(அனந்தரம தாக)
அனந்தரம தாகஉமை யம்மையொடு பெம்மான்
நனந்தலையில் வைகிய நலங்கொள்கும ரேசன்
இனங்கொடு தொடர்ந்தஇளை யாரொடு மெழுந்தே
மனங்கொளருள் நீர்மைதனின் ஆடலை மதித்தான். ......
1(தட்டைஞெகிழ)
தட்டைஞெகி ழங்கழல் சதங்கைகள் சிலம்பக்
கட்டழகு மேயஅரை ஞாண்மணி கறங்க
வட்டமணி குண்டல மதாணிநுதல் வீர
பட்டிகைமி னக்குமரன் ஆடல்பயில் கின்றான். ......
2(மன்றுதொறு லாவு)
மன்றுதொறு லாவுமலர் வாவிதொ றுலாவுந்
துன்றுசிறு தென்றல்தவழ் சோலைதொ றுலாவும்
என் றுமுல வாதுலவும் யாறுதொ றுலாவுங்
குன்றுதொறு லாவுமுறை யுங்குமர வேளே. ......
3(குளத்தினுல வும்)
குளத்தினுல வும்நதி குறைந்திடு துருத்திக்
களத்தினுல வும்நிரைகொள் கந்துடை நிலைத்தாந்
தளத்தினுல வும்பனவர் சாலையுல வும்மென்
னுளத்தினுல வும்சிவன் உமைக்கினிய மைந்தன். ......
4(இந்துமுடி முன்ன)
இந்துமுடி முன்னவன் இடந்தொறு முலாவும்
தந்தையுடன் யாயமர் தலங்களி னுலாவும்
கந்தமலர் நீபமுறை கண்டொறு முலாவும்
செந்தமிழ் வடாதுகலை சேர்ந்துழி யுலாவும். ......
5(மண்ணிடை யுலா)
மண்ணிடை யுலாவும்நெடு மாதிர முலாவும்
எண்ணிடை யுறாதகடல் எங்கணு முலாவும்
விண்ணிடை யுலாவும்மதி வெய்யவன் உடுக்கோள்
கண்ணிடை யுலாவும்இறை கண்ணில்வரு மண்ணல். ......
6(கந்தருவர் சித்தர்)
கந்தருவர் சித்தர்கரு டத்தொகைய ரேனோர்
தந்தமுல காதிய தலந்தொறு முலாவும்
இந்திரன் இருந்ததொல் லிடந்தனில் உலாவும்
உந்துதவர் வைகுமுல கந்தொறு முலாவும். ......
7(அங்கமல நான்)
அங்கமல நான்முகன் அரும்பத முலாவும்
மங்கலம் நிறைந்ததிரு மால்பத முலாவும்
எங்கள் பெருமாட்டிதன் இரும்பத முலாவும்
திங்கள்முடி மேற்புனை சிவன்பத முலாவும். ......
8(இப்புவியில் அண்ட)
இப்புவியில் அண்டநிரை யெங்கணு முலாவும்
அப்புவழ லூதைவெளி அண்டமு முலாவும்
ஒப்பில்புவ னங்கள்பிற வுள்ளவு முலாவுஞ்
செப்பரிய ஒர்பரசி வன்றனது மைந்தன். ......
9வேறு(இருமூவகை வதன)
இருமூவகை வதனத்தொடும் இளையோனெனத் திரியும்
ஒருமாமுக னொடுசென்றிடும் உயர்காளையி னுலவும்
பெருமாமறை யவரேயென முனிவோரெனப் பெயருந்
தெரிவார்கணை மறவீரரில் திரிதந்திடுஞ் செவ்வேள். ......
10(காலிற்செலும் பரி)
காலிற்செலும் பரியிற்செலும் கரியிற்செலும் கடுந்தேர்
மேலிற்செலும் தனியாளியின் மிசையிற்செலும் தகரின்
பாலிற்செலும் மானத்திடை பரிவிற்செலும் விண்ணின்
மாலிற்செலும் பொருசூரொடு மலையச்செலும் வலியோன். ......
11(பாடின்படு மணியார்)
பாடின்படு மணியார்த்திடும் பணைமென்குழல் இசைக்கும்
கோடங்கொலி புரிவித்திடும் குரல்வீணைகள் பயிலும்
ஈடொன்றிய சிறுபல்லிய மெறியும்மெவ ரெவரும்
நாடும்படி பாடுங்களி நடனஞ்செயும் முருகன். ......
12(இன்னேபல வுரு)
இன்னேபல வுருவங்கொடி யாண்டுங்கும ரேசன்
நன்னேயமொ டாடுற்றுழி நனிநாடினள் வியவா
முன்னேயுல கினையீன்றவள் முடிவின்றுறை முதல்வன்
பொன்னேர்கழ லிணைதாழ்ந்தனள் போற்றிப்புகல் கின்றாள். ......
13(கூடுற்றநங் குமரன்)
கூடுற்றநங் குமரன்சிறு குழவிப்பரு வத்தே
ஆடற்றொழி லெனக்கற்புத மாகும்மவன் போல்வார்
நேடிற்பிற ரிலைமாயையின் நினைநேர்தரு மனையான்
பீடுற்றிடு நெறிதன்னையெம் பெருமான்மொழி கென்றாள். ......
14(அல்லார்குழ லவள்)
அல்லார்குழ லவள் இன்னணம் அறியார்களின் வினவ
ஒல்லார்புர மடுகண்ணுதல் உன்றன்மகன் இயல்பை
எல்லாவுயிர் களுமுய்ந்திட எமைநீகட வினையால்
நல்லாய்இது கேண்மோவென அருளாலிவை நவில்வான். ......
15வேறு(ஈங்கனம் நமது)
ஈங்கனம் நமது கண்ணின் எய்திய குமரன் கங்கை
தாங்கினள் கொண்டு சென்று சரவணத் திடுத லாலே
காங்கெயன் எனப்பேர் பெற்றான் காமர்பூஞ் சரவ ணத்தின்
பாங்கரில் வருத லாலே சரவண பவன்என் றானான். ......
16(தாயென ஆரல்)
தாயென ஆரல் போந்து தனங்கொள்பால் அருத்த லாலே
ஏயதோர் கார்த்தி கேயன் என்றொரு தொல்பேர் பெற்றான்
சேயவன் வடிவ மாறுந் திரட்டிநீ யொன்றாச் செய்தாய்
ஆயத னாலே கந்த னாமெனு நாமம் பெற்றான். ......
