(பரஞ்சுடர் நெடுங்க)
பரஞ்சுடர் நெடுங்கணை படுத்த பாயலில்
வருஞ்சசி அனையதோர் வாணு தற்சசி
தருஞ்சிறு குமரனாஞ் சயந்தன் அவ்விடை
அருஞ்சிறை இருந்தனன் அமரர் தம்மொடும். ......
1(வாலிதாம் அமரர்)
வாலிதாம் அமரர்சூழ் வைப்பில் இந்திரன்
கோலமா கியதனிக் குமரன் வைகுதல்
மேலைநாள் அமுதெழும் வேலை தன்னிடை
நீலமா முகிலுறை நீர்மை போலுமே. ......
2(மழைபுரை அவுணர்)
மழைபுரை அவுணர்சூழ் வைப்பில் வாலொளி
தழுவிய அமரருட் சயந்தன் மேயினான்
கழிதரு பணிபல கவரச் சோர்தரும்
முழுமதி அதனிடை முயலுற் றென்னவே. ......
3(வென்றிவில் லிய)
வென்றிவில் லியற்றிய விஞ்சை நீர்மையால்
கன்றிய கரமெனக் காவற் சாலையில்
பொன்றிகழ் வல்லிகள் பூண்டு பற்பகல்
தன்றுணைத் தாள்களில் தழும்பு சேர்ந்துளான். ......
4(இயற்படு மானமும்)
இயற்படு மானமும் இகலும் நாணமும்
அயற்பட வெம்பழி அனலஞ் சுற்றிட
உயிர்ப்பெனும் ஓதைநின் றுயிர லைத்திடத்
துயர்ப்பெரும் பரவையூ டழுந்திச் சோருவான். ......
5(அண்டருஞ் சிறை)
அண்டருஞ் சிறையினால் வீடும் அல்லதேல்
எண்டரு முகம்பல இடருண் மூழ்கலின்
மண்டுதொல் பழியற வலிது துஞ்சுமால்
உண்டநல் லமுதினால் அவையொ ழிந்துளான். ......
6(தணிப்பரும் வெஞ்சி)
தணிப்பரும் வெஞ்சினத் தகுவர் மன்னவன்
பணிப்படு சிறைக்களம் பட்டுத் தம்முடல்
துணிப்புறு வோரெனத் துயர்கொண் டோர்கணங்
கணிப்பரு முகங்களாக் கழித்து வைகுவான். ......
7(தேவியல் மரகத)
தேவியல் மரகதந் தெளித்துத் தீட்டிய
ஓவிய உருவமா சுண்ட தன்மையான்
ஆவியம் புனலறா தமருங் காவியம்
பூவியல் மென்றொடை புலர்ந்த தேயனான். ......
8(வியலுகம் நூறுடன்)
வியலுகம் நூறுடன் மிக்க வெட்டினுள்
இயலுறு சிறுவரை எனினுந் துஞ்சுமேல்
மயல்சிறி தகலுமால் மரபின் வைகலுந்
துயில்கிலன் ஆதலால் அறாத துன்பினான். ......
9(நெஞ்சழி துன்பிடை)
நெஞ்சழி துன்பிடை நீட வைகலில்
துஞ்சலன் வலிதுயிர் துறப்பு மாற்றலன்
எஞ்சுமோ ரிறைவரை இமையுங் கூட்டலன்
விஞ்சிய தவந்துயர் விளைக்கு மாங்கொலோ. ......
10(இலங்கிய மரகத)
இலங்கிய மரகதத் தியன்று பொன்குலாய்
நலங்கிளர் தன்வனப் பிழந்து நாடொறுஞ்
சலங்கெழும் அவுணர்கள் தமைக்கண் டஞ்சியே
கலங்கினன் உய்வகை யாதுங் காண்கிலான். ......
11(சுந்தர மரகத)
சுந்தர மரகதத் தனது தொல்லுரு
வெந்துயர் உழத்தலின் வெய்து யிர்ப்பென
வந்தெழு புகைபட மறைந்து கட்புனல்
சிந்திட உடனுடன் திகழத் தோன்றுமால். ......
