(ஏற்ற மானவர்)
ஏற்ற மானவர் ஒன்றொழி பதின்மரோ டிலக்கர்
தோற்ற மெய்திய தன்மையை இத்துணை சொற்றாம்
ஆற்றல் சேர்புனற் சரவணத் தடந்தனில் அறுவர்
போற்ற வைகினோன் கயிலையிற் புகுந்தமை புகல்வாம். ......
1(தருப்ப மிக்குளார்)
தருப்ப மிக்குளார் காணுறாத் தாவில்சீர் வெள்ளிப்
பொருப்பி லுற்றிடு பரம்பொருள் கருணையாற் பொறைகூர்
கருப்ப மற்றுயிர் முழுவதுந் தந்திடுங் கன்னிப்
பருப்ப தக்கொடிக் கவ்வழி இனையன பகர்வான். ......
2(பொம்ம லுற்றிடு)
பொம்ம லுற்றிடு நான்முக னாதியோர் புந்தி
விம்ம லற்றிட முந்துநம் விழியிடைத் தோன்றிச்
செம்ம லர்ப்பெருஞ் சரவணத் திருந்தநின் சேயை
இம்ம லைக்கணே உய்க்குதும் வருகென இசைத்தான். ......
3வேறு(செம்புலி யதளினான்)
செம்புலி யதளினான் செப்பிற் றோர்தலும்
அம்பிகை யுவகையோ டன்பு கொண்டெழீஇ
நம்பெரு மதலையை நாங்கொண் டேகுதும்
எம்பெரு முதல்வநீ யெழுதி யாலென்றாள். ......
4(கொம்மைவெம் முலை)
கொம்மைவெம் முலையினால் குறிப டுத்திய
அம்மையீ துரைத்துழி அருளி னாலெழா
மைம்மலி மிடறுடை வான நாயகன்
இம்மென அவளொடும் ஏற தேறினான். ......
5(நந்தியின் எருத்த)
நந்தியின் எருத்தமேல் நங்கை யாளொடு
நந்திவந் திடுதலும் நாக மேலுளார்
நந்திய வினைத்தொகை நந்திற் றென்றிடா
நந்திதன் கணத்தொடு நண்ணிப் போற்றினார். ......
6(அந்தமில் விடத்தி)
அந்தமில் விடத்தினை யடக்கு கையுடைச்
கந்தர னாதியாந் தொல்க ணத்தினோர்
எந்தைதன் உருவுகொண் டிருந்த மேலவர்
வந்திரு மருங்குமாய் வழுத்தி ஈண்டினார். ......
7(ஆன்முக நந்தியெம்)
ஆன்முக நந்தியெம் மடிகள் உய்த்திடத்
தேன்முக நறுமலர் சிதறிச் செங்கையால்
கான்முறை வணங்கியே கமலக் கண்ணவன்
நான்முகன் மகபதி பிறரும் நண்ணினார். ......
8(சல்லரி வயிர்துடி)
சல்லரி வயிர்துடி தடாரி சச்சரி
கல்லென இரங்குறு கரடி காகளஞ்
செல்லுறழ் பேரிகை திமிலை யாதியாம்
பல்லியம் இயம்பின பாரி டங்களே. ......
9வேறு(வேத நான்குங் குடி)
வேத நான்குங் குடிலையும் வேறுள
பேத மாய கலைகளும் பேரிசை
நாத மோடு நணுகின விஞ்சையர்
கீதம் யாவும் இசைத்துக் கெழுமினார். ......
10(வள்ளல் வேணியின்)
வள்ளல் வேணியின் மாமதி ஈண்டியே
பிள்ளை வெண்பிறை யைப்படர் பேரராக்
கொள்ளு மென்று குறித்தது போற்றல்போல்
வெள்ளி வெண்குடை வெய்யவர் ஏந்தினார். ......
11(சகர ரென்னுந் தலை)
சகர ரென்னுந் தலைவர்கள் தம்வழிப்
பகிர தப்பெயர்ப் பார்த்திவன் வேண்டலும்
நிகரி லோன்அருள் நீத்தத் தொழுக்கெனப்
புகரில் சாமரம் பூதர்கள் வீசினார். ......
12(சீறு மால்கரி சீயம்)
சீறு மால்கரி சீயம் வயப்புலி
ஏறு பூட்கை இரலையெண் கேமுதல்
வேறு கொண்ட வியன்முகச் சாரதர்
நூறு கோடியர் நொய்தெனச் சுற்றினார். ......
