(அண்டம் யாவையும் எழு)
அண்டம் யாவையும் எழுவகை யுயிர்த்தொகை யனைத்தும்
பிண்ட மாம்பொருள் முழுவதும் நல்கியெம் பெருமான்
பண்டு பாரித்த திறமென மகேந்திரப் பதியின்
மண்டு தொல்வளம் நோக்கியே இன்னன மதிப்பான். ......
1(எந்தை முன்னரே)
எந்தை முன்னரே சூரபன் மாவினுக் கீந்த
முந்தும் அண்டங்கள் அலமரும் உவரிகள் முழுதும்
வந்து மொய்த்தன போலுமால் வரைபுரை காட்சிக்
கந்து பற்றியே ஆர்த்திடும் எல்லைதீர் கரிகள். ......
2(இயலும் ஐம்பெரு)
இயலும் ஐம்பெரு நிறத்தின்அண் டங்களின் இருந்த
புயலி னம்பல ஓர்வழித் தொக்கன பொருவ
மயிலி ருஞ்சரம் முயலொடு யூகமற் றொழிலைப்
பயில்ப ரித்தொகை அளப்பில வயின்றொறும் பரவும். ......
3(அண்டம் ஆயிரத் தெட்டி)
அண்டம் ஆயிரத் தெட்டினுள் மேதகும் அடல்மாத்
தண்ட மால்கரி யாயின தடம்பெருந் தேர்கள்
எண்ட ரும்பொரு ளியாவுமீண் டிருந்தன இவற்றைக்
கண்டு தேர்ந்தனர் அல்லரோ அகிலமுங் கண்டோர். ......
4(இணையில் இவ்விடை)
இணையில் இவ்விடைத் தானையின் வெள்ளமோர் இலக்கம்
நணுகும் என்றனன் அந்தணன் நாற்பெரும் படையுங்
கணித மில்லன இருந்தன வெள்ளிகண் ணிலன்போல்
உணர்வி லன்கொலாங் கனகனுங் கேட்டசொல் லுரைத்தான். ......
5(உரையின் மிக்க)
உரையின் மிக்கசூர் பெற்றஅண் டந்தொறும் உளவாம்
வரையின் மிக்கதேர் கடல்களின் மிக்ககை மாக்கள்
திரையின் மிக்கவாம் பரித்தொகை ஆயிடைச் செறிந்த
பரவை நுண்மணல் தன்னினும் மிக்கன பதாதி. ......
6(மண்கொள் ஆயிர)
மண்கொள் ஆயிரத் தெட்டெனும் அண்டத்தின் வளமும்
எண்கொள் எண்பதி னாயிரம் யோசனை யெல்லைக்
கண்கொள் பான்மையில் ஈண்டிய தற்புதங் கறைதோய்
புண்கொள் வேலுடைச் சூர்தவத் தடங்கிய போலாம். ......
7(உரைசெய் ஆயிர)
உரைசெய் ஆயிரத் தெட்டெனும் அண்டத்தின் உளவாங்
கரையில் சீரெலாந் தொகுத்தனன் ஈண்டவை கண்டாந்
தருமம் மெய்யளி கண்டிலம் அவற்றையுந் தந்து
சுரர்கள் தம்முடன் சிறையிலிட் டான்கொலோ சூரன். ......
8(அரண்ட ருங்கழற் சூர)
அரண்ட ருங்கழற் சூரன்வாழ் மகேந்திரம் அதனில்
திரண்ட பல்லியத் துழனியேழ் கடலினுந் தெழிப்ப
முரண்டி றத்தவை இயம்புவார் அளவையார் மொழிவார்
இரண்டு பத்துநூ றியோசனை யுண்டவர் இடங்கள். ......
9(கரிகள் சேவகம்)
கரிகள் சேவகம் ஒருபதி னாயிரங் கடுந்தேர்
விரியும் நீளிடை ஒருபதி னாயிரம் விசயப்
பரியின் எல்லையோர் இருபதி னாயிரம் பையத்
துருவின் இன்னமும் உண்டுகொல் யோசனைத் தொகையே. ......
10(இவுளி வாயினும்)
இவுளி வாயினும் மால்கரிக் கரத்தினும் இழிந்து
திவளும் நீர்மைசால் விலாழியுந் தானமுஞ் செறிந்து
குவளை யுண்கணார் நீத்தசாந் தணிமலர் கொண்டே
உவள கந்தரும் அகழிசென் றகன்கடல் உறுமால். ......
11(வளமை மேதகும்)
வளமை மேதகும் இப்பெரு மகேந்திரம் வகுத்தன்
முளரி அண்ணலிங் கொருவனான் முடிந்திட வற்றோ
ஒளிறு வாட்படை அவுணர்கோ னுடையவண் டத்தின்
அளவி னான்முகர் யாரும்வந் திழைத்தன ராமால். ......
