Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

previous padalam   20 - தாரகன் வதைப்படலம்   next padalamthAragan vathaippadalam

Ms Revathi Sankaran (9.44mb)
(1 - 97)



Ms Revathi Sankaran (9.35mb)
(98 - 203)




(வெம்மை தீர்ந்திடும்)

வெம்மை தீர்ந்திடும் அப்பெரு நெறியிடை விரைந்து
     செம்மை சேர்தரு குமரவேள் படையொடு செல்ல
          அம்ம சேர்ந்தது தாரகற் குறையுளாய் அடைந்தோர்
               தம்மை வாட்டியே அமர்கிர வுஞ்சமாஞ் சைலம். ......    1

(விண்டு லாய்நிமிர்)

விண்டு லாய்நிமிர் கிரவுஞ்ச கிரியினை விண்ணோர்
     கண்டு ளம்பதை பதைத்தனர் மகபதி கலக்கங்
          கொண்டு நின்றனன் நாரதன் அணுகியே குமரன்
               புண்ட ரீகநேர் பதந்தொழு தின்னன புகல்வான். ......    2

(தூய நான்மறை)

தூய நான்மறை அந்தணர் முனிவர்இச் சுரத்திற்
     போய வெல்லையின் நெறியதாய் வரவரப் புணர்த்து
          மாய்வு செய்துபின் குறுமுனி சூளின்இவ் வடிவாய்
               ஏய தொல்பெயர்க் கிரவுஞ்ச மால்வரை இதுகாண். ......    3

(நேரில் இக்கிரி)

நேரில் இக்கிரிக் கொருபுடை மாயநீள் நகரில்
     சூரெ னப்படும் அவுணனுக் கிளவலாந் துணைவன்
          போரில் அச்சுதன் நேமியை அணியதாப் புனைந்தோன்
               தார கப்பெயர் வெய்யவன் வைகினன் சயத்தால். ......    4

(இன்ன வன்றனை)

இன்ன வன்றனை அடுதியேல் எளிதுகாண் இனையோன்
     முன்ன வன்றனை வென்றிட லெனமுனி மொழிய
          மின்னு தண்சுடர் வேலவன் அவற்றினை வினவி
               அன்ன வன்றனை முடிக்குதும் இவணென அறைந்தான். ......    5

வேறு

(சிறந்திடு முருக)

சிறந்திடு முருகவேள் இனைய செப்பலும்
     நிறைந்திடும் அமரரும் இறையும் நெஞ்சினில்
          உறைந்திடு கவலொரீஇ உவகை எய்தினார்
               இறந்தனன் தாரகன் இன்றொ டேயெனா. ......    6

(ஐயர்கள் பெருமகிழ்)

ஐயர்கள் பெருமகிழ் வடைய ஆறிரு
     கையுடை முருகன்அக் காலை தன்புடை
          மெய்யருள் எய்திய வீர வாகுவாந்
               துய்யனை நோக்கியே இனைய சொல்லுவான். ......    7

(உற்றவக் கிரிகிர)

உற்றவக் கிரிகிர வுஞ்ச மாகுமால்
     மற்றத னொருபுடை மாய நொச்சியுட்
          செற்றிய அசுரர்தஞ் சேனை தன்னுடன்
               அற்றமில் தாரகன் அமர்தல் மேயினான். ......    8

(ஏயநின் துணைவர்)

ஏயநின் துணைவர்கள் இலக்கத் தெண்மர்கள்
     ஆயிர வெள்ளமாம் அடல்கொள் பூதர்கள்
          சாய்வறு தலைவர்கள் தம்மொ டேகியே
               நீயவன் பதியினை வளைத்தி நேரிலாய். ......    9

(தடுத்தெதிர் மலை)

தடுத்தெதிர் மலைந்திடும் அவுணர் தானையைப்
     படுத்தனை தாரகப் பதகன் எய்துமேல்
          அடுத்தமர் இயற்றுதி அரிய தேலியாம்
               முடித்திட வருகுதும் முந்துபோ வென்றான். ......    10

(நலமிகு குமரவேள்)

நலமிகு குமரவேள் நவில இன்னணம்
     வலமிகு சிறப்புடை வாகு நன்றெனாத்
          தலைமிசை கூப்பிய கரத்தன் தாழ்ந்துமுன்
               நிலமிசை இறைஞ்சினன் நேர்ந்து நிற்பவே. ......    11

(ஏந்தலந் துணை)

ஏந்தலந் துணைவராம் இலக்கத் தெண்மரை
     ஆய்ந்திடு பூதரை யாதி நோக்கியே
          வாய்ந்திடு பெருந்திறல் வாகு தன்னுடன்
               போந்திடும் அவுணரைப் பொரவென் றேவினான். ......    12

(ஏவலும் அனையவர்)

ஏவலும் அனையவர் யாரும் எம்பிரான்
     பூவடி வணங்கியே போதற் குன்னலும்
          ஆவியுள் ஆவியாம் அமலன் பாங்குறுந்
               தேவர்கள் கம்மியற் கிதனைச் செப்புவான். ......    13

(மேதகு பெருந்திறல்)

மேதகு பெருந்திறல் வீர வாகுவை
     ஆதியர் தமக்கெலாம் அளிக்கும் பான்மையால்
          ஏதமி லாதபல் லிரதம் நல்கெனா
               ஓதினன் உலகெலாம் உதவுந் தொன்மையோன். ......    14

(அத்திறங் கேட்ட)

அத்திறங் கேட்டதோர் அமரர் கம்மியன்
     ஒத்ததோர் மாத்திரை ஒடுங்கு முன்னரே
          சித்திர வயப்பரி சீயங் கூளிகள்
               இத்திறம் பூண்டபல் லிரதம் நல்கினான். ......    15

வேறு

(அன்ன தேர்த்தொகை)

அன்ன தேர்த்தொகை அதனை எம்பிரான்
     மின்னு காலவேல் வீர வாகுவும்
          பின்னர் எண்மரும் பிறருஞ் சாரத
               மன்ன ரும்பெற வழங்கி னானரோ. ......    16

(பாகர் தூண்டிட)

பாகர் தூண்டிடப் படருந் தேர்கள்மேல்
     வாகை சேர்தரும் வாகு வேமுதல்
          ஆகினோர் அடைந் தம்பொன் மால்வரைத்
               தோகை மைந்தனைத் தொழுது போற்றினார். ......    17

(தொழுது வள்ளலை)

தொழுது வள்ளலைச் சூழ்ந்து மும்முறை
     விழுமி தாகிய விடைபெற் றேகினார்
          பழுதில் நீத்தமோர் பத்து நூறெனக்
               குழுமிப் பாரிடங் குலவிச் செல்லவே. ......    18

(பாய பூதர்தம் படை)

பாய பூதர்தம் படைக்கு வேந்தராய்
     ஏயி னார்க்குவீ றிலக்கத் தெண்மராய்
          மேயி னார்க்கெலாம் வீர வாகுவோர்
               நாய கம்பெறீஇ நடுவட் போயினான். ......    19

(அமர்வி ளைக்க)

அமர்வி ளைக்கமுந் தவனை யேவியே
     தமர வேலையில் தானை சூழ்தர
          இமைய வர்க்கிறை ஏனை யோர்தொழக்
               குமர வேள்கடைக் கூழை யேகினான். ......    20

வேறு

(பிற்பட எம்பிரான்)

பிற்பட எம்பிரான் பெயர ஏவலால்
     முற்படு வீரனை முயங்கிப் பாரிடச்
          சொற்படை படர்வன தூமந் தன்னொடு
               சிற்பரன் நகையழல் புரத்துச் சென்றபோல். ......    21

(அரிநிரை பூண்ட)

அரிநிரை பூண்டதேர் அலகை பூண்டதேர்
     பரிநிரை பூண்டதேர் படைக்குள் ஏகுவ
          விரிகடல் வரைப்பினில் மேக ராசியுங்
               கிரியுறழ் கலங்களுங் கெழுமிச் செல்வபோல். ......    22

(இடையல் இரதமோ)

இடையகல் இரதமோ டிரதந் தாக்கிய
     படையொடு படைவகை செறிந்த பல்வகைக்
          கொடியொடு கொடிநிரை துதைந்த கூளியர்
               அடுசமர் பயின்றிடும் அமைதி போலவே. ......    23

(சங்கொடு பணை)

சங்கொடு பணைதுடி தடாரி காகளம்
     பங்கமில் தண்ணுமை யாதிப் பல்லியம்
          எங்கணும் இயம்பின எழுந்து பூழிபோய்ச்
               செங்கம லத்தவன் பதத்தைச் செம்மிற்றே. ......    24

(சாற்றுமிவ் வியல்)

சாற்றுமிவ் வியல்புறத் தானை வீரருஞ்
     சீற்றவெம் பூதருஞ் செல்ல வாகையான்
          கோற்றொழில் அகற்றிய கோட்டு மாமுகன்
               போற்றிய மாயமா புரியைச் சேர்ந்தனன். ......    25

வேறு

(சேர்ந்திடு மெல்லை)

சேர்ந்திடு மெல்லை பூதர் சேனைபோய் நகரம் புக்கு
     நேர்ந்திடும் அவுண ரோடு நின்றமர் விளைத்து நின்றார்
          ஓர்ந்தனர் அதனைத் தூத ரோடித்தங் கோயில் புக்குச்
               சார்ந்திடு திருவில் வைகுந் தாரகற் றொழுது சொல்வார். ......    26

(எந்தைமற் றிதுகேள்)

எந்தைமற் றிதுகேள் நும்முன் இமையவர் தொகையை யிட்ட
     வெந்துயர்ச் சிறையை நீக்க விரிசடைக் கடவுள் மைந்தன்
          கந்தனென் றொருவன் வந்தான் அவுணரைக் கடக்கு மென்னா
               அந்தர நெறிசெல் விண்ணோர் அறைந்திடக் கேட்டு மன்றே. ......    27

(என்னிவர் மாற்ற)

என்னிவர் மாற்ற மென்னா யாந்தெரி குற்றே மாக
     அன்னவர் இயம்பி யாங்கே ஆயிரத் திரட்டி யென்னப்
          பன்னுறு பூத வெள்ளம் படர்ந்திடக் குமரன் போந்தான்
               முன்னுறு தூசி நந்தம் முதுநகர் அலைத்த தென்றார். ......    28

