(எந்தை குமரன்)
எந்தை குமரன் எறிந்ததனி வேற்படையாற்
தந்தி முகமுடைய தாரகன்றான் பட்டதனை
முந்துசில தூதர் மொழிய அவன்தேவி
அந்தமிலாக் கற்பிற் சவுரி அலக்கணுற்றாள். ......
1(வாழ்ந்த துணைவியர்)
வாழ்ந்த துணைவியர்கள் மற்றுள்ளோர் எல்லோருஞ்
சூழ்ந்து பதைத்திரங்கத் துன்பத் துடனேகி
ஆழ்ந்த கடல்படியும் அம்மென் மயிலென்ன
வீழ்ந்து கணவன் மிசையே புலம்புறுவாள். ......
2(சங்குற் றிடுசெங்)
சங்குற் றிடுசெங்கைத் தண்டுளவோன் தன்பதமாம்
அங்குற் றனைஅன் றயன்பதஞ்செல் வாயன்று
கங்கைச் சடையான் கயிலையிற்சென் றாயல்லால்
எங்குற் றனைஅவ் விறைவன்அருள் பெற்றாயே. ......
3(உந்துதனி யாழி)
உந்துதனி யாழி உனக்கணியாத் தந்தோனும்
இந்திரனும் ஏனை இமையவர்க ளெல்லோரும்
அந்தகனார் தாமும் அனைவர்களும் இன்றன்றோ
சிந்தைதனி லுள்ள கவலையெலாந் தீர்ந்தனரே. ......
4(பொன்னகரோர் யாரும்)
பொன்னகரோர் யாரும் புலம்புற் றிடஅவுணர்
மன்னவரோ டென்பால் வரும்பவனி காணாதேன்
துன்னு பறவையினஞ் சூழத் துயிலுமுனை
இன்ன பரிசேயோ காண்பேனால் எம்பெருமான். ......
5(புல்லா திருந்தனை)
புல்லா திருந்தனையான் புல்லுவது கண்டுமது
பல்லோருங் காணிற் பழியென் றொழிந்தாயேல்
மல்லாருந் தோளாய் மயக்குற்றேற் கோருரையுஞ்
சொல்லாய் வறிதே துயின்றாய் துனியுண்டோ. ......
6(மையோ டுறழும்)
மையோ டுறழும் மணிமிடற்றோன் தந்தவரம்
மெய்யா மெனவே வியந்திருந்தேன் இந்நாளும்
பொய்யாய் விளைந்ததுவோ பொன்றினையால் என்றுணைவா
ஐயோ இதற்கோ அருந்தவமுன் செய்தாயே. ......
7(தன்னோ டிணை)
தன்னோ டிணையின்றித் தானே தலையான
முன்னோன் அருள்புரிந்த முன்னோன் இளவல்வரின்
என்னொ அவனோ டெதிர்ந்தாய் இறந்தனையே
அன்னோ விதிவலியை யாரே கடந்தாரே. ......
8(சந்தார் தடம்புயத்து)
சந்தார் தடம்புயத்துத் தானவர்கள் தற்சூழ
அந்தார் கமழும் அரியணைமேல் வைகியநீ
சிந்தா குலத்திற் செருநிலத்தில் துஞ்சினையால்
எந்தாய் புகலாய் இதுவுஞ் சிலநாளோ. ......
9(வென்றிமழு வேந்து)
வென்றிமழு வேந்தும் விமலன் உனக்களித்த
துன்றும் வரத்தியலை யுன்னினையாற் சூழ்ச்சியினை
ஒன்று முணரா துயிருந் தொலைந்தனையே
என்று தமியேன் இனியுன்னைக் காண்பதுவே. ......
10(வன்னி விழியுடை)
வன்னி விழியுடையான் மைந்தன் அமர்புரிய
முன்னைவலி தோற்று முடிந்தா யெனக்கேட்டுப்
பின்னுமிருந் தேனென்னிற் பேரன் புடையோர்யார்
என்னினியான் செய்கேன் எனவே இரங்குற்றாள். ......
11(மற்றைத் துணைவி)
மற்றைத் துணைவியரும் வந்தீண்டி மன்னவனைச்
சுற்றிப் புலம்பித் துயருற் றிடும்வேலை
அற்றத் தினனாகி ஆசுரத்தின் பாற்போன
கொற்றப் புதல்வன் வினவிக் குறுகினனால். ......