12(புரந்த ரன்றன)
புரந்த ரன்றன துலகமும் ஒழிந்த புத்தேளிர்
இருந்த வானமும் எண்டிசை நகரமும் யாவும்
வருந்தி இந்நகர் சமைத்திட முன்னரே வண்கை
திருந்த வேகொலாம் படைத்தனர் திசைமுகத் தலைவர். ......
13(பொன்பு லப்படு)
பொன்பு லப்படு துறக்கம்வான் மாதிரம் புவிகீழ்
துன்பில் போகமார் உலகென்பர் தொடுகடற் பெருமை
முன்பு காண்கலர் கோட்டகம் புகழ்தரு முறைபோல்
இன்பம் யாவையும் உளநகர் ஈதுபோ லியாதோ. ......
14(கறைப டைத்த)
கறைப டைத்ததாட் கரிபரி அவுணர்தேர்க் கணங்கள்
அறைப டைத்திவண் ஈண்டிய அண்டங்க ளனைத்தும்
முறைக டற்றொகை முழுவதுஞ் சூர்கொணர்ந் தொருங்கே
சிறைப டுத்திய போலும்வே றொன்றிலை செப்ப. ......
15(ஐய பூழியும் ஆரகி)
ஐய பூழியும் ஆரகில் ஆவியும் ஆற்ற
நொய்ய வாகிய அணுக்களும் நுழைவரி தென்னிற்
செய்ய இந்நகர் ஆவணம் எங்கணுஞ் செறிந்த
வெய்ய தேர்கரி அவுணர்தம் பெருமையார் விரிப்பார். ......
16(அள்ளல் வேலை)
அள்ளல் வேலைசூழ் மகேந்திர புரிக்கிணை யாகத்
தெள்ளி தாவொரு நகருமின் றுளதெனச் செப்ப
எள்ள லின்றிய அண்டமோ ராயிரத் தெட்டின்
உள்ள சீரெலாம் ஈதுபோல் ஒருபுரத் துளதோ. ......
17(கழிந்த சீர்த்தி)
கழிந்த சீர்த்திகொள் இந்நகர் தன்னிடைக் கஞல
வழிந்து தொல்லுரு மாழையின் மணிநிழ லாகி
இழிந்து ளான்பெறு திருவெனப் பயன்பெறா தெவர்க்கும்
ஒழிந்த வேலைகள் தம்புகழ் கொள்வதிவ் வுவரி. ......
18(ஏற்கும் நேமிசூழ்)
ஏற்கும் நேமிசூழ் மகேந்திர வெறுக்கை இவ்வுலகோர்
ஆர்க்கும் ஓர்பயன் பெற்றில துயிர்ப்பலி அருந்துங்
கார்க்கு ழாம்புரை அலகைசூழ் காளிமந் திரத்திற்
சீர்க்கொள் கற்பகம் பிறர்க்குத வாதமர் செயல்போல். ......
19(மறக்கொ டுந்தொ)
மறக்கொ டுந்தொழில் இரவியம் பகையழல் மடுப்பத்
துறக்க மாண்டது பட்டிமை யாகுமத் தொல்லூர்
சிறக்கும் இந்நகர் நோக்கியே தன்னலந் தேய்ந்து
பொறுக்க ரும்பெரு நாண்சுடக் கரிந்தது போலாம். ......
20(துங்க மிக்கசூர்)
துங்க மிக்கசூர் படைத்திடும் அண்டமாத் தொகையுட்
செங்க திர்த்தொகை ஆங்கவன் பணியினாற் சென்று
பொங்கு தண்சுடர் நடாத்திநின் றென்னவிப் புரியில்
எங்கு முற்றன செழுமணிச் சிகரம் எண்ணிலவே. ......
21(மாணி லைப்படும்)
மாணி லைப்படும் எழுவகை உலகின் வைப்பென்ன
வேணி லைப்பெருஞ் சிகரிகள் செறிந்தன யாண்டுங்
கோணி லைக்கதிர் உடுப்பிறர் பதங்களிற் குழுமி
நீணி லைத்தலம் பலவுள மாடங்கள் நிரந்த. ......
22(நூறி யோசனை)
நூறி யோசனை சேண்படு நீட்சியும் நுவலும்
ஆறி யோசனைப் பரவையும் பெற்றஆ வணங்கள்
ஏறு தேர்பரி களிறுதா னவர்படை ஈண்டிச்
சேற லாயிடை அருமையால் விசும்பினுஞ் செல்லும். ......
23(அடல்மி குத்திடு)
அடல்மி குத்திடு தானவர் அகலிரு விசும்பிற்
கடிதி னிற்செல மத்திகை காட்டுமா றொப்ப
நெடுமு கிற்கணந் தழுவுசூ ளிகைமிசை நிறுவுங்
கொடிகள் எற்றிடப் போவன இரவிகொய் யுளைமா. ......
