(சூரன்முத லோரு)
சூரன்முத லோருயிர் தொலைக்கவரு செவ்வேள்
ஆருமகிழ் வெள்ளியச லத்தின் அமர் போழ்தின்
மேருவி லுடைப்பரன் விரும்பஅகி லத்தே
நாரதனொர் வேள்வியை நடாத்தியிட லுற்றான். ......
1(மாமுனி வருஞ்)
மாமுனி வருஞ்சுரரும் மாநில வரைப்பில்
தோமறு தவத்தினுயர் தொல்லை மறையோரும்
ஏமமொடு சூழ்தர இயற்றிய மகத்தில்
தீமிசை யெழுந்ததொரு செக்கர்புரை செச்சை. ......
2(அங்கிதனில் வந்த)
அங்கிதனில் வந்ததகர் ஆற்றுமகந் தன்னில்
நங்களின மேபலவும் நாளுமடு கின்றார்
இங்கிவரை யான்அடுவன் என்றிசைவு கொண்டே
வெங்கனலை யேந்துபரி மீதெழுதல் போலும். ......
3(மாருதமும் ஊழித)
மாருதமும் ஊழிதனில் வன்னியும் விசும்பில்
பேருமுரும் ஏறுமொரு பேருருவு கொண்டே
ஆருவது போல்விரைவும் அத்தொளியும் ஆர்ப்புஞ்
சேரவெழும் மேடம்அடு செய்கைநினைந் தன்றே. ......
4(கல்லென மணி)
கல்லென மணித்தொகை களத்தினிடை தூங்கச்
சில்லரிபெய் கிங்கிணி சிலம்படி புலம்ப
வல்லைவரு கின்றதகர் கண்டுமகத் துள்ளோர்
எல்லவரும் அச்சமொ டிரிந்தனர்கள் அன்றே. ......
5(இரிந்தவர்கள் யாவ)
இரிந்தவர்கள் யாவரையும் இப்புவியும் வானுந்
துரந்துசிலர் வீழ்ந்துதொலை வாகநனி தாக்கிப்
பரந்ததரை மால்வரை பராகமெழ ஓடித்
திரிந்துயிர் வருந்தஅடல் செய்தது செயிர்த்தே. ......
6(எட்டுள திசைக்கரி)
எட்டுள திசைக்கரி இரிந்தலறி யேங்கக்
கிட்டியெதிர் தாக்குமதி கேழ்கிளரும் மானத்
தட்டிரவி தேரொடு தகர்ந்துமுரி வாக
முட்டும்அவர் தம்பரியை மொய்ம்பினொடு பாயும். ......
7(இனையவகை யால்)
இனையவகை யால்தகரி யாண்டுமுல வுற்றே
சினமொடுயிர் கட்கிறுதி செய்துபெயர் காலை
முனிவர்களும் நாரதனும் மொய்ம்புமிகு வானோர்
அனைவர்களும் ஓடினர் அருங்கயிலை புக்கார். ......
8(ஊறுபுக அன்னவர்)
ஊறுபுக அன்னவர் உலைந்துகயி லைக்கண்
ஏறிவரு காலையில் இலக்கமுட னொன்பான்
வீறுதிறல் வீரரொடு மேவியுல வுற்றே
ஆறுமுக வண்ணல்விளை யாடலது கண்டார். ......
9(ஈசனிடை நண்ணு)
ஈசனிடை நண்ணுகிலம் ஈண்டுகும ரேசன்
நேசமொடு நந்துயரம் நீக்கவெதிர் வந்தான்
ஆசிறுவன் அல்லன்இவன் அண்டர்பல ரோடும்
வாசவனை வென்றுயிரை மாற்றியெழு வித்தான். ......
10(எங்குறை முடித்திட)
எங்குறை முடித்திடல் இவற்கெளிது நாமிப்
புங்கவனொ டுற்றது புகன்றிடுது மென்னாத்
தங்களில் உணர்ந்துசுரர் தாபதர்கள் யாரும்
அங்கவன்முன் ஏகினர் அருந்துதிகள் செய்தே. ......
11(வந்துபுகழ் வானவரும்)
வந்துபுகழ் வானவரும் மாமுனிவர் தாமுந்
தந்திமுக வற்கிளவல் தன்னடி வணங்கக்
கந்தனவர் கொண்டதுயர் கண்டுமிக நீவிர்
நொந்தனிர் புகுந்தது நுவன்றிடுதி ரென்றான். ......
12(கேட்டிஇளை யோய்)
கேட்டிஇளை யோய்மறை கிளத்தும்ஒரு வேள்வி
வேட்டனமி யாங்களது வேலையிடை தன்னில்
மாட்டுகன லூடொரு மறித்தகர் எழுந்தே
ஈட்டமுறும் எம்மையட எண்ணியதை யன்றே. ......
