(செற்றாலம் உயிர)
செற்றாலம் உயிரனைத்தும் உண்டிடவே நிமிர்ந்தெழலுஞ் சிந்தை மேற்கொள்
பற்றாலங் கதுநுகர்ந்து நான்முகனே முதலோர்தம் பாவை மார்கள்
பொற்றாலி தனையளித்தோன் புகழ்போற்றி முகின்மேனிப் புத்தேள் வைகுங்
குற்றாலம் ஆவதொரு வளநகரைக் குறுமுனிவன் குறுகி னானால். ......
1(அப்பதியில் அச்சு)
அப்பதியில் அச்சுதனுக் காலயமொன் றுளதம்மா அவனி மீதில்
ஒப்பிலதோர் திருமுற்றம் அஃதென்பர் இம்பரெலாம் உம்பர் தாமுஞ்
செப்புவரா யிடைதன்னில் அந்தணர்கள் அளப்பில்லோர் செறிவர் அன்னார்
மெய்ப்படுநூல் முறைகண்டு மோகத்தால் தமதுமத மேற்கொண் டுள்ளார். ......
2(அன்னவர்கள் எம்)
அன்னவர்கள் எம்பெருமான் தன்னடியார் தமைக்காணின் அழன்று பொங்கி
முன்னுறுதொல் பகைஞரென மிகஇகழ்ந்து மற்றவர்தம் முகநோக் காராய்த்
துன்னெறியே மேற்கொண்டு மறைபயில்வோர் என்பதொரு சொல்லே தாங்கித்
தந்நெறியும் புரியாதங் கிருந்தனரால் அஃதுணர்ந்தான் தமிழ்நர் கோமான். ......
3(குறுமுனிவன் ஆங்க)
குறுமுனிவன் ஆங்கவர்தஞ் செயலுணர்ந்து குற்றால மென்னும் மூதூர்
மறுகினிடை யேநடந்து மாயவன்தன் ஆலயமுன் வருத லோடும்
நெறிவருமவ் வாலயத்திற் செறிகின்ற வைணவர்கள் நெடிது நோக்கிச்
செறுநர்தமைக் கண்டுபதை பதைப்பார்போல் வெய்துயிர்த்துச் செயிர்த்துச் சொல்வார். ......
4(ஒல்லாத கண்டிகை)
ஒல்லாத கண்டிகையும் நீறும்அணிந் தனையதனால் உலகில் தேவர்
எல்லாரும் அறியவைய மேற்றோனுக் கடியவன்நீ ஈண்டு செல்லச்
செல்லாது கைத்தலத்தில் ஒருகோலுங் கொண்டனையாற் சிறியை போலும்
நில்லாயெம் பெருமான்றன் மாநரம் அணுகாது நீங்கு கென்றார். ......
5(என்றிடலும் வெகு)
என்றிடலும் வெகுளாது நகைசெய்து மறைநெறியை யிகந்து நின்றீர்
துன்றியிவண் உறைகின்ற துணரேன்இத் திறமெவருஞ் சொன்னார் இல்லை
நன்றுநெறி யென்றுவந்தேன் நும்பான்மை உணர்வேனேல் நான்இம் மூதூர்
சென்றிடவும் நினையேனால் முனியற்க யான்மீண்டு செல்வே னென்றான். ......
6(பொதியமலை தனி)
பொதியமலை தனிலேகும் முனிவன்இது புகன்றிடலும் பொறாது நீயிப்
பதியதனில் வருவதுவும் பாவமாம் ஈண்டுநீ படர்தி யென்ன
இதுசரதம் மொழிந்தீர்கள் தொல்லோர்தம் நூன்முறையும் ஈதேயென்னா
விதியருளுந் தக்கனார் வழிமுறையோர் தமைநீங்கி மீண்டுசெல்வான். ......
7(சிட்டர்புகழ் கயிலை)
சிட்டர்புகழ் கயிலைமலை காத்தருளுந் திருநந்தி தேவன் செங்கேழ்
மட்டுறுபங் கயத்துறையும் நான்முகத்தோன் துருவாசன் மறைநூல் யாவுந்
தட்டறவே உணர்பிருகு கவுதமன்கண் ணுவமுனிவன் ததீசி இன்னோர்
இட்டபெருஞ் சாபமெலாம் பொய்த்திடுமோ எனவுன்னி ஏக லுற்றான். ......
8(ஏகலுறு குறுமுனி)
ஏகலுறு குறுமுனிவன் உயிர்க்குயிராய் நின்றோனை இகழ்வார் தங்கண்
மோகமுறும் அகந்தையினை முதலோடுங் களைவனென முன்னி முன்னாட்
போகியதன் மாயையினால் இரதத்தின் ஆவிபடு பொன்னே போலப்
பாகவத மாகுவதோர் உருக்கொண்டான் கருணையினாற் பரவை போல்வான். ......
9(ஆளுடைய நாயகன்)
ஆளுடைய நாயகன்பால் அன்புடையான் மாயவன்றன் அடியனேபோல்
கோளுடைய மாயத்தான் மேனிகொண்டு மீண்டுமங்கட் குறுக லோடும்
நீளிடையில் வரக்கண்ட வயிணவர்கள் எதிர்சென்று நெடிது போற்றித்
தாளிடையில் வீழ்ந்திடலும் நாரணனுக் காகவெனச் சாற்றி நின்றான். ......