24(மேலு லாவிய படி)
மேலு லாவிய படிகமா ளிகைசில மின்னார்
மாலை தாழ்குழற் கிடுமகி லாவியான் மறைவ
சீல நீங்கிய அவுணர்தஞ் சீர்த்திகள் அனைத்தும்
மேல வேயவர் பவத்தினுள் ஒடுங்குமா றென்ன. ......
25(அணிகு லாய)
அணிகு லாயகோ மேதகம் மரகதம் ஆரம்
துணியும் நீலம்வச் சிரம்வயி டூரியந் துப்பு
நணிய பங்கயம் புருடரா கம்மெனும் நவமா
மணிக ளாற்செய்து மிளிர்வன வரம்பில்பொன் மாடம். ......
26(இயல்ப டைத்த)
இயல்ப டைத்தவெண் படிகத்தின் இயன்றமா ளிகைமேற்
புயல்ப டைத்திடு களிமயில் வதிந்திடப் புடையே
கயல்ப டைத்தகண் ணியர்புரி அகிற்புகை கலப்ப
முயல்ப டைத்திடு மதியினைச் சூழ்தரு முகில்போல். ......
27(வளனி யன்றிடு)
வளனி யன்றிடு செம்மணிப் பளிங்குமா ளிகைமேல்
ஒளிறு பொற்றலத் தரிவையர் வடிமிசைந் துறுதல்
வெளிய சேயன பங்கயப் பொகுட்டின்மீ மிசையே
அளியி னங்கள்தேன் மாந்தியே வைகுமா றனைய. ......
28(துய்ய வாலரி)
துய்ய வாலரி புனற்கிறை மண்ணியே தொகுப்பச்
செய்ய தீயவன் ஊன்களோ டவைபதஞ் செய்ய
மையன் மாதரோ டவுணர்கள் அரம்பையர் வழங்க
நெய்யளா வுண்டி உண்குவர் மறுசிகை நீக்கி. ......
29(துப்பு றுத்தன)
துப்பு றுத்தன குஞ்சியங் காளையர் தொகையுஞ்
செப்பு றுத்துசீ றடிமினார் பண்ணையுஞ் செறிந்து
மெய்ப்பு றத்தியல் காட்சியுங் கலவியும் வெறுப்பும்
எப்பு றத்தினும் நிகழ்வன மதனுல கிதுவே. ......
30(பூணும் ஆரமு)
பூணும் ஆரமுங் கலாபமும் இழைகளும் பொன்செய்
நாணும் ஒற்றராற் பரத்தையர் பாற்பட நல்கிப்
பேணி மற்றவர் விலக்கின நயந்தன பிறவும்
மாணு மைந்தர்கள் தேறுவான் ஆறுபார்த் தயர்வார். ......
31(துன்று தானவர்)
துன்று தானவர் தெரியலின் மாதர்பூந் தொடையின்
மன்றல் மாளிகைச் சோலையின் இலஞ்சியின் மலரிற்
குன்ற மால்கரித் தண்டத்தில் யாழ்முரல் குழுவிற்
சென்று சென்றன துணர்வுபோல் அளிகளுந் திரியும். ......
32(மாறி லாதசூர்)
மாறி லாதசூர் ஆணையால் வந்திடும் வசந்தன்
ஊறு தெண்கடல் அளவியே தண்டலை யுலவி
வீறு மாளிகை நூழையின் இடந்தொறும் மெல்லத்
தேறல் வாய்மடுத் தோரென அசைந்துசென் றிடுமால். ......
33(மாட மீதமர்)
மாட மீதமர் மடந்தையர் தம்முரு வனப்புக்
கூட வேபுனைந் தணிநிழற் காண்பது குறித்துப்
பாடு சேர்கரம் நீட்டியே பகலவற் பற்றி
ஆடி நீர்மையின் நோக்கியே அந்தரத் தெறிவார். ......
34(வன்ன மாடமேல்)
வன்ன மாடமேல் ஆடவர் பரத்தமை மகளிர்
உன்னி யூடியே பங்கியீர்த் தடிகளால் உதைப்பப்
பொன்னின் நாணறத் தமதுகை எழிலியுட் போக்கி
மின்னு வாங்கியே ஆர்த்தனர் குஞ்சியை வீக்கி. ......
35(முழங்கு வானதி)
முழங்கு வானதி தோய்ந்தசின் மாளிகை முகட்டின்
அழுங்கல் என்பதை உணர்கிலா மாதரார் அகல்வான்
வழங்கு கோளுடன் உருமினைப் பற்றியம் மனையுங்
கழங்கு மாயெறிந் தாடுவர் அலமரக் கண்கள். ......
36(ஈண்டை மாளிகை)
ஈண்டை மாளிகை மங்கையர் தஞ்சிறார் இரங்க
ஆண்டு மற்றவர் ஆடுவான் பற்றியா தவன்தேர்
பூண்ட மான்தொகை கொடுத்தலும் ஆங்கவன் போந்து
வேண்டி நின்றிட வாங்கியே உதவுவார் மெல்ல. ......