(என்றலும் வடவை)

என்றலும் வடவைத் தீயில் இழுதெனும் அளக்கர் வீழத்
     துன்றிய எழுச்சி மானத் துண்ணெனச் செற்றந் தூண்ட
          மின்றிகழ் அரிமான் ஏற்று வியன்றவி சிருக்கை நீங்கிக்
               குன்றுறழ் மகுடம் அண்ட கோளகை தொடவெ ழுந்தான். ......    29

(எழுந்துதன் மருங்கு)

எழுந்துதன் மருங்கு நின்ற ஒற்றரை நோக்கி இந்தச்
     செழுந்திரு நகர்மேல் வந்த சேனையை முளிபுற் கானில்
          கொழுந்தழல் புகுந்த தென்னக் கொல்வன்நந் தானை முற்றும்
               உழுந்துருள் கின்ற முன்னர் ஒல்லைதந் திடுதி ரென்றான். ......    30

வேறு

(அன்னபணி முறை)

அன்னபணி முறைபுரிவான் ஒற்றுவர்கள் போயிடலும் அவுணன் நின்ற
     கொன்னுறுவேற் பரிசனரைக் கொடுவருதிர் இரதமெனக் கூற லோடும்
          முன்னமொரு நொடிவரையில் தந்திடலும் அதனிடையே மொய்ம்பிற் புக்குப்
               பின்னர்வரும் அமைச்சர்கள்தந் தொகைபரவ மதர்ப்பினொடு பெயர்த லுற்றான். ......    31

(வீடுவான் போலு)

வீடுவான் போலுமினித் தாரகனென் றவன்சீர்த்தி விரைவில்வந்து
     கூடியே புரள்வதுவும் அரற்றுவதுங் காப்பதுமாங் கொள்கைத்தென்ன
          நீடுசா மரத்தொகுதி பலவிரட்ட வெள்ளொலியல் நிமிர்ந்துவீசப்
               பீடுசேர் தவளமதிக் குடைநிழற்ற வலம்புரிகள் பெரிதும்ஆர்ப்ப. ......    32

(ஈமத்தே நடம்புரி)

ஈமத்தே நடம்புரியுங் கண்ணுதலோன் எடாதசிலை யென்ன மாலோன்
     மாமத்தே யெனக்கிடந்த முழுவயிரத் தண்டமொன்று வயிரக் கண்டைத்
          தாமத்தேர் பெறுகின்ற மடங்கல்பல ஈர்த்துவருஞ் சகடத் திண்கால்
               சேமத்தேர் மிசைப்போத ஏனையபல் படைக்கலமுஞ் செறிந்து நண்ண. ......    33

(ஒற்றர்கூ வியவே)

ஒற்றர்கூ வியவேலை ஏற்றெழுந்த அவுணர்கடல் ஒருங்கு செல்லக்
     கொற்றமால் கரிபரிதேர் இனத்தினொடு வந்தீண்டக் குழவித் திங்கட்
          கற்றைவார் சடைக்கடவுள் வாங்கியபொன் மால்வரையைக் காவ லாகச்
               சுற்றுமால் வரையென்னப் படைத்தலைவர் பஃறேரில் துவன்றிச் சூழ. ......    34

(மொய்யமர்செய்)

மொய்யமர்செய் கோலமொடு முப்புரமேல் நடந்தருளும் முக்கண் மூர்த்தி
     பையரவின் தலைத்துஞ்சுங் கணைதூண்ட மூண்டதழல் பதகரானோர்
          மெய்யுடலம் முழுதுநுங்கத் தலைகொள்ளப் பெருந்தூம மிசைக்கொண் டென்னச்
               செய்யமுடி அவுணர்பெருங் கடலினிடை யெழும்பூழி சேட்சென் றோங்க. ......    35

(கார்க்குன்றம் அன்ன)

கார்க்குன்றம் அன்னதிறல் கரிமீதும் பரிமீதுங் கடிதில் தூண்டுந்
     தேர்க்குன்றம் அதன்மீதும் வயவர்கள்தங் கரங்களினுஞ் செறிப தாகை
          ஆர்க்கின்ற துயர்ந்தோங்கி அசைகின்ற தெம்மருங்கும் அம்பொன் நாட்டில்
               தூர்க்கின்ற பூழியினைத் துடைக்கின்ற பரிசேபோல் துவன்றித் தோன்ற. ......    36

(வாகையுள பல்லி)

வாகையுள பல்லியமும் இயம்பத்தன் நகர்நீங்கி மன்னர் மன்னன்
     ஏகியதோர் படிநோக்கி உவரிமிசைக் கங்கைகள்வந் தெய்து மாபோல்
          சாகையுள பன்மரனும் பல்படையுங் குன்றுகளுந் தடக்கையேந்திச்
               சேகுடைய பெருஞ்சீற்றப் பூதர்படை யார்த்தெதிர்ந்து சென்ற தன்றே. ......    37

(எல்லோருந் தொழு)

எல்லோருந் தொழுதகைய குமரனடி இணைவழுத்தி இகல்வெம்பூதர்
     கல்லோடு மரனோடுங் கதையோடுங் கணிச்சியொடுங் கழுமுள் வீச
          வில்லோடுங் கணையோடும் வேலோடும் நேமியொடும் மிக்க எல்லாம்
               அல்லோடும் புரையுமனத் தவுணர்படை எதிர்சிதறி அமர்செய் திட்டார். ......    38

வேறு

(எண்ணுறு படைகள்)

எண்ணுறு படைகள் இவ்வா றெதிர்தழீஇ அடரும் வேலை
     விண்ணுறு பூழி யென்னும் விரிதரு புகைமீச் செல்ல
          மண்ணுறு குருதி யான வன்னியை மாற்று வார்போல்
               கண்ணுறும் இமையோர் கண்கள் கடிப்புனல் கான்ற அன்றே. ......    39

(இரிந்திட லின்றி)

இரிந்திட லின்றி நேர்வந் தேற்றமர் புரித லாலே
     சொரிந்திடு குருதி பொங்கத் தோளொடு சென்னி துள்ளச்
          சரிந்திடுங் குடர்கள் சிந்தத் தானவர் பல்லோர் மாயப்
               பொருந்திறல் வயத்தால் மேலாம் பூதருஞ் சிலவர் பட்டார். ......    40

(தேருடைத் தெறிந்து)

தேருடைத் தெறிந்து பாய்மாத் திறத்தினைச் சிதைத்து நீக்கி
     ஆருடைத் திகிரிச் சில்லி அங்கையால் எடுத்துச் சுற்றிப்
          போருடைத் திறலோர் தம்பால் பொம்மென நடாத்தும் பொற்பால்
               காருடைப் பூதர் சில்லோர் கண்ணனே போன்றார் அன்றே. ......    41

(தேர்பரித் தெழுந்து)

தேர்பரித் தெழுந்து மண்ணில் செல்லுறாப் பவளச் செங்கால்
     கார்பரித் தன்ன தோகைக் கவனவாம் புரவி யீட்டம்
          போர்பரித் தொழுகு சீற்றப் பூதர்கள் புடைத்துச் சிந்திப்
               பார்பரித் திடவே செய்தார் படிமகள் இடும்பை தீர்ப்பார். ......    42

(வாலுடைக் களிற்றி)

வாலுடைக் களிற்றின் ஈட்டம் வாரியே கரத்தா லெற்றிக்
     காலுடைத் திகிரித் திண்டேர் கழல்களால் உருட்டிக் காமர்
          பாலுடைப் புரவித் தானை பதங்களால் உழக்கிச் சென்றார்
               வேலுடைத் தடக்கை அண்ணல் விடுத்தருள் வீர வீரர். ......    43

(வாருறு புரசை)

வாருறு புரசை பூண்ட வன்களிற் றொருத்தல் யாவுஞ்
     சூருறு நிலைய வாகித் துஞ்சிய தொகுதி சூழப்
          பேருறு குருதி நீத்தம் பிறங்கழற் கதிர்கா ணாது
               காருற வூர்கோள் தோன்றுங் காட்சியை யொத்த தன்றே. ......    44

(கண்ணெதிர் நின்று)

கண்ணெதிர் நின்று போர்செய் கார்கெழும் அவுணர்ப் பற்றித்
     துண்ணெனப் பூதர் வீசத் துளங்கிய கலன்க ளோடும்
          விண்ணிடை யிறந்து நொய்தின் வீழ்வது விசும்பில் தப்பி
               மண்ணிடை மின்னு வோடும் வருமுகில் போன்ற தன்றே. ......    45

(ஆயிர வெள்ள மாகு)

ஆயிர வெள்ள மாகுங் கணவரும் ஆங்க ணுள்ள
     பாயிருங் குன்ற மெல்லாம் பன்முறை பறித்து வீசி
          மாயிருந் தகுவர் தானை வரம்பில படுத்து நின்றார்
               ஏயென வுலகைச் சிந்தும் இறுதிநாள் எழிலி போல்வார். ......    46

(நிணங்கவர் ஞமலி)

நிணங்கவர் ஞமலி யோர்சார் ஞெரேலெனக் குரைப்பப் புள்ளின்
     கணங்களும் அலகை தானுங் கறங்கிடக் கானத் தோங்கிப்
          பிணங்களின் அடுக்கல் ஈண்டிப் பேரமர் விலக்கி யார்க்கும்
               அணங்குறு நிலைய வாகி அடுத்தன நடுவண் அம்மா. ......    47

(தரைத்தடஞ் சிலை)

தரைத்தடஞ் சிலைய தாகத் தறுகண்வெம் பூத ரானோர்
     வரைத்துணை அன்ன தாளே வலிகெழு குழவி யாகத்
          திரைத்திழி குருதி நீராத் தீர்ந்திடு திறலோர் யாக்கை
               அரைத்தென நடப்ப ஏற்றார் அவுணரும் அடுபோர் செய்வார். ......    48

(தத்துறு புரவி)

தத்துறு புரவித் திண்டேர்த் தானவர் நிகளத் தந்தி
     பத்துநூ றொன்றில் வீழப் பழுமரப் பணைகொண் டெற்றி
          முத்தலை யெஃகம் வீசி முசலத்திற் புடைத்து மொய்ம்பால்
               குத்திநின் றுழக்கிப் பாய்ந்து கொன்றனர் பூத வீரர். ......    49

