(அன்னதோர் வேலை முன்ன)
அன்னதோர் வேலை முன்னம் அகன்றலை யாளிப் பேரோன்
துன்னுபல் லனிகத் தோடுஞ் சூரனைக் காண்பான் ஏக
மன்னதி வீரன் என்னும் மதலையா யிரமாம் வெள்ளந்
தன்னொடும் இலங்கை வைகித் தணப்பறப் போற்றி யுற்றான். ......
1(ஆனதோர் மிக்க)
ஆனதோர் மிக்க வீரத் தாண்டகை அவுணர் போற்ற
மாநகர்க் கோயில் நண்ண வடதிசை வாயில் தன்னில்
மேனிமிர் அவுணர் தானை வெள்ளமைஞ் ஞூறொ டன்னான்
சேனையந் தலைவன் வீர சிங்கனாந் திறலோன் உற்றான். ......
2(உற்றதோர் வீர)
உற்றதோர் வீர சிங்கன் ஒண்சிறைச் சிம்பு ளேபோல்
வெற்றியந் திண்டோள் ஏந்தல் விரைந்துசென் றிடலுங்காணூஉச்
சற்றுநங் காவல் எண்ணான் தமியன்வந் திடுவான் போலும்
மற்றிவன் யாரை என்னாச் சீறினன் வடவை யேபோல். ......
3(உண்குவன் இவன்)
உண்குவன் இவன்றன் ஆவி ஒல்லையென் றுன்னிக் காலும்
எண்கிளர் மனமும் பின்னர் எய்துமா றெழுந்து நேர்போய்
விண்கிளர் செலவிற் றானை வெள்ளமைஞ் ஞூறுஞ் சுற்ற
மண்கிளர் கடல்போல் வீர வாகுவின் முன்னஞ் சென்றான். ......
4(சென்றிடு வீர)
சென்றிடு வீர சிங்கன் திறல்கெழு புயனைப் பாரா
இன்றள வெமது காப்புள் ஏகினர் இல்லை யார்நீ
ஒன்றொரு தமியன் போந்தாய் உயிர்க்குநண் பில்லாய் நின்னைக்
கொன்றிடு முன்நீ வந்த செயல்முறை கூறு கென்றான். ......
5(பொன்னியல் திண்)
பொன்னியல் திண்டோள் வீரன் புகலுவான் இலங்கை வாவி
மன்னியல் சூரன் வைகும் மகேந்திரஞ் சென்று மீள்வான்
உன்னினன் போந்தேன் ஈதென் உறுசெயல் வலியை யென்னின்
இன்னினி வேண்டிற் றொன்றை இயற்றுதி காண்ப னென்றான். ......
6(திறன்மிகு சிங்கன்)
திறன்மிகு சிங்கன் அன்னோன் செப்பிய மொழியைக் கேளா
இறையுநம் மவுண ராணை எண்ணலன் வலியன் போலும்
அறிகுதும் மீண்டு சேறல் அழகிதன் றென்னா உன்னிக்
குறுகிய படைஞர் தம்மை இவனுயிர் கோடி ரென்றான். ......
7(என்றலும் அரிய)
என்றலும் அரிய தொன்றை எயினர்கள் வேட்டைக் கானில்
சென்றனர் திரண்டு சுற்றிச் செருவினை இழைப்ப தேபோல்
பொன்றிகழ் விசய வாகுப் புங்கவன் றன்னைச் சீற்றம்
வன்றிறல் அவுணர் யாரும் வளைந்தமர் புரிய லுற்றார். ......
8(வேலினை விடுப்பர்)
வேலினை விடுப்பர் தண்டம் வீசுவர் முசலந் தூர்ப்பர்
சாலம தெறிவர் ஆலந் தன்னைஓச் சிடுவர் வார்விற்
கோல்வகை தொடுப்பர் நாஞ்சிற் கொடும்படை துரப்பர் வெய்ய
சூலம துய்ப்பர் கொண்ட தோமரஞ் சொரிவர் அம்மா. ......