37(நீடு மாளிகை)
நீடு மாளிகை மிசைவரு மாதர்கை நீட்டி
ஈடு சாலுரும் ஏறுடன் மின்பிடித் திசைத்தே
ஆடு கிங்கிணி மாலையாம் மைந்தருக் கணியா
ஓடு கொண்டலைச் சிறுதுகி லாப்புனைந் துகப்பார். ......
38(பொங்கு மாமணி)
பொங்கு மாமணி மேற்றலத் திரவிபோந் திடலும்
இங்கி தோர்கனி யெனச்சிறார் அவன்றனை யெட்டி
அங்கை பற்றியே கறித்தழல் உறைப்பவிட் டழுங்கக்
கங்கை வாரிநீர் ஊட்டுவார் கண்டநற் றாயர். ......
39(கண்டு வந்தனை)
கண்டு வந்தனை வரும்புகழ் தஞ்சிறார் கலுழ
விண்டு வந்தனை செய்தெனத் தாழ்ந்தமேல் நிலத்தில்
வண்டு வந்தனைப் படுகதிர்க் கைம்மலர் வலிந்து
கொண்டு வந்தனை மார்இரங் காவகை கொடுப்பார். ......
40(அஞ்சி லோதியர்)
அஞ்சி லோதியர் மாளிகை மிசைச்சிலர் அகல்வான்
விஞ்சு தேவரை விளித்தலும் மெய்யுறன் மறுப்ப
வஞ்சர் வஞ்சரென் றரற்றியவ் வானவர் இசைய
நஞ்சி றாருடன் ஆடுதும் என்பர்நண் ணினர்க்கு. ......
41(பொருளில் மாளி)
பொருளில் மாளிகைப் படிற்றியர் புணர்வரென் றுன்னி
வரவு மஞ்சுவர் வராமையும் அஞ்சுவர் மடவார்
கரவின் மேவுதல் அவுணர்கள் காண்பர்கொ லென்றும்
வெருவு கின்றனர் என்செய்வார் விண்ணெறிப் படர்வார். ......
42(மேனி லந்தனின்)
மேனி லந்தனின் மங்கையர் சிறார்விடா திரங்க
ஊன மில்கதிர் தேர்வர அவரையாண் டுய்த்து
வான கந்தனிற் சில்லிடை யேகிநம் மகவைப்
பானு வந்துநீ தருகென விடுக்குநர் பலரால். ......
43(கலதி யாகிய)
கலதி யாகிய அவுணர்தம் மாதர்கால் வருடிச்
சிலதி யாரென வணங்கினோர் ஏவல்செய் கிற்பார்
சலதி யார்தரும் உலகமேல் தெரிகுறில் தவமே
அலதி யாவுள வேண்டியாங் குதவநின் றனவே. ......
44(ஐந்த வாகிய)
ஐந்த வாகிய தருக்களும் மணியுநல் லாவும்
நந்தும் அம்புய நிதியமும் பிறவும்இந் நகரின்
மைந்தர் மாதர்கள் இருந்துழி யிருந்துழி வந்து
சிந்தை தன்னிடை வேண்டியாங் குதவியே திரியும். ......
45(மீது போகிய)
மீது போகிய மாளிகைக் காப்பினுள் மேவும்
மாதர் வானெறிச் செல்லுவோர் சிலர்தமை வலித்தே
காத லாற்பிடித் தொருசிலர் முறைமுறை கலந்து
போதி ராலென விடுப்பர்பின் அசமுகி போல்வார். ......
46வேறு(மேதாவி கொண்ட)
மேதாவி கொண்டகதிர் வெய்யவனை வெஞ்சூர்
சேய்தான் வலிந்துசிறை செய்திடலின் முன்ன
மேதாமி னங்கொலென எண்ணிஅவன் என்றூழ்
வாதாய னங்கடொறும் வந்துபுக லின்றே. ......
47(தேசுற்ற மாடமுறை)
தேசுற்ற மாடமுறை சீப்பவரு காலோன்
வாசப்பு னற்கலவை வார்புணரி கொண்கன்
வீசப்பு லர்த்தியிட விண்படரும் வெய்யோன்
ஆசுற்ற தானவர் அமர்ந்திவண் இருந்தார். ......
48(பால்கொண்ட தெண்)
பால்கொண்ட தெண்கடல் மிசைப்பதுமை தன்னை
மால்கொண்டு கண்டுயிலும் வண்ணமிது வென்ன
மேல்கொண்ட நுண்பளித மேனிலம தன்கட்
சூல்கொண்ட காரெழிலி மின்னினொடு துஞ்சும். ......
49வேறு(குழலின் ஓதையும்)
குழலின் ஓதையும் எழால்களின் ஓதையுங் குறிக்கும்
வழுவில் கோட்டொடு காகள ஓதையும் மற்றை
முழவின் ஓதையும் பாடுநர் ஓதையும் முடிவில்
விழவின் ஓதையுந் தெண்டிரை ஓதையின் மிகுமால். ......