13(ஆடெழு கிளர்ச்சி)
ஆடெழு கிளர்ச்சியை அறிந்துமகம் விட்டே
ஓடியிவ ணுற்றனம் உருத்தது துரந்தே
சாடியது சிற்சிலவர் தம்மையத னாலே
வீடியத ளப்பிலுயிர் விண்ணினொடு மண்மேல். ......
14(நீலவிட மன்றிது)
நீலவிட மன்றிது நிறங்குலவு செக்கர்க்
கோலவிட மேயுருவு கொண்டதய மேபோல்
ஓலமிட எங்குமுல வுற்றதுயி ரெல்லாங்
காலமுடி வெய்துமொரு கன்னல்முடி முன்னம். ......
15(சீற்றமொ டுயிர்)
சீற்றமொ டுயிர்க்கிறுதி செய்துலவு மேடத்
தாற்றலை அடக்கியெம தச்சமும் அகற்றி
ஏற்றகுறை வேள்வியையும் ஈறுபுரி வித்தே
போற்றுதி யெனத்தொழுது போற்றிசெயும் வேலை. ......
16(எஞ்சுமவர் தம்மை)
எஞ்சுமவர் தம்மைஇளை யோன்பரிவின் நோக்கி
அஞ்சல்விடு மின்களென அங்கைய தமைத்தே
தஞ்சமென வேபரவு தன்பரிச னத்துள்
மஞ்சுபெறு மேனிவிறல் வாகுவொடு சொல்வான். ......
17(மண்டுகனல் வந்தி)
மண்டுகனல் வந்திவர் மகந்தனை அழித்தே
அண்டமொடு பாருலவி யாருயிர்க டம்மை
உண்டுதிரி செச்சைதனை ஒல்லைகுறு குற்றே
கொண்டணைதி என்றுமை குமாரனுரை செய்தான். ......
18வேறு(குன்றெழு கதிர்போல்)
குன்றெழு கதிர்போல் மேனிக் குமரவேள் இனைய கூற
மன்றலந் தடந்தோள் வீர வாகுவாந் தனிப்பேர் பெற்றான்
நன்றென இசைந்து கந்தன் நாண்மலர்ப் பாதம் போற்றிச்
சென்றனன் கயிலை நீங்கிச் சினத்தகர் தேட லுற்றான். ......
19(மண்டல நேமி)
மண்டல நேமி சூழும் மாநில முற்று நாடிக்
கண்டில னாகிச் சென்றேழ் பிலத்தினுங் காண கில்லான்
அண்டர்தம் பதங்கள் நாடி அயன்பதம் முன்ன தாகத்
தண்டளிர்ச் செக்கர் மேனித் தகர்செலுந் தன்மை கண்டான். ......
20(ஆடலந் தொழில்)
ஆடலந் தொழில்மேல் கொண்டே அனைவரும் இரியச் செல்லும்
மேடமஞ் சுறவே ஆர்த்து விரைந்துபோய் வீர வாகு
கோடவை பற்றி ஈர்த்துக் கொண்டுராய்க் கயிலை நண்ணி
ஏடுறு நீபத் தண்டார் இளையவன் முன்னர் உய்த்தான். ......
21(உய்த்தனன் வணங்கி)
உய்த்தனன் வணங்கி நிற்ப உளமகிழ்ந் தருளித் தேவர்
மெய்த்தவர் தொகையை நோக்கி ஏழகம் மேவிற் றெம்பால்
எய்த்தினி வருந்து கில்லீர் யாருநீர் புவனி யேகி
முத்தழல் கொடுமுன் செய்த வேள்வியை முடித்தி ரென்றான். ......
22(ஏர்தரு குமரப் புத்தே)
ஏர்தரு குமரப் புத்தேள் இவ்வகை இசைப்ப அன்னோர்
கார்தரு கண்டத் தெந்தை காதல வேள்வித் தீயிற்
சேர்தரு தகரின் ஏற்றைச் சிறியரேம் உய்யு மாற்றால்
ஊர்திய தாகக் கொண்டே ஊர்ந்திடல் வேண்டு மென்றார். ......
23(என்னலுந் தகரை)
என்னலுந் தகரை அற்றே யானமாக் கொள்வம் பார்மேல்
முன்னிய மகத்தை நீவிர் முடித்திரென் றருள யார்க்கும்
நன்னய மாடல் செய்யும் நாரதன் முதலோர் யாரும்
அன்னதோர் குமர னெந்தை அடிபணிந் தருளாற் போந்தார். ......
24(நவையில்சீர் முனி)
நவையில்சீர் முனிவர் தேவர் நயப்பநா ரதனென் றுள்ளோன்
புவிதனில் வந்து முற்றப் புரிந்தனன் முன்னர் வேள்வி
அவர்புரி தவத்தின் நீரால் அன்றுதொட் டமல மூர்த்தி
உவகையால் அனைய மேடம் ஊர்ந்தனன் ஊர்தி யாக. ......
25ஆகத் திருவிருத்தம் - 1204