(விழுந்தன படிவம்)

விழுந்தன படிவம் யாண்டும் விரிந்தன கவந்த மேன்மேல்
     எழுந்தன குருதித் தாரை ஈர்த்தன நீத்த மாக
          அழுந்திய இறந்தோர் யாக்கை ஆர்த்தன பறவை செய்ய
               கொழுந்தசை மிசைந்து நின்று குரவையாட் டயர்ந்த கூளி. ......    50

(கண்டனன் இனை)

கண்டனன் இனைய தன்மை தாரகன் கடிய சீற்றங்
     கொண்டனன் வையம் நீங்கிக் குவலய மிசைக்குப் புற்றுத்
          தண்டமொன் றெடுத்துப் பூதப் படையினைத் தரையில் வீட்டி
               அண்டமுங் குலுங்க ஆர்த்திட் டடிகளால் உழக்கிச் சென்றான். ......    51

(அல்லெனப் பட்ட)

அல்லெனப் பட்டமேனி அவுணர்கட் கரசன் கையிற்
     கல்லெனப் பட்ட தண்டாற் புடைத்தலுங் கரங்கள் சென்னி
          பல்லெனப் பட்ட சிந்திப் பாய்புனல் ஒழுக்கிற் சாய்ந்த
               புல்லெனப் பட்ட தம்மா பூதர்தஞ் சேனை யெல்லாம். ......    52

(பிடித்திடு வயிர)

பிடித்திடு வயிரத் தண்டம் பெருங்கடற் பூத வெள்ளம்
     முடித்திடல் புகழோ அன்றால் தாரக மொய்ம்பின் மேலோன்
          அடித்திடுங் காலை கீண்ட தம்புவி அடிப்பான் ஓங்கி
               எடுத்திடுங் காலை கீண்ட தெண்டிசை அண்டச் சூழல். ......    53

(தாரிடங் கொண்ட)

தாரிடங் கொண்ட மார்பத் தாரகன் வயிரத் தண்டம்
     போரிடங் கொண்டோர் சென்னி புயமுரங் கரங்கள் சிந்திக்
          காருடங் கண்ட பாந்தட் கணமெனத் துடிப்ப வீட்டிப்
               பாரிடந் தன்னை யெல்லாம் பாரிடம் ஆக்கிற் றம்மா. ......    54

(அன்றரி விடுத்த)

அன்றரி விடுத்த ஆழி ஆரமா வணிந்த தீயோன்
     கொன்றனன் அனிக மென்னுங் கொள்கையும் அவன்மேற் செல்லும்
          வன்றிறல் தம்பால் இல்லா வண்ணமும் மதித்து நோக்கி
               நின்றிலர் பூதர் வேந்தர் நெஞ்சழிந் துடைந்து போனார். ......    55

(திண்கண நிரையின்)

திண்கண நிரையின் வேந்தர் சிந்துழிச் சீற்றந் தூண்ட
     எண்கண மாகி யுள்ள இலக்கருஞ் சிலைகா லூன்றி
          மண்கணை முழவம் விம்ம வயிரெழுந் திசைப்ப வாங்கி
               ஒண்கணை மாரி தூவி அவுணனை ஒல்லை சூழ்ந்தார். ......    56

(சூழ்ந்தனர் துரந்த)

சூழ்ந்தனர் துரந்த வாளி தோன்முகத் தவுணன் யாக்கை
     போழ்ந்தில ஊறதேனும் புணர்த்தில புன்மை யாகித்
          தாழ்ந்திடு நிரப்பின் மேலோன் ஒருமகன் தலைமை தாங்கி
               வாழ்ந்தவர் தமக்குச் சொல்லுஞ் சொல்லென வறிது மீண்ட. ......    57

(தரைபடப் புகழ்வை)

தரைபடப் புகழ்வைத் துள்ள தாரகன் தடமார் பத்தைப்
     புரைபடச் செய்தி டாது பொள்ளெனப் பட்டு மீண்டு
          நிரைபடத் திறலோர் உய்த்த நெடுங்கணை யான வெல்லாம்
               வரைபடச் சிதறுங் கல்லின் மாரிபோல் ஆன வன்றே. ......    58

(விடுகணை மாரி)

விடுகணை மாரி யாவும் மீண்டிட வெகுண்டு விண்ணோர்
     படைமுறை வழங்கி நிற்பப் பதகன்மேல் அவைகள் எய்தா
          உடையதம் வலியுஞ்சிந்தி ஒல்லென மறிந்து செல்லக்
               கடவுளர் அதனை நோக்கிக் கரங்குலைத் திரங்க லுற்றார். ......    59

(மற்றது காலை தன்னில் வலி)

மற்றது காலை தன்னில் வலியினால் வயிரத் தண்டஞ்
     சுற்றினன் தற்சூழ் கின்ற சுடர்மணிக் கடுமான் தேர்கள்
          எற்றினன் புழைக்கை நீட்டி இலக்கர்தந் தொகையும் வாரிப்
               பொற்றனு வோடும் வீழப் புணரியின் மீது விட்டான். ......    60

(துளும்பிய அளக்கர்)

துளும்பிய அளக்கர் தன்னில் சூழுற நின்ற தெங்கின்
     வளம்படு பழுக்காய் வர்க்கம் மாருதம் எறியச் சிந்திக்
          குளம்புகு தன்மை யென்ன வீழ்தரு கொற்ற வீரர்
               இளம்பிறை புரையும் வில்லோ டெழுந்தொரு புடையிற் போனார். ......    61

(தொற்றவில் உழவன்)

கொற்றவில் உழவன் வீர கோளரி யதனை நோக்கிச்
     செற்றமோ டேகிச் செவ்வேள் சேவடி மனத்துட் கொண்டு
          பற்றிய தனுவை வாங்கிப் பகழிநூ றுய்த்துத் தீயோன்
               பொற்றட மவுலி தள்ளிப் புணரியும் நாண ஆர்த்தான். ......    62

(ஆர்த்திடு மோதை)

ஆர்த்திடு மோதை கேளா அண்டர்கள் அனையன் மீது
     தூர்த்தனர் மலரின் மாரி தோன்முகன் அதனைக் காணா
          வேர்த்தனன் மான முற்றான் வீரகே சரிமேல் அங்கைத்
               தார்த்தடந் தண்டம் உய்த்துத் தனதுமான் தேரிற் சென்றான். ......    63

வேறு

(சென்றொர் மாமுடி)

சென்றொர் மாமுடி புனைவுழித் தண்டமத் திறலோன்
     மன்றல் மார்பகம் படுதலும் வீழ்ந்தனன் மயங்கி
          வென்றி மொய்ம்புடை ஆண்டகை யதுகண்டு வெகுண்டு
               குன்றம் அன்னதோள் தாரக னொடுபொரக் குறித்தான். ......    64

வேறு

(குறித்தேவிறல் புயன்)

குறித்தேவிறல் புயன்தாரகக் கொடியோன்எதிர் குறுகி
     வெறித்தேன்மலர்த் தொடைதூங்குதன் விறற்கார்முகங் குனியாப்
          பொறித்தேயுறு கனல்வாளிகள் பொழிந்தேயவன் புரத்தில்
               செறித்தேயுற வளைத்தான்ஒரு சிலைதானவர் தலைவன். ......    65

(பொழிந்தான்சர மழை)

பொழிந்தான்சர மழைநம்மவன் புரமேலது பொழுதின்
     இழிந்தான்சிலை யுயர்ந்தான்கணை ஈரேழுதொட் டிறுப்ப
          அழிந்தாயெனை எதிர்ந்தாய்இதற் கையமிலை யென்னா
               மொழிந்தான்ஒரு சூலந்தனை மொய்ம்பிற்செல வுய்த்தான். ......    66

(பொருமூவிலை வேல)

பொருமூவிலை வேலங்கவன் பொன்மார்புறப் பொருமிப்
     பெருமோகமோ டேநின்றிடப் பின்னங்கது காணா
          உருமேறென அதிர்தாரக னுடனேயவன் துணையாய்
               வருமூவரும் ஒருநால்வரும் மாறுற்றமர் இழைத்தார். ......    67

(அமர்செய்திடும் எழு)

அமர்செய்திடும் எழுவீரரும் அவுணன்றனக் குடையக்
     குமரன்பதந் தலைக்கொண்டிடுங் கோமானது காணா
          எமர்மற்றிவர் எல்லோர்களும் இரிந்தார்பொரு தென்னாச்
               சமர்முற்றிட வருதாரகத் தகுவன்முனம் அடைந்தான். ......    68

(ஒருகார்முகம் இருகால்)

ஒருகார்முகம் இருகால்வளை வுறவேகுனித் துகுதேன்
     அருகாதொழு கியதன்மையின் அவிர்நாணொலி யெடுப்பத்
          திருகாநெடு வரையானவுந் தெருமந்தன அவுணர்
               இருகாதையும் நனிபொத்தினர் ஏங்குற்றனர் இரிவார். ......    69

(நாண்கொண்டிடும்)

நாண்கொண்டிடும் ஒலிகேட்டலும் நடுங்காவெரு வுற்றார்
     பூண்கொண்டிடு சிலைவாங்கலும் மகிழ்வுற்றிடு புலவோர்
          சேண்கொண்டிடும் முகில்வேண்டினர் அதுவந்திடச் சிறந்தே
               மாண்கொண்டதன் உருமுச்செல மயங்கித்தளர் வதுபோல். ......    70

வேறு

(மேதா வியர்கள்)

மேதா வியர்கள் பரவுந்திறல் வீரவாகு
     மாதாரு வன்ன சிலைதன்னை வளைத்து வாகைத்
          தாதார் பிணையல் புனைதாரகன் றன்னை நோக்கித்
               தீதாம் அழல்போல் வெகுண்டேயிது செப்பு கின்றான். ......    71

(பொன்றா வலி)

பொன்றா வலிகொண் டமராடிய பூதர் தம்மை
     வன்றாழ் சிலைகொண் டிடுவீரரை வன்மை தன்னால்
          வென்றா மெனவுன் னினைபோலும் விரைந்து நின்னைக்
               கொன்றாவி உண்பன் எனலுங்கொடி யோன்உ ரைப்பான். ......    72

(மாயன் றனைவென்)