50(மதனி ழுக்குறு)
மதனி ழுக்குறு மைந்தரும் மாதரும் வனமா
மதனி ழுக்கிய வீதியில் வீசும்வண் கலவை
பதனி ழுக்குறச் சேதக மாகுமீன் பலவும்
பதனி ழுக்கிய வாந்தினம் புனைந்தெறி பணிகள். ......
51(அளப்பில் வேட்கை)
அளப்பில் வேட்கையங் கொருவர்கண் வைத்துமற் றதனை
வெளிப்ப டுக்கிலர் மெலிதலுங் குறிகளே விளம்ப
ஒளிப்ப தென்னுளம் பகரென ஆற்றலா துடைந்து
கிளிப்பெ டைக்கிருந் தொருசில மடந்தையர் கிளப்பார். ......
52(குருளை மான்பிணி)
குருளை மான்பிணித் திளஞ்சிறார் ஊர்ந்திடுங் கொடித்தேர்
உருளை ஒண்பொனை மணித்தலங் கவர்ந்துகொண் டுறுவ
வெருளின் மாக்களை வெறுப்பதென் முனிவரும் விழைவார்
பொருளின் ஆசையை நீங்கினர் யாவரே புவியில். ......
53(விழைவு மாற்றி)
விழைவு மாற்றிய தவத்தின ரேனுமிவ் வெறுக்கை
மொழியி னோரினும் அவுணரா கத்தவம் முயல்வார்
ஒழியும் ஏனையர் செய்கையை யுரைப்பதென் னுலகிற்
கழிபெ ரும்பகல் நோற்றவ ரேயிது காண்பார். ......
54(குழவி வான்மதி)
குழவி வான்மதிக் கிம்புரி மருப்புடைக் கொண்மூ
விழுமெ னச்சொரி தானநீ ராறுபோ லேகி
மழலை மென்சிறார் ஆவணத் தாடும்வண் சுண்ணப்
புழுதி ஈண்டலின் வறப்பவான் கங்கையும் புலர. ......
55(கங்கை யூண்ப)
கங்கை யூண்பய னாகவுந் தூயதெண் கடல்நீர்
அங்கண் மாநகர்ப் பரிசனம் ஆடவும் அணைந்து
துங்க மேனிலை மாளிகை ஆவணஞ் சோலை
எங்கும் வாவியும் பொய்கையும் பிறவுமாய் ஈண்டும். ......
56(வில்லி யற்றுவோர்)
வில்லி யற்றுவோர் வாட்படை இயற்றுவோர் வேறாம்
எல்லை யில்படை உள்ளவும் இயற்றுவோர் இகலான்
மல்லி யற்றுவோர் மாயம தியற்றுவோர் மனுவின்
சொல்லி யற்றுவோர் கண்ணுறு புலந்தொறுந் தொகுமால். ......
57(நாடி மேலெழ)
நாடி மேலெழத் தசையிலா துலறியே நரையாய்க்
கோடு பற்றிமூத் தசைந்திடு வோரையுங் கூற்றால்
வீடு வோரையும் பிணியுழப் போரையும் மிடியால்
வாடு வோரையுங் கண்டிலம் இதுதவ வலியே. ......
58(கன்னல் மாண்பயன்)
கன்னல் மாண்பயன் வாலளை நெய்கடுந் தேறல்
துன்னு தீயபால் அளக்கர்தம் பேருருச் சுருக்கி
மன்னன் ஆணையால் இந்நகர் மனைதொறும் மருவிப்
பன்னெ டுங்குள னாகியே தனித்தனி பயில்வ. ......
59(அட்ட தேறலும்)
அட்ட தேறலும் அடாதமை தேறலும் அருந்திப்
பட்டு வார்துகில் கீறியே தம்மொடு மறைந்து
விட்ட நாணினோர் ஒருசில மடந்தையர் வியன்கை
கொட்டி யாவரும் விழைவுறக் குரவையாட் டயர்வார். ......
60(திலக வாணுதல்)
திலக வாணுதல் மாதரா டவர்சிறு வரையின்
அலகி லாமுறை புனைதலின் அணிந்தணிந் தகற்றும்
இலகு பூண்டுகின் மாலைகந் தம்பிற ஈண்டி
உலகில் விண்ணக ரெனச்சிறந் தாவண முறுமே. ......
61(கொய்த லர்ந்த)
கொய்த லர்ந்தபூ நித்தில மணியுடன் கொழித்துப்
பொய்த லாடுவார் முற்றிலால் எற்றுபொற் பூழி
எய்த லானதிந் நகரள வோகடல் இகந்து
நெய்த லங்கரைக் கானலை அடைந்துமேல் நிமிரும். ......