13(இமிலு டைப்பல)
இமிலு டைப்பல ஏற்றிருங் கேதனந்
திமில விண்புனல் நக்கிச் சிதறுவ
அமல னைத்தொழு தாற்றுமெய் யன்பினால்
கமலம் உய்த்திடுங் காட்சியர் போன்றவே. ......
14(அன்ன காலை அகில)
அன்ன காலை அகிலமும் ஈன்றருள்
கன்னி தன்னொடு காமர்வெள் ளேற்றின்மேல்
மன்னி வைகு மதிமுடி வானவன்
தன்ன தாலயத் தைத்தணந் தேகினான். ......
15வேறு(தன்ன தாலயம் நீங்கி)
தன்ன தாலயம் நீங்கியே கயிலையைத் தணந்து
பொன்னின் நீடிய இமையமால் வரைப்புறத் தேகி
அன்ன மாடுறுஞ் சரவணப் பொய்கையை யடைந்தான்
என்னை யாளுடை நாயகன் இறைவியுந் தானும். ......
16(பிறையு லாஞ்சடை)
பிறையு லாஞ்சடைத் தேவனும் அவன்றனைப் பிரியா
துறையும் மாதுமோ ரறுவகை உருவுகொண் டுற்ற
சிறுவன் நீர்மையை நோக்கியே திருவருள் செய்து
நிறையும் வான்புனற் பொய்கையங் கரையிடை நின்றார். ......
17(முண்ட கச்சர வண)
முண்ட கச்சர வணந்தனில் மூவிரு வடிவங்
கொண்டு லாவிவீற் றிருந்திடும் ஒருபெருங் குமரன்
அண்டர் நாயகன் தன்னுடன் அகிலமீன் றாளைக்
கண்டு மாமுக மலர்ந்தனன் தனதுளங் களித்தான். ......
18(அந்த வேலையிற் கவுரி)
அந்த வேலையிற் கவுரியை நோக்கியெம் மையன்
இந்த நின்மகன் றனைக்கொடு வருகென இயம்பச்
சுந்த ரங்கெழு விடையினுந் துண்ணென இழிந்து
சிந்தை கொண்டபே ராதரந் தன்னொடுஞ் சென்றாள். ......
19(சரவ ணந்தனில்)
சரவ ணந்தனில் தனதுசேய் ஆறுருத் தனையும்
இருக ரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்
திருமு கங்களோ ராறுபன் னிருபுயஞ் சேர்ந்த
உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகமீன் றுடையாள். ......
20(எந்தை சத்திகள்)
எந்தை சத்திகள் உயிரெலாம் ஒடுங்குறு மெல்லை
முந்து போலஒன் றாகியே கூடிய முறைபோல்
அந்த மில்லதோர் மூவிரு வடிவுமொன் றாகிக்
கந்தன் என்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன். ......
21(முன்பு புல்லிய குமர)
முன்பு புல்லிய குமரவேள் முடிதொறும் உயிர்த்து
மின்பி றங்கிய புறந்தனை நீவலும் விமலை
தன்பெ ருந்தனஞ் சுரந்துபால் சொரிந்தன தலையாம்
அன்பெ னப்படு கின்றதித் தன்மையே அன்றோ. ......
22(ஆதி நாயகன் கருணை)
ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம
போத நீரதாய் இருந்ததன் கொங்கையிற் பொழிபால்
ஏதி லாததோர் குருமணி வள்ளமீ தேற்றுக்
காதல் மாமகற் கன்பினால் அருத்தினாள் கவுரி. ......
23(கொங்கை யூறுபால்)
கொங்கை யூறுபால் அருத்தியே குமரனைக் கொடுசென்
றெங்கள் நாயகன் முன்னரே இறைஞ்சுவித் திடலும்
அங்கை யாலவன் றனைஎடுத் தகலமேல் அணைத்துப்
பொங்கு பேரருள் நீர்மையா லிருத்தினன் புடையில். ......
24(அருத்தி தந்திடு)
அருத்தி தந்திடு குமரவேள் ஒருபுடை அமரப்
பெருத்த மன்னுயிர் யாவையும் முன்னரே பெற்ற
ஒருத்தி தன்னையுங் கையினா லொய்யென வாங்கி
இருத்தி னான்தன திடந்தனில் எம்மையாள் இறைவன். ......
25(ஏல வார்குழல் இறை)
ஏல வார்குழல் இறைவிக்கும் எம்பிரான் றனக்கும்
பால னாகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞால மேலுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய்
மாலை யானதொன் றழிவின்றி வைகுமா றொக்கும். ......