12(தண்டா விறல்சேரு)
தண்டா விறல்சேருந் தன்றாதை வீந்ததனைக்
கண்டான் உயிர்த்தான் கலுழ்ந்தான் கரங்குலைத்தான்
அண்டாத சோகத் தழுங்கினான் வெய்யகனல்
உண்டா னெனவீழ்ந் தயர்ந்தான் உணர்ந்தனனே. ......
13(என்றுமுறா இன்ன)
என்றுமுறா இன்ன லிடைப்பட் டவன்எழுந்து
சென்றுதன தன்னை திருத்தா ளிடைவீழா
உன்றலைவன் யாண்டையான் ஓதாய்அன் னேயென்று
நின்று புலம்பி நினைந்தினைய செய்கின்றான். ......
14(அன்னைமுத லோரை)
அன்னைமுத லோரை அகல்வித் தொருசாரில்
துன்னுதிரென் றேவித் தொலையாத தானவரில்
தன்னுழையோர் தம்மால் தழல்இந் தனமுதலாம்
மன்னு கருவி பலவும் வருவித்தான். ......
15(வந்த பொழுதுதனில்)
வந்த பொழுதுதனில் வன்களத்தில் துஞ்சுகின்ற
தந்தைதனை முன்போல் தகவுபெற வொப்பித்தோர்
எந்திரத்தேர் மீதேற்றி ஈமத் திடையுய்த்துச்
சந்தனப்பூம் பள்ளி மிசையே தருவித்தான். ......
16(ஈமக் கடன்கள்)
ஈமக் கடன்கள் இயற்றித்தன் றாதைதனைத்
தாமக் கனலால் தகனம் புரிந்திடலுங்
காமுற் றனனென் கணவனுடன் செல்வதற்குத்
தீமுற் றருதி யெனஅன்னை சென்றுரைத்தாள். ......
17(நற்றாய் மொழிந்த)
நற்றாய் மொழிந்ததனைக் கேட்டு நடுநடுங்கிப்
பொற்றாள் பணிந்தென்னைப் போற்றி யிருத்தியெனச்
சொற்றா னதுமறுத்துத் தோகை சுளித்துரைப்ப
அற்றாக வென்றான் அசுரேந் திரன்என்பான். ......
18(ஏனையதோர் தாயர்)
ஏனையதோர் தாயர்களும் யாமுங் கணவனுடன்
வானகம்போய் எய்த வழங்கென் றிடவிசையா
ஆன படியே அழலமைக்க அன்னையராம்
மானனையார் எல்லோரும் வான்கனலி னுள்புக்கார். ......
19(புக்கதொரு காலை)
புக்கதொரு காலை புலம்பியே அந்நகரை
அக்கணமே நீங்கி அசுரேந் திரனென்போன்
தக்க கிளைஞர்சிலர் தற்சூழ வேயேகி
மைக்கடலுள் வைகும் மகேந்திரமூ தூர்உற்றான். ......
20வேறு(உளந்தளர் வெய்தி)
உளந்தளர் வெய்தித் தொல்லை ஒளிமுகன் இழந்து மேனி
தளர்ந்தனன் வறியன் போன்று தாரக முதல்வன் தந்த
இளந்தனி மைந்தன் வல்லே யேகலும் அனைய நீர்மை
வளந்திகழ் தொல்லை வீர மகேந்திரத் தவுணர் கண்டார். ......
21(உரங்கிளர் அவுணர்)
உரங்கிளர் அவுணர் காணூஉ ஒய்யெனத் துளங்கி யேங்கிக்
கரங்களை விதிர்த்துக் கண்ணீர் கானெறி படர்ந்து செல்லப்
பெருங்கட லுடைந்த தேபோல் பேதுற வெய்தி யாற்ற
இரங்கியிக் குமர னுற்ற தென்கொலென் றிசைக்க லுற்றார். ......
22(வஞ்சமுங் கொலை)
வஞ்சமுங் கொலையுஞ் செய்யான் மற்றிவன் இதற்குத் தாதை
வெஞ்சினங் கொடுபோ கென்று விடுத்தனன் போலும் என்பார்
தஞ்சம தாகி யுள்ள தாரகன் கொடுமை நோக்கி
அஞ்சியே அவனை நீங்கி அடைந்தனன் கொல்லோ என்பார். ......