62(சுந்த ரங்கெழு)
சுந்த ரங்கெழு செய்யவெண் மலர்களால் தொடுத்த
கந்து கங்களைச் சிறுவர்கள் கரங்களின் ஏந்தி
அந்த ரம்புக எறிதலும் ஆங்ஙன மேகி
வந்து வீழுமால் இருகதிர் வழுக்கிவீழ் வனபோல். ......
63(கழக மீதுமுன்)
கழக மீதுமுன் போந்திட முதுகணக் காயர்
குழகு மென்சிறார் தனித்தனி வந்தனர் குறுகிப்
பழகு கற்பினூல் பயின்றனர் மாலையிற் பட்ட
அழகு சேர்மதிப் பின்னெழு கணங்கள்மொய்த் தனையார். ......
64(கள்ளின் ஆற்றலா)
கள்ளின் ஆற்றலாற் களிப்பவர் தேறலைக் கரத்திற்
கிள்ளை ஆணினுக் கூட்டியே காமநோய் கிளர்த்தி
உள்ள மோடிய சேவலும் இரங்க ஓதிமத்துப்
புள்ளின் மென்பெடை மீமிசை கலந்திடப் புணர்ப்பார். ......
65(உரத்தின் முன்ன)
உரத்தின் முன்னரே வௌவிவந் தீட்டிய வும்பர்
சிரத்தின் மாமுடித் திருமணி பறித்தொரு சிலவர்
அரத்த மேயதம் பங்கியிற் பஞ்சிகள் அழுத்தும்
பரத்தை மாரடிப் பாதுகைக் கணிபெறப் பதிப்பார். ......
66(தேவி மார்பலர்)
தேவி மார்பலர் வருந்தவும் அனையர்பாற் சேரார்
ஆவி போவது நினைகில ராகியே அயலார்
பாவை மார்தமை வெஃகியே பட்டிமை நெறியான்
மேவு வார்சிலர் காண்பதே இதுவுமென் விழியே. ......
67(நெருக்கு பூண்முலை இய)
நெருக்கு பூண்முலை இயக்கர்தம் மங்கையர் நெஞ்சம்
உருக்கு மேருடை அமரர்தம் மங்கையர் உளத்தின்
இரக்கம் நீங்கிய அவுணர்தம் மங்கையர் ஏனை
அரக்கர் மங்கையர் கணிகைமங் கையர்களாய் அமர்வார். ......
68(கந்த மானபல்)
கந்த மானபல் களபமுஞ் சுண்ணமுங் கமழும்
பந்து மாலையுஞ் சிவிறிநீ ரொடுபரத் தையர்கள்
மைந்த ரோடெறிந் தாடல்யா ருளத்தையும் மயக்கும்
இந்த வீதிகொல் லுருவுகொண் டநங்கன்வீற் றிருத்தல். ......
69(பொன்னின் அன்ன)
பொன்னின் அன்னமும் பதுமரா கம்புரை புறவுஞ்
செந்ந லங்கிளர் மஞ்ஞையுஞ் சாரிகைத் திறனும்
பன்னி றங்கெழு புள்ளினம் இனையன பலவும்
இன்ன தொன்னகர் மங்கையர் கரந்தொறும் இருப்ப. ......
70(பண்டு வேட்டவர்)
பண்டு வேட்டவர் பின்முறைப் பாவையர் பரிவிற்
கண்டு பின்வரை மங்கையர் கானம தியற்றிக்
கொண்ட இல்வழிப் பரத்தையர் கணிகையர் குழாத்துள்
வண்டு பூவுறு தன்மைசென் றாடவர் மணப்பார். ......
71(தக்க மெல்லடி)
தக்க மெல்லடிப் பரிபுரம் முழவுறத் தனமா
மிக்க தாளங்கள் ஒத்தமென் புள்ளிசை விரவ
இக்கு வேளவை காணிய பூந்துகில் எழினி
பக்க நீக்கியே மைந்தரோ டாடுவார் பலரே. ......
72(பாட்ட மைந்திடு)
பாட்ட மைந்திடு காளையர் அணிநலம் பாரா
வேட்டு மங்கையர் ஒருசிலர் தமதுமெய் விளர்ப்பக்
கூட்ட முன்னியே பன்னிறக் கலவையுங் குழைத்துத்
தீட்டு வாரவர் உருவினை வியன்கிழி திருத்தி. ......
73(சுற்று விட்டலர்)
சுற்று விட்டலர் தாருடை வயவர்தொல் லுருவிற்
பற்று விட்டுடன் உளத்தையும் விட்டுமென் பார்ப்பைப்
பெற்று விட்டிலாப் பெடைமயில் தழீஇத்துயர் பேசி
ஒற்று விட்டனர் ஒருசிலர் ஆறுபார்த் துழல்வார். ......
74(அகன்ற கொண்கரை)
அகன்ற கொண்கரை நனவின்எக் காலமும் அகத்தில்
புகன்று மட்டித்த வெம்முலைச் சாந்தொடும் புலர்வார்
பகன்றை போல்முரல் சிலம்படிப் பாவையர் பல்லோர்
முகன்த னில்கரு மணிகளிற் சொரிதர முத்தம். ......
