(மேடமூர்தி யாக)
மேடமூர்தி யாகவுய்த்து விண்ணுமண்ணும் முருகவேள்
ஆடல்செய் துலாவிவெள்ளி யசலமீதில் அமர்தரும்
நீடுநாளில் ஒருபகற்கண் நெறிகொள்வேதன் முதலினோர்
நாடியீசன் அடிவணங்க அவ்வரைக்கண் நண்ணினார். ......
1(எனாதியா னெனு)
எனாதியா னெனுஞ்செருக் கிகந்துதன் னுணர்ந்துளார்
மனாதிகொண்ட செய்கை தாங்கி மரபின்முத்தி வழிதரும்
அனாதியீசன் அடிவணங்கி அருளடைந்து மற்றவன்
தனாதுமன்றம் நீங்கிவாயில் சாருகின்ற வேலையில். ......
2(ஒன்பதோடி லக்கமான)
ஒன்பதோடி லக்கமான அனிகவீரர் உள்மகிழ்ந்
தன்பினோடு சூழ்ந்துபோற்ற அமலன் அம்பொ னாலய
முன்புநீடு கோபுரத்துள் முழுமணித் தலத்தின்மேல்
இன்பொடாடி வைகினான் இராறுதோள் படைத்துளான். ......
3(அங்கண்வைகும்)
அங்கண்வைகும் முருகன்நம்பன் அடிவணங்கி வந்திடும்
புங்கவர்க்குள் ஆதியாய போதினானை நோக்குறா
இங்குநம்முன் வருதியா லெனாவிளிப்ப ஏகியே
பங்கயாச னத்தினோன் பணிந்திடாது தொழுதலும். ......
4(ஆதிதேவன் அருளு)
ஆதிதேவன் அருளுமைந்தன் அவனுளத்தை நோக்கியே
போதனே இருக்கெனாப் புகன்றிருத்தி வைகலும்
ஏதுநீ புரிந்திடும் இயற்கையென்ன நான்முகன்
நாதனாணை யால்அனைத்தும் நான்படைப்பன் என்றனன். ......
5வேறு(முருக வேளது கேட்ட)
முருக வேளது கேட்டலும் முறுவல்செய் தருளித்
தரணி வானுயிர் முழுவதுந் தருதியே என்னில்
சுருதி யாவையும் போகுமோ மொழிகெனத் தொல்சீர்ப்
பிரமன் என்பவன் இத்திறம் பேசுதல் உற்றான். ......
6(ஐய கேளெனை)
ஐய கேள்எனை யாதிகா லந்தனில் அளித்த
மையு லாவரு களத்தினன் அளப்பிலா மறைகள்
செய்ய ஆகமம் பற்பல புரிந்ததிற் சிலயான்
உய்யு மாறருள் செய்தனன் அவையுணர்ந் துடையேன். ......
7(என்று நான்முகன்)
என்று நான்முகன் இசைத்தலும் அவற்றினுள் இருக்காம்
ஒன்று நீவிளம் புதியென முருகவேள் உரைப்ப
நன்றெ னாமறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான்
நின்ற தோர்தனி மொழியைமுன் ஓதினன் நெறியால். ......
8(தாம ரைத்தலை)
தாம ரைத்தலை யிருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாம றைத்தலை யெடுத்தனன் பகர்தலும் வரம்பில்
காமர் பெற்றுடைக் குமரவேள் நிற்றிமுன் கழறும்
ஓமெ னப்படும் மொழிப்பொருள் இயம்புகென் றுரைத்தான். ......
9(முகத்தி லொன்ற)
முகத்தி லொன்றதா அவ்வெழுத் துடையதோர் முருகன்
நகைத்து முன்னெழுத் தினுக்குரை பொருளென நவில
மிகைத்த கண்களை விழித்தனன் வெள்கினன் விக்கித்
திகைத்தி ருந்தனன் கண்டிலன் அப்பொருட் டிறனே. ......
10(ஈசன் மேவரும்)
ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாச மாய்எலா வெழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க்
காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும்
மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான். ......
11(தெருள தாகிய குடி)
தெருள தாகிய குடிலையைச் செப்புதல் அன்றிப்
பொருள றிந்திலன் என்செய்வான் கண்ணுதற் புனிதன்
அருளி னாலது முன்னரே பெற்றிலன் அதனால்
மருளு கின்றனன் யாரதன் பொருளினை வகுப்பார். ......
12(தூம றைக்கெலாம்)
தூம றைக்கெலாம் ஆதியு மந்தமுஞ் சொல்லும்
ஓமெ னப்படும் ஓரெழுத் துண்மையை யுணரான்
மாம லர்ப்பெருங் கடவுளும் மயங்கினான் என்றால்
நாமி னிச்சில அறிந்தனம் என்பது நகையே. ......
13(எட்டொ ணாதவ)
எட்டொ ணாதவக் குடிலையிற் பயன்இனைத் தென்றே
கட்டு ரைத்திலன் மயங்கலும் இதன்பொருள் கருதாய்
சிட்டி செய்வதித் தன்மைய தோவெனாச் செவ்வேள்
குட்டி னான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க. ......
14(மறைபு ரிந்திடு)
மறைபு ரிந்திடுஞ் சிவனருண் மதலைமா மலர்மேல்
உறைபு ரிந்தவன் வீழ்தரப் பதத்தினா லுதைத்து
நிறைபு ரிந்திடு பரிசன ரைக்கொடே நிகளச்
சிறைபு ரிந்திடு வித்தனன் கந்தமாஞ் சிலம்பில். ......
15(அல்லி மாமலர்)
அல்லி மாமலர்ப் பண்ணவன் றனையருஞ் சிறையில்
வல்லி பூட்டுவித் தியாவையும் புரிதர வல்லோன்
எல்லை தீர்தரு கந்தமால் வரைதனில் ஏகிப்
பல்லு யிர்த்தொகை படைப்பது நினைந்தனன் பரிவால். ......
16(ஒருக ரந்தனில்)
ஒருக ரந்தனில் கண்டிகை வடம்பரித் தொருதன்
கரத லந்தனில் குண்டிகை தரித்திரு கரங்கள்
வரத மோடப யந்தரப் பரம்பொருள் மகனோர்
திருமு கங்கொடு சதுர்முகன் போல்விதி செய்தான். ......
17(உயிரி னுக்குயி ரா)
உயிரி னுக்குயி ராகியே பரஞ்சுட ரொளியாய்
வியன்ம றைத்தொகைக் கீறதாய் விதிமுத லுரைக்குஞ்
செயலி*
1 னுக்கெலாம் ஆதியாய் வைகிய செவ்வேள்
அயனெ னப்படைக் கின்றதும் அற்புத மாமோ. ......
18(தண்ணென் அம்பு)
தண்ணென் அம்புயத் தவிசினோன் சிறைபுகத் தானே
எண்ணி லாவுயிர்த் தொகையளித் தறுமுகன் இருந்தான்
அண்ண லந்திசை முகனொடு வந்துசூழ் அமரர்
உண்ண டுங்கியே தொழுதுதம் பதங்களி லுற்றார். ......
19ஆகத் திருவிருத்தம் - 1223