Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

previous padalam   12 - துணைவர்வரு படலம்   next padalamthuNaivarvaru padalam

Ms Revathi Sankaran (2.06mb)
(1 - 20)



Ms Revathi Sankaran (2.00mb)
(21 - 37)




(நஞ்ச யின்றவன்)

நஞ்ச யின்றவன் நெற்றிநாட் டத்தினால் நல்கும்
     வெஞ்சு டர்ப்பொறி வெம்மையை ஆற்றலள் விமலை
          செஞ்சி லம்படி தாக்கலின் நவமணி சிதற
               அஞ்சி யோடினள் இத்திற முணர்ந்தனள் அகத்துள். ......    1

(மாய வன்முதல்)

மாய வன்முதல் அமரர்கள் ஈசனை வணங்கி
     நீயொர் மைந்தனைத் தருகென நெற்றிநாட் டத்தால்
          ஆய வன்சுடர் உதவியோர் மதலையாய் அமர்வான்
               ஏயி னான்சர வணத்தெனத் தெரிந்தனள் இறைவி. ......    2

(அன்ன தற்பினர் உமை)

அன்ன தற்பினர் உமையவள் எனதுபால் அமலன்
     தன்ன ருட்பெறு மதலைதோன் றாவகை தடுத்த
          பொன்ன கர்க்கிறை விரிஞ்சன்மால் முதலபுத் தேளிர்
               பன்னி யர்க்கெலாம் புதல்வரின் றாகெனப் பகர்ந்தாள். ......    3

(இமைய மாமகள்)

இமைய மாமகள் இத்திறம் புகன்று மீண்டேகிச்
     சமயம் யாவையும் நிறுவிய கண்ணுதற் றலைவன்
          அமல மாந்திரு முன்னர்வந் தரிக்குமுன் னரிதாங்
               கமல மார்அடி கண்டனள் பணிந்துகண் களித்தாள். ......    4

(உம்பர் யாவருங்)

உம்பர் யாவருங் குறையிரந் திடலுநீ யுதவுஞ்
     செம்பொ றித்தொகை யாற்றலும் வெம்மையுந் தெரிந்து
          வெம்பி முற்றுடல் பதைப்புற அகன்றிவண் மீண்டேன்
               எம்பெ ருந்தகை அவ்வழல் நீக்கலா லென்றாள். ......    5

(கன்னி இங்ஙனம்)

கன்னி இங்ஙனம் பகர்தலுங் கருணைசெய் தருளித்
     தன்னி டத்தினில் இருத்தினன் இருந்திடு தையல்
          முன்னம் ஓடலிற் சிதறுநூ புரமணி முழுதும்
               என்னை யாளுடை நாயகன் முன்னிலங் கினவால். ......    6

(தளிரின் மெல்ல)

தளிரின் மெல்லடிப் பரிபுர மாயின தணந்து
     மிளிரு மந்நவ மணிகளின் ஆணையால் விமலை
          ஒளிரு நல்லுருத் தோன்றின ஐம்முகத் தொருவன்
               தெளிரு முச்சுடர் அகத்திடை யமர்ந்திடுஞ் செயல்போல். ......    7

(எண்ணி லாநவ)

எண்ணி லாநவ மணிகளின் உமையுரு வெனைத்துங்
     கண்ணி னாற்றெரிந் தருளினால் வம்மெனக் கழற
          அண்ண லோர்வகை மணிக்கொரு சத்திக ளாக
               நண்ணி னார்நவ சத்திகள் அமரர்நற் றவத்தால். ......    8

(பருப்ப தக்கொடி)

பருப்ப தக்கொடி புரைநவ சத்திகள் பரமன்
     திருப்ப தத்திடை வணங்கிநின் றவனிடைச் சிந்தை
          விருப்பம் வைத்தலும் முனிவர்தம் மகளிற்போல் விரைவில்
               கருப்ப முற்றனர் யாவதும் உமையவள் கண்டாள். ......    9

(முனம்பு ரிந்துல)

முனம்பு ரிந்துல களித்தவள் அனையர்பால் முதிருஞ்
     சினம்பு ரிந்திவண் எமக்குமா றாகிய திறத்தால்
          கனம்பு ரிந்தஇக் கருப்பமோ டிருத்திர் பல்காலம்
               இனம்பு ரிந்தநீர் யாவரு மென்றுசூள் இசைத்தாள். ......    10

(ஆவ தெல்லை)

ஆவ தெல்லையில் நடுக்கமுற் றஞ்சியே அங்கண்
     மேவு மாதர்மெய் வியர்த்தனர் அவ்வியர்ப் பதனில்
          தேவ தேவன தருளினால் தினகரத் திரள்போல்
               ஒவி லாவிறல் வீரர்கள் இலக்கர்வந் துதித்தார். ......    11

(வடுத்த னைப்பொரு)

வடுத்த னைப்பொருங் கண்ணினர் வியர்ப்பினில் வந்தாங்
     கடுத்த மானவர் ஓரிலக் கத்தரும் அசனி
          கடுத்த சொல்லினர் பொற்றுகி லுடையினர் கரத்தில்
               எடுத்த வாளினர் பலகைய ராகிஈண் டினரால். ......    12

(அனையர் யாவரும்)