75(மங்கை மார்சிலர்)
மங்கை மார்சிலர் ஆடவர் தம்மொடு மாடத்
துங்க மேனிலத் திடைப்படு சேக்கையில் துன்னி
வெங்கண் மெல்லிதழ் வேறுபட் டணிமுகம் வியர்ப்பக்
கங்குல் ஒண்பகல் உணர்கிலர் விழைவொடு கலப்பார். ......
76(மறிகொள் சோரி)
மறிகொள் சோரிநீர் பலியுட னோக்கிநாண் மலர்தூய்
இறைகொள் இல்லிடைத் தெய்வதம் வழிபடல் இயற்றிப்
பறைகள் தங்கஅக் கடவுளை ஆற்றுறப் படுத்தி
வெறிய யர்ந்துநின் றாடுவர் அளப்பிலர் மின்னார். ......
77(அலங்கல் வேல்)
அலங்கல் வேல்விழி மாதரும் மைந்தரும் அமர்ந்த
பொலங்கொள் மாடமேல் ஆடுறு பெருங்கொடி பொலிவ
மலங்கு சூழ்தரு தெண்டிரைப் புணரியில் வைகுங்
கலங்கள் மேவிய கூம்பெனக் காட்டிய அன்றே. ......
78(புரசை வெங்கரி)
புரசை வெங்கரி புரவிதேர் பொருபடைத் தலைவர்
பரிச னங்களா தோரணர் வாதுவர் பரவ
முரச மேமுதல் இயமெலாம் முன்னரே முழங்க
அரச வேழமா எண்ணில கோயில்வந் தடைவ. ......
79(கள்ளு றைத்திடு)
கள்ளு றைத்திடு மாலையம் பங்கியர் கமஞ்சூல்
வள்ளு றைப்புயன் மேனியர் ஒருசிலர் வார்வில்
ஒள்ளு றைப்படை பிறவினிற் கவரிதூங் குறுத்துத்
தள்ளு தற்கரும் வயமுர சறையமுன் சார்வார். ......
80(அறுகு வெம்புலி)
அறுகு வெம்புலி வலியுடை மடங்கல்மான் ஆமாச்
சிறுகு கண்ணுடைக் கரிமரை இரலையித் திறத்திற்
குறுகு மாக்களைப் படுத்தவற் றூன்வகைக் குவால்கள்
மறுகு ளார்பெறப் பண்டிகொண் டளப்பிலோர் வருவார். ......
81(மஞ்சு லாவரு)
மஞ்சு லாவரு சிகரியுஞ் சூளிகை வரைப்பும்
விஞ்சு மேனில அடுக்கமுஞ் சோலையும் வெற்புஞ்
சஞ்ச ரீகமார் ஓடையும் வாவியுந் தடமும்
எஞ்சல் இல்லதோர் மாடங்கள் எங்கணு முளவே. ......
82(எற்றி முன்செலும்)
எற்றி முன்செலும் முரசினர் கம்மியர் எல்லில்
பற்று தீபிகைச் சுடரினர் மாலைதாழ் படையர்
ஒற்றை முக்குடை இருபுடைக் கவரியர் உலப்பில்
கொற்ற வீரர்ஈண் டளப்பிலோர் வந்தனர் குலவி. ......
83(மண்ப டைத்திடு)
மண்ப டைத்திடு தவமெனும் மகேந்திர மலிசேர்
எண்ப டைத்தகண் ணிரண்டினர் காணுதல் எளிதோ
விண்ப டைத்தவற் காயினும் அமையுமோ மிகவுங்
கண்ப டைத்தவர்க் கன்றியே கண்டிட லாமோ. ......
84(வரம்பில் கட்புல)
வரம்பில் கட்புலங் கொண்டவ ரேனுமற் றிவ்வூர்
விரும்பி இத்திரு நோக்கினும் அளத்தல்மே வருமோ
வரும்பு யற்குழு வைகலும் பருகினு மதனாற்
பெரும்பு னற்கட லானது முடிவுபெற் றிடுமோ. ......
85(கழியும் இந்நகர்)
கழியும் இந்நகர் ஆக்கமோ கரையிலா இவற்றுள்
விழிகள் எண்ணில பெற்றுளார் தாங்கண்ட வெறுக்கை
மொழிவர் என்னினும் நாவதொன் றான்முடிந் திடுமோ
அழிவில் ஆயிர கோடிநாப் பெறுவரேல் அறைவார். ......
86(வாழ்வின் மேதகு)
வாழ்வின் மேதகு மகேந்திரப் பெருமித வளத்தைத்
தாழ்வி லாநெறி கண்டனர் தாலுஎண் ணிலவால்
சூழ்வின் நாடியே பகரினும் மெய்யெலாந் துதையக்
கேள்வி மூலங்கள் இல்லவர் எங்ஙனங் கேட்பார். ......