17(நன்முகம் இருமூன்)
நன்முகம் இருமூன் றுண்டால் நமக்கவை தாமே கந்தன்
தன்முக மாகி யுற்ற தாரகப் பிரம மாகி
முன்மொழி கின்ற நந்தம் மூவிரண் டெழுத்து மொன்றாய்
உன்மகன் நாமத் தோரா றெழுத்தென உற்ற வன்றே. ......
18(ஆதலின் நமது சத்தி)
ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும்
பேதக மன்றால் நம்போற் பிரிவிலன் யாண்டும் நின்றான்
ஏதமில் குழவி போல்வான் யாவையு முணர்ந்தான் சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான். ......
19(மேலினி யனை)
மேலினி யனைய செவ்வேள் விரிஞ்சனைச் சுருதிக் கெல்லாம்
மூலம தாகி நின்ற மொழிப்பொருள் வினவி அன்னான்
மாலுறச் சென்னி தாக்கி வன்சிறைப் படுத்தித் தானே
ஞாலமன் னுயிரை யெல்லா நல்கியே நண்ணும் பன்னாள். ......
20(தாரகன் றன்னை)
தாரகன் றன்னைச் சீயத் தடம்பெரு முகத்தி னானைச்
சூரபன் மாவை ஏனை யவுணரைத் தொலைவு செய்தே
ஆரணன் மகவான் ஏனை யமரர்கள் இடுக்கண் நீக்கிப்
பேரருள் புரிவன் நின்சேய் பின்னர்நீ காண்டி யென்றான். ......
21(என்றலும் இளையோன்)
என்றலும் இளையோன் செய்கை எம்பெரு மாட்டி கேளா
நன்றென மகிழ்ச்சி கொண்டு நணுகலும் உலக மெல்லாஞ்
சென்றரு ளாடல் செய்யுந் திருத்தகு குமரன் பின்னர்
ஒன்றொரு விளையாட் டுள்ளத் துன்னியே புரித லுற்றான். ......
22(குலகிரி யனைத்து)
குலகிரி யனைத்து மோர்பாற் கூட்டிடும் அவற்றைப் பின்னர்த்
தலைதடு மாற்ற மாகத் தரையிடை நிறுவும் எல்லா
அலைகடல் தனையும் ஒன்றா ஆக்குறும் ஆழி வெற்பைப்
பிலனுற அழுத்துங் கங்கைப் பெருநதி யடைக்கு மன்னோ. ......
23(இருள்கெழு பிலத்து)
இருள்கெழு பிலத்துள் வைகும் எண்டொகைப் பணியும் பற்றிப்
பொருள்கெழு மேரு வாதி அடுக்கலிற் பூட்டி வீக்கி
அருள்கெழு குமர வள்ளல் ஆவிகட் கூறின் றாக
உருள்கெழு சிறுதே ராக்கொண் டொல்லென உருட்டிச் செல்லும். ......
24(ஆசையங் கரிகள்)
ஆசையங் கரிகள் தம்மை அங்கைகொண் டொன்றோ டொன்று
பூசல்செய் விக்கும் வானிற் போந்திடுங் கங்கை நீரால்
காய்சின வடவை மாற்றுங் கவின்சிறைக் கலுழ னோடு
வாசுகி தன்னைப் பற்றி மாறிகல் விளைக்கு மன்றே. ......
25(பாதல நிலய)
பாதல நிலயத் துள்ள புயங்கரைப் படியிற் சேர்த்திப்
பூதல நேமி யெல்லாம் புகுந்திடப் பிலத்தி னுய்க்கும்
ஆதவ முதல்வன் றன்னை அவிர்மதிப் பதத்தி லோச்சுஞ்
சீதள மதியை வெய்யோன் செல்நெறிப் படுத்துச் செல்லும். ......
26(எண்டிசை புரந்த)
எண்டிசை புரந்த தேவர் இருந்ததொல் பதங்க ளெல்லாம்
பண்டுள திறத்தின் நீங்கப் பறித்தனன் பிறழ வைக்குங்
கொண்டலி னிருந்த மின்னின் குழுவுடன் உருமுப் பற்றி
வண்டின முறாத செந்தண் மாலைசெய் தணியு மன்றே. ......
27(வெய்யவர் மதிகோள்)
வெய்யவர் மதிகோள் ஏனோர் விண்படர் விமானந் தேர்கள்
மொய்யுறப் பிணித்த பாசம் முழுவதுந் துருவ னென்போன்
கையுறு மவற்றில் வேண்டுங் கயிற்றினை இடைக்கண் ஈர்ந்து
வையகந் திசைமீச் செல்ல வானியில் விடுக்கு மைந்தன். ......
28(வடுத்தவிர் விசும்)
வடுத்தவிர் விசும்பிற் செல்லும் வார்சிலை யிரண்டும் பற்றி
உடுத்திரள் பலகோ ளின்ன உண்டையாக் கொண்டு வானோர்
முடித்தலை யுரந்தோள் கண்ட முகம்படக் குறியா வெய்தே
அடற்றனு விஞ்சை காட்டும் ஆறிரு தடந்தோள் அண்ணல். ......
29(இத்திறம் உலக)
இத்திறம் உலகந் தன்னில் இம்பரோ டும்பர் அஞ்சிச்
சித்தமெய் தளர்த லன்றிச் சிதைவுறா வகைமை தேர்ந்து
வித்தக வெண்ணி லாடல் வியப்பொடு புரிந்தான் ஆவி
முத்தர்தம் விழியின் அன்றி முன்னுறா நிமல மூர்த்தி. ......
30(ஆயது காலை ஞாலத்)
ஆயது காலை ஞாலத் தவுணர்கள் அதனை நோக்கி
ஏயிது செய்தார் யாரே யென்றுவிம் மிதராய் எங்கள்
நாயகன் வடிவந் தன்னை நனிபெரும் பவத்துட் டங்குந்
தீயவ ராத லாலே கண்டிலர் தியக்க முற்றார். ......
