(மாகவந் தங்கள்)
மாகவந் தங்கள் கூளி வாய்ப்பறை மிழற்ற ஆடும்
ஆகவந் தங்கு மெல்லை யகன்றுசெங் கதிர்வேல் அண்ணல்
சோகவந் தங்கொண் டுள்ள சுரருடன் அனிகஞ் சுற்றி
ஏகவந் தங்கண் நின்ற இமகிரி யெல்லை தீர்ந்தான். ......
1(அரியயன் மகத்தின்)
அரியயன் மகத்தின் தேவன் அமரர்கள் இலக்கத் தொன்பான்
பொருதிறல் வயவரேனைப் பூதர்கள் யாரும் போற்றத்
திருநெடு வேலோன் தென்பாற் செவ்விதின் நடந்து மேல்பால்
இரவியில் இரவி செல்ல இமையவர் சயிலஞ் சேர்ந்தான். ......
2(ஒப்பறு சூர்பின்)
ஒப்பறு சூர்பின் னோனை ஒருவன்வேல் அட்ட தன்மை
இப்புற வுலகின் உள்ளார் யாவரும் உணர்வர் இன்னே
அப்புற வுலகின் உள்ளார் அறிந்திட யானே சென்று
செப்புவ னென்பான் போலச் செங்கதிர் மறைந்து போனான். ......
3(பானுவென் றுரை)
பானுவென் றுரைக்குமேலோன் பகற்பொழு தெலாங்கைக் கொண்டான்
ஏனைய மதியப் புத்தேள் இரவினுக் கரச னானான்
நானிவற் றிடையே சென்று நண்ணுவ னென்று செந்தீ
வானவன் போந்த தென்ன வந்தது மாலைச் செக்கர். ......
4(வம்பவிழ் குமுத)
வம்பவிழ் குமுத மெல்லா மலர்ந்திடு மாலை தன்னில்
வெம்படை பயிலத் தோன்றும் வேளுக்குத் தான்முன் வந்த
அம்புதி முரச மாயிற் றாகையால் தானும் வெற்றிக்
கொம்பென விளங்கிற் றென்ன எழுந்தது குழவித் திங்கள். ......
5(ஏற்றெதிர் மலைந்து)
ஏற்றெதிர் மலைந்து நின்ற இகலுடை யவுணர் தம்மேற்
காற்றெனத் தேர்க டாவிக் கடுஞ்சமர் புரிந்த வெய்யோன்
மாற்றருஞ் செம்பொன் மார்பில் வச்சிரப் பதக்கம் இற்று
மேற்றிசை வீழ்ந்த தென்ன இளம்பிறை வழங்கிற் றன்றே. ......
6(கானத்தின் ஏனம்)
கானத்தின் ஏனம் ஒத்த கனையிருட் சூழல் மற்றவ்
வேனத்தின் எயிற்றை யொத்த திளம்பிறை அதனைப் பூண்ட
கோனொத்த தண்டம் அந்தக் கூரெயி றுகுத்த முத்தந்
தானொத்து விளங்கு கின்ற தாரகா கணங்க ளெல்லாம். ......
7(அல்லிது போந்த)
அல்லிது போந்த காலை ஆரமா மாலை யென்னக்
கல்லென அருவி தூங்குங் கடவுள்வெற் பொருசா ரெய்தி
மெல்லிதழ் வனசத் தேவும் விண்டுவும் விண்ணின் தேவும்
பல்லிமை யோருஞ் செவ்வேள் பதமுறை தொழுது சொல்வார். ......
8(வன்கணே யுடைய)
வன்கணே யுடைய சூர்பின் வருத்திட இந்நாள் காறும்
புன்கணே யுழந்தே மன்னான் பொருப்பொடு முடியச் செற்றாய்
உன்கணே வழிபா டாற்ற உன்னினம் இன்ன வெற்பின்
தன்கணே இறுத்தல் வேண்டுந் தருதியிவ் வரம தென்றார். ......