23(சீரொடு துறக்கம்)
சீரொடு துறக்கம் நீத்துத் தேவர்கோன் உருவ மாற்றிப்
பாரிடை யுழந்தான் என்பார் மற்றவன் பரனை வேண்டிப்
பேரிகல் மாயம் வன்மை பெற்றுவந் தடுபோர் செய்யத்
தாரகன் இறந்தான் கொல்லோ தளர்ந்திவன் வந்தான் என்பார். ......
24(மாண்கிளர் தார)
மாண்கிளர் தார கப்பேர் மன்னவன் பகைஞர் ஆற்றும்
ஏண்கிளர் சமரில் வீந்தான் என்பதற் கேது வுண்டால்
சேண்கிளர் நிவப்பா லெங்குந் தெரிகிர வுஞ்ச வெற்பில்
காண்கிலம் அவுணர் தம்மைப் பூழியே காண்டும் என்பார். ......
25(பையர வணையில்)
பையர வணையில் துஞ்சும் பகவன தாழி தன்னை
ஐயபொன் னணிய தாக அணிந்திடும் அவுண னோடு
மொய்யமர் புரிவார் யாரே முரணொடு வெம்போர் சில்லோர்
செய்யினும் அவரால் அன்னோன் முடிகிலன் திண்ணம் என்பார். ......
26(அங்கையை ஒருவன்)
அங்கையை ஒருவன் வாளால் அறுத்திடப் புலம்பி நங்கோன்
தங்கைவந் தமரர் தம்மைச் சயந்தனைச் சிறைசெய் வித்தாள்
இங்கிவன் தானுந் துன்புற் றேகுவான் இன்றும் அற்றே
புங்கவர் தமக்கே இன்னல் புரிகுவன் போலும் என்பார். ......
27(மணிகிளர் எழிலி)
மணிகிளர் எழிலி வண்ணன் மற்றவ னொடுபோர் ஆற்றான்
அணியுல களித்த செம்மல் அமர்த்தொழில் சிறிதுந் தேறான்
தணிவறு செயிர்மீக் கொண்ட தாரக னொடுபோர் செய்யின்
இணையகல் ஈசன் அன்றி யாவரே வல்லர் என்பார். ......
28(இமையவர் கருடர்)
இமையவர் கருடர் நாகர் இயக்கர்கந் தருவ ரேனோர்
நமரிடு பணிகள் ஆற்றி நாடொறுந் திரிந்தார் அற்றால்
சமரெதிர் இழைப்பார் இன்றித் தளர்ந்தனம் இந்நாள் காறும்
அமரினி யுளது போலும் ஐயம தில்லை என்பார். ......
29(சேயிவன் அலக்க)
சேயிவன் அலக்கண் எய்திச் செல்லுறு பரிசா லங்கண்
ஆயதோர் தீங்கு போலும் ஐயமின் றிதனை நாடி
நாயகன் விடுக்கு முன்னம் நம்பெருந் தானை யோடு
மாயமா புரிகா றேகி அறிந்தனம் வருதும் என்பார். ......
30(எனைப்பல இனைய)
எனைப்பல இனைய வாற்றா லியாவரும் அவுணர் ஈண்டி
மனப்படு பைத லோடும் வயின்வயின் உரையா நிற்ப
நினைப்பருந் திருமிக் குள்ள நெடுமகேந் திரத்திற் சென்று
வனைப்பெருங் கழற்காற் சூர மன்னவன் கோயில் போந்தான். ......
31(போந்துதா ரகன்ற)
போந்துதா ரகன்றன் மைந்தன் பொள்ளெனப் படர்த லோடும்
வாய்ந்தபே ரவைய மன்றில் வரம்பிலா அவுணர் போற்ற
ஏந்தெழில் அரிகள் தாங்கும் எரிமணித் தவிசின் மீக்கண்
வேந்தர்கள் வேந்தன் சூரன் மேவிவீற் றிருந்தான் மாதோ. ......
32(வீற்றிருந் தரசு)
வீற்றிருந் தரசு போற்றும் வேந்தனை யெய்தி யன்னான்
காற்றுணை முன்னர் வீழ்ந்து கரங்களால் அவற்றைப் பற்றி
ஆற்றவும் அரற்றல் செய்ய அவுணர்கோன் அதுகண் டைய
சாற்றுதி புகுந்த தன்மை தளர்ந்தனை புலம்ப லென்றான். ......