மாயன் றனைவென் றவன்நேமியை மாசில் கண்டத்
     தேயும் படியே புனைந்தேன்வலி எண்ணு றாதே
          நீயிங் கடுவா மெனக்கூறினை நீடு மாற்றஞ்
               சீயந் தனையும் நரிவெல்வது திண்ண மாமோ. ......    73

(சாருங் குறள்வெம்)

சாருங் குறள்வெம் படையாவையுஞ் சாய்ந்த வீரர்
     ஆருந் தொலைவுற் றனர்நீயும் அயர்ந்து நின்றாய்
          வீரம் புகல்வாய் விளிகின்ற விளக்கம் நேர்வாய்
               பாரென் வலியால் உனதாவி படுப்ப னென்றான். ......    74

(என்னுந் துணையில் சர)

என்னுந் துணையில் சரமாயிரம் ஏந்தல் உய்ப்பத்
     தன்னங் கையிலோர் சிலைவாங்கினன் தார கப்பேர்
          மன்னன் கடிது கணையாயிரம் மாறு தூண்டிச்
               சின்னம் புரிந்து கணைநூறு செலுத்தி னானால். ......    75

(எவ்வக் கொடி)

எவ்வக் கொடியோன் தொடுவாளியை ஏந்தல் காணா
     அவ்வக் கணைகள் விடுத்தேயவை முற்று மாற்றக்
          கைவிற் கொருவன் இவனாகுமிக் காளை தன்னைத்
               தெய்வப் படையால் முடிப்பேனெனச் சிந்தை செய்தான். ......    76

வேறு

(வெங்கன ற்படை)

வெங்கனற்படை தாரகன்விட வீரவாகு வெகுண்டுபின்
     செங்கனற்படை யேவியன்னது சிந்தவேவரு ணப்படை
          அங்கணுய்த்திட அவுணர்கோமகன் அடுபுனற்கிறை படையினைத்
               துங்கமுற்றிய வீரனுய்த்தது துண்டமாம்வகை கண்டனன். ......    77

(இரவிதன்படை)

இரவிதன்படை அவுணன்விட்டனன் இவனுமப்படை யேவியே
     விரைவிலன்னது தொலைவுகண்டனன் வீரமேதகு தாரகன்
          உரமிகுந்தனி ஊதைவெம்படை யுந்தினான் அது கந்தவேள்
               அருள்மிகுந்தனி யடியன்மாற்றினன் அனையதொல்படை தனைவிடா. ......    78

(அனிலவெம்படை)

அனிலவெம்படை வீறழிந்திட அவுணர்கோமகன் அம்புயன்
     தனதுதொல்படை ஏவினானது தணிவில்செற்றமொ டேகலும்
          வனைகருங்கழல் வீரவாகுவும் மற்றவன்படை தூண்டியே
               நினையுமுன்னது தொலைவுசெய்தனன் நிகரில்வானவர் புகழவே. ......    79

(ஆயதன்மைகள் கண்டு)

ஆயதன்மைகள் கண்டுதாரகன் அற்புதத்தின னாகியே
     மேயவானவர் படைகள் யாவையும் வீரன்மற்றிவன் வென்றனன்
          மாயநீர்மையின் இங்கிவன்றிறல் வன்மைகொள்ளுதும் இனியெனாத்
               தீயபுந்தியில் இனையவாறு தெரிந்துசிந்தனை செய்துமேல். ......    80

(தொல்லைமாயையின்)

தொல்லைமாயையின் விஞ்சைதன்னை நவின்றுளங்கொடு துண்ணென
     மல்லன்மேவரு தாரகாசுரன் வடிவமெண்ணில தாங்கியே
          எல்லைதீர்தரு படைவழங்கினன் எங்குமாகி இருட்குழாம்
               ஒல்லைவந்து பரந்தபோல்அவன் ஒருவன்நின்றமர் புரியவே. ......    81

(கண்டுமற்றது வானு)

கண்டுமற்றது வானுளோர்கள் கலங்கியேங்கினர் முன்னரே
     விண்டுநீளிடை நின்றபூதர் வெருண்டுபின்னரும் ஓடினார்
          மண்டுபேரமர் செய்தயர்ந்திடு மானவீரரும் அச்சமேல்
               கொண்டுநின்றனர் முறுவல்செய்தனர் குணலையிட்டனர் அவுணரே. ......    82

வேறு

(தார கப்பெயர்)

தார கப்பெயர் அவுணர்கோன் மாயையின் சமரும்
     ஆரும் அச்சுறு கின்றதும் ஆடல்மொய்ம் புடையோன்
          பேர ழற்பொறி கதுவுற நோக்கியே பிறங்கும்
               வீர பத்திரன் நெடும்படை எடுத்தனன் விடுவான். ......    83

(துங்க வுக்கிரச் சிம்பு)

துங்க வுக்கிரச் சிம்புள்மாப் படையினைத் தூயோன்
     செங்கை பற்றலும் அன்னது தாரகன் செயலால்
          அங்கண் நின்றிடு மாயைகண் டச்சமுற் றழுங்கிப்
               பொங்கு பானுமுன் இருளென முடிந்ததப் பொழுதே. ......    84

(தன்பு ணர்ப்புறு)

தன்பு ணர்ப்புறு மாயைதான் உடைதலுந் தமியாய்
     முன்பு நின்றதோர் தாரகன் மொய்ம்புளான் றன்னைப்
          பின்பு மாயையிற் படுத்தவோர் சூழ்ச்சியைப் பிடித்து
               மின்பொ லிந்ததன் தேரைவிட் டோடினன் விரைவில். ......    85

(தார கன்தொலை)

தார கன்தொலைந் தோடலுந் தனக்கிணை யில்லோன்
     போர ழிந்துவென் னிட்டவன் றன்மிசைப் புத்தேள்
          வீர வெம்படை விடுப்பது வீரமன் றென்னாச்
               சீரி தாகிய தூணியுள் அன்னதைச் செறித்தான். ......    86

(அற்ற போர்வலி)

அற்ற போர்வலித் தாரகன் பின்வரைந் தணுகிப்
     பற்றி நாண்கொடு புயந்தனைப் பிணித்தெனைப் பணித்த
          கொற்ற வேலன்முன் உய்க்குவன் யானெனக் குறித்து
               மற்ற வன்றனைத் தொடர்ந்தனன் நெடுந்திறல் வாகு. ......    87

(வேழ மாமுகற் கிள)

வேழ மாமுகற் கிளவலை உன்னியே வீரன்
     ஆழி மால்கட லாமென ஆர்த்துவை தணுகச்
          சூழு மாயையின் இருக்கையாந் தொல்கிர வுஞ்சப்
               பாழி யொன்றுசென் றொளித்தனன் தாரகப் பதகன். ......    88

(முன்ன மாங்கவன்)

முன்ன மாங்கவன் போகிய பூழையுள் முடுகிப்
     பொன்னின் வாகையந் தோளுடை யாண்டகை புகலும்
          அன்ன தோர்வரை யகமெலாம் ஆயிரங் கதிரின்
               மன்ன னேகுறா இருள்நிலம் போன்றுவை கியதே. ......    89

(நீளு மாலிருள்)

நீளு மாலிருள் படர்தலுஞ் சில்லிடை நெறியால்
     தாளி னொற்றியே படர்ந்தனன் தாரகற் காணான்
          ஆளி மொய்ம்புடை மேலையோன் அடுக்கலின் புணர்ப்பான்
               மீளு கின்றதோர் நெறியையுங் கண்டிலன் வெகுண்டான். ......    90

(செற்ற மிக்கவன்)

செற்ற மிக்கவன் மாயைஇவ் வரையெனச் சிந்தித்
     துற்ற காலையில் அவுணனா கியகிர வுஞ்சப்
          பொற்றை அன்னது கண்டுமோ கத்துயில் புரிந்து
               மற்ற வன்றன துணர்வினை மையல்செய் ததுவே. ......    91

(இயலி சைத்தமிழ்)

இயலி சைத்தமிழ் முனிவரன் இசைத்தசூள் இசைவால்
     வியலு டைத்திறல் வாகுவை அவ்வரை மிகவும்
          மயலு டைப்பெரு மாயம தியற்றலும் மயங்கித்
               துயில லுற்றனன் தொல்லையின் உணர்வெலாந் துறந்தே. ......    92

(அம்ம லைக்கணே)

அம்ம லைக்கணே முன்னவன் உறங்கலும் அனைய
     செம்ம லுக்கிளை யோர்இரு நால்வருஞ் சிறந்த
          தம்மி னத்தரோர் இலக்கருஞ் சாரதர் பலரும்
               விம்ம லுற்றனர் சிறையிலாப் பறவையின் மெலிந்தார். ......    93

(உடைந்து போயின)

உடைந்து போயின தாரகன் றன்னைநம் முரவோன்
     தொடர்ந்து சென்றனன் மீண்டிலன் அவனொடுந் துன்னி
          அடைந்து வெற்பினில் போர்புரி வான்கொலோ அங்கட்
               படர்ந்து நாடுதும் யாமுமென் றெண்ணினர் பலரும். ......    94

(எண்ணி யேயிசை)

எண்ணி யேயிசைந் திளையரோ ரெண்மரும் இலக்கம்
     நண்ணும் வீரரும் பாரிடந் தன்னுள்நா யகரும்
          அண்ணல் வான்படை ஏந்தியே யாயிடை யகன்று
               விண்ணு லாவுறு கிரவுஞ்சம் எய்தினர் விரைவில். ......    95

(ஆய வெற்பினில்)

ஆய வெற்பினில் வீரவா குப்பெயர் அடலோன்
     போய பூழையுள் மற்றவர் யாவரும் புகலுந்
          தீய தொல்வரை முன்னவற் கிழைத்திடு திறம்போல்
               மாயம் எண்ணில புரிதலும் மயங்கியே வதிந்தார். ......    96

(வெற்றி வீரவாகு)

வெற்றி வீரவா குப்பெயர் அண்ணலும் வீரர்
     மற்றி யாவரு மயங்கலுந் தாரகன் வாரா
          உற்று நோக்கிநம் மாயையால் இவரெலா மொருங்கே
               இற்று ளாரென மகிழ்ந்துமால் வரைமிசை எழுந்தான். ......    97

(அண்ட மீமிசை)