31(சிலபகல் பின்னும்)
சிலபகல் பின்னும் வைகுந் திறத்தியல் ஆயுள் கொண்டே
உலகினில் அவுணர் யாரும் உறைதலின் அவர்க்குத் தன்மெய்
நிலைமைகாட் டாது செவ்வேள் நிலாவலும் நேடி யன்னோர்
மலரயன் தெரியா அண்ணல் மாயமே இனைய தென்றார். ......
32(ஆயதோர் குமரன்)
ஆயதோர் குமரன் செய்கை அவனியின் மாக்கள் காணாத்
தீயன முறையால் வெங்கோல் செலுத்திய அவுண ரெல்லாம்
மாய்வது திண்ணம் போலும் மற்றதற் கேது வாக
மேயின விம்மி தங்கொல் இதுவென வெருவ லுற்றார். ......
33(புவனியின் மாக்க)
புவனியின் மாக்க ளின்ன புகறலுந் திசைகாப் பாளர்
தவனனே மதிய மேனோர் சண்முகன் செய்கை நாடி
அவனுரு வதனைக் காணார் அவுணர்தம் வினையு மன்றால்
எவரிது செய்தார் கொல்லென் றிரங்கினர் யாருங் கூடி. ......
34(தேருறு மனைய)
தேருறு மனைய தேவர் தேவர்கோன் சிலவ ரோடு
மேருவி லிருந்தான் போலும் வேதனும் அங்கண் வைகும்
ஆருமங் கவர்பா லேகி அறைகுது மென்று தேறிச்
சூரர்கோன் றனக்கும் அஞ்சித் துயரொடு பெயர்த லுற்றார். ......
35(வடவரை யும்பர்)
வடவரை யும்பர் தன்னில் வானவ ரானோ ரேகி
அடைதரு கின்ற காலை ஆறுமா முகங்கொண் டுள்ள
கடவுள்செய் யாடல் நோக்கி அவனுருக் காணா னாகி
இடருறு மனத்தி னோடும் இருந்தஇந் திரனைக் கண்டார். ......
36(அரிதிரு முன்ன)
அரிதிரு முன்ன ரெய்தி அடிதொழு தங்கண் வைகி
விரிகட லுலகின் வானின் மேவுதொன் னிலைமை யாவுந்
திரிபுற வெவரோ செய்தார் தெரிந்திலம் அவரை ஈது
புரிகலர் அவுணர் போலும் புகுந்தஇப் புணர்ப்பென் னென்றார். ......
37(வானவர் இறைவன்)
வானவர் இறைவன் அன்னோர் மாற்றமங் கதனைக் கேளா
யானுமிப் பரிசு நாடி யிருந்தனன் இறையுந் தேரேன்
ஆனதை யுணர வேண்டின் அனைவரு மேகி அம்பொன்
மேனிகொள் கமலத் தோனை வினவுதும் எழுதி ரென்றான். ......
38(எழுதிரென் றுரைத்த)
எழுதிரென் றுரைத்த லோடும் இந்திரன் முதலா வுள்ளோர்
விழியிடைத் தெரிய அன்னோர் மெய்த்தவம் புரிந்த நீரால்
அழிவற வுலகி லாடும் அறுமுகன் வதன மொன்றில்
குழவிய தென்ன அன்ன குன்றிடைத் தோன்றி னானால். ......
39(வாட்டமொ டமரர்)
வாட்டமொ டமரர் கொண்ட மயக்கறத் தனாது செய்கை
காட்டிய வந்தோன் மேருக் கனவரை யசைத்துக் கஞ்சத்
தோட்டிதழ் கொய்து சிந்துந் துணையென உயர்ந்த செம்பொற்
கோட்டினைப் பறித்து வீசிக் குலவினன் குழவி யேபோல். ......
40(தோன்றிய குமரன்)
தோன்றிய குமரன் றன்னைச் சுரபதி சுரரா யுள்ளோர்
ஆன்றதோர் திசைகாப் பாளர் அனைவருந் தெரிகுற் றன்னோ
வான்தரை திரிபு செய்தோன் மற்றிவ னாகு மென்னாக்
கான்திரி அரியை நேரும் விலங்கெனக் கலங்கிச் சொல்வார். ......
41வேறு(நொய்தாங் குழவி)
நொய்தாங் குழவி யெனக்கொள்கிலம் நோன்மை நாடின்
வெய்தாம் அவுணக் குழுவோரினும் வெய்யன் யாரும்
எய்தாத மாயம் உளனால்இவன் றன்னை வெம்போர்
செய்தாடல் கொள்வம் இவணென்று தெரிந்து சூழ்ந்தார். ......
42(சூழுற்ற வெல்லை)
சூழுற்ற வெல்லை இமையோர்க்கிறை தொல்லை நாளில்
காழுற்ற தந்தம் அறவேகிவெண் காட்டில் ஈசன்
கேழுற்ற தாள்அர்ச் சனைசெய்து கிடைத்து வைகும்
வேழத்தை உன்ன அதுவந்தது மேரு வின்பால். ......
43(தந்தங்கள் பெற்று)
தந்தங்கள் பெற்று வருகின்ற தனிக்க ளிற்றின்
கந்தந் தனில்போந் தடல்வச்சிரங் காமர் ஒள்வாள்
குந்தஞ் சிலைகொண் டிகல்வெஞ்சமர்க் கோல மெய்தி
மைந்தன் றனைவா னவரோடும் வளைந்து கொண்டான். ......
44(வன்னிச் சுடர்கால்)
வன்னிச் சுடர்கால் விசையோடு மரீஇய பாங்கிற்
பன்னற் படுகுன் றவைசூழ்தரு பான்மை யேபோல்
உன்னற் கரிய குமரேசனை உம்பர் கோனும்
இன்னற் படுவா னவரும்மிகல் செய்ய வுற்றார். ......
45(தண்ணார் கமல)
தண்ணார் கமலத் துணைமாதரைத் தன்னி ரண்டு
கண்ணா வுடைய உமையாள்தரு கந்தன் வானோர்
நண்ணா ரெனச்சூழ் வதுநோக்கி நகைத்தி யாதும்
எண்ணாது முன்போல் தனதாடல் இழைத்த வேலை. ......
46(எட்டே யொரு)
எட்டே யொருபான் படைதம்முள் எறிவ வெல்லாந்
தொட்டே கடவுட் படைதன்னொடுந் தூர்த்த லோடும்
மட்டேறு போதிற் படுகின்றுழி வச்சி ரத்தை
விட்டே தெழித்தான் குமரன்மிசை வேள்வி வேந்தன். ......