9(பசைந்திடும் ஆர்வ)
பசைந்திடும் ஆர்வங் கொண்ட பண்ணவர் இனைய தன்மை
இசைந்தனர் வேண்டு மெல்லை எஃகுடை அண்ணல் அங்கண்
அசைந்திடு தன்மை யுன்னி அருள்செய வதுகண் டன்னோர்
தசைந்துமெய் பொடிப்பத் துள்ளித் தணப்பில் பேருவகை பூத்தார். ......
10(ஒண்ணில வுமிழும்)
ஒண்ணில வுமிழும் வேலோன் ஒலிகழற் றானையோடுங்
கண்ணனை முதலா வுள்ள கடவுளர் குழுவி னோடும்
பண்ணவர் கிரிமேற் சென்று பாங்கரில் தொழுது போந்த
விண்ணவர் புனைவன் றன்னை விளித்திவை புகல லுற்றான். ......
11(புகலுறுஞ் சூழ்ச்சி)
புகலுறுஞ் சூழ்ச்சி மிக்கோய் புங்கவ ராயு ளோருந்
தொகலுறு கணர்கள் யாருந் துணைவரும் யாமும் மேவ
அகலுறும் இனைய வெற்பின் அருங்கடி நகர மொன்றை
விகலம தின்றி இன்னே விதித்தியால் விரைவின் என்றான். ......
12வேறு(குழங்கல் வேட்டு)
குழங்கல் வேட்டுவக் கோதையர் ஆடலுங்
கழங்கு நோக்கிக் களிப்பவன் மற்றிது
வழங்கு மெல்லை வகுப்பனென் றன்னவன்
தழங்கு நூபுரத் தாள்பணிந் தேகினான். ......
13(மகர தோரணம்)
மகர தோரணம் வாரியின் மல்கிய
சிகர மாளிகை செம்பொனின் சூளிகை
நிகரில் பற்பல ஞெள்ளல்கள் ஈண்டிய
நகர மொன்றினை யாயிடை நல்கினான். ......
14(அவ்வ ரைக்கண்)
அவ்வ ரைக்கண் அகன்பெரு நொச்சியுட்
கைவல் வித்தகக் கம்மியர் மேலவன்
எவ்வெ வர்க்கும் இறைவன் இருந்திடத்
தெய்வ தக்குல மொன்றுசெய் தானரோ. ......
15(மாற்ற ரும்பொன்)
மாற்ற ரும்பொன் வரையுள் மணிக்கிரி
தோற்றி யென்னச் சுடர்கெழு மாழையின்
ஏற்ற கோட்டத் திழைத்தனன் கேசரி
ஆற்று கின்ற அரதனப் பீடிகை. ......
16(இனைய தன்மையும் ஏன)
இனைய தன்மையும் ஏனவும் நல்கியே
மனுவின் தாதை வருதலும் மள்ளர்தம்
அனிக மோடும் அமரர்கள் தம்மொடும்
முனையின் வேற்படை மொய்ம்பன்அங் கேகினான். ......
17(அறுமு கத்தவன்)
அறுமு கத்தவன் அந்நக ரேகியே
துறும லுற்றிடுந் தொல்பெருந் தானையை
இறுதி யற்ற இருக்கைகொள் ஆவணம்
நிறுவ லுற்று நிகேதனத் தெய்தினான். ......
18(இரதம் விட்ட)
இரதம் விட்டங் கிழிந்துபொற் பாதுகை
சரணம் வைத்துத் தணப்பரும் வீரருஞ்
சுரரு முற்றுடன் சூழ்தரத் துங்கவேல்
ஒருவன் மற்றவ் வுறையுளின் ஏகினான். ......
19(ஊறில் வெய்யவர்)
ஊறில் வெய்யவர் யாரும் ஒரோவழிச்
சேற லெய்திச் செறிந்தென வில்விடு
மாறில் செஞ்சுடர் மாமணிப் பீடமேல்
ஏறி வைகினன் யாரினும் மேலையோன். ......
