(மலங்கொடு சுறவு)
மலங்கொடு சுறவு தூங்கும் மறிகடல் மீது மேரு
விலங்கல்சென் றிட்ட தென்ன விண்ணிடந் தன்னின் நீங்கி
அலங்கலந் திண்டோள் வள்ளல் அவுணர்தம் மிருக்கை யாகும்
இலங்கையங் குவடு மூன்றில் இடைப்படு சிகரம் பாய்ந்தான். ......
1(நெடுவரை தன்னை)
நெடுவரை தன்னை வேலான் ஈறுசெய் திட்ட அண்ணல்
விடவரு தமியோன் தொல்லை இலங்கையின் மீது பாய
அடலதி வீரன் ஏனை அவுணர்கள் கலங்கி யேங்கி
இடியுறு புயங்க மென்ன யாருமெய் பனித்து வீழ்ந்தார். ......
2வேறு(வைப்புறு மகேந்திர)
வைப்புறு மகேந்திர வடாது புலமாகி
இப்புறம் இருந்திடும் இலங்கைதனில் ஏந்தல்
குப்புறுத லுங்குலை குலைந்தவுண ரோடும்
உப்புறு கடற்படிதல் கண்டுவகை யுற்றான். ......
3(தந்திமுக மாமத)
தந்திமுக மாமதலை தன்னடி வணங்கா
தந்தரவிண் ணோர்கடல் அலைத்திடலும் அன்னோன்
சிந்தைமுனி வெய்தவிடை சேர்த்தகயி றோடு
மந்தர நெடுங்கிரி மறிந்தபடி மானும். ......
4(ஆடல்கெழு மொய்)
ஆடல்கெழு மொய்ம்பினன் அடித்தலம தூன்ற
மூடுதிரை வேலையிடை மூழ்கிய இலங்கை
கூடுமக வண்ணல்குலி சந்தொடர நேமி
ஊடுபுக லுற்றிடுமை நாகவரை யொக்கும். ......
5(மாமறைகள் தம்மை)
மாமறைகள் தம்மைமுனம் வஞ்சனை புரிந்தே
சோமுகன் மறைந்ததிரை தூங்குகட லூடே
ஏமமுறு பேருரு எடுத்ததொரு மாண்சேல்
போமதென வாழ்ந்தது பொலங்கெழும் இலங்கை. ......
6(தொல்லைதனில்)
தொல்லைதனில் ஓர்விதி துயின்றகடை நாளின்
எல்லைய திகந்துகடல் ஏழுமெழ அங்கண்
ஒல்லைபில முற்றபுவி உய்ப்பவொரு கேழல்
செல்லுவதின் ஆழ்ந்தது திரைக்கடல் இலங்கை. ......
7(சிந்துவின் அகன்)
சிந்துவின் அகன்கரையொர் திண்கிரி யழுந்த
அந்தமி லிலங்கையும் அழுந்தியிடு தன்மை
முந்தொரு மடக்கொடி விருப்பின்முனி மூழ்க
இந்திரனும் நேமியி னிடைப்புகுதல் போலும். ......
8(உலங்கொள்புய வீர)
உலங்கொள்புய வீரனடி ஊன்றுதலும் முன்னோர்
விலங்கல்பணி தன்னுலக மேவியது கேளா
அலங்கல்பெறு வாகையவன் ஆற்றலது தாங்கி
இலங்கையது காண்பலென ஏகியது போலும். ......
9(இலங்கையிது பான்)
இலங்கையிது பான்மையின் இருங்கடலுள் மூழ்கக்
குலங்களொடு வைகிய கொடுந்தகுவர் யாருங்
கலங்கினர் அழுங்கினர் கவன்றனர் துவன்றி
மலங்கினர் புலம்பினர் மருண்டனர் வெருண்டார். ......
10(அற்றமுறு தானவர்)
அற்றமுறு தானவர்கள் ஆழஅனை யோரைச்
சுற்றிய அளப்பில சுறாவுழுவை மீனம்
பற்றிய வளைந்தன பலப்பல திரண்டே
செற்றிய திமிங்கில திமிங்கில கிலங்கள். ......
11(கையதனை ஈர்ப்ப)
கையதனை ஈர்ப்பசில கால்கள்சில ஈர்ப்ப
வெய்யதலை ஈர்ப்பசில மிக்கவுயர் தோள்கள்
மொய்யுடைய மார்பதனை ஈர்ப்பசில மொய்த்தே
சையமுறழ் யாக்கையுள தானவரை மீனம். ......
12(அத்தனொடி யாயை)
அத்தனொடி யாயைமனை அன்பின்முதிர் சேயைக்
கொத்தினொடு கொண்டுசிலர் கூவியெழு கின்றார்
எய்த்தனர்கள் செய்வதென் இரும்படையும் விட்டுத்
தத்தமுயிர் கொண்டுசிலர் தாமும்எழ லுற்றார். ......
13(உற்றசில தான)
உற்றசில தானவரை ஒய்யென அளாவித்
திற்றிவிழை வான்நனி திரண்டனர்க ளெல்லாம்
பற்றுழி தனித்தனி பறித்தது பொருட்டாற்
பொற்றைபுரை மீன்கள்பெரும் போர்வினை புரிந்த. ......
