(குருமணி மகுடம்)
குருமணி மகுடம் ஆறுங் குழைகளுந் திருவில் வீசத்
திருமணி வரையின் மேவுந் திருக்கைவேற் பெருமா னுக்குக்
கருமணி யாழிப் புத்தேள் கையுறை யாக ஆங்கோர்
பருமணி நீட்டிற் றென்னப் பானுவந் துதயஞ் செய்தான். ......
1வேறு(மங்குல் வானமேல்)
மங்குல் வானமேல் வெய்யவன் கதிரென வழங்குஞ்
செங்கை கூப்பியே தொழுதிடு வானெனச் செல்ல
அங்கவ் வேலையில் அறுமுகன் கடவுள்வெற் பகன்று
பொங்கு தானையும் அமரருஞ் சூழ்தரப் போந்தான். ......
2(தன்னை நீக்கியே)
தன்னை நீக்கியே சூழ்வுறுந் தவமுடைப் பிருங்கி
உன்னி நாடிய மறைகளின் முடிவினை யுணரா
என்னை யாளுடை யானிடஞ் சேர்வன்என் றிமையக்
கன்னி பூசனை செய்தகே தாரமுன் கண்டான். ......
3(பைய ராவின்மேற்)
பைய ராவின்மேற் கண்டுயில் பண்ணவன் றனக்குந்
தையல் பாதிய னேபரம் பொருளெனுந் தன்மை
மையல் மானுடர் உணர்ந்திட மறைமுனி யெடுத்த
கைய தேயுரைத் திட்டதோர் காசியைக் கண்டான். ......
4(பருப்ப தப்பெயர்)
பருப்ப தப்பெயர்ச் சிலாதனற் பாலகன் பரமன்
இருப்ப வோர்வரை யாவனென் றருந்தவம் இயற்றிப்
பொருப்ப தாகியே ஈசனை முடியின்மேற் புனைந்த
திருப்ப ருப்பதத் தற்புதம் யாவையுந் தெரிந்தான். ......
5(அண்டம் மன்னுயிர்)
அண்டம் மன்னுயிர் ஈன்றவ ளுடன்முனி வாகித்
தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
மண்டு பாதலத் தேகியே யோர்குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான். ......
6(சிலந்தி மாசுணம்)
சிலந்தி மாசுணம் மும்மதக் கரிசிவ கோசன்
மலைந்தி டுஞ்சிலை வேட்டுவன் கீரனே மடவார்
பலந்த ரும்வழி பாட்டினால் பாட்டினாற் பரனைக்
கலந்து முத்திசேர் தென்பெருங் கயிலையுங் கண்டான். ......
7(கொடிய வெஞ்சினக் காளி)
கொடிய வெஞ்சினக் காளியிக் குவலய முழுதும்
முடிவு செய்வன்என் றெழுந்தநாள் முளரியான் முதலோர்
அடைய அஞ்சலும் அவள்செருக் கழிவுற வழியாக்
கடவுள் ஆடலால் வென்றதோர் வடவனங் கண்டான். ......
8(அம்பு ராசிகொள்)
அம்பு ராசிகொள் பிரளயத் தினுமழி வின்றி
உம்பர் மாலயற் குறையுளாய்க் கயிலைபோ லொன்றாய்
எம்பி ரான்தனி மாநிழல் தன்னில்வீற் றிருக்குங்
கம்பை சூழ்தரு காஞ்சியந் திருநகர் கண்டான். ......
9(ஏல வார்குழல்)
ஏல வார்குழல் உமையவள் பூசைகொண் டிருந்த
மூல காரண மாகிய முதல்வன்ஆ லயமும்
மாலும் வேதனும் அமரரும் வழிபடு மற்றை
ஆல யங்களாய் உள்ளவுங் கண்டனன் ஐயன். ......
10வேறு(என்னிகர் எவரு)
என்னிகர் எவரு மில்லென் றிருவரும் இகலும் எல்லை
அன்னவர் நடுவு தோன்றி அடிமுடி தெரியா தாகி
உன்னினர் தங்கட் கெல்லாம் ஒல்லையின் முத்தி நல்கித்
தன்னிகர் இன்றி நின்ற தழற்பெருஞ் சயிலங் கண்டான். ......
11(மண்ணுல கிறைவன்)
மண்ணுல கிறைவன் செய்யும் மணந்தனை விலக்கி எண்டோள்
அண்ணலோர் விருத்தன் போல்வந் தாவண வோலை காட்டித்
துண்ணென வழக்கில் வென்று சுந்தரன் றனையாட் கொள்ளும்
பெண்ணையம் புனல்சூழ் வெண்ணெய்ப் பெரும்பதி தனையும் கண்டான். ......
12(தூசினால் அம்மை)
தூசினால் அம்மை வீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா வுயிர்கட் கெல்லாம் அஞ்செழுத் தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடு மியல்பால் அந்தக்
காசியின் விழுமி தான முதுகுன்ற வரையுங் கண்டான். ......
13(விரிகனல் வேள்வி)
விரிகனல் வேள்வி தன்னில் வியன்றலை அரிந்து வீட்டிப்
பொருவரு தவத்தை யாற்றும் பதஞ்சலி புலிக்கால் அண்ணல்
இருவரும் உணர்வாற் காண எல்லையில் அருளா லீசன்
திருநட வியற்கை காட்டுந் தில்லைமூ தூரைக் கண்டான். ......
14(தண்டளிர்ச் சோலை)
தண்டளிர்ச் சோலைத் தில்லைத் தபனிய மன்றி லென்றுந்
தொண்டையங் கனிவாய் மாது தொழச்சுராட் புருடன் உள்ளத்
தண்டரு மதிக்க லாற்றா அற்புதத் தனிக்கூத் தாடல்
கண்டனன் கசிவால் உள்ளங் களிப்புற வணங்கிப் போனான். ......
15(குடமுனி கரத்தில்)
குடமுனி கரத்தில் ஏந்துங் குண்டிகை இருந்து நீங்கிப்
படிதனில் வேறு வேறாய்ப் பற்பல நாமந் தாங்கிக்
கடல்கிளர்ந் தென்னச் செல்லுங் காவிரி யென்னு மாற்றின்
வடகரை மண்ணி யின்பால் வந்தனன் கருணை வள்ளல். ......
16ஆகத் திருவிருத்தம் - 1644