(ஆல மாமிடற் றண்ண)
ஆல மாமிடற் றண்ணல்சேய் இத்திறம் அளப்பில்
காலம் யாவையும் அளித்தனன் இருத்தலுங் கரியோன்
நாலு மாமுகன் உவளகம் நீக்குவான் நாடிச்
சீல வானவர் முனிவரைச் சிந்தனை செய்தான். ......
1(சீத ரத்தனிப் பண்ண)
சீத ரத்தனிப் பண்ணவன் சிந்தனை தேறி
ஆத பத்தினர் பரிமுகர் வசுக்கள்அன் னையர்கள்
ஏத மற்றிடும் விஞ்சையர் உவணரோ டியக்கர்
மாதி ரத்தவர் யாவரும் விரைந்துடன் வந்தார். ......
2(மதியும் ஏனைய)
மதியும் ஏனைய கோள்களுங் கணங்களும் வான்றோய்
பொதிய மேயவ னாதியாம் பொருவில்மா தவரும்
விதிபு ரிந்திடு பிரமரொன் பதின்மரும் வியன்பார்
அதனை ஏந்திய சேடனும் உரகரும் அடைந்தார். ......
3(இன்ன தன்மையில் அமர)
இன்ன தன்மையில் அமரரும் முனிவரு மெய்த
அன்னர் தம்மொடுஞ் செங்கண்மால் கயிலையை அடைந்து
முன்னர் வைகிய நந்திகள் முறையினுய்த் திடப்போய்த்
தன்னை யேதனக் கொப்பவன் பொற்கழல் தாழ்ந்தான். ......
4(பொற்றி ருப்பதம்)
பொற்றி ருப்பதம் இறைஞ்சியே மறைமுறை போற்றி
நிற்ற லுஞ்சிவ னருள்கொடே நோக்குறீஇ நீவிர்
எற்றை வைகலு மில்லதோர் தளர்வொடும் எம்பால்
உற்ற தென்கொலோ என்றலும் மாலிவை உரைப்பான். ......
5வேறு(இறைவ நின்மகன்)
இறைவ நின்மகன் ஈண்டுறு போதனை
மறைமு தற்பத வான்பொருள் கெட்டலும்
அறிகி லானுற அன்னவன் றன்னைமுன்
சிறைபு ரிந்தனன் சிட்டியுஞ் செய்கின்றான். ......
6(கந்த வேளென)
கந்த வேளெனக் கஞ்சனும் ஐயநின்
மைந்த னாம்அவன் வல்வினை யூழினால்
அந்த மில்பகல் ஆழ்சிறைப் பட்டுளம்
நொந்து வாடினன் நோவுழந் தானரோ. ......
7(ஆக்க மற்ற அயன்)
ஆக்க மற்ற அயன்றன் சிறையினை
நீக்கு கென்று நிமலனை வேண்டலுந்
தேக்கும் அன்பிற் சிலாதன்நற் செம்மலை
நோக்கி யொன்று நுவலுதல் மேயினான். ......
8(குடுவைச் செங்கை)
குடுவைச் செங்கையி னானைக் குமரவேள்
இடுவித் தான்சிறை என்றனர் ஆண்டுநீ
கடிதிற் சென்றுநங் கட்டுரை கூறியே
விடுவித் தேயிவண் மீள்கெனச் சாற்றினான். ......
9(எந்தை யன்ன திசை)
எந்தை யன்ன திசைத்தலும் நன்றெனா
நந்தி அக்கணம் நாதனைத் தாழ்ந்துபோய்
அந்த மற்ற அடற்கணஞ் சூழ்தரக்
கந்த வெற்பிற் கடிநகர் எய்தினான். ......
10(எறுழு டைத்தனி)
எறுழு டைத்தனி ஏற்று முகத்தினான்
அறுமு கத்தன் அமர்ந்த நிகேதனங்
குறுகி மற்றவன் கோல மலர்ப்பதம்
முறைத னிற்பணிந் தேத்தி மொழிகுவான். ......