14(தானவர்க ளோர்)
தானவர்க ளோர்சிலவர் தம்முணல் குறித்தே
வானிமிரு மோதையென வந்துதமை எற்றப்
பூநுனைய வாள்சுரிகை போரயில்கள் கொண்டே
மீனமொடு வெஞ்சினம் விளைத்தமர் புரிந்தார். ......
15(சீர்த்திகொள் இலங்கை)
சீர்த்திகொள் இலங்கைகடல் சென்றிடலும் அங்கண்
ஆர்த்திபெறு மங்கையர்கள் அங்கையவை பற்றி
ஈர்த்தபிறர் இல்லுற இசைந்துகரம் பற்றுந்
தூர்த்தரை நிகர்த்தன சுறாமகர மீனம். ......
16(மீனொருகை பற்றி)
மீனொருகை பற்றியிட வேறொரு கரத்தைத்
தானவர் வலித்தொரு தடக்கைகொ டிசிப்ப
மானனைய கண்ணியர் வருந்திடுதல் ஓர்ஐந்
தானபுலன் ஈர்ப்பவுள் அழுங்குவது போலும். ......
17(திண்டிறல் வலம்)
திண்டிறல் வலம்படு திருக்கைசுற மீனம்
மண்டிய திமிங்கிலம் வருந்தகுவர் சூழல்
கண்டுமிசை யெற்றிடுத லுங்கடிது வாளால்
துண்டமுற வேயவை துணித்தெழுநர் சில்லோர். ......
18(கட்டழல் விழி)
கட்டழல் விழிச்சுறவு காரவுணர் தம்மை
அட்டுணல் குறித்துவர அன்னவர்கள் நீவித்
தொட்டனர் பிடித்தகடு தூரும்வகை பேழ்வாய்
இட்டனர் மிசைந்தனர் எழுந்தனர்கள் சில்லோர். ......
19(ஏற்றபுனல் ஊடு)
ஏற்றபுனல் ஊடுதெரி வின்றியெம ரென்றே
வேற்றொரு மடந்தையர் வியன்கையது பற்றிப்
போற்றியெழ அங்கவர் புறத்தவர்க ளாக
மாற்றினர் இசைந்துசிலர் வாழ்க்கைமனம் வைத்தார். ......
20(இல்லிவ ரெனப்பிற)
இல்லிவ ரெனப்பிறரை ஏந்தியெழ அன்னோர்
புல்லுதனி அன்பர்புடை போகவொரு சில்லோர்
அல்லலுறு வார்தமை யடைந்ததொரு கன்னி
மெல்லவயல் போந்துழி மெலிந்துழலு வார்போல். ......
21(தீமைபுரி மால்)
தீமைபுரி மால்களிறு திண்புரவி யாவும்
ஏமரு சுறாத்தொகுதி ஈர்த்துவிரைந் தேகித்
தோமறு பிணாமகரந் துய்ப்பவுத வுற்ற
காமர்கெழு பெண்மயல் கடக்கவெளி தன்றே. ......
22(மாற்றறு சுறா)
மாற்றறு சுறாச்சில மடப்பிடிகை பற்றி
ஏற்றபெண் வழிச்செல எதிர்ந்ததனை நோக்கி
வேற்றொர்பெடை ஆயதென வேர்வுறுகை கையர்க்
காற்றுமுப காரவியல் பாகியதை யன்றே. ......
23(சிந்துவதன் மீதி)
சிந்துவதன் மீதிலெழு சில்லவுண ராயோர்
கந்தன்முரு கேசன்விடு காளைசெயல் காணா
நந்தமையும் நின்றிடின் நலிந்திடுவன் யாங்கள்
உய்ந்திடுதும் என்றுகடி தோடியயல் போனார். ......
24(பீடுசெறி தங்கண)
பீடுசெறி தங்கணவ ரைப்பிரிகி லாமே
கூடும்வழி ஆழ்ந்தசில கோற்றொடிமின் னார்கள்
ஆடைபுன லூடுபுக அல்குல்தம கையால்
மூடியெழு வார்முலை முகத்தின்முகம் வைத்தே. ......
25(சேண்டொடர் இல)
சேண்டொடர் இலங்கைகடல் சென்றுழிய தன்பால்
ஆண்டசில மாதர்கள் அரத்தவுடை கொண்டார்
மீண்டெழலும் நீர்பட வெளிப்படுவ தல்குல்
காண்டகைய செம்மதி களங்கமடைந் தென்ன. ......
26(காரவுணர் மாதர்)
காரவுணர் மாதர்சிலர் காமர்கடல் வீழ்வார்
நீரமெழ வேயுடை நெகிழ்ந்தொருவி யேக
மூரல்முக மல்லுருவு முற்றுறம றைத்தே
தேரையென ஒண்புனல் செறிந்துதிரி வுற்றார். ......
27(ஆசுறு மரைத்து)
ஆசுறு மரைத்துகில் அகன்றிட எழுந்தே
தேசுறு மடந்தைய ரில்ஓர்சிலவர் சேண்போய்
மாசுறு புயற்குழுவை வல்லைகரம் பற்றித்
தூசினியல் பானடுவு சுற்றியுல வுற்றார். ......
28ஆகத் திருவிருத்தம் - 3829