10(அடிமுறையின் வணங்கி)
அடிமுறையின் வணங்கியெழும் வேதியர்தங் களைநோக்கி அரிபால் அன்பு
முடிவிலைநும் பாலென்று மொழிந்தனர்அங் கதுகாண முன்னி வந்தாம்
படியதனில் உமக்குநிகர் யாருமிலை நுமைக்கண்ட பரிசால் யாமுந்
தொடர்வரிய பேருணர்வு பெற்றெனமென் றேபின்னுஞ் சொல்லல் உற்றான். ......
11(முத்திதரு பேரழகர்)
முத்திதரு பேரழகர் திருமலையி னிடையுற்றோம் முன்னம் இன்னே
அத்திகிரி தனிலிருப்பச் செல்கின்றோம் நம்பெருமான் அமருங் கோயில்
இத்தலமேல் உளதென்பர் அதுபரவும் விருப்புடையோம் என்ன அன்னோர்
கைத்தலத்தோர் விரற்சுட்டி அதுதிருமால் இருக்கையெனக் காட்டலுற்றார். ......
12(காட்டுதலுங் கைதொ)
காட்டுதலுங் கைதொழுது மாலுறையும் மந்திரத்தைக் கடிது நண்ணி
ஈட்டமுடன் வலஞ்செய்து கண்ணபிரான் அடியிணையை இறைஞ்சி யேத்திப்
பாட்டிலுறு தொல்லடியார் தமைநோக்கி இவரைவழி படுதற் குள்ளம்
வேட்டனமால் மஞ்சனமே முதலியன கொணர் மின்கள் விரைவின் என்றான். ......
13(நன்றெனவே சிலரே)
நன்றெனவே சிலரேகித் தூயதிரு மஞ்சனமும் நறுமென் போதும்
மன்றலுறு செஞ்சாந்தும் அணித்துகிலும் ஏனையவும் மரபிற் கொண்டு
சென்றுமுனி வரன்முன்னம் உய்த்திடலும் அனையவர்தந் திறத்தை நோக்கி
இன்றிவரை யருச்சனைசெய் விதிமுறையைப் பார்த்திடுங்கள் யாரு மென்றே. ......
14(அறுகுமதி நதிபுனை)
அறுகுமதி நதிபுனையுஞ் செஞ்சடையெம் பெருமானை அகத்துட் கொண்டு
சிறுகுமுரு வுடையமுனி நாரணனார் திருமுடிமேற் செங்கை யோச்சிக்
குறுகுகுறு கெனஇருத்தி ஒள்ளரக்கிற் புனைபாவை கோல மீதும்
அறுகுதழல் உற்றென்னக் குழைவித்தோர் சிவலிங்க வடிவஞ் செய்தான். ......
15(அல்லிமலர்ப் பங்க)
அல்லிமலர்ப் பங்கயனும் நாரணனும் எந்நாளும் அறியொணாத
எல்லையிலாப் பரம்பொருளைத் தாபித்து மந்திரங்க ளெடுத்துக்கூறித்
தொல்லையுருக் கொண்டுமலர் மஞ்சனமே முதலியன தூயஆக்கி
ஒல்லைதனில் அருச்சிப்பக் காண்டலும்அவ் வந்தணர்கள் உருத்துச் சொல்வார். ......
16(காயத்தான் மிக)
காயத்தான் மிகச்சிறியன் முப்புரத்தை நீறாக்குங் கடவுட் காற்ற
நேயத்தான் இவ்விடையே முன்வந்தான் யாமிகழ நில்லா தேகி
ஆயத்தான் பாகவத வடிவாய்வந் திச்சமயம் அழித்தான் அந்தோ
மாயத்தான் பற்றுமினோ கடிதென்று குறுமுனியை வளைந்து கொண்டார். ......
17(பற்றிடுவான் வளை)
பற்றிடுவான் வளைகின்றோர் தமைநோக்கி எரிவிழித்துப் பரவை தன்பால்
உற்றவிடம் விடுத்ததென முனிவன்றன் வெகுளித்தீ உய்த்த லோடுஞ்
சுற்றியது சுற்றியவர் தமைப்பின்னும் பொறிபடுத்தித் துரந்து செல்ல
மற்றவர்கள் இரிந்தேதம் பதியிழந்து சிதறினரால் மண்மே லெங்கும். ......
18(அன்னோர்கள் போயிட)
அன்னோர்கள் போயிடலும் இன்றுமுதல் சிவன்இடமீ தாயிற்றென்று
முன்னோனை அருச்சித்துப் பணிந்துவிடை கொண்டுதென்பால் முன்னிச் சென்று
பொன்னோடு மணிவரன்றி அருவியிழி தருபொதியப் பொருப்பில் நண்ணி
மன்னோமெய்த் தவம்புரிந்து வீற்றிருந்தான் அப்பரமன் மலர்த்தாள் உன்னி. ......
19வேறு(பூவிரி கின்ற காமர்)
பூவிரி கின்ற காமர் பொதும்பர்சேர் பொதிய வெற்பில்
தாவிரி கும்பத் தண்ணல் வந்திடு தன்மை சொற்றாம்
மாவிரி கின்ற சாதி வனத்திடை மலர்ப்பூங் காவில்
காவிரி போந்த வாறும் ஏனவுங் கழறு கின்றாம். ......
20ஆகத் திருவிருத்தம் - 3136