11(கடிகொள் பங்கயன்)
கடிகொள் பங்கயன் காப்பினை எம்பிரான்
விடுதல் கூறி விடுத்தனன் ஈங்கெனைத்
தடைப டாதவன் றன்சிறை நீக்குதி
குடிலை யன்னவன் கூறற் கெளியதோ. ......
12(என்னு முன்னம்)
என்னு முன்னம் இளையவன் சீறியே
அன்ன வூர்தி யருஞ்சிறை நீக்கலன்
நின்னை யுஞ்சிறை வீட்டுவன் நிற்றியேல்
உன்னி யேகுதி ஒல்லையி லென்றலும். ......
13(வேற தொன் றும்)
வேற தொன்றும் விளம்பிலன் அஞ்சியே
ஆறு மாமுகத் தண்ணலை வந்தியா
மாறி லாவெள்ளி மால்வரை சென்றனன்
ஏறு போல்முக மெய்திய நந்தியே. ......
14(மைதி கழ்ந்த மணி)
மைதி கழ்ந்த மணிமிடற் றண்ணல்முன்
வெய்தெ னச்சென்று மேவி அவன்பதங்
கைதொ ழூஉநின்று கந்தன் மொழிந்திடுஞ்
செய்தி செப்பச் சிறுநகை யெய்தினான். ......
15(கெழுத கைச்சுடர்)
கெழுத கைச்சுடர்க் கேசரிப் பீடமேல்
விழுமி துற்ற விமலன் விரைந்தெழீஇ
அழகு டைத்தன தாலயம் நீங்கியே
மழவி டைத்தனி மால்வரை ஏறினான். ......
16(முன்னர் வந்த)
முன்னர் வந்த முகில்புரை வண்ணனுங்
கின்ன ரம்பயில் கேசர ராதியோர்
நன்னர் கொண்டிடு நாகரும் நற்றவர்
என்ன ருந்தொழு தெந்தைபின் ஏகினார். ......
17(படைகொள் கையினர்)
படைகொள் கையினர் பன்னிறக் காழக
உடையர் தீயி னுருகெழு சென்னியர்
இடிகொள் சொல்லினர் எண்ணரும் பூதர்கள்
புடையில் ஈண்டினர் போற்றுதல் மேயினார். ......
18(இனைய காலை)
இனைய காலை யினையவர் தம்மொடும்
வனிதை பாதியன் மால்விடை யூர்ந்துராய்ப்
புனித வெள்ளியம் பொற்றை தணந்துபோய்த்
தனது மைந்தன் தடவரை யெய்தினான். ......
19(சாற்ற ருந்திறற்)
சாற்ற ருந்திறற் சண்முக வெம்பிரான்
வீற்றி ருந்த வியனகர் முன்னுறா
ஏற்றி னின்றும் இழிந்துவிண் ணோரெலாம்
போற்ற முக்கட் புனிதனுட் போயினான். ......
20(அந்தி போலும்)
அந்தி போலும் அவிர்சடைப் பண்ணவன்
கந்தன் முன்னர்க் கருணையொ டேகலும்
எந்தை வந்தனன் என்றெழுந் தாங்கவன்
வந்து நேர்கொண் டடிகள் வணங்கியே. ......
21(பெருத்த தன்மணி)
பெருத்த தன்மணிப் பீடிகை மீமிசை
இருத்தி நாதனை ஏழுல கீன்றிடும்
ஒருத்தி மைந்தன் உயிர்க்குயி ராகிய
கருத்த நீவந்த காரியம் யாதென்றான். ......
22(மட்டு லாவு மலர்)
மட்டு லாவு மலர்அய னைச்சிறை
இட்டு வைத்தனை யாமது நீக்குவான்
சுட்டி வந்தன மாற்சுரர் தம்முடன்
விட்டி டையவென் றெந்தை விளம்பினான். ......