அண்ட மீமிசை நின்றவா னவர்கள்இவ் வனைத்துங்
     கண்டு கட்புனல் பனிவர அரற்றியே கலங்கிக்
          கொண்ட துன்பொடு பதைபதைத் தோடினர் கூளித்
               தண்டம் யாவையும் வெருவின தலைவர்இன் மையினால். ......    98

(மலையின் மீமிசை)

மலையின் மீமிசை யெழுதரு தாரகன் மற்றோர்
     தலைமை யாகிய விரதமேல் கொண்டுதா னவர்கள்
          பலரும் வந்துவந் தார்த்தனர் சூழ்தரப் பைம்பொற்
               சிலைய தொன்றினை வாங்கியே செருநிலஞ் சென்றான். ......    99

(நீடு தன்சிலை)

நீடு தன்சிலை நாணொலி கொண்டுநீள் சரங்கள்
     கோடி கோடிமற் றொருதொடை யாகவே கொளுவி
          ஆடல் சேர்தரு பூதர்மேற் பொழிதலும் அலமந்
               தோட லுற்றனர் திசையினும் விண்ணினும் உலைந்தே. ......    100

(ஆன காலையின் நாரத)

ஆன காலையின் நாரதன் இனையகண் டழுங்கி
     மேனி துண்ணென வியர்ப்புற வழிக்கொடு விரைந்து
          போன விண்ணவர் தம்மொடு சென்றுபுத் தேளிர்
               சேனை காவலன் நின்றதோர் கடைக்கூழை சேர்ந்தான். ......    101

(அரிது மாதவம்)

அரிது மாதவம் புரிதரு நாரதன் அடலின்
     விரவு மாயிரம் பூதவெள் ளத்தொடு மேவுங்
          கருணை சேரறு முகத்தனைக் கண்டுகண் களித்துச்
               சுரர்க ளோடுபோய் இறைஞ்சியே இனையன சொல்வான். ......    102

(ஐய நின்படை)

ஐய நின்படை வீரர்கள் பெருஞ்சம ராடி
     வெய்ய தானவர் தானைகள் வரவர வீட்டிச்
          செய்ய மந்திரித் தலைவரை அமைச்சரைச் செற்றுப்
               பொய்யின் மொய்ம்புடைத் தாரகன் தன்னொடும் பொருதார். ......    103

(தலைக்க ணாகிய)

தலைக்க ணாகிய வீரனுந் தம்பியர் பிறரும்
     இலக்க வீரரும் பாரிடத் தலைவர்கள் யாரும்
          புலைக்கொ டுந்தொழில் தாரகன் றன்னொடும் பொரத்தன்
               மலைக்கண் உய்த்தனன் அவர்தமைச் சூழ்ச்சியின் வலியால். ......    104

(உய்த்த காலையில்)

உய்த்த காலையில் அவுணனா கியகிர வுஞ்சம்
     மெத்து மாயைகள் அனையவர்க் கிழைத்தலும் வெருவிப்
          பித்த ராமென மயங்கினர் போலுமால் பின்னர்
               இத்தி றந்தனை உணர்ந்தனன் தாரக னென்போன். ......    105

(தெரிந்து தாரகன்)

தெரிந்து தாரகன் மகிழ்வொடு பறந்தலை சென்று
     துரந்து நம்பெருந் தானையைக் கணைமழை சொரிய
          முரிந்து போயின நிகழ்ச்சியீ துயிர்த்தொகை முற்றும்
               இருந்த நாயக அறிதியே யாவையும் என்றான். ......    106

(என்ற காலையில் நாரத)

என்ற காலையில் நாரதன் உள்ளமும் இமையோர்
     நின்று தாமயர் கின்றதும் அமரர்கோன் நெஞ்சில்
          துன்று சோகமும் நான்முக னாதியோர் துயரும்
               ஒன்ற நோக்கியே அறுமுகப் பண்ணவன் உரைப்பான். ......    107

வேறு

(ஆருமிது கேண்மின்)

ஆருமிது கேண்மின் அம ராடுகளன் ஏகித்
     தாரகனை வேல்கொடு தடிந்தவுணர் வைகும்
          ஓரரண மானகிர வுஞ்சகிரி செற்றே
               வீரர்தமை யோரிறையின் மீட்டிடுவன் என்றான். ......    108

(எந்தையிவை கூறு)

எந்தையிவை கூறுதலும் யாருமவை தேர்ந்து
     சிந்தையுறு கின்றதுயர் செற்றுமுடி வில்லா
          அந்தமில் மகிழ்ச்சியுடன் ஆடியிசை பாடிக்
               கந்தனடி வந்தனை புரிந்தனர் களிப்பால். ......    109

(கந்தமுரு கேசனது)

கந்தமுரு கேசனது காலைமுது பாகாய்
     வந்ததொரு வந்தினை மகிழ்ச்சியொடு நோக்கிச்
          சிந்தைதனில் முந்தும்வகை தேரதனை வல்லே
               உந்துதி விரைந்தென உரைத்தருள லோடும். ......    110

(என்னவினி தென்று)

என்னவினி தென்றுதொழு தேழெழுவ கைத்தாந்
     தன்னினம தாகியவர் தாங்கள்புடை போதக்
          கொன்னுனைய தாமுளவு கோல்கயிறு பற்றித்
               துன்னுபரி மான்நிரைகள் தூண்டிமிக ஆர்த்தான். ......    111

வேறு

(ஆன காலைதனில்)

ஆன காலைதனில் அண்டமும் வையந்
     தானும் அங்குள தடங்கிரி யாவும்
          ஏனை மாகடலும் எண்டிசை யுள்ள
               மான வேழமும் நடுங்கின மன்னோ. ......    112

(வாவு கின்றபல)

வாவு கின்றபல மாநிரை தூண்டத்
     தேவர் தங்கள்சிறை தீரிய செல்வோன்
          மேவு தொல்லிரதம் விண்ணெறி கொண்டே
               ஏவ ரும்புகழ ஏகிய தன்றே. ......    113

(ஆதி யங்குமரன் அவ்)

ஆதி யங்குமரன் அவ்வழி பொற்றேர்
     மீது செல்லுதலும் விண்முகில் பல்வே
          றோதும் வண்ணமுடன் உற்றென வானில்
               பூத சேனைபுடை போயின அன்றே. ......    114

(போர ழிந்துபுற)

போர ழிந்துபுற கிட்டெதிர் பூதர்
     ஆரும் நேர்ந்துதொழு தாற்றலொ டெய்த
          நார ணன்றனது நன்மரு கானோன்
               தார கன்திகழ் சமர்க்களம் உற்றான். ......    115

(கவன மோடுபடர்)

கவன மோடுபடர் காலினு முந்திச்
     சிவன்ம கன்றனது சேனைய தானோர்
          உவரி யாமென உறுந்திறம் நோக்கி
               அவுணர் தானையை அணிந்தெதிர் சென்றார். ......    116

(சகந்து திக்கவரு)

சகந்து திக்கவரு சாரதர் தாமும்
     அகந்தை யுற்றஅவு ணத்தொகை யோரும்
          இகந்த வன்மையொ டெதிர்ந்திகல் எய்தி
               வெகுண்டு பேரமர் விளைத்திட லுற்றார். ......    117

(கரங்கொள் நேமி)

கரங்கொள் நேமிகள் கணிச்சிகள் தீவாய்ச்
     சரங்க ளாதியன தானவர் விட்டார்
          உரங்கொள் மால்வரைகள் ஓங்குமெ ழுக்கள்
               மரங்கள் விட்டனர் மறங்கெழு பூதர். ......    118

(முரிந்த தேர்நிரை)

முரிந்த தேர்நிரை முடிந்தன மாக்கள்
     நெரிந்த தானவர் நெடுந்தலை சோரி
          சொரிந்த பூதர்மெய் துணிந்தன வானில்
               திரிந்த பாறுகள் செறிந்தன வன்றே. ......    119

(நிறங்கொள் செங்கு)

நிறங்கொள் செங்குருதி நீத்தம தாகிக்
     கறங்கி யோடின கவந்தமொர் கோடி
          மறங்கொ டாடுவ வயின்தொறு மாகிப்
               பிறங்கு கின்றன பிணங்கெழு குன்றம். ......    120

(அனைய வாறிவர்)

அனைய வாறிவர் அருஞ்சம ராற்றப்
     புனையல் வாகையுள பூதர்கள் தம்மால்
          வினையம் வல்லவுணர் வெவ்வலி சிந்தி
               இனைத லோடுமிரி குற்றனர் அன்றே. ......    121

(தன்ப டைத்தொலை)

தன்ப டைத்தொலைவு தாரகன் நோக்கிக்
     கொன்ப டைத்தகுனி விற்குனி வித்தே
          மின்ப டைத்தபல வெங்கணை தூவி
               வன்ப டைக்கணம் வருந்த நடந்தான். ......    122

(நடந்தெ திர்ந்த)

நடந்தெ திர்ந்தகண நாதரை யெல்லாந்
     தொடர்ந்து பல்கணை சொரிந்து துரந்தே
          இடந்தி கழ்ந்தஇமை யத்திறை நல்கும்
               மடந்தை தந்ததிரு மைந்தன்முன் உற்றான். ......    123

(உற்ற காலைதனில் ஒற்ற)

உற்ற காலைதனில் ஒற்றரை நோக்கிச்
     சற்று நீதியறு தாரக வெய்யோன்
          செற்றம் என்னுமழல் சிந்தையின் மூள
               மற்றி வன்கொல்அரன் மாமகன் என்றான். ......    124

(என்ன லுங்குமரன்)

என்ன லுங்குமரன் இங்கிவ னேயாம்
     மன்ன என்றிடலும் மற்றவன் ஏறுந்
          துன்னு தேர்கடிது தூண்டி எவர்க்கும்
               முன்ன வன்மதலை முன்னுற வந்தான். ......    125

வேறு

(முழுமதி யன்னஆறு)

முழுமதி யன்னஆறு முகங்களும் முந்நான் காகும்
     விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும்
          அழகிய கரமீ ராறும் அணிமணித் தண்டை யார்க்குஞ்
               செழுமல ரடியுங் கண்டான் அவன்தவஞ் செப்பற் பாற்றோ. ......    126

(தற்பம துடைய)