47(வயிரத் தனிவெம்)
வயிரத் தனிவெம் படையெந்தைதன் மார்பு நண்ணி
அயிரிற் றுகளாய் விளிவாக அதனை நோக்கித்
துயரத் தழுங்க இமையோரிறை தொல்லை வேழஞ்
செயிருற் றியம்பி முருகேசன்முன் சென்ற தன்றே. ......
48(செல்லுங் கரிகண்)
செல்லுங் கரிகண் டுமையாள்மகன் சிந்தை யாலோர்
வில்லுங் கணைகள் பலவும் விரைவோடு நல்கி
ஒல்லென் றிடநா ணொலிசெய்துயர் சாபம் வாங்கி
எல்லொன்று கோலொன் றதன்நெற்றியுள் ஏக வுய்த்தான். ......
49(அக்கா லையில்வேள்)
அக்கா லையில்வேள் செலுத்துங்கணை அண்டர் தம்மின்
மிக்கான் அயிரா வதநெற்றியுள் மேவி வல்லே
புக்காவி கொண்டு புறம்போதப் புலம்பி வீழா
மைக்கார் முகில்அச் சுறவேயது மாண்ட தன்றே. ......
50(தன்னோர் களிறு)
தன்னோர் களிறு மடிவெய்தலுந் தான வேந்தன்
அன்னோ வெனவே இரங்கா அயல்போகி நின்று
மின்னோ டுறழ்தன் சிலைதன்னை வெகுண்டு வாங்க
முன்னோன் மதலை யொருகோலவன் மொய்ம்பி லெய்தான். ......
51(கோலொன்று விண்)
கோலொன்று விண்ணோர்க் கிறைமேல்கும ரேசன் உய்ப்ப
மாலொன்று நெஞ்சன் வருந்திப்பெரு வன்மை சிந்திக்
காலொன்று சாபத் தொழில்நீத்தனன் கையி லுற்ற
வேலொன் றதனைக் கடிதேகுகன் மீது விட்டான். ......
52(குந்தப் படையோர்)
குந்தப் படையோர் சிறுபுற்படு கொள்கை யேபோல்
வந்துற் றிடஅற் புதமெய்தினர் மற்றை வானோர்
கந்தக் கடவுள் சிலையிற்கணை யொன்று பூட்டித்
தந்திக் கிறைவன் தடம்பொன்முடி தள்ளி ஆர்த்தான். ......
53(தவசந் தனையோர்)
துவசந் தனையோர் கணைகொண்டு துணித்து மார்பிற்
கவசந் தனையோர் கணையால்துகள் கண்டு விண்ணோன்
அவசம் படஏழ் கணைதூண்டினன் ஆழி வேண்டிச்
சிவசங் கரஎன் றரிபோற்றிய செம்மல் மைந்தன். ......
54(தீங்கா கியவோ)
தீங்கா கியவோ ரெழுவாளியுஞ் செல்ல மார்பின்
ஆங்கார மிக்க மகவான் அயர்வாகி வீழ்ந்தான்
ஓங்கார மேலைப் பொருள்மைந்தனை உம்ப ரேனோர்
பாங்காய் வளைந்து பொருதார்படு கின்ற தோரார். ......
55(இவ்வா றமரர் பொரு)
இவ்வா றமரர் பொருமெல்லையில் ஈசன் மைந்தன்
கைவார் சிலையைக் குனித்தேகணை நான்கு தூண்டி
மெய்வா ரிதிகட் கிறைவன்றனை வீட்டி மற்றும்
ஐவா ளியினால் சமன்ஆற்றல் அடக்கி னானால். ......
56(ஒரம் பதனால்)
ஒரம் பதனால் மதிதன்னையும் ஒன்றி ரண்டு
கூரம் பதனாற் கதிர்தன்னையும் கோதில் மைந்தன்
ஈரம் பதனால் அனிலத்தையும் மேவு மூன்றால்
வீரம் பகர்ந்த கனலோனையும் வீட்டி நின்றான். ......
57(நின்றார் எவரு)
நின்றார் எவருங் குமரேசன் நிலைமை நோக்கி
இன்றா ரையுமற் றிவனேயடு மென்று தேறி
ஒன்றான சிம்புள் விறல்கண்டரி யுட்கி யோடிச்
சென்றா லெனவே இரிந்தோடினர் சிந்தை விம்மி. ......
58(ஓடுஞ் சுரர்கள்)
ஓடுஞ் சுரர்கள் திறநோக்கி உதிக்கும் வெய்யோன்
நீடுங் கதிர்கள் நிலவைத்துரக் கின்ற தேபோல்
ஆடுங் குமரன் அவரைத்துரந் தண்டர் முன்னர்
வீடுங் களத்தி னிடையேதனி மேவி நின்றான். ......
59(ஒல்லா தவரிற்)
ஒல்லா தவரிற் பொருதேசில உம்பர் வீழ
நில்லா துடைந்து சிலதேவர்கள் நீங்க நேரில்
வில்லா ளியாகித் தனிநின்ற விசாகன் மேனாள்
எல்லா ரையும்அட் டுலவும்தனி ஈசன் ஒத்தான். ......
60வேறு(சுரர்கள் யாருந்)
சுரர்கள் யாருந் தொலைந்திட வென்றுதான்
ஒருவ னாகி உமைமகன் மேவுழி
அருளின் நாரதன் அச்செயல் கண்டுவான்
குருவை யெய்திப் புகுந்தன கூறினான். ......
61(நற்ற வம்புரி)
நற்ற வம்புரி நாரதன் கூற்றினை
அற்ற மில்லுணர் அந்தணன் கேட்டெழீஇ
இற்ற தேகொல் இமையவர் வாழ்வெனாச்
சொற்று வல்லை துயருழந் தேகினான். ......
62(ஆத பன்மதி)
ஆத பன்மதி அண்டர் தமக்கிறை
மாதி ரத்தவர் மால்கரி தன்னுடன்
சாதல் கொண்ட சமர்க்களந் தன்னிடைப்
போதல் மேயினன் பொன்னெனும் பேரினான். ......
63(ஆவி யின்றி)
ஆவி யின்றி அவர்மறி குற்றது
தேவ ராசான் தெரிந்து படருறாத்
தாவி லேர்கெழு சண்முகன் அவ்விடை
மேவி யாடும் வியப்பினை நோக்கினான். ......