23(நாட்ட மூன்றுடை)
நாட்ட மூன்றுடை நாயகன் இவ்வகை
ஈட்டு மன்பொ டிசைத்திடும் இன்சொலைக்
கேட்ட காலையிற் கேழ்கிளர் சென்னிமேற்
சூட்டு மௌலி துளக்கினன் சொல்லுவான். ......
24(உறுதி யாகிய ஓரெழு)
உறுதி யாகிய ஓரெழுத் தின்பயன்
அறிகி லாதவன் ஆவிகள் வைகலும்
பெறுவ னென்பது பேதைமை ஆங்கவன்
மறைகள் வல்லது மற்றது போலுமால். ......
25(அழகி தையநின்)
அழகி தையநின் னாரருள் வேதமுன்
மொழிய நின்ற முதலெழுத் தோர்கிலான்
இழிவில் பூசை இயற்றலும் நல்கிய
தொழில்பு ரிந்து சுமத்தினை யோர்பரம். ......
26(ஆவி முற்றும் அகில)
ஆவி முற்றும் அகிலமும் நல்கியே
மேவு கின்ற வியன்செயல் கோடலால்
தாவில் கஞ்சத் தவிசுறை நான்முகன்
ஏவர் தம்மையும் எண்ணலன் யாவதும். ......
27(நின்னை வந்தனை)
நின்னை வந்தனை செய்யினும் நித்தலுந்
தன்ன கந்தை தவிர்கிலன் ஆதலால்
அன்ன வன்றன் அருஞ்சிறை நீக்கலன்
என்ன மைந்தன் இயம்பிய வேலையே. ......
28வேறு(மைந்தநின் செய்கை)
மைந்தநின் செய்கை யென்னே மலரயன் சிறைவி டென்று
நந்திநம் பணியா லேகி நவின்றதுங் கொள்ளாய் நாமும்
வந்துரைத் திடினுங் கேளாய் மறுத்தெதிர் மொழிந்தா யென்னாக்
கந்தனை வெகுள்வான் போலக் கழறினன் கருணை வள்ளல். ......
29(அத்தன தியல்பு)
அத்தன தியல்பு நோக்கி அறுமுகத் தமலன் ஐய
சித்தமிங் கிதுவே யாகில் திசைமுகத் தொருவன் தன்னை
உய்த்திடு சிறையின் நீக்கி ஒல்லையில் தருவ னென்னாப்
பத்தியின் இறைஞ்சிக் கூறப் பராபரன் கருணை செய்தான். ......
30(நன்சிறை எகினம்)
நன்சிறை எகினம் ஏனம் நாடுவான் அருளை நல்கத்
தன்சிறை நின்றோர் தம்மைச் சண்முகக் கடவுள் நோக்கி
முன்சிறை யொன்றிற் செங்கேழ் முண்டகத் தயனை வைத்த
வன்சிறை நீக்கி நம்முன் வல்லைதந் திடுதி ரென்றான். ......
31(என்றலுஞ் சார)
என்றலுஞ் சார தர்க்குட் சிலவர்க ளேகி யங்கண்
ஒன்றொரு பூழை தன்னுள் ஒடுங்கின னுறையும் வேதா
வன்றளை விடுத்தல் செய்து மற்றவன் றனைக்கொண் டேகிக்
குன்றுதொ றாடல் செய்யுங் குமரவேள் முன்னர் உய்த்தார். ......
32(உய்த்தலுங் கமல)
உய்த்தலுங் கமலத் தண்ணல் ஒண்கரம் பற்றிச் செவ்வேள்
அத்தன்முன் விடுத்த லோடும் ஆங்கவன் பரமன் றன்னை
மெய்த்தகும் அன்பால் தாழ்ந்து வெள்கினன் நிற்ப நோக்கி
எய்த்தனை போலும் பன்னாள் இருஞ்சிறை யெய்தி யென்றான். ......