12(முழுதுறு தன்றுயர்)
முழுதுறு தன்றுயர் முன்னி முன்னியே
இழுதையர் அவுணரும் இரங்க ஏங்குறா
அழுதிடுங் காப்பினோர் அச்சஞ் செய்தலும்
பழுதுகொல் என்றுவாய் பொத்தும் பாணியால். ......
13(இந்திரன் சசியொ)
இந்திரன் சசியொடும் இருந்த சூழல்போய்த்
தந்தனர் பற்றினர் தமரெ னச்சிலர்
முந்துறு காவலோர் மொழிந்த பொய்யுரை
அந்தம தடையுமுன் அயர்ந்து வீழுமே. ......
14(ஐந்தரு நீழலை)
ஐந்தரு நீழலை நினைக்கும் ஆய்மலர்
தந்தமென் பள்ளியை உன்னும் தானெனப்
புந்திகொள் மங்கையர் புணர்ப்பை யுட்கொளும்
இந்திரப் பெருவளம் எண்ணிச் சோருமே. ......
15(தன்னிணை இல்ல)
தன்னிணை இல்லதோர் தருவின் நீழலுள்
நன்னலந் துய்த்தியாம் நாளும் இன்புறும்
பொன்னகர் பூழியாய்ப் போங்கொ லோவெனா
உன்னிடுந் தொன்மைபோல் உறுவ தென்றெனும். ......
16(ஈண்டையில் அவுணர்)
ஈண்டையில் அவுணர்கோன் ஏவத் தானைகள்
சேண்டொடர் துறக்கமேற் செல்ல நாடியே
காண்டகு தம்முருக் கரந்து போயினார்
யாண்டைய ரோவெமை ஈன்று ளாரெனும். ......
17(ஏயின துறக்க)
ஏயின துறக்கநா டிழிந்து தொல்லைநாள்
தாயொடு பயந்துள தந்தை பாரகம்
போயினன் எனச்சிலர் புகலக் கேட்டனன்
ஆயிடைப் புகுந்தன அறிகி லேனெனும். ......
18(அண்டர்கள் ஒரு)
அண்டர்கள் ஒருசிலர் அயர்வு கூறவுட்
கொண்டனர் ஏகினர் குறுகி எந்தையைக்
கண்டன ரேகொலோ கலந்துளார் கொலோ
விண்டன ரேகொலோ விளைவெ னோவெனும். ......
19(சீகரம் மிக்கசூர்)
சீகரம் மிக்கசூர் செயிர்த்துச் செய்திடும்
ஆகுல முழுவதும் அறைய அம்மையோர்
பாகம துடையநம் பரமன் மால்வரைக்
கேகின னேகொலோ எந்தை யென்றிடும். ......
20(பொருந்தலர் கண்)
பொருந்தலர் கண்ணுறாப் பொருட்டுத் தம்முருக்
கரந்தன ரோவழீஇக் குரவர் கள்வர்பால்
பொருந்தின ரேகொலோ புவனம் எங்குமாய்த்
திரிந்தன ரேகொலோ தெளிகி லேனெனும். ......
21(மாண்கிளர் சூரபன்)
மாண்கிளர் சூரபன் மாவின் ஏவலால்
ஏண்கிளர் அவுணர்கள் யாயைத் தந்தையை
நாண்கொடு பிணித்திவண் நல்கப் போயினார்
காண்கில ரேகொலோ கரந்த வாறெனும். ......
22(அன்புடை யம்மனை)
அன்புடை யம்மனை அத்தன் ஈங்கிவர்
வன்புடை அவுணர்கள் வரவு காண்பரேல்
துன்புடை மனத்தராய்த் துளங்கி ஏங்கியே
என்படு வார்கொலோ அறிகி லேனெனும். ......
23(பொன்னகர் கரிந்த)
பொன்னகர் கரிந்ததும் புதல்வ னாகுமென்
றன்னையிம் முதுநகர்த் தந்து தானவர்
துன்னருஞ் சிறையிடு துயருங் கேட்டபின்
என்னினைந் திரங்குமோ ஈன்ற தாயெனும். ......
24(பன்னெடு மாயை)
பன்னெடு மாயைகள் பயின்ற தானவர்
அன்னையொ டத்தனை ஆய்ந்து பற்றியென்
முன்னுறக் காண்டகு முறையின் உய்ப்பினும்
என்னுயிர் பின்னரும் இருக்குங் கொல்லெனும். ......