64(முழுது ணர்ந்திடு)
முழுது ணர்ந்திடு மொய்சுடர்ப் பொன்னவன்
எழுதொ ணாத எழில்நலந் தாங்கியோர்
குழவி தன்னுருக் கொண்ட குமரனைத்
தொழுது நின்று துதித்திது சொல்லுவான். ......
65வேறு(கரியரி முகத்தினன்)
கரியரி முகத்தினன் கடிய சூரனென்
றுரைபெறு தானவர் ஒறுப்ப அல்கலும்
பருவரல் உழந்துதன் பதிவிட் டிப்பெரு
வரையிடை மகபதி மறைந்து வைகினான். ......
66(அன்னவன் நின்னடி)
அன்னவன் நின்னடி அடைந்து நிற்கொடே
துன்னலர் தமதுயிர் தொலைத்துத் தொன்மைபோல்
தன்னர செய்தவுந் தலைவ னாகவும்
உன்னினன் பிறிதுவே றொன்றும் உன்னலான். ......
67(பற்பகல் அருந்தவம்)
பற்பகல் அருந்தவம் பயின்று வாடினன்
தற்பர சரவணத் தடத்திற் போந்தவுன்
உற்பவம் நோக்கியே உவகை பூத்தனன்
சொற்படு துயரெலாந் தொலைத்து ளானென. ......
68(கோடலும் மராத்)
கோடலும் மராத்தொடு குரவுஞ் செச்சையுஞ்
சூடிய குமரநின் றொழும்பு செய்திட
நேடுறும் இந்திரன் நீயித் தன்மையின்
ஆடல்செய் திடுவதை அறிகி லானரோ. ......
69(நாரணன் முதலி)
நாரணன் முதலினோர் நாடிக் காணொணா
ஆரண முதல்வனும் உமையும் அன்னவர்
சீரரு ளடைந்தனர் சிலரும் அல்லதை
யாருன தாடலை அறியும் நீரினார். ......
70(பற்றிய தொடர்பை)
பற்றிய தொடர்பையும் உயிரை யும்பகுத்
திற்றென வுணர்கிலம் ஏதந் தீர்கிலஞ்
சிற்றுணர் வுடையதோர் சிறியம் யாமெலாம்
உற்றுன தாடலை உணர வல்லமோ. ......
71(ஆதலால் வானவர்)
ஆதலால் வானவர்க் கரசன் ஆற்றவும்
ஓதிதான் இன்மையால் உன்றன் ஆடலைத்
தீதெனா வுன்னிவெஞ் செருவி ழைத்தனன்
நீதிசேர் தண்டமே நீபு ரிந்தனை. ......
72(மற்றுள தேவரும்)
மற்றுள தேவரும் மலைந்து தம்முயிர்
அற்றனர் அவர்களும் அறிவி லாமையால்
பெற்றிடுங் குரவரே பிழைத்த மைந்தரைச்
செற்றிடின் எவரருள் செய்யற் பாலினோர். ......
73(சின்மய மாகிய)
சின்மய மாகிய செம்மல் சிம்புளாம்
பொன்மலி சிறையுடைப் புள்ளின் நாயகன்
வன்மைகொள் விலங்கினை மாற்ற லல்லது
மின்மினி தனையடல் விசய மாகுமோ. ......
74(ஒறுத்திடும் அவுணர்)
ஒறுத்திடும் அவுணர்க ளொழிய வேரொடும்
அறுத்தருள் உணர்விலா அளியர் உன்னடி
மறுத்தலில் அன்பினர் மற்றின் னோர்பிழை
பொறுத்தருள் கருணையாற் புணரி போன்றுளாய். ......
75(பரமுற வணிகரை)
பரமுற வணிகரைப் பரித்துப் பல்வளந்
தருகலங் கவிழ்ந்திடச் சாய்த்து மற்றவர்
ஒருதலை விளிதல்போல் உன்னிற் பெற்றிடுந்
திருவினர் பொருதுனைச் செருவில் துஞ்சினார். ......
76(தொழுதகு நின்ன)
தொழுதகு நின்னடித் தொண்ட ராற்றிய
பிழையது கொள்ளலை பெரும சிந்தையுள்
அழிதரு மினையவர் அறிவு பெற்றிவண்
எழுவகை யருளென இறைஞ்சிக் கூறினான். ......
77(பொன்னவன் இன்ன)
பொன்னவன் இன்னன புகன்று வேண்டிட
முன்னவர் முன்னவன் முறுவல் செய்துவான்
மன்னவ னாதியர் மால்க ளிற்றொடும்
அந்நிலை எழும்வகை அருள்செய் தானரோ. ......
78வேறு(அந்தியின் வனப்பு)
அந்தியின் வனப்புடைய மெய்க்குகன் எழுப்புதலும் அன்ன பொழுதே
இந்திரனும் மாதிர வரைப்பினரும் வானவரும் யாவரு மெழாஅச்
சிந்தைதனில் மெய்யுணர்வு தோன்றுதலும் முன்புரி செயற்கை யுணராக்
கந்தனொடு கொல்சமர் புரிந்ததென உன்னினர் கலங்கி யெவரும். ......
79(கலங்கினர் இரங்கி)
கலங்கினர் இரங்கினர் கலுழ்ந்தனர் புலர்ந்தனர் கவன்ற னர்உளம்
மலங்கினர் விடந்தனை அயின்றவ ரெனும்படி மயர்ந்த னலிசேர்
உலங்கென உலைந்தனர் ஒடுங்கினர் நடுங்கினர் உரந்த னையிழந்
திலங்கெழில் முகம்பொலி விகந்தனர் பொருந்தமை யிகழ்ந்த னர்களே. ......
80(துஞ்சியெழும் அன்ன)
துஞ்சியெழும் அன்னவர்கள் ஏழுலகு முன்னுதவு சுந்த ரிதரும்
மஞ்சனரு ளோடுவிளை யாடுவது காண்டலும் வணங்கி யனையான்
செஞ்சரண் இரண்டினையு முச்சிகொடு மோயினர் சிறந்த லர்துணைக்
கஞ்சமல ரிற்பல நிறங்கொள்அரி யின்தொகை கவைஇய தெனவே. ......