26வேறு(விடையுற்றிடு பரம)
விடையுற்றிடு பரமற்குமவ் விமலைக்கும் விறற்சேய்
இடையுற்றது கண்டார்அயன் மகவான்முத லிமையோர்
கடையுற்றிடு கடலாமெனக் கல்லென்றிரைத் தணுகாப்
புடையுற்றனர் எதிருற்றனர் புறனுற்றனர் புகழ்வார். ......
27(காமாரிதன் விழி)
காமாரிதன் விழிதந்திடு கழிகாதல ஒழியாத்
தோமாரியல் புளனாகிய சூரன்கொடுந் தொழிலால்
யாமாரினும் இழுக்குற்றனம் எமையாள்இனி யென்னாப்
பூமாரிகள் பொழிந்தார்பணிந் தெழுந்தாசிகள் புகன்றார். ......
28(வாரற்புத முறவீங்கி)
வாரற்புத முறவீங்கிய வன்னத்தன முருந்தின்
மூரற்பவ ளச்சேயிதழ் முழுமாமதி வதனத்
தாரற்பெயர் பெறுமங்கையர் அதுகாலையில் அரன்முன்
பேரற்பொடு பணிந்தேயெழப் பெருந்தண்ணளி புரிந்தான். ......
29(கந்தன்றனை நீர்)
கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள்
மைந்தன்எனும் பெயராகுக மகிழ்வால்எவ ரேனும்
நுந்தம்பக லிடைஇன்னவன் நோன்றாள்வழி படுவோர்
தந்தங்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான். ......
30(என்னாவருள் புரி)
என்னாவருள் புரிகின்றுழி இமையத்தவள் சேயைத்
தன்னாரரு ளொடுசென்றெதிர் தழுவித்தனத் திழிபால்
பொன்னார்மணி வள்ளத்துமுன் பூரித்தருத் திடவே
அன்னாள்முலை அமுதுக்கவை யாறொத்தொழு கினவே. ......
31(வானார்சுர நதிபோற்)
வானார்சுர நதிபோற்சர வணத்தூடவை புகலுந்
தூநான்மறை கரைகண்டவன் முதல்வந்திடு துணைவ
ரானாஅறு சிறுவோர்தமை அளித்தோன்சபித் திடலால்
மீனாயவண் வதிகின்றவர் புகும்பாலினை மிசைந்தார். ......
32(கயிலைக்கிறை யவள்)
கயிலைக்கிறை யவள்மெய்த்தன கலசத்தினும் உகுபால்
அயிலுற்றிடு பொழுதத்தினில் அறலிற்புடை பெயரும்
அயிலைத்தனு வொருவித்தவ வடிவுற்றெழு தருவார்
துயிலுற்றுணர் பவரொத்தனர் மயலற்றிடு தொடர்பால். ......
33(அன்னாரறு வருமா)
அன்னாரறு வருமாயெழுந் தகன்பொய்கைவிட் டமலன்
முன்னாய்வணங் கினர்போற்றலும் முனிமைந்தர்கள் பரங்கோ
டென்னாவுரை பெறுகுன்றிடை இருந்தேதவம் புரிமின்
சின்னாள்மிசை இவன்வந்தருள் செயுமென்றருள் செய்தான். ......
34(நன்றாலெனத் தொழு)
நன்றாலெனத் தொழுதன்னவர் நாதன்விடை பெற்றே
சென்றார்உடு மடவாரொடு திருமாலயன் முதலா
நின்றார்தமக் கருள்செய்தவர் நிலயம்புக அருளிப்
பொன்றாழ்சடை யினன்வெள்ளியம் பொருப்பின்றலை புக்கான். ......
35(அடையார்புர மெரி)
அடையார்புர மெரிசெய்திடும் அமலன்கயி லையிற்போய்
விடையூர்தியின் இழிந்தேதனி விறற்சேயொடும் வெற்பின்
மடவாளொடு நடவாப்பொலன் மாமந்திரத் தவையின்
இடையாரரி யணைமீமிசை இருந்தான் அருள் புரிந்தே. ......
36(சேயோனெ நும்)
சேயோனெனும் முன்னோன்றனைச் சிலம்பின்வரும் ஒன்பான்
மாயோர்உத வியமைந்தரும் மற்றுள்ளஇ லக்கத்
தூயோர்களுந் தொழுதேமலர் தூவிப்பணிந் தேத்தி
ஆயோர்தம துயிரேயென அவனைக்குறித் தணைந்தார். ......
37ஆகத் திருவிருத்தம் - 1051