ......    35

(ஐயன தொற்றுவன்)

ஐயன தொற்றுவன் அள்ளி வீசிய
     செய்யபல் பொருள்களுஞ் செறிந்து சேணெலாங்
          கொய்யுளை வயப்பரிக் கொடிஞ்சித் தேர்மிசை
               வெய்யவன் செலவினை விலக்கு கின்றவே. ......    36

(திருமிகு சூளிகை)

திருமிகு சூளிகை சிகர மாதிகள்
     நிரல்பட ஏகியே நிரந்த பல்வகைப்
          பருமணி யெரிசுடர் பரப்பி வான்படர்
               இரவிதன் கதிரையும் இகலி வென்றவே. ......    37

(மின்னவிர் சிகரிபொன்)

மின்னவிர் சிகரிபொன் வேர மாதிகள்
     என்னவும் வான்படர்ந் தெழாலின் விஞ்சையர்
          உன்னுறும் ஓங்கலும் உவண வைப்பெனும்
               பொன்னெயில் வட்டமும் பூழி செய்தவே. ......    38

(குன்றொடு சூளிகை)

குன்றொடு சூளிகை கோபு ரம்பிற
     ஒன்றுடன் ஒன்றுபட் டுரிஞ்சி யாயிடைத்
          துன்றிய மணிதிசை தோறுஞ் சிந்துவ
               மின்றிகழ் தாரகை விளிந்து வீழ்வபோல். ......    39

(பொற்றைகள் சிகர)

பொற்றைகள் சிகரகோ புரங்கள் தத்தமில்
     எற்றுழிப் புகையென எழுந்து பூழிகள்
          சுற்றிய புலிங்கமுந் தோன்று கின்றன
               வெற்றவெம் புயல்களு மின்னும் போலவே. ......    40

(ஏழுயர் களிறனான்)

ஏழுயர் களிறனான் எறிந்த யாவையுஞ்
     சூழுற வானிடைத் துவன்ற எற்றலிற்
          கேழுறு நுண்டுகள் கெழுமிச் சிந்துவ
               பூழியின் நெடுமழை பொழியுந் தன்மைபோல். ......    41

(ஆரியன் ஓச்சிய)

ஆரியன் ஓச்சிய அணிகொள் மண்டபம்
     வேரமொ டகன்பொழில் பிறவும் விண்ணுறீஇத்
          தாரகை முதற்சுடர்த் தனுக்கள் சார்ந்திடச்
               சோரியும் இடையிடை துளித்த தென்பவே. ......    42

(புந்தியி லான்மகம்)

புந்தியி லான்மகம் புகுந்த தீமையால்
     இந்திர னாதியோர் யாருஞ் சூரனால்
          நொந்தனர் அவன்நகர் வளமும் நோவுற
               அந்தரத் தவரையும் அலக்கண செய்தவே. ......    43

(வெற்புறழ் மொய்)

வெற்புறழ் மொய்ம்பினான் விடுத்த சூளிகை
     பற்பல பொருந்தலும் பட்ட வன்னிபோய்
          எற்படு கதிருடை இரவி பச்சைமாப்
               பொற்புறு கொய்யுளை பூழி செய்ததே. ......    44

(பொன்னவிர் சிகர)

பொன்னவிர் சிகரகோ புரங்க ளாதிய
     துன்னிய தாக்கலில் தோன்றித் தீப்பொறி
          இன்னுயிர் வழங்கிய வெல்லை எங்கணும்
               வன்னிபெய் மழையென மயங்கி வீழ்பவே. ......    45

(வழுவுறும் அவுணர்)

வழுவுறும் அவுணர்கோன் வளங்கள் யாவையுங்
     கெழுதகு விசும்பினைக் கிழித்துச் சேறலின்
          எழிலிகள் வயிறுடைந் திரங்கி ஆற்றலா
               தழுதென உலகெலாம் அறல்சிந் துற்றவே. ......    46

வேறு

(ஏசிலா அறிவன்)