25(ஆற்றருஞ் செல்ல)
ஆற்றருஞ் செல்லலுள் அழுந்தும் பான்மையான்
மேற்றிகழ் பரஞ்சுடர் விமலற் போற்றியே
நோற்றனர் முத்தியின் நுழைகுற் றார்கொலோ
பேற்றினர் இருந்தசொற் பிறந்த தில்லெனும். ......
26(தீங்கதிர்ப் பகை)
தீங்கதிர்ப் பகையொடு செருமு யன்றநாள்
தாங்கியெற் கொண்டுழித் தந்தம் இற்றிட
ஆங்கனம் வீழ்ந்ததால் அதற்கு மேற்பட
யாங்குசென் றதுகொலோ யானை என்றிடும். ......
27(பிறப்புறு வைகலை)
பிறப்புறு வைகலைத் தொட்டுப் பின்னரே
இறப்புறு நாள்வரை யாவர்க் காயினும்
உறப்படு துய்ப்பெலாம் ஊழின் ஊற்றமால்
வெறுப்பதென் அவுணரை வினையி னேனெனும். ......
28(தாவறு தொன்ன)
தாவறு தொன்னகர் விளியத் தந்தைதாய்
ஆவியோ டிரிந்திட அளிய னோர்மகன்
வீவருஞ் சிறைப்பட மேலை நாட்புரி
தீவினை யாவதோ தெளிகி லேனெனும். ......
29(துப்புறழ் சடை)
துப்புறழ் சடையினான் சூரற் கீறிலா
அப்பெரு வரத்தினை அளித்த லாலவன்
மெய்ப்பட விளிகிலன் வீடுஞ் செய்கிலன்
எப்பொழு திச்சிறை தீரும் என்றிடும். ......
30(மட்டறு வெறுக்கை)
மட்டறு வெறுக்கையும் நகரும் வாழ்க்கையும்
விட்டனர் கடந்தனர் மேலை யோரென
உட்டெளிந் தகன்றிலன் உவர்பி ணித்திடப்
பட்டன னேகொலோ பாவி யேனெனும். ......
31(மாற்றலன் இவ்வுயிர்)
மாற்றலன் இவ்வுயிர் வசையு றாவகை
போற்றலன் குரவர்பாற் புகுந்த புன்கணைத்
தேற்றலன் தமியனுந் தெளிகி லன்சிறை
ஆற்றலன் ஆற்ற லனைய கோவெனும். ......
32(துறந்ததோ பேர)
துறந்ததோ பேரறந் தொலையுந் தீப்பவஞ்
சிறந்ததோ மாதவப் பயனுந் தேய்ந்ததோ
குறைந்ததோ நன்னெறி கூடிற் றோகலி
இறந்ததோ மறைசிவன் இல்லை யோவெனும். ......
33(கூடலர் வருத்த)
கூடலர் வருத்தலிற் குரவர் தங்களைத்
தேடினர் விரைவுடன் சென்ற தேவர்போல்
ஓடினர் புகாவகை ஒழிந்து ளோரையும்
வீடருஞ் சிறையிடை வீட்டி னேனெனும். ......
34(அந்தியின் மறை)
அந்தியின் மறைமொழி அயர்த்து வைகினன்
சந்தியில் வினைகளுந் தழலும் ஓம்பலன்
எந்தையை வழிபடும் இயல்பு நீங்கினன்
முந்தையின் உணர்ச்சியும் முடிந்து ளேனெனும். ......
35(மெய்யுயிர் அகன்றி)
மெய்யுயிர் அகன்றிட விளிகி லேன்எனின்
எய்யுறும் அலக்கண்நீத் தினிது மேவலன்
வையுறு நெடும்புரி வடிவம் வெந்தெனப்
பொய்யுடல் சுமந்தனன் புலம்புற் றேனெனும். ......
36(சொல்லுவ தென்)
சொல்லுவ தென்பிற தொல்லை வைகலின்
மெல்லென ஆற்றிய வினையின் பான்மையால்
அல்லுறழ் மிடற்றின்எம் மடிக ளேயெமக்
கெல்லையில் இத்துயர் இயற்றி னானெனும். ......