33(என்றலும் மைந்தன்)
என்றலும் மைந்தன் சொல்வான் இந்திரன் புணர்ப்பால் ஈசன்
வன்றிறற் குமரன் பூத வயப்படை தன்னொ டேகி
உன்றன திளவல் தன்னை ஒண்கிர வுஞ்ச மென்னுங்
குன்றொடும் வேலாற் செற்றுக் குறுகினன் புவியி லென்றான். ......
34(வெய்யசூர் அதனை)
வெய்யசூர் அதனைக் கேளா விழுமிதென் றுருமின் நக்குச்
சையமாம் அவுண னோடு தாரக வலியோன் றன்னை
மையுறழ் கண்டத் தண்ணல் மைந்தனோ அடுதல் செய்வான்
பொய்யிது வெருவல் மைந்த உண்மையே புகறி என்றான். ......
35(தாதைகேள் சரதம்)
தாதைகேள் சரதம் ஈது தாரகத் தந்தை தன்னை
மேதகு கிரவுஞ் சத்தை வேல்கொடு பரமன் மைந்தன்
காதினன் சென்றான் ஈமக் கடன்முறை எந்தைக் காற்றி
மாதுயர் கொண்டு நின்பால் வந்தனன் என்றான் மைந்தன். ......
36வேறு(தோட்டுணைவ னாம்)
தோட்டுணைவ னாம்இளவல் துஞ்சினன் எனுஞ்சொல்
கேட்டலும் உளத்திடை கிளர்ந்தது சினத்தீ
நாட்டமெரி கால்வபுகை நண்ணுவன துண்டம்
ஈட்டுபொறி சிந்துவன யாக்கையுள் உரோமம். ......
37(நெறித்தபுரு வத்து)
நெறித்தபுரு வத்துணைகள் நெற்றிமிசை சென்ற
கறித்தன எயிற்றினிரை கவ்விஅத ரத்தைச்
செறித்தன துடித்தன தெழித்தஇதழ் செவ்வாய்
குறித்தது மனங்ககன கூடமும் முடிக்க. ......
38(இவ்வகை சினத்தெ)
இவ்வகை சினத்தெரி யெழுந்துமிசை கொள்ள
அவ்வெரியின் ஆற்றலை யவித்ததது போழ்தில்
வெவ்வினைகொள் தாரகன் மிசைத்தொடரும் அன்பால்
தெவ்வர்புகழ் சூரனிடை சேர்ந்ததுயர் ஆழி. ......
39(துப்புநிகர் கண்பு)
துப்புநிகர் கண்புனல் சொரிந்தநதி யேபோல்
மெய்ப்புறம் வியர்த்தமுகம் வெள்ளமவை யீண்டி
அப்புணரி யானதுய ராழியது வென்றே
செப்புபொரு ளுண்மையது தேற்றியது போலும். ......
40(பருவர லெனும்)
பருவர லெனும்புணரி யூடுபடி வுற்றே
அரியணை மிசைத்தவறி அம்புவியில் வீழா
உருமென அரற்றினன் உணர்ந்ததனை யஞ்சி
நரலையொடு பாரகம் நடுங்கியதை யன்றே. ......
41(கூற்றுள நடுங்கிய)
கூற்றுள நடுங்கிய குலைந்தது செழுந்தீக்
காற்றுவெரு வுற்றது கதிர்க்கடவுள் சோமன்
ஏற்றமிகு கோளுடு விரிந்தபுவி முற்றும்
ஆற்றிய பணிக்கிறையும் அஞ்சிய தலைந்தே. ......
42(பாங்கருறு தான)
பாங்கருறு தானவர்கள் பாசறையின் மூழ்கி
ஏங்கினர் விழுந்தனர் இரங்கினர் தளர்ந்தார்
ஆங்கனைய போழ்துதனில் அந்நகர மெல்லாம்
ஓங்குதுயர் கொண்டுகலுழ் ஓசைமலிந் தன்றே. ......
43(ஆனபொழு தத்தினில் அழு)
ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன்
போனதொரு சீற்றவழல் புந்தியிடை மூள
மானமொடு நாணமட வல்லையில் எழுந்தே
தானுடைய ஏவலர் தமக்கிவை உரைப்பான். ......
44(மன்னிளவல் ஆரு)
மன்னிளவல் ஆருயிரை மாற்றிவரு கந்தன்
தன்னிகல் கடந்துசய மெய்திவரல் வேண்டும்
என்னிரதம் வெம்படை இடுங்கவசம் யாவும்
உன்னுகணம் ஒன்றின்முனம் உய்த்திடுதி ரென்றான். ......