தற்பம துடைய சிந்தைத் தாரகன் இனைய வாற்றால்
     சிற்பர மூர்த்தி கொண்ட திருவுரு வனைத்தும் நோக்கி
          அற்புத மெய்தி நம்மேல் அமர்செய வந்தா னென்றால்
               கற்பனை கடந்த ஆதிக் கடவுளே இவன்கொ லென்றான். ......    127

(இந்தவா றுன்னி)

இந்தவா றுன்னிப் பின்னர் யார்க்குமே லாகும் ஈசன்
     தந்ததோர் வரமும் வீரத் தன்மையும் வன்மைப் பாடும்
          முந்துதாம் பெற்ற சீரும் முழுவதும் நினைந்து சீறிக்
               கந்தவேள் தன்னை நோக்கி இனையன கழற லுற்றான். ......    128

(நாரணன் றனக்கு)

நாரணன் றனக்கு மற்றை நான்முகன் றனக்கும் வெள்ளை
     வாரணன் றனக்கு மல்லால் மதிமுடி அமல னுக்குந்
          தாரணி தனில்எ மக்குஞ் சமரினை இழைப்ப இங்கோர்.
               காரண மில்லை மைந்தா வந்ததென் கழறு கென்றான். ......    129

(அறவினை புரிந்தே)

அறவினை புரிந்தே யார்க்கும் அருளொடு தண்டஞ் செய்யும்
     இறையவ னாகும் ஈசன் இமையவர் தம்மை நீங்கள்
          சிறையிடை வைத்த தன்மை திருவுளங் கொண்டு நுந்தம்
               விறலொடு வன்மை சிந்த விடுத்தனன் எம்மை யென்றான். ......    130

வேறு

(கூரிய வேற்படைக் குமர)

கூரிய வேற்படைக் குமர நாயகன்
     பேரருள் நிலைமையால் இனைய பேசலும்
          போரினை இழைத்திடும் பூட்கை மாமுகத்
               தாரக னென்பவன் சாற்றல் மேயினான். ......    131

(செந்திருத் திகழு)

செந்திருத் திகழுமார் புடைய செங்கணான்
     சுந்தரக் கலுழன்மேல் தோன்றிப் போர்செய்தே
          அந்தரக் கதிர்புரை ஆழி உய்த்ததென்
               கந்தரத் தணிந்தது காண்கி லாய்கொலோ. ......    132

(இன்றுகா றெம்)

இன்றுகா றெம்முடன் இகலிப் போர்செயச்
     சென்றுளார் யாவருஞ் சிறிது போழ்தினுட்
          பொன்றுவார் இரிந்தனர் போவ ரல்லது
               வென்றுளார் இலையது வினவ லாய்கொலோ. ......    133

(முட்டிவெஞ் சமரி)

முட்டிவெஞ் சமரினை முயல முன்னம்நீ
     விட்டிடு தலைவரை வென்று வெற்பினில்
          பட்டிட இயற்றினன் பலக ணங்களை
               அட்டனன் அவற்றினை அறிந்தி லாய்கொலோ. ......    134

(ஆகையால் எம்முடன்)

ஆகையால் எம்முடன் அமரி யற்றியே
     சோகம தடையலை சூல பாணிபால்
          ஏகுதி பாலநீ என்று கூறலும்
               வாகையங் குமரவேள் மரபிற் கூறுவான். ......    135

(தாரணி மறையவன்)

தாரணி மறையவன் ததீசி தன்மிசை
     நாரணன் விடுத்ததோர் நலங்கொள் ஆழிதன்
          கூரினை இழந்துபோய்க் குலாலன் சக்கர
               நீர்மைய தானது வினவ லாய்கொல்நீ. ......    136

(சூற்புயல் மேனியான்)

சூற்புயல் மேனியான் துங்கச் செங்கையின்
     பாற்படு திகிரிபோற் பழியில் துஞ்சுமோ
          வேற்புறு படைக்கெலாம் இறைவ னாகுநம்
               வேற்படை நின்னுயிர் விரைவின் உண்ணுமால். ......    137

(உங்கள்பே ராற்றல்)

உங்கள்பே ராற்றல்இவ் வுலகை வென்றன
     இங்குநாம் வருதலும் இமைப்பின் மாய்ந்தன
          அங்கண்மா ஞாலமுண் டமரும் ஆரிருள்
               பொங்குபே ரொளிவர விளிந்து போனபோல். ......    138

(ஈட்டிய மாயைகள்)

ஈட்டிய மாயைகள் எவையுந் தன்வழிக்
     காட்டிய கிரியையுங் கள்வ நின்னையுந்
          தீட்டிய வேல்கொடு செற்றுச் சேனையை
               மீட்டிடு கின்றனன் விரைவி னாலென்றான். ......    139

(என்றலுஞ் சீறியே)

என்றலுஞ் சீறியே இகலித் தாரகன்
     குன்றுறழ் தன்சிலை குனியக் கோட்டியே
          மின்றிகழ் நாணொலி எடுப்ப விண்மிசைச்
               சென்றிடும் அமரருந் தியக்க மெய்தினார். ......    140

(எய்திய காலையில்)

எய்திய காலையில் எந்தை கந்தவேள்
     கைதனில் இருந்ததோர் கார்மு கந்தனை
          மொய்தனில் வாங்கிநாண் முழக்கங் கோடலும்
               ஐதென உலகெலாம் அழுங்கிற் றென்பவே. ......    141

(நாரியின் பேரொலி)

நாரியின் பேரொலி நாதன் கோடலும்
     ஆரணன் முதலினோர் தாமும் அஞ்சினார்
          பேருல கெங்கணும் பேதுற் றேங்கின
               தாரக முதல்வனுந் தலைது ளக்கினான். ......    142

(துளக்கிய தாரக)

துளக்கிய தாரக சூரன் கைத்தலங்
     கொளற்குரி வில்லுமிழ் கொள்கைத் தாலென
          வளக்கதிர் நுனைகெழு வயிர வான்கணை
               அளக்கரும் எண்ணில ஆர்த்துத் தூண்டினான். ......    143

(ஆயதோர் காலையில்)

ஆயதோர் காலையில் ஆறு மாமுகன்
     மீயுயர் சிலைதனில் விரைவில் ஆயிரஞ்
          சாயகந் தூண்டியே தார காசுரன்
               ஏயின பகழிக ளியாவுஞ் சிந்தினான். ......    144

(சிந்திய காலையில்)

சிந்திய காலையில் செயிர்த்துத் தாரகன்
     உந்தினன் பின்னரும் ஒராயி ரங்கணை
          கந்தனும் அனையது கண்டு வல்லையின்
               ஐந்திரு பகழிதொட் டவற்றை நீக்கினான். ......    145

(மீட்டுமத் தாரகன்)

மீட்டுமத் தாரகன் விசிகம் வெஞ்சிலை
     பூட்டிய வாங்கலும் புராரி காதலன்
          ஈட்டமொ டொருகணை யேவி ஆங்கவன்
               தோட்டுணை வில்லினைத் துண்ட மாக்கினான். ......    146

வேறு

(அங்கோர் சிலையை)

அங்கோர் சிலையைக் குனித்தானது காலை தன்னில்
     எங்கோ முதல்வன் ஒருபாணியின் ஏந்து வில்லில்
          செங்கோல் வகையா யிரம்பூட்டினன் செல்ல உய்த்தான்
               வெங்கோல் நடாத்தி வருதாரக வெய்யன் மீதில். ......    147

(சேரார் பரவுந் திறல்)

சேரார் பரவுந் திறல்வேலவன் செய்கை நோக்கித்
     தாரார் முடித்தா ரகவீரன் தனது வில்லில்
          ஓரா யிரம்வா ளிகள்பூட்டினன் ஒல்லை உய்த்து
               நேராய் விரவுங் கணையாவையும் நீறு செய்தான். ......    148

(வெய்யான் அநந்த)

வெய்யான் அநந்தங் கணை தூண்ட விமலன் நல்குந்
     துய்யான் அவைகள் அறுத்துக் கணைகோடி தூண்டி
          மையார் அவுணர் புகழ்தாரக மான வேழம்
               எய்யாகும் வண்ணஞ் செறித்தானவன் யாக்கை யெங்கும். ......    149

(ஒருகோடி வாளி)

ஒருகோடி வாளி உறலோடும் உருத்து நீசன்
     இருகோடி வாளி விடஅன்னதை ஏவின் நீக்கி
          முருகோ டியதார் அசுரேசன் முகங்கொள் கையும்
               பொருகோடும் வீழ விடுத்தான்இரு புங்க வாளி. ......    150

(வந்தங் கிரண்டு)

வந்தங் கிரண்டு சரமும்பட மாயை மைந்தன்
     தந்தங்கள் கையோ டிறலோடுந் தளர்ச்சி யெய்தி
          முந்துங் கணைஆ யிரந்தன்னை முனிந்து தூண்டிக்
               கந்தன் தடந்தேர்த் துவசந்துகள் கண்டு நின்றான். ......    151

(மல்லற் கொடியிற்)

மல்லற் கொடியிற் றதுகண்டு மறங்கொள் வெய்யோன்
     வில்லைக் கணைநான் கிரண்டால் நிலமீது வீட்டித்
          தொல்லைக் கனலின் கணையாயிரந் தூண்டி யன்னோன்
               செல்லுற்ற திண்டேர் பரிபாகொடு சிந்தி நின்றான். ......    152

(வேறங் கொருதேர்)

வேறங் கொருதேர் மிசையேறியொர் வில்லை வாங்கி
     நூறைந் திருதீ விசிகந்தனை நொய்தின் ஏவி
          மாறின்றி வைகும் பரமன்வடி வான செவ்வேள்
               ஏறுந் தடந்தேர் வலவன்புயத் தெய்த உய்த்தான். ......    153

(வென்றோர் புகழு)

வென்றோர் புகழுங் குமரன்வியன் தேர்க டாவிச்
     சென்றோன் வருத்தந் தெரிந்தாயிரந் தீய வாளி
          வன்றோன் முகத்தா ரகன்நெற்றியுள் மன்ன வுய்ப்பப்
               பொன்றோய் தனது தடந்தேரில் புலம்பி வீழ்ந்தான். ......    154

(வீழுற் றிடலும்)