33(நாதனித் தன்மை)
நாதனித் தன்மை கூறி நல்லருள் புரித லோடும்
போதினன் ஐய உன்றன் புதல்வன்ஆற் றியவித் தண்டம்
ஏதமன் றுணர்வு நல்கி யானெனும் அகந்தை வீட்டித்
தீதுசெய் வினைகள் மாற்றிச் செய்தது புனித மென்றான். ......
34(அப்பொழு தயனை)
அப்பொழு தயனை முக்கண் ஆதியம் பரமன் காணூஉ
முப்புவ னத்தின் மேவும் முழுதுயிர்த் தொகைக்கும் ஏற்ற
துப்புற வதனை நன்று தூக்கினை தொன்மை யேபோல்
இப்பகல் தொட்டு நீயே ஈந்தனை யிருத்தி யென்றான். ......
35(அருளுரு வாகும்)
அருளுரு வாகும் ஈசன் அயற்கிது புகன்ற பின்னர்
முருகவேள் முகத்தை நோக்கி முறுவல்செய் தருளை நல்கி
வருதியால் ஐய என்று மலர்க்கையுய்த் தவனைப் பற்றித்
திருமணிக் குறங்கின் மீது சிறந்துவீற் றிருப்பச் செய்தான். ......
36(காமரு குமரன்)
காமரு குமரன் சென்னி கதுமென உயிர்த்துச் செக்கர்த்
தாமரை புரையுங் கையால் தழுவியே அயனுந் தேற்றா
ஓமென உரைக்குஞ் சொல்லின் உறுபொரு ளுனக்குப் போமோ
போமெனில் அதனை யின்னே புகலென இறைவன் சொற்றான். ......
37(முற்றொருங் குணரு)
முற்றொருங் குணரும் ஆதி முதல்வகேள் உலக மெல்லாம்
பெற்றிடும் அவட்கு நீமுன் பிறருண ராத வாற்றால்
சொற்றதோ ரினைய மூலத் தொல்பொருள் யாருங் கேட்ப
இற்றென வியம்ப லாமோ மறையினால் இசைப்ப தல்லால். ......
38(என்றலும் நகைத்து)
என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின் என்னாத்
தன்றிருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை யென்னும்
ஒன்றொரு பதத்தி னுண்மை உரைத்தனன் உரைத்தல் கேளா
நன்றருள் புரிந்தா னென்ப ஞானநா யகனாம் அண்ணல். ......
39(அன்னதோர் ஐய)
அன்னதோர் ஐய மாற்றி அகமகிழ் வெய்தி அங்கண்
தன்னிளங் குமரன் றன்னைத் தலைமையோ டிருப்ப நல்கி
என்னையா ளுடைய நாதன் யாவரும் போற்றிச் செல்லத்
தொன்னிலை யமைந்து போந்து தொல்பெருங் கயிலை வந்தான். ......
40(முன்புறும் அயன்)
முன்புறும் அயன்மால் தேவர் முனிவரை விடுத்து முன்னோன்
தன்பெருங் கோயில் புக்கான் தாவில்சீர்க் கந்த வெற்பில்
பொன்புனை தவிசின் ஏறிப் புடைதனில் வயவர் போற்ற
இன்பொடு குமர மூர்த்தி இனிதுவீற் றிருந்தா னன்றே. ......
41(ஆங்குறு குமர)
ஆங்குறு குமரப் புத்தேள் அருமறைக் காதி யாகி
ஓங்குமெப் பொருட்கு மேலாம் ஓரெழுத் துரையின் உண்மை
தீங்கற வணங்கிக் கேட்பச் சிறுமுனிக் குதவி மற்றும்
பாங்குறும் இறைவன் நூலும் பரிவினால் உணர்த்தி னானால். ......
42ஆகத் திருவிருத்தம் - 1265