87(ஆயி ரம்பதி னாயிரங்)
ஆயி ரம்பதி னாயிரங் கோடிநா அளவில்
ஆயி ரம்விழி ஆயிரம் ஆயிரஞ் செவிகள்
ஆயி ரம்புந்தி கொண்டுளார்க் கல்லதிவ் வகன்சீர்
ஆயி ரம்யுகங் கண்டுதேர்ந் துரைப்பினும் அடங்கா. ......
88(பொய்த்தல் இன்றி)
பொய்த்தல் இன்றியே இந்நகர்த் திருவைஐம் புலத்துந்
துய்த்தல் முன்னியே விழைந்துகொல் நோற்றிடுந் தொடர்பால்
பத்து நூறுடன் ஆயிரங் கோடியாப் பகரும்
இத்தொ கைச்சிரங் கொண்டனர் ஈண்டுளார் எவரும். ......
89(முன்ன வர்க்குமுன் னாகி)
முன்ன வர்க்குமுன் னாகிய அறுமுக முதல்வன்*
1 தன்ன ருட்டிறத் தொல்லையில் பேருருச் சமைந்தே
இந்ந கர்த்திரு யாவையுங் காண்குவன் இன்னே
ஒன்ன லர்க்கெனைக் காட்டுதல் தகாதென ஒழிந்தேன். ......
90(இனைத்த வாகிய)
இனைத்த வாகிய பெருவளம் எல்லையின் றிவற்றை
மனத்தில் நாடினும் பற்பகல் செல்லுமால் மனக்கு
நுனித்து நன்றுநன் றாய்ந்திவை முழுவதும் நோக்க
நினைத்து ளேன்எனின் இங்கிது பொழுதினில் நிரம்பா. ......
91(அம்பு யாசனன்)
அம்பு யாசனன் தெளிகிலா அருமறை முதலைக்
கும்ப மாமுனிக் குதவியே மெய்யருள் கொடுத்த
வெம்பி ரான்பணி புரிகிலா திந்நகர் இருஞ்சீர்
நம்பி நாடியே தெரிந்துபா ணிப்பது நலனோ. ......
92(என்று முன்னியே)
என்று முன்னியே அறுமுகன் தூதுவன் இமயக்
குன்றம் அன்னகீழ்த் திசைமுதற் கோபுரக் குடுமி
நின்று மாநகர் வளஞ்சில நோக்கியே நெடுஞ்சீர்
துன்று சூருறை திருநகர் அடைவது துணிந்தான். ......
93(வனைந்த மாளிகை)
வனைந்த மாளிகை ஒளியினில் இடைப்படு மறுகில்
கனைந்து செற்றியே பரிசனம் பரவுதல் காணா
நினைந்த சூழ்ச்சியான் கீழ்த்திசைச் சிகரியை நீங்கி
நனந்த லைப்பட நகரத்து விண்ணிடை நடந்தான். ......
94(வான மாநெறி)
வான மாநெறி நீங்கியே மறைகளின் துணிபாம்
ஞான நாயக அறுமுகன் அருள்கொடு நடந்து
தூநி லாவுமிழ் எயிறுடைச் சூர்முதற் சுதனாம்
பானு கோபன துறையுளை எய்தினன் பார்த்தான். ......
95(பாய்ந்து செஞ்சுடர்)
பாய்ந்து செஞ்சுடர்ப் பரிதியைப் பற்றினோன் உறையுள்
ஏந்தல் காணுறீஇ விம்மிதப் பட்டவண் இகந்து
காந்து கண்ணுடை அங்கிமா முகன்நகர் கடந்து
சேந்த மெய்யுடை ஆடகன் உறையுளுந் தீர்ந்தான். ......
96(உச்சி யையிரண்)
உச்சி யையிரண் டிருபது கரதல முடைய
வச்சி ரப்பெரு மொய்ம்பினோன் மாளிகை வரைப்பும்
அச்செ னத்தணந் தேகிமூ வாயிரர் ஆகும்
எச்சம் எய்திய மைந்தர்தம் இருக்கையும் இகந்தான். ......
97(உரிய மந்திர)
உரிய மந்திரத் துணைவரில் தலைமைபெற் றுறையுந்
தரும கோபன்றன் கடிமனைச் சிகரமேல் தங்கிச்
சுரரும் வாசவன் மதலையும் அவுணர்கள் சுற்றப்
பரிவு கொண்டமர் சிறைக்களம் நாடியே பார்த்தான். ......
98(கறைய டித்தொகை)
கறைய டித்தொகை பிரிதலும் கயமுனி*
2 கவர்ந்து
மறையி டத்தினில் வேட்டுவர் உய்ப்பவை குவபோல்
பொறையு டைத்துயர் இந்திரன் போந்தபின் புல்லார்
சிறையி லுற்றவர் செய்கையிற் சிறிதுரை செய்வாம். ......
99ஆகத் திருவிருத்தம் - 4048