45(இறையிவை புகன்றி)
இறையிவை புகன்றிடலும் ஏவலர்கள் யாரும்
முறையிலவை உய்த்திடுதல் முன்னினர்கள் போனார்
அறைகழ லுடைத்தகுவர் அன்னசெயல் நாடிக்
குறைவில்அனி கங்களொடு கொம்மென அணைந்தார். ......
46(ஆயசெயல் காண்ட)
ஆயசெயல் காண்டலும் அமைச்சரில் அமோகன்
மாயைதரு சூரனடி வந்தனை புரிந்தே
ஏயதொரு மாற்றம திசைப்பல்அது கேண்மோ
தீயசின மெய்திட லெனாஇனைய செப்பும். ......
47வேறு(நஞ்சுறை படைகள்)
நஞ்சுறை படைகள் கற்று நவையுறா தொன்ன லாரை
வஞ்சினத் தெறியும் வீரர் வளநகர் அதனை மாற்றோர்
இஞ்சியைச் சூழ்ந்து போருக் கெய்தினும் எண்ணி யன்றி
வெஞ்சினத் தினைமேல் கொண்டு விரைந்தமர் இயற்றச் செல்லார். ......
48(குலத்தினை வினவி)
குலத்தினை வினவி உள்ளக் கோளினை வினவி வந்த
நிலத்தினை வினவித் தொல்லோர் நெறியினை வினவிக் கொண்ட
சலத்தினை வினவிப் போர்செய் தானையை வினவி அன்னோர்
வலத்தினை வினவி யல்லால் மற்றொன்று மனங்கொள் வாரோ. ......
49(வரத்தினில் வலியி)
வரத்தினில் வலியி னாரோ மாயையில் வலியி னாரோ
கரத்தினிற் படைக்க லத்தின் கல்வியில் வலியி னாரோ
உரத்தினில் வலியி னாரோ உணர்ச்சிசேர் ஊக்க மான
சிரத்தினில் வலியி னாரோ என்றிவை தேர்வ ரன்றே. ......
50(ஒற்றரைத் தூண்டி)
ஒற்றரைத் தூண்டி அன்னோர் உறுவலி உணர்வ ரேனும்
மற்றுமோ ரொற்றின் அல்லால் அன்னது மனத்துட் கொள்ளார்
சுற்றுறும் அனிக மன்றி யொருபுடை துவன்றிச் சூழும்
பெற்றியும் உளதோ என்னா வேயொரீஇத் தேர்வர் பின்னும். ......
51(வினையது விளை)
வினையது விளைவை யென்றும் மெல்லிய என்கை வெஃகார்
அனிகமும் அனையர் தன்மை அதனையுஞ் சிறுமைத் தாக
நினைகிலர் தமக்கு மாற்றார் நேர்ந்தவ ராகின் மேலோர்
முனையுறு புலத்தி லாற்றும் மும்மையும் முன்னிச் செய்வார். ......
52(மூவியல் மரபி னாலு)
மூவியல் மரபி னாலும் முற்றுறா தொழிந்த காலைக்
கோவியல் மரபுக் கேற்பக் கொடுஞ்சினந் திருகிக் கொட்புற்
றேவியல் படைஞ ரோடும் படையொடும் எதிர்ந்து சுற்றி
மேவலர் பான்மை யுன்னி வெற்றிகொண் டணைவர் அன்றே. ......
53(நேர்ந்திட வலியி)
நேர்ந்திட வலியி லோரும் ஞாட்பிடை நேர்தி ரென்னாச்
சேர்ந்திடும் போழ்தும் வேந்தர் செருவினைக் குறித்துச் சென்று
சார்ந்திடல் பழிய தன்றோ வெல்லினுந் தானை தூண்டிப்
பேர்ந்திடச் செய்வர் அஃதே பெறலரும் புகழ தன்றே. ......
54(ஈதரோ உலகி)
ஈதரோ உலகி லுள்ள இறைவர்தம் இயற்கை யாகும்
ஆதலால் நின்னொப் பாரில் அழிவிலா அகில மாள்வாய்
ஏதமொன் றடையாய் வானோர் யாரையும் ஏவல் கொண்டாய்
போதனும் நெடுமா லோனும் வைகலும் புகழ வுற்றாய். ......