37(ஆவியும் உலகமும்)
ஆவியும் உலகமும் அனைத்து மாகியும்
ஓவியுங் கருணையின் உருக்கொண் டாடல்செய்
தேவர்கள் தேவனாஞ் சிவன்மற் றல்லதை
ஏவரென் குறையுணர்ந் திரங்கு வாரெனும். ......
38(பெறலருந் திருவெ)
பெறலருந் திருவெலாம் பிழைத்துச் சூருயிர்
அறுவதும் அவுணர்கள் அவிந்து மாய்வதுஞ்
சிறையிது கழிவதுந் தீர்கி லாவசை
இறுவதும் ஒருபகல் எய்து மோவெனும். ......
39(நூறொடர் கேள்வியோர்)
நூறொடர் கேள்வியோர் நுணங்கு சிந்தைசேர்
கூறுடை மதிமுடிக் குழகன் தன்னருட்
பேறுடை யேனெனிற் பெருந்து யர்க்கடல்
ஏறுவன் வினையினேற் கில்லை கொல்லெனும். ......
40(இத்திறம் அளப்பில)
இத்திறம் அளப்பில எண்ணி யெண்ணியே
மெய்த்துயர் உழந்துவெய் துயிர்த்து விம்மியே
அத்தலை சுற்றிய அமரர் யாவருந்
தத்தமில் இரங்குறச் சயந்தன் வைகினான். ......
41(கண்டகன் உதா)
கண்டகன் உதாவகன் கராளன் மாபலன்
சண்டகன் இசங்கனே சங்க னாதியா
எண்டகும் அவுணர்கள் எண்ணி லோர்குழீஇக்
கொண்டனர் சிறைக்களங் குறுகி ஓம்பினார். ......
42(ஆயதோர் காப்பி)
ஆயதோர் காப்பினோர் அறுமு கத்தனி
நாயகன் தூதுவன் நணுகு மப்பகல்
ஏயுறு சயந்தனை இமைப்பி லாரொடு
காயெரி யாமெனக் கனன்று சுற்றினார். ......
43வேறு(மன்னா நங்கோன்)
மன்னா நங்கோன் தன்பணி நில்லா மகவேந்தும்
மின்னா டானும் யாண்டுறு கின்றார் விரைவாகிச்
சொன்னால் உய்வீர் அல்லதும் மாவி தொலைவிப்பேம்
முன்னா ளேபோல் எண்ணலிர் உண்மை மொழிகென்றார். ......
44(என்னுங் காலை)
என்னுங் காலைக் கேட்ட சயந்தன் எம்மாயும்
மன்னும் வானின் றோடின கண்டாம் மற்றன்னோர்
பின்னங் குற்ற தன்மையும் ஓராம் பிணிநோயுள்
துன்னுந் தீயேம் யாவ துரைத்துஞ் சூழ்ந்தென்றான். ......
45(விண்டோய் மன்னன்)
விண்டோய் மன்னன் முன்னொரு நாள்மெல் லியல்தன்னைக்
கொண்டே போனான் இன்னுழி யென்று குறிக்கொள்ளேங்
கண்டோம் அல்லங் கேட்டிலம் உள்ளங் கழிவெய்தப்
புண்டோய் கின்றோம் என்சொல்வ தென்றார் புலவோர்கள். ......
46(சொற்றார் இவ்வா)
சொற்றார் இவ்வா றன்னது போழ்தில் துணிவெய்தி
உற்றார் போலும் இங்கிவர் எல்லாம் உளமொன்றி
எற்றால் உண்மை ஓதுவர் இன்னோ ரெனவெண்ணாச்
செற்றா ராகுங் காவலர் துன்பஞ் செய்கின்றார். ......
47(வென்னஞ் சென்ன)
வென்னஞ் சென்னக் காயெரி யென்ன மிகுதீஞ்சொல்
முன்னஞ் சொற்றே வைவர் தெழிப்பர் முரணோடுங்
கன்னஞ் செல்லத் தோமரம் உய்ப்பர் கடைகிற்பார்
சின்னஞ் செய்வார் போலுடன் முற்றுஞ் சேதிப்பார். ......