ஏசிலா அறிவன் விட்ட இன்னபல் வெறுக்கை யாவும்
     மாசகல் விசும்பின் ஏகி மதிமுடி அருள்பெற் றுள்ள
          கோசிகன் துறக்க முய்த்த கொற்றவன் தவறி யென்ன
               ஆசுற மீண்டு ஞாலத் தகிலமும் வீழ்ந்த அன்றே. ......    47

(படிதனில் திசையின்)

படிதனில் திசையின் பாலிற் பௌவத்திற் பழுவந் தன்னில்
     தடவரை தன்னில் இன்ன தகையன பிறவிற் சூர
          னுடையபல் வளங்க ளெல்லாம் உரற்றியே வீழ ஆண்டும்
               இடைதரு முயிரின் பொம்மல் வெருவிவீழ்ந் திரித லுற்ற. ......    48

(அலைந்தது பரிதி)

அலைந்தது பரிதி ஓங்கல் அதிர்ந்தது மேருச் சையங்
     குலைந்தது சூழுங் குன்றங் குலுங்கிய அசலம் ஏழுங்
          கலைந்தது நாகர் வைப்புங் கலங்கிய கடலும் பாரும்
               உலைந்தன உயிர்கண் முற்றும் ஓடின திசையின் யானை. ......    49

(தண்படு தொடலை)

தண்படு தொடலை மார்பன் தானெறிந் தவற்றிற் பல்வே
     றொண்புவி முழுதுஞ் சிந்திற் றொழிந்தன உலப்பி லாத
          எண்பதி னாயி ரப்பேர் யோசனை யெல்லைத் தாகிக்
               கண்படு சூரன் ஊரில் கல்லென வீழ்ந்த மாதோ. ......    50

(முடிந்திடல் அரிய)

முடிந்திடல் அரிய சூரன் மொய்வளம் அவனூர் முற்றுந்
     தடிந்தெறி உருமே றென்னத் தணப்பற வீழ்த லோடும்
          இடிந்தன மாட வீதி யாவையுங் கடிகா இற்ற
               பொடிந்தன சிகரி யாதி புரிசைகள் மறிந்து மாண்ட. ......    51

(மண்டபஞ் சிகரி)

மண்டபஞ் சிகரி வேரம் அணிமதில் மாட கூடம்
     எண்டகு பொதியின் முற்றும் இடிபட எழுபொற் பூழி
          விண்டொடு திசைபார் யாண்டும் வெறுக்கையின் வடிவ மாக்கி
               அண்டர்தம் உலகீ தென்றே அறிகுறா வகைசெய் தன்றே. ......    52

(புடையகல் பொன்)

புடையகல் பொன்செய் மூதூர் பொள்ளெனத் தகர்ந்து வீழ
     மிடைதரு வீதி முற்று மேயின சனங்கள் பூசல்
          கடைவரு நாள தெல்லைக் ககனமூ தண்ட கூடம்
               உடைதலும் முடியும் ஆவி அரற்றுமா றொத்த தன்றே. ......    53

வேறு

(நாக முந்து நறுநிழல்)

நாக முந்து நறுநிழல் மாதவி
     நாக முந்து நறுநிழற் பொற்கணி
          சேக ரம்பல சிந்திடு காழுடைச்
               சேக ரம்பல வோடு சிதைந்தவே. ......    54

(கோட ரங்குல வுற்றி)

கோட ரங்குல வுற்றிட வான்றொடுங்
     கோட ரங்குல வுற்றிடு தண்டலைக்
          கோட ரங்குலங் கோலஞ்செய் பொன்வரைக்
               கோட ரங்குல வுற்றிறை கொண்டவே. ......    55

(ஓடும் வாவியின்)

ஓடும் வாவியின் மீனினம் ஓங்குபுள்
     ளோடும் வாவிவிண் ணுற்றிட வீதியின்
          மாட மாலை வரிசையின் மல்கிய
               மாட மாலை மறிந்திடி பட்டதே. ......    56

(அண்ட ரண்டரும்)

அண்ட ரண்டரும் அந்நகர் மாண்டன
     அண்ட ரண்டம் அளவிடு சூளிகை
          மண்ட பம்மதின் மாடந் தரித்தயர்
               மண்ட பம்மதின் மாதவம் யாவதே. ......    57

(பூவை யன்ன மணி)