20(பொழுது மற்றதி)
பொழுது மற்றதிற் பூவினன் ஆதியாம்
விழுமை பெற்றிடும் விண்ணவர் யாவருங்
குழும லுற்றுக் குமரனை அவ்விடை
வழிப டத்தம் மனத்திடை உன்னினார். ......
21(புங்க வன்விழி)
புங்க வன்விழி பொத்திய அம்மைதன்
செங்கை தன்னிற் சிறப்பொடு தோன்றிய
கங்கை தன்னைக் கடவுளர் உன்னலும்
அங்கண் வந்ததை அப்பெரு மாநதி. ......
22(சோதி மாண்கலன்)
சோதி மாண்கலன் தூயன பொற்றுகில்
போது சாந்தம் புகைமணி பூஞ்சுடர்
ஆதியாக அருச்சனைக் கேற்றன
ஏதும் ஆயிடை எய்துவித் தாரரோ. ......
23(அண்டர் தொல்லை)
அண்டர் தொல்லை அமுத மிருத்திய
குண்ட முற்ற குடங்கர் கொணர்ந்திடா
மண்டு தெண்புனல் வானதி தன்னிடை
நொண்டு கொண்டனர் வேதம் நுவன்றுளார். ......
24(அந்த வெல்லை அயன்)
அந்த வெல்லை அயன்முதற் றேவரும்
முந்து கின்ற முனிவருஞ் சண்முகத்
தெந்தை பாங்கரின் ஈண்டி யவன்பெயர்
மந்திரங் கொடு மஞ்சன மாட்டினார். ......
25(வெய்ய வேற்படை)
வெய்ய வேற்படை விண்ணவற் கின்னணம்
ஐய மஞ்சனம் ஆட்டிமுன் சூழ்ந்திடுந்
துய்ய பொன்னந் துகிலினை நீக்கியே
நொய்ய பஃறுகில் நூதனஞ் சாத்தினார். ......
26(வீற்றொர் சீய)
வீற்றொர் சீய வியன்றவி சின்மிசை
ஏற்றி வேளை இருத்தி அவன்பெயர்
சாற்றி மாமலர் சாத்தித் தருவிடைத்
தோற்று பூவின் தொடையலுஞ் சூட்டினார். ......
27(செய்ய சந்தன)
செய்ய சந்தனத் தேய்வைமுன் கொட்டினர்
ஐய பாளிதம் அப்பினர் நாவியுந்
துய்ய நானமுந் துன்னமட் டித்தனர்
மெய்யெ லாமணி மேவரச் சாத்தினார். ......
28(சந்து காரகில்)
சந்து காரகில் தண்ணென் கருப்புரங்
குந்து ருக்கமொண் குக்குலு வப்புகை
செந்த ழற்சுடர் சீர்மணி ஆர்ப்பொடு
தந்து பற்றித் தலைத்தலை சுற்றினார். ......
29(இத்தி றத்தவும்)
இத்தி றத்தவும் ஏனவும் எஃகவேற்
கைத்த லத்துக் கடவுட்கு நல்கியே
பத்தி மைத்திற னாற்பணிந் தேத்தினர்
சித்தி சங்கற்பஞ் செய்திடுஞ் செய்கையோர். ......
30(தேவு கொண்ட)
தேவு கொண்ட சிலம்பினில் பண்ணவர்
ஏவ ருங்குழீஇ யின்னணம் பூசனை
யாவ தாற்ற வதுகொண் டமர்ந்தனன்
மூவி ரண்டு முகனுடை மொய்ம்பினோன். ......
31(அமரர் வெற்பில்)
அமரர் வெற்பில் அயிற்படை யேந்திய
விமல னுற்றது சொற்றனம் மேலினிச்
சமரி டைப்படு தாரகன் தந்திடு
குமரன் உற்றது மற்றதுங் கூறுகேம். ......
32ஆகத் திருவிருத்தம் - 1563