வீழுற் றிடலும் விழுசெம்புனல் வெள்ள மிக்கே
     தாழுற்ற பாரிற் புகுந்தேபுடை சார்த லுற்ற
          பாழிக் கடலிற் பரிமாமுகம் பட்ட செந்தீச்
               சூழிக் களிற்றின் வதனத்தினுந் தோன்று மென்ன. ......    155

(மன்னா கியதா)

மன்னா கியதா ரகன்அங்கண் மயங்கி வீழ
     அன்னான் றனது படைவீரர் அதனை நோக்கிக்
          கொன்னார் சினங்கொண் டடுபோரைக் குறித்து நம்பன்
               தொன்னாள் உதவுந் திறல்மைந்தனைச் சூழ்ந்து கொண்டார். ......    156

(சூலந் திகிரிப் படை)

சூலந் திகிரிப் படைதோமரந் துய்ய பிண்டி
     பாலஞ் சுடர்வேல் எழுநாஞ்சில் பகழி தண்டம்
          ஆலங் கணையங் குலிசாயுத மாதி யாக
               வேலும் படைகள் பொழிந்தார்த்தனர் எங்கும் ஈண்டி. ......    157

(கறுத்தான் அவர்)

கறுத்தான் அவர்தஞ் செயல்கண்டுதன் கார்மு கத்தை
     நிறுத்தா வளையாக் கணைமாமழை நீட வுய்த்து
          மறுத்தா னுடைய கொடுந்தானவர் வாகை சிந்தி
               அறுத்தான் விடுதொல்படை யாவையும் ஆடல் வேலோன். ......    158

(வெய்தாகிய தீங்க)

வெய்தாகிய தீங்கணை மாரி விசாகன் மீட்டும்
     பெய்தான் அவுணர் முடிதன்னைப் பிறங்கு மார்பைத்
          துய்தா னுறும்வா யினையங்கையைத் தோளைத் தாளைக்
               கொய்தான் குருதிக் கடலெங்கணுங் கொண்ட தன்றே. ......    159

(வில்லோர் பரவு)

வில்லோர் பரவுந் திறல்வேலவன் வெய்ய கோலால்
     அல்லோ டியதீ மனத்தானவர் ஆயி னோரில்
          பல்லோர் இறந்தார் குருதிக் கடல்பாய்ந்து நீந்திச்
               சில்லோர் கள்தத்தம் உயிர்கொண்டு சிதைந்து போனார். ......    160

(மைக்கார் சிவந்த)

மைக்கார் சிவந்த தெனுந்தாரகன் மையல் நீங்கி
     அக்காலை தன்னில் எழுந்தே அயல்போற்றி நின்று
          தொக்கார் தமையாரையுங் காண்கிலன் துன்ப மெய்தி
               நக்கான் அவர்தஞ் செயல்கண்டு நவிறல் உற்றான். ......    161

வேறு

(செய்ய வார்சடை)

செய்ய வார்சடை ஈசன் நல்கிய சிறுவன் இங்கொரு வன்பொரக்
     கையி ழந்துமு கத்தி னூடு கவின்கொள் கோடுமி ழந்தனன்
          மைய லெய்திவி ழுந்த னன்பொரும் வலிய தானையும் மாண்டன
               ஐய வீங்கொரு தமியன் நின்றனன் அழகி தாலென தாண்மையே. ......    162

(தாவில் வெஞ்சிலை)

தாவில் வெஞ்சிலை வன்மை கொண்டு சரங்கள் எண்ணில தூண்டியே
     மேவ லானிவன் உயிர்கு டிப்பதும் வெல்லு கின்றதும் அரியதால்
          தேவர் மாப்படை தொடுவ னிங்கினி யென்று சிந்தனை செய்துபின்
               ஏவரும் புகழ் தார காசுரன் இனைய செய்கை இயற்றினான். ......    163

வேறு

(அடலரி நான்முக)

அடலரி நான்முக னாதி வானவப்
     படையினை யாவையும் பவஞ்செய் தாரகன்
          விடவிட வந்தவை வெருவி மேலையோன்
               புடைதனில் ஒடுங்கியே போற்றி நின்றவே. ......    164

(செங்கண்மா லயன்)

செங்கண்மா லயன்முதற் றேவர் மாப்படை
     துங்கமொ டேகியே துளங்கி வேலுடைப்
          புங்கவன் பாங்கரிற் போற்றி நிற்றலும்
               அங்கது கண்டனன் அவுணர் மன்னவன். ......    165

(ஒருவினன் அகந்தை)

ஒருவினன் அகந்தையை உள்ள மோரிறை
     வெருவினன் விம்மிதம் மிகவு மெய்தினான்
          எரிகலுழ் விழியினன் இவனை வென்றிடல்
               அரியது போலுமென் றகத்தில் உன்னினான். ......    166

(பாங்கரின் மாது)

பாங்கரின் மாதுடைப் பரமன் தொல்படை
     ஈங்கினி விடுதுமென் றெண்ணி யப்படை
          வாங்கினன் அருச்சனை மனத்தி னாற்றினன்
               ஓங்கிருஞ் சினமுடன் ஒல்லை யேவினான். ......    167

(சங்கரன் தொல்)

சங்கரன் தொல்படை தறுகண் ஆலமும்
     புங்கவர் படைகளும் பூத ராசியும்
          அங்கத நிரைகளும் அளப்பில் சூலமும்
               வெங்கனல் ஈட்டமும் விதித்துச் சென்றதே. ......    168

(கலைகுலாம் பிறை)

கலைகுலாம் பிறைமுடிக் கடவுள் மாப்படை
     அலகிலா உயிர்களும் அண்டம் யாவையும்
          உலைகுறா தலமர வுருத்துச் சேறலும்
               இலைகுலாம் அயிலுடை எந்தை நோக்கினான். ......    169

(கந்தவேள் அனை)

கந்தவேள் அனையது கண்டு தந்தையைச்
     சிந்தையில் உன்னியோர் செங்கை நீட்டியே
          அந்தவெம் படையினை அருளிற் பற்றினான்
               தந்தவன் வாங்கிய தன்மை யென்னவே. ......    170

(நெற்றியில் விழியுடை)

நெற்றியில் விழியுடை நிமலன் காதலன்
     பற்றிய படையினைப் பாணி சேர்த்தினான்
          மற்றது தாரக வலியன் கண்ணுறீஇ
               இற்றது நந்திரு இனியென் றேங்கினான். ......    171

(தேவர்கள் தேவனார்)

தேவர்கள் தேவனார் தெய்வத் தொல்படை
     ஏவினன் அதனையும் எதிர்ந்து பற்றினான்
          மூவிரு முகமுடை முதல்வன் வன்மையை
               நாவினி லொருவரால் நவிறற் பாலதோ. ......    172

(ஆயினும் அரன்மகன்)

ஆயினும் அரன்மகன் அறத்தின் போரலால்
     தீயதோர் கைதவச் செருவ துன்னலான்
          மாயைகள் ஆற்றியே மறைந்து நின்றுநான்
               ஏயென இயற்றுவன் அமரென் றெண்ணினான். ......    173

(கையனும் இவ்வகை)

கையனும் இவ்வகை கருத்தி லுன்னியே
     ஒய்யென வேகிர வுஞ்ச வெற்பின்முன்
          வையமொ டேகிநீ வல்ல மாயைகள்
               செய்குதி செய்குதி யென்று செப்பினான். ......    174

வேறு

(செப்பிய இறுவரை)

செப்பிய இறுவரை கிரவுஞ்சந் திகழ்வுறு மாயையின் நிகழ்வுன்னி
     முப்புர வகைபல வெனநிற்ப முரணுறு தாரக முதல்வன்றான்
          அப்புர நிருதர்க ளெனநின்றான் அகல்வரை பலபல முகிலாக
               ஒப்பறு சூரன திளையோனும் உருமென அவையிடை உலவுற்றான். ......    175

(வேலைக ளுருவினை)

வேலைக ளுருவினை வரைகொள்ள விசயம துடையதொ ரசுரேசன்
     காலம திறுதியில் உலகுண்ணுங் கனையொலி அனலிக ளெனநின்றான்
          சீலமின் முதுகிரி நெடுநேமித் திருவரை சூழ்தரும் இருளாக
               மால்கரி முகமுள அவுணன்றான் வரையறு பாரிட நிரையானான். ......    176

(இந்திரன் முதலுள)

இந்திரன் முதலுள சுரர்வைகும் ஏழுட னொருதிசை வேழம்போல்
     அந்தநெ டுங்கிரி வரலோடும் அருகினில் உறுகுல கிரியாகித்
          தந்தியின் முகமுள அவுணன்றான் சடசட முதிரொலி யுடன்வந்தான்
               முந்திய தந்தம துருமாறி முறைமுறை நின்றதொர் திறனேபோல். ......    177

(வாயுவின் உருவென)

வாயுவின் உருவென மலைசெல்ல மதகரி முகமுள பதகன்றான்
     தேயுவின் உருவென வரலுற்றான் திரியவும் நெடுவரை விரைவோடுங்
          காய்கனல் உகுஞெகி ழிகளாகிக் ககனம திடையுற மிடைகாலை
               ஆயிர கோடிவெய் யவரேபோல் அலமர லுற்றனன் அறமில்லான். ......    178

(அவ்வகை தாரகன்)

அவ்வகை தாரகன் வரையோடும் அளவறு மாயையின் வடிவெய்தி
     எவ்விடை யுஞ்செறி தரலோடும் எம்பெரு மானவன் இவைகாணாத்
          தெவ்வலி கொண்டுறும் இவனாவி சிந்துவன் என்றுள மிசைகொண்டே
               கைவரு வேற்படை தனைநோக்கி இனையன சிலமொழி கழறுற்றான். ......    179

(தாரகன் என்பதோர்)

தாரகன் என்பதோர் பேரோனைச் சஞ்சல முறுகிர வுஞ்சத்தை
     ஓரிறை செல்லுமுன் உடல்கீறி உள்ளுயி ருண்டுபு றத்தேகிப்
          பாரிடர் தம்மை இலக்கத்தொன் பதின்மர்க ளாக உரைக்கின்ற
               வீரரை மீட்டிவண் வருகென்றே வேற்படை தன்னை விடுத்திட்டான். ......    180

(சேயவன் விட்டிடு)