பூவை யன்ன மணிமயில் பொற்புறு
     பூவை யன்ன மணிமயில் பொற்புறா
          வாவி யோடைவண் டான மழிந்திட
               வாவி யோடைவண் டானம் அழியுமால். ......    58

(மொய்யு டைத்தறி)

மொய்யு டைத்தறி மோதித் தளைபரீஇ
     மையு டைப்பெரு மால்கரி சோரிநீர்
          மெய்யி டத்துக விண்முகி லச்சுறக்
               கையெ டுத்துக் கதறி உடைந்தவே. ......    59

(ஈடு சான்ற வெருத்)

ஈடு சான்ற வெருத்த முரிந்திட
     நீடு பூநுதல் நெக்குறக் கிம்புரிக்
          கோடு சிந்தக் குருதியு குத்தரோ
               ஓடி வீழ்வ உவாக்கள் அரற்றியே. ......    60

(கார்கொள் சிந்து)

கார்கொள் சிந்துரங் காயத் திடையிடைச்
     சோரி சோர்தரத் தோன்றுவ ஈற்றினின்
          மேரு வாதி விலங்கலை மெய்க்கனல்
               சாரும் வெம்புகை தன்னொடுஞ் சூழ்ந்தபோல். ......    61

(கொடிகள் இற்ற)

கொடிகள் இற்ற கொடிஞ்சி முரிந்தன
     இடைகொள் பீடிகை எல்லைகள் நெக்கன
          அடிகொள் சில்லியும் ஆருஞ் சிதைந்தன
               பொடிய தாகிப் புரண்டன தேர்களே. ......    62

(பந்தி தோறும்)

பந்தி தோறும் பராவிய ஐங்கதிக்
     கந்து கங்கள் கலங்கி நெரிந்திட
          நொந்து மேனி நொறில்வரு செம்புனல்
               சிந்தி யோடச் சிதறிய திக்கெலாம். ......    63

(சிதவல் கொண்டி)

சிதவல் கொண்டிடு செம்மயிர்க் கொய்யுளை
     மதுகை வெம்பரி வாய்களின் வீழ்தரு
          முதிர வாரி யொலிகடல் புக்கதால்
               இதுகொ லோவட வைக்கனல் என்னவே. ......    64

(காள வெங்கரி)

காள வெங்கரிக் காலின் வயப்பரித்
     தாளின் ஊடகப் பட்டுத் தரைபுகா
          மூளை சிந்த முழுதுடல் பூழியாய்
               மாளு கின்றனர் மாநக ரோர்சிலர். ......    65

(ஆளி மொய்ம்புடை)

ஆளி மொய்ம்புடை அண்ணல்முன் வீசின
     நீளு மாநகர் ஞெள்ளலின் வீழ்தலுந்
          தோளி ழந்து சுவல்முரிந் தொய்யெனத்
               தாளி ழந்து தரங்கமுற் றார்சிலர். ......    66

(பொற்றை யன்ன)

பொற்றை யன்ன பொலன்மணி மாளிகை
     இற்று வீழ்தலும் என்னிது வென்றெழீஇ
          வெற்ற வெள்ளிடை மேவுதல் முன்னியே
               முற்றம் வந்திடு முன்மறிந் தார்சிலர். ......    67

(ஊடு மைந்தரும்)

ஊடு மைந்தரும் ஒண்டொடி மாதரும்
     மாட மோடு மறிந்தனர் தம்முடல்
          வீடி விண்மிசை வேற்றுரு வெய்தியே
               கூடி யேவழிக் கொண்டன ரோர்சிலர். ......    68

(உவமன் இல்லவன்)

உவமன் இல்லவன் ஓச்சின எங்கணும்
     அவதி யின்றிப் பொழிய வவைதெரீஇத்
          தவறி லாதுசெய் தாழ்வரை கீண்டெடாக்
               கவிகை யாத்தமைக் காத்துநிற் பார்சிலர். ......    69

(விறற்கொள் வாகு)

விறற்கொள் வாகு விடுத்தன கல்லக
     வுறைப்பின் வீழ ஒதுங்கிடம் இன்மையிற்
          சிறக்கு மாநகர்ச் செந்தரைக் கொண்டகீழ்
               அறைக்கு ளேபுக் கலமரு வார்சிலர். ......    70