81(கந்தநம ஐந்துமுகர்)
கந்தநம ஐந்துமுகர் தந்தமுரு கேசநம கங்கை யுமைதன்
மைந்தநம பன்னிரு புயத்தநம நீபமலர் மாலை புனையுந்
தந்தைநம ஆறுமுக வாதிநம சோதிநம தற்ப ரமதாம்
எந்தைநம என்றுமிளை யோய்நம குமாரநம என்றுதொழுதார். ......
82(பொருந்துதலை)
பொருந்துதலை யன்புடன் எழுந்தவர்கள் இவ்வகை புகழ்ந்து மனமேல்
அரந்தைகொடு மெய்ந்நடு நடுங்குதலும் அன்னதை அறிந்து குமரன்
வருந்தலிர் வருந்தலி ரெனக்கருணை செய்திடலும் மற்ற வர்கடாம்
பெருந்துயரும் அச்சமு மகன்றுதொழு தேயினைய பேசி னர்களால். ......
83(ஆயவமு தத்தி)
ஆயவமு தத்தினொடு நஞ்சளவி உண்குநரை அவ்வி டமலால்
தூயவமு தோவுயிர் தொலைக்குமது போலுனது தொல்ல ருளினால்
ஏயதிரு வெய்திட இருந்தனம்உன் னோடமரி யற்றி யதனால்
நீயெமை முடித்தியலை அன்னதவ றெம்முயிரை நீக்கி யதரோ. ......
84(பண்டுபர மன்றனை)
பண்டுபர மன்றனை இகழ்ந்தவன் மகத்திலிடு பாக மதியாம்
உண்டபவம் இன்னமும் முடிந்தில அதன்றியும் உனைப்பொ ருதுநேர்
கொண்டிகல் புரிந்தனம் அளப்பில்பவம் வந்தகும ரேச எமைநீ
தண்டமுறை செய்தவை தொலைத்தனை உளத்துடைய தண்ண ளியினால். ......
85(ஆதலின் எமக்கடி)
ஆதலின் எமக்கடிகள் செய்தஅரு ளுக்குநிக ராற்று வதுதான்
ஏதுளது மற்றெமை உனக்கடிய ராகஇவ ணீது மெனினும்
ஆதிபரமாகிய உனக்கடியம் யாம்புதி தளிப்ப தெவனோ
தாதையர் பெறச்சிறுவர் தங்களை அவர்க்கருள்கை தக்க பரிசோ. ......
86(அன்னதெனி னுந்)
அன்னதெனி னுந்தெளிவில் பேதையடி யேம்பிழை யனைத்தும் உளமேல்
உன்னலை பொறுத்தியென வேகுமர வேள்அவை யுணர்ந்து நமைநீர்
முன்னமொரு சேயென நினைந்துபொரு தீர்நமது மொய்ம்பு முயர்வும்
இன்னுமுண ரும்படி தெரித்துமென ஓருருவம் எய்தி னனரோ. ......
87(எண்டிசையு மீரெழு)
எண்டிசையு மீரெழு திறத்துலகும் எண்கிரியு மேழு கடலுந்
தெண்டிரையும் நேமிவரை யும்பிறவும் வேறுதிரி பாகி யுளசீர்
அண்டநிரை யானவு மனைத்துயிரும் எப்பொருளு மாகி அயனும்
விண்டும் அரனுஞ்செறிய ஓருருவு கொண்டனன் விறற்கு மரனே. ......
88(மண்ணளவு பாதல)
மண்ணளவு பாதலமெ லாஞ்சரணம் மாதிர வரைப்பும் மிகுதோள்
விண்ணளவெ லாமுடிகள் பேரொளியெ லாம்நயனம் மெய்ந்ந டுவெலாம்
பண்ணளவு வேதமணி வாய்உணர்வெ லாஞ்செவிகள் பக்கம் அயன்மால்
எண்ணளவு சிந்தையுமை ஐந்தொழிலும் நல்கியருள் ஈச னுயிரே. ......
89(ஆனதொரு பேருரு)
ஆனதொரு பேருருவு கொண்டுகும ரேசனுற அண்டர் பதியும்
ஏனையரும் அற்புதமி தற்புதமி தென்றுதொழு தெல்ல வருமாய்
வானமிசை நோக்கினர்கள் மெய்வடிவம் யாவையும் வனப்பு முணரார்
சானுவள வாஅரிது கண்டனர் புகழ்ந்தினைய சாற்றி னர்களால். ......
90வேறு(சேணலம் வந்த)
சேணலம் வந்த சோதிச் சிற்பர முதல்வ எம்முன்
மாணல முறநீ கொண்ட வான்பெருங் கோலந் தன்னைக்
காணலம் அடியேங் காணக் காட்டிடல் வேண்டு மென்ன
நீணலங் கொண்டு நின்ற நெடுந்தகை அதனைக் கேளா. ......
91(கருணைசெய் தொளி)
கருணைசெய் தொளிகள் மிக்க கண்ணவர்க் கருளிச் செவ்வேள்
அருணமார் பரிதிப் புத்தேள் அந்தகோ டிகள்சேர்ந் தென்னத்
தருணவில் வீசி நின்ற தனதுரு முற்றுங் காட்ட
இரணிய வரைக்கண் நின்ற இந்திரன் முதலோர் கண்டார். ......
92(அடிமுதன் முடியின்)
அடிமுதன் முடியின் காறும் அறுமுகன் உருவ மெல்லாங்
கடிதவ னருளால் நோக்கிக் கணிப்பிலா அண்ட முற்றும்
முடிவறு முயிர்கள் யாவும் மூவருந் தேவர் யாரும்
வடிவினில் இருப்பக் கண்டு வணங்கியே வழுத்திச் சொல்வார். ......
93(அம்புவி முதலாம்)
அம்புவி முதலாம் பல்பே ரண்டமும் அங்கங் குள்ள
உம்பரும் உயிர்கள் யாவும் உயிரலாப் பொருளும் மாலுஞ்
செம்பது மத்தி னோனுஞ் சிவனொடுஞ் செறிதல் கண்டோம்
எம்பெரு மானின் மெய்யோ அகிலமும் இருப்ப தம்மா. ......