48(கண்டந் துண்ட)
கண்டந் துண்டஞ் செய்திடும் அங்கம் கடிதொன்றிப்
பிண்டந் தன்னிற் கூட வெகுண்டே பேராற்றல்
கொண்டங் கையால் வாள்கொடு மார்பங் குடைகிற்பார்
தண்டந் தன்னான் மோதுவர் அன்னோர் தலைகீற. ......
49(இத்தன் மைத்தா)
இத்தன் மைத்தாக் காவலர் யாரும் எண்ணில்லா
மெய்த்துன் பத்தைச் செய்திட மைந்தன் விண்ணோர்தங்
கொத்துந் தானும் ஆற்றல னாகிக் குலைவெய்தி
நித்தன் றன்னை உன்னி அரற்றா நிற்கின்றான். ......
50(சீற்றத் துப்போர்)
சீற்றத் துப்போர் பல்படை கொண்டே செறுபோழ்து
மாற்றத் துன்பம் பட்டத லான்மெய் யழிவாகி
ஈற்றுத் தன்மை சேர்ந்திலன் விண்ணோர் இறைமைந்தன்
கூற்றிற் பட்டுச் செல்லல் உழக்குங் கொடியோர்போல். ......
51(நெஞ்சினில் வால)
நெஞ்சினில் வாலறி வெய்தினர் ஐம்புல நெறிநின்றும்
எஞ்சிய மேல்வினை பெற்றில தேயென இறும்வண்ணம்
தஞ்செயல் வெய்யோர் செய்யவும் மைந்தன் தமரோடும்
துஞ்சிலன் ஊறும் பெற்றிலன் உற்றான் துயரொன்றே. ......
52(மாடே சூழ்வார்)
மாடே சூழ்வார் தம்மொடு மைந்தன் சிறைபுக்கான்
காடே போனான் இந்திரன் ஏனோர் கவலுற்றார்
பாடே விண்ணோர் தம்பதம் முக்கட் பரன்நல்கும்
வீடே அல்லால் துன்பறும் ஆக்கம் வேறுண்டோ. ......
53(அந்தா வாள)
அந்தா வாளந் தோமரம் எஃகம் அடுதண்டம்
முந்தா வுற்ற பல்படை யாவும் முரிவெய்தச்
செந்தார் மார்பிற் காவலர் கையுந் திறலெஞ்ச
நொந்தார் இன்னா செய்வது நீத்தார் நுவல்கின்றார். ......
54(வீவார் பின்னாள்)
வீவார் பின்னாள் அல்லது வேறார் வினையத்தால்
சாவார் எஞ்சார் பேரமிர் துண்டார் தவமிக்கார்
நோவார் நாமிங் காற்றிய பாலான் நோய்நொந்தும்
ஆவா யாதுஞ் சொற்றிலர் என்றற் புதமுற்றார். ......
55(இன்னோர் யாரும்)
இன்னோர் யாரும் மைந்தனை வானோர் இனமோடு
மெய்ந்நோ வாகும் பாங்கின் அலைத்த வினையாலே
கைந்நோ வெய்தி வன்மையும் நீங்கிக் கவலுற்றார்
முன்னோர் தம்பாற் செய்த துடன்சூழ் முறையேபோல். ......
56வேறு(அத்தகைய காவல்)
அத்தகைய காவல் அவுணர் அவர்க்கணித்தாய்
மொய்த் தொருசார் ஈண்டி முறைநீங் கலர்காப்ப
எய்த்த அமரருடன் இந்திரன்சேய் பண்ணவருள்
உத்தமனாங் கண்ணுதலை உன்னிப் புலம்புறுவான். ......
57(வந்திப்பவர் பவ)
வந்திப்பவர் பவங்கள் மாற்றுவோய் எத்தேவர்
சிந்தைக்கும் எட்டாச் சிவனே செழுஞ்சுடரே
இந்தப் பிறவி இடருழப்பச் செய்தனையோ
வந்தித்த நின்புணர்ப்பை யாரே கடந்தாரே. ......
58(கைந்நாகத் துக்கு)
கைந்நாகத் துக்குங் கயவாய்க்கும் நாரைக்கும்
பைந்நாகத் துக்கும் படருஞ் சிலந்திக்கும்
பின்னாகிய வுயிர்க்கும் பேரருள்முன் செய்தனையால்
என்னா யகனே எமக்கேன் அருளாயே. ......