(மாதர் தங்களை)

மாதர் தங்களை மக்களை அன்னையைத்
     தாதை மாரைத் தமதுகைப் பற்றியே
          ஏதின் மாடம் இகந்துகச் சோரிநீர்
               வீதி போந்து வெருவிநிற் பார்சிலர். ......    71

(கருவி வானினு)

கருவி வானினுங் கண்ணகன் திக்கினுந்
     தரணி தன்னினுந் தாவிலன் வீசிய
          திருவ ளங்கள் செறிந்தன வீழ்தலும்
               வெருவிப் போய்க்கடல் வீழ்ந்தொளிப் பார்சிலர். ......    72

(கிழிந்த சென்னி)

கிழிந்த சென்னியிற் கேழ்படு செம்புனல்
     கழிந்து தோன்றவுங் கண்டனர் ஐயுறாப்
          பொழிந்து மெய்ப்புறம் போர்த்தலுந் தேற்றியே
               அழிந்தி ரங்குற ஆகுலிப் பார்சிலர். ......    73

(ஆடல் மொய்ம்பினன்)

ஆடல் மொய்ம்பினன் ஆர்த்துமுன் வீசிய
     மாட வீதி வளநகர் எங்கணும்
          நீட வீழ்தலும் நிற்றலை அஞ்சியே
               ஓடி யூறுற் றுயிர்துறப் பார்சிலர். ......    74

(திங்கள் சூடி திருமகன்)

திங்கள் சூடி திருமகன் விட்டன
     எங்கும் வீழும் இறப்பினை நோக்கியே
          அங்கி வெங்கணை தொட்டறுத் தன்னவை
               தங்கள் ஆருயிர் தாங்கிநிற் பார்சிலர். ......    75

(மையல் மாதரும்)

மையல் மாதரும் மைந்தரும் ஆவியும்
     பொய்யில் புந்தியும் ஒன்றிப் புணர்தலுஞ்
          செய்ய மாடஞ் சிகரமொ டேவிழ
               மெய்யும் ஒன்றி விளிந்திடு வார்சிலர். ......    76

(அந்தண் மாட)

அந்தண் மாடத் தறிவன் விடுத்தன
     வந்து வீழ மறிந்துரு மேறெனச்
          சிந்த வேயுகு செம்பொறி மெய்ப்பட
               வெந்து சின்னம் விரவுறு வார்சிலர். ......    77

(வரங்கொள் வீர)

வரங்கொள் வீர மகேந்திரத் தின்னணந்
     தரங்க மெய்திச் சனங்களெல் லாமிரீஇ
          உரங்கள் சிந்தி அழிந்துழி ஒல்லென
               இரங்கும் ஓதை எழுகடல் உண்டதே. ......    78

(மன்றி னிற்கரி)

மன்றி னிற்கரி பொய்த்து மனுநெறி
     கொன்று வாழுங் கொடியர்தம் மில்லெனத்
          துன்று மாடத் தொகைவெள் ளிடையதாய்ப்
               பொன்றி வீழ்ந்தன புல்லென வாகியே. ......    79

(நீறு பட்ட நெடுநகர்)

நீறு பட்ட நெடுநகர் எங்கணும்
     ஊறு பட்ட உயிர்கடஞ் சோரிநீர்
          ஆறு பட்டிட அங்கவை யோடளாய்ச்
               சேறு பட்டன செக்கர்விண் போலவே. ......    80

(மலிந்த சீர்த்தி)

மலிந்த சீர்த்தி மகேந்திர மாபுரம்
     அலைந்து தொல்லைத் திருமுழு தற்றதால்
          மெலிந்தி டும்படி விண்ணவர் தம்மெலாம்
               நலிந்த வன்வளம் நன்றுறு மேகொலாம். ......    81

ஆகத் திருவிருத்தம் - 4482



previous padalam   15 - நகரழி படலம்   next padalamnagarazhi padalam

previous kandam   3 - மகேந்திர காண்டம்   next kandam3 - mahEndhira kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]