94(அறிகிலம் இந்நாள்)
அறிகிலம் இந்நாள் காறும் அகிலமும் நீயே யாகி
உறைதரு தன்மை நீவந் துணர்த்தலின் உணர்ந்தா மன்றே
பிறவொரு பொருளுங் காணேம் பெருமநின் வடிவ மன்றிச்
சிறியம்யாம் உனது தோற்றந் தெரிந்திட வல்ல மோதான். ......
95(முண்டகன் ஒருவன்)
முண்டகன் ஒருவன் துஞ்ச முராரிபே ருருவாய் நேமிக்
கண்டுயில் அகந்தை நீங்கக் கண்ணுதற் பகவன் எல்லா
அண்டமும் அணிப்பூ ணார மாகவே ஆங்கொர் மேனி
கொண்டன னென்னுந் தன்மை குமரநின் வடிவிற் கண்டேம். ......
96(நாரணன் மலரோன்)
நாரணன் மலரோன் பன்னாள் நாடவுந் தெரிவின் றாகிப்
பேரழல் உருவாய் நின்ற பிரான்திரு வடிவே போலுன்
சீருரு வுற்ற தம்மா தெளிகிலர் அவரும் எந்தை
யாரருள் எய்தின் நம்போல் அடிமுடி தெரிந்தி டாரோ. ......
97(அரியொடு கமல)
அரியொடு கமலத் தேவும் ஆடல்செய் தகிலந் தன்னோ
டொருவரை யொருவர் நுங்கி உந்தியால் முகத்தால் நல்கி
இருவரு மிகலு மெல்லை எடுத்தபே ருருநீ கொண்ட
திருவுரு விதனுக் காற்றச் சிறியன போலு மன்றே. ......
98(ஆகையால் எம்பிரான்)
ஆகையால் எம்பி ரான்நீ அருவுரு வாகி நின்ற
வேகநா யகனே யாகும் எமதுமா தவத்தால் எங்கள்
சோகமா னவற்றை நீக்கிச் சூர்முதல் தடிந்தே எம்மை
நாகமே லிருத்து மாற்றால் நண்ணினை குமர னேபோல். ......
99(எவ்வுரு வினுக்கும்)
எவ்வுரு வினுக்கும் ஆங்கோ ரிடனதா யுற்ற உன்றன்
செவ்வுரு வதனைக் கண்டு சிறந்தனம் அறம்பா வத்தின்
அவ்வுரு வத்தின் துப்பும் அகலுதும் இன்னும் யாங்கள்
வெவ்வுரு வத்திற் செல்லேம் வீடுபே றடைது மன்றே. ......
100(இனையன வழுத்தி)
இனையன வழுத்திக் கூறி யிலங்கெழிற் குமர மூர்த்தி
தனதுபே ருருவை நோக்கிச் சதமகன் முதலா வுள்ளோர்
தினகரன் மலர்ச்சி கண்ட சில்லுணர் வுயிர்க ளென்ன
மனமிக வெருவக் கண்கள் அலமர மயங்கிச் சொல்வார். ......
101(எல்லையில் ஒளி)
எல்லையில் ஒளிபெற் றன்றால் எந்தைநின் னுருவம் இன்னும்
ஒல்லுவ தன்றால் காண ஒளியிழந் துலைந்த கண்கள்
அல்லதும் பெருமை நோக்கி அஞ்சுதும் அடியம் உய்யத்
தொல்லையின் உருவங் கொண்டு தோன்றி யேஅளித்தி யென்றார். ......
102(என்றிவை புகன்று வேண்ட)
என்றிவை புகன்று வேண்ட எம்பிரான் அருளால் வான்போய்
நின்றபே ருருவந் தன்னை நீத்தறு முகத்தோ னாகித்
தொன்றுள வடிவத் தோடு தோன்றலுந் தொழுது போற்றிக்
குன்றிருஞ் சிறைகள் ஈர்ந்த கொற்றவன் கூற லுற்றான். ......
103(தொன்னிலை தவாது)
தொன்னிலை தவாது வைகுஞ் சூரனே முதலா வுள்ள
ஒன்னலர் உயிரை மாற்றி உம்பரும் யானும் பாங்கர்
மன்னிநின் றேவல் செய்ய வானுயர் துறக்கம் நண்ணி
என்னர சியற்றி எந்தாய் இருத்திஎன் குறையீ தென்றான். ......
104(இகமொடு பரமும்)
இகமொடு பரமும் வீடும் ஏத்தினர்க் குலப்பு றாமல்
அகனம ரருளால் நல்கும் அறுமுகத் தவற்குத் தன்சீர்
மகபதி யளிப்பான் சொற்ற வாசகம் சுடரொன் றங்கிப்
பகவனுக் கொருவன் நல்கப் பராவிய போலு மாதோ. ......
105(வானவர் கோனை)
வானவர் கோனை நோக்கி வறிதுற நகைத்துச் செவ்வேள்
நீநமக் களித்த தொல்சீர் நினக்குநாம் அளித்தும் நீவிர்
சேனைக ளாக நாமே சேனையந் தலைவ னாகித்
தானவர் கிளையை யெல்லாம் வீட்டுதும் தளரேல் என்றான். ......
106(கோடலங் கண்ணி)
கோடலங் கண்ணி வேய்ந்த குமரவேள் இனைய கூற
ஆடியல் கடவுள் வெள்ளை அடற்களிற் றண்ணல் கேளா
வீடுற அவுண ரெல்லாம் வியன்முடி திருவி னோடுஞ்
சூடின னென்னப் போற்றிச் சுரரொடு மகிழ்ச்சி கொண்டான். ......
107(அறுமுகத் தேவை)
அறுமுகத் தேவை நோக்கி அமரர்கோன் இந்த வண்டத்
துறைதரு வரைகள் நேமி உலகுயிர் பிறவும் நின்னால்
முறைபிறழ்ந் தனவால் இந்நாள் முன்புபோல் அவற்றை யெல்லாம்
நிறுவுதி யென்ன லோடும் நகைத்திவை நிகழத்த லுற்றான். ......
108(இன்னதோ ரண்ட)
இன்னதோ ரண்டந் தன்னில் எம்மில்வே றுற்ற வெல்லாந்
தொன்னெறி யாக என்றோர் தூமொழி குமரன் கூற
முன்னுறு பெற்றித் தான முறையிறந் திருந்த தெல்லாம்
அந்நிலை எவரும் நோக்கி அற்புத மடைந்து நின்றார். ......