59(கங்கை முடித்தா)
கங்கை முடித்தாய் கறைமிடற்றாய் கண்ணுதலாய்
திங்கள் புனைந்தாய் சிவனே சிவனேயென்
றிங்கு நினதடியேம் எல்லேங் களும்அரற்றல்
நங்க ளுயிர்க்குயிராம் நாயகநீ கேட்டிலையோ. ......
60(பாசங்கொண் டாவி)
பாசங்கொண் டாவி பலவும் பிணிப்போனும்
நேசங்கொண் டாங்கதனை நீக்கியருள் செய்வோனும்
ஈசன் சிவனென் றியம்புமறை நீயிழைத்த
ஆசொன்றும் இத்தீமை ஆர்தவிர்க்க வல்லாரே. ......
61(நாரா யணனும்)
நாரா யணனும்அந்த நான்முகனும் நாடரிய
பேராதி யான பெருமான் உயிர்க்கெல்லாம்
ஆராயின் நீயன்றி யாரே துணையாவார்
வாராய் தமியேன் உயிரளிக்க வாராயே. ......
62(சீற்றம் விளைத்து)
சீற்றம் விளைத்துமுனந் தேவர் தொகைஅலைப்பான்
கூற்ற மெனவே குறுகுற்ற அந்தகனும்
ஆற்றல் இழப்பஅகல் மார்பில் முத்தலைவேல்
ஏற்றியவன் நீயன்றோ எமக்கேன் இரங்கலையே. ......
63(ஏங்கி அமரர்)
ஏங்கி அமரர் இரிந்தோட வேதுரந்த
ஓங்கு குரண்டத் துருக்கொண்ட தானவனைத்
தீங்கு பெறத்தடிந்து சின்னமா ஓர்சிறையை
வாங்கி அணிந்தஅருள் இங்கென்பால் வைத்திலையே. ......
64(ஞாலத் தினைய)
ஞாலத் தினையளித்த நான்முகனும் நின்றவற்றைப்
பாலித் தவனும் பிறரும் பணிந்திரங்க
ஓலக் கடலுள் உலகந் தொலைப்ப வந்த
ஆலத்தை உண்டஅருள் என்பால் அயர்த்தனையோ. ......
65(மோடி தரவந்த)
மோடி தரவந்த முக்க ணுடைக்காளி
ஓடி உலகுயிர்கள் உண்ணும் படியெழலும்
நாடி யவள்வெருவி நாணிச் செருக்ககல
ஆடி யருள்செய்த அருளிங் கணுகாதோ. ......
66(பொற்றைக் கயிலை)
பொற்றைக் கயிலைப் புகல்புக்க தேவர்தமைச்
செற்றத் துடனடவே சென்ற சலந்தரனை
ஒற்றைத் திகிரிப் படையால் உடல்பிளந்தே
அற்றைப் பகல்அவரை அஞ்சலென்றாய் நீயன்றோ. ......
67(நந்துற்ற கங்கை)
நந்துற்ற கங்கை நதிசெறியுங் காசிதனில்
தந்திக் கொடியோன் தவத்தோர் தமைத்துரந்து
வந்துற் றிடச்சினவி வன்தோ லினையுரித்த
அந்தக் கருணைக் களியரேம் பற்றிலமோ. ......
68(ஈரஞ்சு சென்னி)
ஈரஞ்சு சென்னி இருபான் புயங்கொண்டோர்
ஓரஞ் சரக்கர் உலகலைப்ப அன்னவரை
வீரஞ்செய் தட்ட விமல எமைஅவுணர்
கோரஞ்செய் கின்ற கொடுந்தொழிலுட் கொள்ளாயோ. ......
69(பண்டை மகவான்)
பண்டை மகவான் பரிசுணராத் தக்கனைப்போல்
அண்டர்பிரான் நின்னை அறியாதோர் வேள்விசெயத்
துண்டமது செய்து சுரரையவன் தோள்முரித்தாய்
தண்ட மதனையின்று தானவர்பாற் காட்டாயோ. ......