9(கிளர்ந்தெழு பரிதி)
கிளர்ந்தெழு பரிதி தன்னைக் கேழ்கிளர் உருமுக் கொண்மூ
வளைந்தென அவுணர் வீரன் மருங்குசூழ்ந் தாடல் செய்யத்
தளர்ந்திலன் எதிர்ந்து தன்கைத் தாரைவாள் உறையின் நீக்கி
உளந்தனின் முனிந்தன் னோரை ஒல்லைசூழ்ந் தடுத லுற்றான். ......
10(அரக்குருக் கொண்ட)
அரக்குருக் கொண்ட வெற்பின் அடுகனற் கடவு ளெய்தி
உருக்கியே யதனை எல்லாம் ஒல்லையின் உடைக்கு மாபோல்
நெருக்கிய அவுணர் தானை நீத்தம துடைய வீரன்
திருக்கிளர் வாளொன் றேந்திச் சென்றுசென் றடுதல் செய்தான். ......
11(பனிபடர் குழுமல்)
பனிபடர் குழுமல் தன்னைப் பாயிருட் செறிவை அங்கிக்
கனிபடர் பொற்பில் தோன்றுங் காய்கதிர் முடிக்கு மாபோல்
நனிபடர் அவுணர் தானை நைந்திடச் சுடர்வாள் ஒன்றால்
தனிபடர் வீர வாகு தடிந்தனன் திரித லுற்றான். ......
12(உறைந்தன குருதி)
உறைந்தன குருதி வாரி ஒல்லையில் உவரித் தெண்ணீர்
மறைந்தன அவுணர் தானை மால்கரி பரிதேர் முற்றுங்
குறைந்தன கரந்தாள் மொய்ம்பு கொடுமுடி துணிந்து வீழ்ந்த
நிறைந்தன அலகை ஈட்டம் நிரந்தன பரந்த பூதம். ......
13(வெள்ளநூ றவுணர்)
வெள்ளநூ றவுணர் தானை விளிந்திட இனைய பாலால்
வள்ளல்சென் றடுதல் செய்ய மற்றுள அவுணர் யாரும்
உள்ளநொந் திரங்கித் தத்தம் உயிரினை ஓம்பல் செய்து
பொள்ளென நிலனும் வானும் புலந்தொறும் இரியல் போனார். ......
14(போதலும் வீர சிங்க)
போதலும் வீர சிங்கன் பொள்ளெனச் சினமேற் கொண்டு
மாதிரங் கடந்து மேல்போய் வளர்தரும் வாகை மொய்ம்பன்
மீதொரு சூலந் தன்னை விட்டனன் விட்ட காலை
ஏதியங் கதனால் அன்ன திருதுணி படுத்தி ஆர்த்தான். ......
15(ஆர்த்தலும் மடங்க)
ஆர்த்தலும் மடங்கற் பேரோன் ஆண்டகை வீரன் மேன்மை
பார்த்தனன் தனது பாணி பற்றிய படைகள் தம்மில்
கூர்த்ததோர் குலிசம் வீசக் குறுகிவாள் அதனான் மாற்றிப்
பேர்த்தொரு படையெ டாமுன்பெயர்ந்தவன் முன்னஞ் சென்றான். ......
16(சென்றுதன் மணி)
சென்றுதன் மணிவாள் ஓச்சிச் செங்கைகள் துமித்துத் தீயோன்
ஒன்றொரு முடியுங் கொய்தே உவர்க்கட லிடையே வீட்டி
நன்றுதன் னுறையுட் செல்ல நாந்தகஞ் செறித்து முன்னோர்
வென்றிகொண் டகன்றான் என்ப வேலவன் விடுத்த தூதன். ......
17ஆகத் திருவிருத்தம் - 3801