(கண்ணுதல் விடை)
கண்ணுதல் விடைபெற் றரியயன் மகவான் கடவுளர் தம்மொடு கடிதின்
அண்ணலங் குமரன் தன்னொடு சென்றே அயல்வரும் மருத்தினை நோக்கித்
தண்ணளி புரியும் அறுமுகத் தெந்தை தனிப்பெருந் தேர்மிசை நீபோய்ப்
பண்ணொடு முட்கோல் மத்திகை பரித்துப் பாகனாய்த் தூண்டெனப் பணித்தான். ......
1(மன்புரி திருமால்)
மன்புரி திருமால் இனையன பணிப்ப மாருதன் இசைந்துவான் செல்லும்
பொன்பொலி தேரின் மீமிசைப் பாய்ந்து பொருக்கென மருத்துவர் நாற்பான்
ஒன்பது திறத்தார் புடைவரத் தூண்டி உவகையோ டறுமுகத் தொருவன்
முன்புற வுய்த்துத் தொழுது மற்றிதன்மேல் முருகநீ வருகென மொழிந்தான். ......
2(மாருதன் இனைய)
மாருதன் இனைய புகன்றுகை தொழலும் மற்றவன் செயற் கையை நோக்கிப்
பேரருள் புரிந்து கதிரிளம் பரிதி பிறங்குசீர் உதயமால் வரைமேல்
சேருவ தென்னக் குமரவேள் அனைய செழுமணி இரதமேற் செல்லச்
சூரினி இறந்தான் என்றுவா சவனுஞ் சுரர்களும் ஆர்த்தனர் துள்ளி. ......
3வேறு(ஓங்கு தேர்மிசை)
ஓங்கு தேர்மிசைக் குமரவேள் மேவலும் உவப்பால்
ஆங்க வன்றன தருள்பெருந் திறலினோர் அணுகிப்
பாங்கர் நண்ணினர் முனிவருந் தேவர்கள் பலரும்
நீங்க லின்றியே அவர்புடை சூழ்ந்தனர் நெறியால். ......
4(இனந்த னோடவர்)
இனந்த னோடவர் முருகனை அடைதலும் இருநீர்
புனைந்த சென்னியன் கயிலையில் இருந்தவெம் பூதர்
அனந்த வெள்ளத்தில் இராயிர மாகும்வெள் ளத்தர்
வனைந்த வார்கழற் றலைவர்தம் முரைகொடு வந்தார். ......
5(எழுவி யன்கதை)
எழுவி யன்கதை நேமிவெஞ் சூலம்வாள் எறிவேல்
மழுமு தற்படை யாவையும் ஏந்திய வலியோர்
நிழன்ம திப்பிறை ஞெலிந்தென*
1 நிலாவுமிழ் எயிற்றர்
அழலு குத்திடும்*
2 விழியினர் அசனியின் அறைவார். ......
6(நெடியர் சிந்தினர்)
நெடியர் சிந்தினர் குறியினர் ஐம்பெரு நிறனும்
வடிவில் வீற்றுவீற் றெய்தினர் வார்சடைக் கற்றை
முடியர் குஞ்சியர் பலவத னத்தரோர் முகத்தர்
கொடிய ரென்னினும் அடைந்தவர்க் கருள்புரி குணத்தோர். ......
7(நீறு கண்டிகை)
நீறு கண்டிகை புனைதரும் யாக்கையர் நெடுநஞ்
சேறு கண்டனை அன்றிமற் றெவரையும் எண்ணார்
மாறு கொண்டவர் உயிர்ப்பலி நுங்குவோர் மறலி
வீறு கொண்டதொல் படைதனைப் படுத்திடு மேலோர். ......
8(அண்டம் யாவையும் ஆண்டு)
அண்டம் யாவையும் ஆண்டுறை உயிர்த்தொகை யனைத்தும்
உண்டு மிழ்ந்திட வல்லவர் அன்றியும் உதரச்
சண்ட அங்கியா லடுபவர் அட்டவை தம்மைப்
பண்டு போற்சிவன் அருளினால் வல்லையிற் படைப்போர். ......
9(முன்னை வைகலின் இற)
முன்னை வைகலின் இறந்திடும் இந்திரன் முதலோர்
சென்னி மாலைகந் தரத்தினில் உரத்தினில் சிரத்தில்
கன்ன மீதினில் கரத்தினில் மருங்கினில் கழலில்
பொன்னின் மாமணிக் கலனொடும் விரவினர் புனைவார். ......
10(இந்த வண்ணமா)
இந்த வண்ணமாஞ் சாரதப் படையினர் ஈண்டித்
தந்தம் வெஞ்சமர்த் தலைவர்க ளோடுசண் முகன்பால்
வந்து கைதொழு தேத்தியே இறுதி சேர்வைகல்
அந்த மில்புனல் அண்டம துடைந்தென ஆர்த்தார். ......
11(ஆர்த்த சாரதர்)
ஆர்த்த சாரதர் எந்தைபா லாயினர் அதுகால்
பேர்த்தும் ஆயவர் இடித்தெனப் பூதரில் பெரியோர்
வார்த்த யங்கிய தண்ணுமை திமிலைவான் படகஞ்
சீர்த்த காகள முதலிய இயம்பினர் சிலரே. ......
12(ஆன காலையில் அது)
ஆன காலையில் அதுதெரிந் தறுமுகத் தொருவன்
வான ளாவிய புணரிகள் சூழ்ந்திட வயங்கும்
பானு நாயகன் வந்தெனப் பரந்துபா ரிடத்துச்
சேனை சூழ்தரக் கயிலைநீத் தவனிமேற் சென்றான். ......
13(கொள்ளை வெஞ்சின)
கொள்ளை*
3 வெஞ்சினச் சாரதர் இராயிரங் குணித்த
வெள்ளம் வந்திடக் கந்தவேள் அவனிமேல் மேவக்
கள்ள வான்படை அவுணர்கள் கலந்துசூழ்ந் தென்னப்
பொள்ளெ னத்துகள் எழுந்தது வளைந்தது புவியை. ......
14(எழுத ருந்துகள்)
எழுத ருந்துகள் மாதிர வரைப்பெலாம் ஏகி
ஒழியும் வான்பதஞ் சென்றதால் ஆங்கவை யுறுதல்
குழுவின் மல்கிய சாரதர் ஆர்ப்புமுன் குறுகி
மொழிதல் போன்றன விண்ணுளோர் இமைப்பில்கண் மூட. ......
15(கழிய டைத்திடு)
கழிய டைத்திடு நேமிகள் பலவொடு ககன
வழிய டைத்திடு பூழியும் ஒலியும்மன் னுயிர்கள்
விழிய டைத்தன நாசியை யடைத்தன விளம்பு
மொழிய டைத்தன அடைத்தன கேள்வியின் மூலம்*
4. ......
16(பேரி டங்களாந்த)
பேரி டங்களாந் தனுவுடைப் பூதர்கள் பெயரப்
பாரி டங்கள்தாம் இடம்பெறா ஆதலிற் பல்லோர்
காரி டங்கொளும் வான்வழிச் சென்றனர் கண்டோர்
ஓரி டங்களும் வெள்ளிடை இலதென வுரைப்ப. ......
17(அவனி வானெலாம்)
அவனி வானெலாம் பூழியால் மறைத்தலும் அதனைச்
சிவன்ம கன்றன தொளியினால் அகற்றினன் செல்வான்
கவன வாம்பரி இரதமேற் பனிபடுங் காலைத்
தவன நாயகன்*
5 அதுதடிந் தேகுதன் மையைப் போல். ......
18ஆகத் திருவிருத்தம் - 1328