சேயவன் விட்டிடு தனிவைவேல் செருமுயல் தாரகன் வரையோடும்
     ஆயிடை செய்த புணர்ப்பெல்லாம் அகிலமும் அழிதரு பொழுதின்கண்
          மாயையி னாகிய வுலகெங்கும் மலிதரு முயிர்களும் மதிசூடுந்
               தூயவன் விழியழல் சுடுமாபோல் துண்ணென அட்டது சுரர்போற்ற. ......    181

வேறு

(அரண்டரு கழற்கால்)

அரண்டரு கழற்கால் ஐயன் அறுமுகத் தெழுந்த சீற்றந்
     திரண்டொரு வடிவின் வேறாய்ச் சென்றதே யெனவு நான்கு
          முரண்டரு தடந்தோள் அண்ணல் முத்தலை படைத்த சூலம்
               இரண்டொரு படையாய் வந்த தென்னவும் ஏகிற் றவ்வேல். ......    182

(முடித்திடல் அரிய)

முடித்திடல் அரிய மாய மூரிநீர்க் கடலை வற்றக்
     குடித்திடு கின்ற செவ்வேற் கூற்றம்வந் திடுத லோடுந்
          தடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்த் தாரகன் இதனைப் பற்றி
               ஒடித்திடு கிற்பேன் என்னா ஒல்லென உருத்து வந்தான். ......    183

(அச்சமொர் சிறிது)

அச்சமொர் சிறிதுமில்லா அவுணர்கோன் உவணன் மேற்செல்
     நச்சர வென்னச் சீறி நணுகலும் அவன்மார் பென்னும்
          வச்சிர வரையின் மீது வானுரும் ஏறுற் றென்னச்
               செச்சையந் தெரியல் வீரன் செலுத்தும்வேல் பட்ட தன்றே. ......    184

(தாரகன் மார்ப மென்)

தாரகன் மார்ப மென்னுந் தடம்பெரு வரையைக் கீண்டு
     சீரிய கிரவுஞ் சத்திற் சேர்ந்துபட் டுருவிச் சென்று
          வீரமும் புகழுங் கொண்டு விளங்கிய தென்ன அங்கட்
               சோரியுந் துகளும் ஆடித் துண்ணென மீண்ட தன்றே. ......    185

(மீண்டிடு சீற்ற)

மீண்டிடு சீற்ற வைவேல் வெற்பினுள் துஞ்சு கின்ற
     ஆண்டகை வீரர்தம்மை ஆயிடை யெழுப்பி வான்போய்
          மாண்டகு கங்கை தோய்ந்து வாலிய வடிவாய் ஐயன்
               தூண்டிய கரத்தில் வந்து தொன்மைபோல் இருந்த தம்மா. ......    186

(தண்டம தியற்று)

தண்டம தியற்றுங் கூர்வேல் தாரக வவுணன் மார்பும்
     பண்டுள வரையும் பட்டுப் பறிந்தபே ரோசை கேளா
          விண்டது ஞால மென்பார் வெடித்தது மேரு வென்பார்
               அண்டம துடைந்த தென்பா ராயினர் அகிலத் துள்ளோர். ......    187

(வடித்ததை யன்ன)

வடித்ததை யன்ன கூர்வேல் மார்பையூ டறுத்துச் செல்லத்
     தடித்திடு கின்ற யாக்கைத் தாரகன் அநந்த கோடி
          இடித்தொகை யென்ன ஆர்த்திட் டிம்மென எழுந்து துள்ளிப்
               படித்தலந் தன்னில் வீழ்ந்து பதைபதைத் தாவி விட்டான். ......    188

(தடவரை யனை)

தடவரை யனைய மொய்ம்பில் தாரகன் வேலாற் பட்டுப்
     புடவியில் வீழா நின்றான் பொள்ளென வானில் துள்ளிக்
          கடலுடைந் தென்ன ஆர்க்குங் காலையில் கலக்க மெய்தி
               உடுகணம் உதிர்ந்த தஞ்சி யோடினன் இரவி யென்போன். ......    189

(தளர்ந்திடல் இல்லா)

தளர்ந்திடல் இல்லா வீரத் தாரகன் பட்டு வானில்
     கிளர்ந்தனன் வீழு மெல்லைக் கீழுறு பிலமும் பாரும்
          பிளந்தன வரைகள் யாவும் பிதிர்ந்தன அதிர்ந்த தண்டம்
               உளந்தடு மாறி யோலிட் டோடின திசையில் யானை. ......    190

(தண்ணளி சிறிது)

தண்ணளி சிறிது மில்லாத் தாரகன் கிளர்ந்து வான்போய்
     மண்ணிடை மறிந்த தன்மை வன்சிறை இழந்த நாளில்
          திண்ணிய மேரு இன்னுஞ் செல்லலாங் கொல்லென் றுன்னி
               விண்ணிடை யெழுந்து வல்லே வீழ்ந்ததே போலும் அன்றே. ......    191

(வெற்றிய தாகுங்)

வெற்றிய தாகுங் கூர்வேல் வெற்பினை அட்ட காலைச்
     செற்றிய பூழி யீட்டஞ் சிதறிய பொறிக ளெங்கும்
          பற்றிய புகையும் வந்து பரந்தன கரந்த தண்டம்
               வற்றிய கடல்கள் வானிற் கங்கையும் வறந்த தன்றே. ......    192

(சிறந்திடு மாய)

சிறந்திடு மாய வெற்பைத் திருக்கைவேல் பொடித்த காலைப்
     பிறந்திடு கின்ற தீயைத் தீயெனப் பேச லாமோ
          அறிந்தவர் தெரியில் குன்றம் அவுணனா கையினான் மெய்யில்
               உறைந்திடு குருதி துள்ளி உகுத்தவா றாகு மன்றே. ......    193

(யானுற்ற குன்ற)

யானுற்ற குன்றந் தன்னை யெறிந்தனன் என்று செவ்வேள்
     தானுற்ற நதியை வந்து தடிந்ததே என்ன வெற்பில்
          ஊனுற்ற நெடுவேல் பாய உதித்திடும் பொறியின் ஈட்டம்
               வானுற்ற கங்கை புக்கு வறந்திடு வித்த தன்றே. ......    194

(திறலுடை நெடுவேல்)

திறலுடை நெடுவேல் அட்ட சிலம்பினில் சிதறித் தோன்றும்
     பொறிகளுந் துகளும் ஆர்ப்பும் பொள்ளெனச் செறிந்த தன்மை
          மறிகடல் முழுதும் அங்கண் வடவையும் அடைந்தொன் றாகி
               இறுதியில் உலகங் கொள்ள எழுந்தது போலும் மாதோ. ......    195

(தந்தியின் வதன)

தந்தியின் வதனங் கொண்ட தாரக வவுணன் மார்பில்
     சிந்துறு குருதிச் செந்நீர் திரைபொரு தலைத்து வீசி
          அந்தமில் நீத்த மாகி அயிற்படை அட்ட குன்றில்
               வந்திடு பூழை*1 புக்கு மறிகடல் மடுத்த தன்றே. ......    196

(விட்டவேல் மீண்டு)

விட்டவேல் மீண்டு கந்த வேள்கரத் திருப்பத் தீயோன்
     பட்டதும் வெற்பு மாய்ந்த பான்மையும் அவுணர் யாருங்
          கெட்டது நோக்கி மாலுங் கேழ்கிளர் கமலத் தேவும்
               முட்டிலா மகத்தின் வேந்தும் முனிவருஞ் சுரரும் ஆர்த்தார். ......    197

(ஆடினர் குமர)

ஆடினர் குமரற் போற்றி அங்கைக ளுச்சி மீது
     சூடினர் தண்பூ மாரி தூர்த்தனர் அவனைச் சூழ்ந்து
          பாடினர் தொழுது முன்னம் பன்முறை பணிந்து நின்றார்
               நீடிய வுவகை யென்னும் நெடுங்கடல் ஆழும் நீரார். ......    198

(ஆங்கது காலை தன்னில் அள)

ஆங்கது காலை தன்னில் அளப்பிலா மாயை வல்ல
     ஓங்கல திறப்ப அங்கண் உறங்கிய வீர ரெல்லாந்
          தீங்குறு மையல் நீங்கிக் கதுமெனச் சென்று செவ்வேள்
               பூங்கழல் வணங்கி நின்று போற்றியே புடையின் நின்றார். ......    199

(வாருறு கழற்கால்)

வாருறு கழற்கால் வீர வாகுவே முதலா வுள்ள
     வீரர்கள் தம்மை யெல்லாம் வேலுடைக் கடவுள் நோக்கித்
          தாரகன் வரை*2 யுட் பட்டுத் தகுமுணர் வின்றி நீவிர்
               ஆருநொந் தீர்கள் போலும் மாயையூ டழுந்தி யென்றான். ......    200

(செய்யவன் இனைய)

செய்யவன் இனைய வாறு சீரருள் புரிய வீரர்
     ஐயநின் னருளுண் டாக அடியம்ஊ றடைவ துண்டோ
          மையலோ டுறங்கு வார்போல் மருவுமின் புற்ற தன்றி
               வெய்யதோர் கிரிமா யத்தால் மெலிந்திலம் இறையு மென்றார். ......    201

(என்றலும் வீர மொய்)

என்றலும் வீர மொய்ம்பின் ஏந்தலை விளித்துச் செவ்வேள்
     வென்றிகொள் சூரன் பின்னோன் விட்டிடத் தான்முற் கொண்ட
          வன்றிறற் படையின் வேந்தை*3 மற்றவன் கரத்தின் நல்கி
               நன்றிது போற்று கென்றே நவின்றுநல் லருள்பு ரிந்தான். ......    202

(தாரகன் போரில்)

தாரகன் போரில் துஞ்சுஞ் சாரதர் தம்மை யெல்லாம்
     ஆருநீர் எழுதிர் என்னா அவரெலாம் எழவே செய்து
          பாரிட வனிகஞ் சூழப் பண்ணவர் பரவல் செய்யச்
               சீரிய வயவர் ஈண்டச் செருநிலம் அகன்றான் செவ்வேள். ......    203

ஆகத் திருவிருத்தம் - 1531




*1. பூழை - துவாரம்.

*2. தாரகன்வரை - தாரகாசுரனது ஆட்சிக்குட்பட்ட மலை.

*3. படையின் வேந்து - பாசுபதாஸ்திரம்.



previous padalam   20 - தாரகன் வதைப்படலம்   next padalamthAragan vathaippadalam

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]