109வேறு(நிற்கு மெல்லையின் நில)
நிற்கு மெல்லையின் நிலத்திடை யாகிப்
பொற்கெ னத்திகழ் பொருப்பிடை மேவுஞ்
சிற்கு ணக்குரிசில் சேவடி தாழூஉச்
சொற்க நாடுள சுரேசன் உரைப்பான். ......
110(ஆண்ட கைப்பகவ)
ஆண்ட கைப்பகவ ஆரண மெய்ந்நூல்
பூண்ட நின்னடிகள் பூசனை யாற்ற
வேண்டு கின்றும்வினை யேம்அது செய்ய
ஈண்டு நின்னருளை ஈகுதி யென்றான். ......
111(என்ன லுங்குகன்)
என்ன லுங்குகன் இசைந்து நடந்தே
பொன்னி னாலுயர் பொருப்பினை நீங்கித்
தன்ன தொண்கயிலை சார்ந்திடு ஞாங்கர்
மன்னி நின்றதொரு மால்வரை புக்கான். ......
112(குன்றி ருஞ்சிறை)
குன்றி ருஞ்சிறை குறைத்தவன் ஏனோர்
ஒன்றி யேதொழு துவப்புள மெய்தி
என்றும் நல்லிளைய னாகிய எங்கோன்
பின்றொ டர்ந்தனர் பிறங்கலில் வந்தார். ......
113(சூரல் பம்புதுறு)
சூரல் பம்புதுறு கல்முழை கொண்ட
சாரல் வெற்பினிடை சண்முகன் மேவ
ஆரும் விண்ணவர் அவன்கழல் தன்னைச்
சீரி தர்ச்சனை செயற்கு முயன்றார். ......
114(அந்த வேலையம ரர்)
அந்த வேலையம ரர்க்கிறை தங்கண்
முந்து கம்மியனை முன்னுற அன்னான்
வந்து கைதொழலும் மந்திர மொன்று
நந்த மாநகரின் நல்கிவ ணென்றான். ......
115(அருக்கர் தந்தொகை)
அருக்கர் தந்தொகை அனைத்தையு மொன்றா
உருக்கி யாற்றியென ஒண்மணி தன்னால்
திருக்கி ளர்ந்துலவு செய்யதொர் கோயில்
பொருக்கெ னப்புனைவர் கோன்புரி குற்றான். ......
116(குடங்கர் போல்மகு)
குடங்கர் போல்மகு டங்கெழு வுற்ற
இடங்கொள் கோபுர விருக்கையின் நாப்பண்
கடங்க லுழ்ந்திடு கரிக்குரு குண்ணும்
மடங்கல் கொண்டதொர் மணித்தவி சீந்தான். ......
117(ஈந்த வெல்லை)
ஈந்த வெல்லைதனில் இந்திரன் ஏவப்
போந்து வானெறி புகுந்திடு தூநீர்
சாந்த மாமலர் தழற்புகை யாதி
ஆய்ந்து தந்தனர்கள் அண்டர்கள் பல்லோர். ......
118வேறு(அன்ன காலையில் அண்டர்)
அன்ன காலையில் அண்டர்கள் மேலையோன்
சென்னி யாறுடைத் தேவனை வந்தியா
உன்ன தாளருச் சித்தியா முய்ந்திட
இந்நி கேதனம் ஏகுதி நீயென்றான். ......
119(கூற்ற மன்னது)
கூற்ற மன்னதுட் கொண்டுவிண் ணோரெலாம்
போற்ற மந்திரம் புக்கு நனந்தலை
ஏற்ற ரித்தொகை ஏந்தெழிற் பீடமேல்
வீற்றி ருந்தனன் வேதத்தின் மேலையோன். ......
120(ஆன காலை அமரர்)
ஆன காலை அமரர்கள் வாசவன்
ஞான நாயக நாங்கள் உனக்கொரு
தானை யாகுந் தலைவனை நீயெனா
வான நீத்தத்து மஞ்சனம் ஆட்டினார். ......
121(நொதுமல் பெற்றிடு)
நொதுமல் பெற்றிடு நுண்டுகில் சூழ்ந்தனர்
முதிய சந்த முதலமட் டித்தனர்
கதிரும் நன்பொற் கலன்வகை சாத்தினர்
மதும லர்த்தொகை மாலிகை சூட்டினார். ......
122(ஐவ கைப்படும்)
ஐவ கைப்படும் ஆவியும்*
1 பாளிதம்
மெய்வி ளக்கமும் வேறுள பான்மையும்
எவ்வெ வர்க்கும் இறைவற்கு நல்கியே
செவ்வி தர்ச்சனை செய்தன ரென்பவே. ......
123(புரந்த ரன்முதற்)
புரந்த ரன்முதற் புங்கவர் தம்முளத்
தரந்தை நீங்க அருச்சனை செய்துபின்
பரிந்து தாழ்ந்து பரவலும் ஆயிடைக்
கரந்து வள்ளல் கயிலையிற் போயினான். ......
124(வெற்பின் மிக்குயர்)
வெற்பின் மிக்குயர் வெள்ளியம் பொற்றையில்
சிற்ப ரன்மறைந் தேகலுந் தேவரும்
பொற்பின் மேதகு பொன்னகர் அண்ணலும்
அற்பு தத்துடன் அவ்வரை நீங்கினார். ......
125(ஈசன் மைந்தன்)
ஈசன் மைந்தன் இளையன் இமையவர்
பூசை செய்யப் பொருந்தலின் அவ்வரை
மாசில் கந்த வரையென யாவரும்
பேச ஆங்கொர் பெயரினைப் பெற்றதே. ......
126(ஆன கந்த வடுக்க)
ஆன கந்த வடுக்கலைத் தீர்ந்துபோய்
வான மன்னன் மனோவதி நண்ணினான்
ஏனை வானவர் யாவரும் அவ்வவர்
தான மெய்தனர் தொன்மையில் தங்கினார். ......
127(உயவல் ஊர்திகொண்)
உயவல் ஊர்திகொண் டொய்யென முன்னரே
கயிலை யங்கிரி ஏகிய கந்தவேள்
பயிலும் வீரரும் பாரிட மள்ளரும்
அயலின் மேவர ஆயிடை வைகினான். ......
128ஆகத் திருவிருத்தம் - 1179