70(சிந்தப் புரங்கொடி)
சிந்தப் புரங்கொடிய தீயவுணர் மூவகைத்தாம்
அந்தப் புரங்கள் அடல்செய்தாய் எம்பெருமான்
சந்தப் புரங்கொண்ட தானவரோ டொன்றாகும்
இந்தப் புரமும் எரிக்குதவ ஒண்ணாதோ. ......
71(அன்பான் அவரு)
அன்பான் அவருக் கருளுதியாற் பத்திநெறி
என்பால் இலையால் இறையும் எவனளித்தி
நன்பால் மதிமிலைச்சு நாயகனே நல்லருள்கூர்
உன்பால் மிகநொந்தே ஓதியதென் பேதைமையே. ......
72(ஆனாலுந் தீயேன்)
ஆனாலுந் தீயேன் அழுங்க அருள்கொடுநீ
தானாக நண்ணித் தலையளிசெய் தாண்டாயேல்
ஆனாத இத்துயரம் ஆறுமே ஆறியக்கால்
மேனாள் எனயான் துறக்கவளன் வேண்டிலனே. ......
73(வென்றி அரக்கரால்)
வென்றி அரக்கரால் மேதகைய தானவரால்
அன்றி முனிவரால் அண்டரால் ஏனையரால்
ஒன்று செயவொன்றாய் உறுதுயரத் தாழ்ந்ததன்றி
என்று மகிழ்வாய் இடரற் றிருந்தனமே. ......
74(கீற்று மதியுங் கிளர்)
கீற்று மதியுங் கிளர்வெம் பொறியரவும்
ஆற்றி னொடுமிலைந்த ஆதியே நின்னருளால்
ஏற்ற மிகும்அலக்கண் ஏகின் இழிந்தவளம்
போற்று கிலன்நோற்றல் புரிவேன் புரிவேனே. ......
75(தண்டேன் துளிக்கு)
தண்டேன் துளிக்குந் தருநிழற்கீழ் வாழ்க்கைவெஃகிக்
கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோதென்றே
கண்டேன் பிறர்தம் பதத்தொலைவுங் கண்டனனால்
தொண்டேன் சிவனேநின் தொல்பதமே வேண்டுவனே. ......
76(அல்லற் பிறவி)
அல்லற் பிறவி அலமலம்விண் ணாடுறைந்து
தொல்லைத் திருநுகருந் துன்பும் அலமலமால்
தில்லைத் திருநடஞ்செய் தேவே இனித்தமியேற்
கொல்லைத் துயர்தீர்த் துனதுபதந் தந்தருளே. ......
77(ஒன்றாய் இருதி)
ஒன்றாய் இருதிறமாய் ஓரைந்தாய் ஐயைந்தாய்
அன்றா தியின்மீட்டும் ஐந்தாய் அளப்பிலவாய்
நின்றாய் சிவனேயிந் நீர்மையெலாந் தீங்ககற்றி
நன்றா விகட்கு நலம்புரிதற் கேயன்றோ. ......
78(பொன்பொலியுங்)
பொன்பொலியுங் கொன்றைப் புரிசடையாய் இவ்வழிசேர்
துன்ப மகற்றித் துறக்கத்துள் தாழாது
பின்பு நனிநோற்றுப் பெறற்கரிதாம் நின்னடிக்கீழ்
இன்பம் ஒருதலையா எய்தவரு ளாய்எனக்கே. ......
79வேறு(என்று பற்பல இரங்கி)
என்று பற்பல இரங்கியே விடஞ்செறிந் தென்னச்
சென்று சென்றிடர் மூடுறா உணர்வெலாஞ் சிதைப்ப
ஒன்றும் ஒர்கிலன் மயங்கினன் உயிர்கரந் துலையப்
பொன்றி னார்களின் மறிந்தனன் இந்திரன் புதல்வன். ......
80(ஆங்க வன்றனை)
ஆங்க வன்றனைப் போலவே அமரரும் அழுங்கி
ஏங்கி ஆருயிர் பதைத்திட வீழ்ந்துணர் விழந்தார்
தூங்கு வீழுறு பழுமரஞ் சாய்துலுந் தொடர்ந்து
பாங்கர் சுற்றிய வல்லிகள் தியங்கிவீழ் பரிசின். ......
81ஆகத் திருவிருத்தம் - 4129