55(இன்னதோர் மிடல்)
இன்னதோர் மிடல்பெற் றுள்ள இறைவநீ அளிய னாகும்
பொன்னக ரவன்சொற் கேட்டுப் பூதமே படையா ஈசன்
நென்னலின் உதவும் பிள்ளை நேர்ந்திடின் அவனை வெல்ல
உன்னினை போதி யென்னின் உனக்கது வசைய தன்றோ. ......
56(மாற்றலர் வன்மை)
மாற்றலர் வன்மை யோராய் மற்றவர் படைஞர் தங்கள்
ஆற்றலை யுணராய் நின்றன் அரும்பெருந் தலைமை யுன்னாய்
போற்றிடும் அமைச்ச ரோடும் புரிவன சூழாய் வாளா
சீற்றமங் கதுமேல் கொண்டு செல்லலுந் திறலின் பாற்றோ. ......
57(வீரமும் வலியும்)
வீரமும் வலியும் மிக்கோ ராயினும் விதிவந் தெய்தில்
பாரிடை வலியி லோரும் படுத்திடப் படுவர் நின்போல்
பேருடல் அழியா ஆற்றல் பெறாமையால் இறுவா யெய்தத்
தாரகன் மழலை தேறாச் சிறுவனுந் தடியப் பட்டான். ......
58(கலகல மிழற்று)
கலகல மிழற்றுந் தண்டைக் கழலடிச் சிறுவன் கைம்மாத்
தலையுடை இளவல் தன்னைத் தடிந்ததற் புதத்த தன்றால்
வலியரும் ஒருகா லத்தில் வன்மையை இழப்பர் ஆற்ற
மெலியரும் ஒருகா லத்தில் வீரராய்த் திகழ்வர் அன்றே. ......
59(யாருநே ரன்றி)
யாருநே ரன்றி வைகும் இறைவநீ சிறுவன் றன்மேற்
போரினை முன்னி யேகல் புகழ்மைய தன்றால் அன்னான்
சீரொடு மதுகை யாவுந் தேர்ந்துபின் னவனில் தீர்ந்த
வீரரைப் படையொ டேவி வெற்றிகொண் டமர்தி யென்றான். ......
60(அறிதரும் அமைச்ச)
அறிதரும் அமைச்சர் தம்முள் அமோகன்இத் தன்மை தேற்ற
உறுதியீ தென்று சூரன் உள்ளுறு சினத்தை நீத்து
விறல்கெழும் அரிமான் ஏற்று விழுத்தகு தவிசின் ஏறிச்
செறிதரும் உழைஞர் தம்முட் சிலவரை நோக்கிச் சொல்வான். ......
61(பகனொடு மயூரன்)
பகனொடு மயூரன் சேனன் பரிதியம் புள்ளின் பேரோன்
சுகனிவர் முதலா வுள்ள தூதரைத் தருதி ரென்னப்
புகழ்புனை சூர பன்மன் பொன்னடி இறைஞ்சி யேத்தித்
தகுவர்கள் தலைவர் மற்றச் சாரணர் தம்மை உய்த்தார். ......
62(சாரணர் இனையர்)
சாரணர் இனையர் போந்து தாள்முறை பணிந்து நிற்பச்
சூரனங் கவரை நோக்கித் துண்ணென நீவி ரேகிப்
பாரிடை வந்த கந்தன் பான்மையும் படைவெம் பூதர்
சேருறு தொகையும் யாவுந் தேர்ந்திவண் வருதி ரென்றான். ......
63(ஒற்றுவர் உணர்ந்த)
ஒற்றுவர் உணர்ந்தந் நீர்மை உச்சிமேல் கொண்டு தங்கோன்
பொற்றடங் கழல்கள் தாழ்ந்து புடவியை நோக்கிச் சென்றார்
மற்றவர் போய பின்னர் மாறிலாச் சூர பன்மன்
வெற்றிகொள் அவுணர் போற்ற வீற்றிருந் தரசு செய்தான். ......
64(ஏதமில் சூர பன்மன்)
ஏதமில் சூர பன்மன் இளவல்தன் முடிவு நேடி
மாதுயர் கொண்டு தேறி வைகிய தன்மை சொற்றாம்
ஆதியங் கடவுள் மைந்தன் அமரர்தங் கிரியை நீங்கிப்
பூதல மீது வந்த நெறியினைப் புகல லுற்றாம். ......
65ஆகத் திருவிருத்தம் - 1628