அனையர் யாவரும் ஈசனை யடைந்தனர் அன்புற்
     றினிய வாகிய அமலன்நா மங்களை யேத்தி
          வனைக ருங்கழல் வணங்கிமுன் நிற்றலும் மற்றப்
               புனித நாயகன் அவர்தமை நோக்கியே புகல்வான். ......    13

(மைந்தர் கேண்)

மைந்தர் கேண்மினோ நீவிர்கள் யாவரும் வயத்தால்
     இந்தி ராதியர் பகைவரை அடுவதற் கெமது
          கந்த வேள்படை யாகுதிர் என்னவே கழறி
               முந்து பேரருள் புரிந்தனன் யாவர்க்கும் முதல்வன். ......    14

(இன்ப நீருடன்)

இன்ப நீருடன் இவையருள் புரிதலும் இலக்கம்
     நன்பெ ருந்திறல் மைந்தர்க ளாயினோர் நாளும்
          அன்பு மேதகு பரிசன ராகியே அமலன்
               முன்பு நீங்கலா தொழுகினர் செய்பணி முறையால். ......    15

(மாற்ற ருஞ்சின)

மாற்ற ருஞ்சினத் தம்மைமுன் கொடுமொழி வழங்கத்
     தோற்று நன்மணி யுருவமாந் தோகையர் துளங்கிப்
          போற்றி வந்தனை செய்துபின் அவள்பணி புரிந்தே
               ஆற்று தொல்கருப் பத்துடன் பற்பகல் அமர்ந்தார். ......    16

(இகலு மாமணி)

இகலு மாமணி மகளிர்தங் கருவினுள் இறைவற்
     புகழும் நந்தியங் கணத்தவர் குழவியாய்ப் போந்து
          நிகரில் காளைய ராகிவீற் றிருந்தனர் நெறிசேர்
               சுகன்எ னும்படி பரமனை முன்னியே தொழுது. ......    17

(அரத னங்களில்)

அரத னங்களில் தோன்றிய மங்கையர் அகட்டிற்
     கருவின் வந்திடு ஆடவர் ஈசனைக் கருதிப்
          புரியும் யோகுட னிருத்தலின் ஆற்றரும் பொறையாய்ப்
               பரம தாதலும் உமையுடன் பரமனைப் பணிந்தார். ......    18

(இருவர் தம்மையும்)

இருவர் தம்மையும் பணிந்தவர் இன்றுகா றினைய
     கருவின் நொந்தனம் இன்னினி யாம்பரிக் கல்லேம்
          அருள்பு ரிந்திடு மென்றலும் ஆதியங் கடவுள்
               பரிவி னால்உமை திருமுகம் நோக்கியே பகர்வான். ......    19

(ஏல வார்குழற்)

ஏல வார்குழற் கவுரிநின் செய்யதா ளிடையிற்
     சாலு நூபுரத் துதித்தவர் உனதுசா பத்தாற்
          சூலி னான்மிக மெலிந்தனர் பற்பகல் சுமந்தார்
               பால ரைப்பெற இனியருள் புரிகெனப் பணித்தான். ......    20

(இறைவன் இங்கிது)

இறைவன் இங்கிது பணித்தலும் நன்றென இசையா
     முறுவல் செய்துமை மாதரை நோக்கிமொய்ம் பினரைப்
          பெறுதி ரால்இனி யென்றலும் அவர்வயிற் பெயரா
               துறையும் யோகுடை வீரர்கள் இத்திறம் உணர்ந்தார். ......    21

(மறத்த லில்லதோ)

மறத்த லில்லதோ ருணர்வுடை வீரர்கள் மற்றித்
     திறத்தை நாடியே யோகுவிட் டுளமகிழ் சிறப்ப
          இறத்தல் நீங்கிய பரம்பொருள் அருள்முறை இறைஞ்சிப்
               பிறத்த லுன்னியே முயன்றனர் ஆயிடைப் பெயர்வார். ......    22

(பரிபு ரந்தனின்)

பரிபு ரந்தனின் முன்வரு மங்கையர் பரைதன்
     கருணை கொண்டசொற் கேட்டலுங் கவற்சியை அகன்று
          விரைவின் மேலவர் பதம்பணிந் தேத்தியே விடைகொண்
               டொருவி மைந்தரை அளித்தனர் யாவரு மொருசார். ......    23

(நந்தி தன்கண)

நந்தி தன்கண முதல்வர் களாகியே நணியோர்
     பந்த நீங்கியே சனித்தனர் ஒன்றிலாப் பதின்மர்
          எந்தை யாரருள் பெயர்கொடே இருநில வரைப்பில்
               சுந்த ரன்விடை முகத்தவன் றோன்றிய வாபோல். ......    24

(பேர ஆகுவை யுடை)

பேர ஆகுவை யுடையவன் இளவல்பே ரருளால்
     சூர வாகுலம் வானவர் பெறாவகை தொலைப்பான்
          ஏர வாகுறுஞ் செம்மணிப் பாவைதன் னிடத்தில்
               வீர வாகுவந் துதித்தனன் உலகெலாம் வியப்ப. ......    25

(விரள வல்லியார்)

விரள வல்லியார் தந்திசூ ரரிவியன் படையாங்
     கரள வல்லிருள் அகற்றுவான் எழுந்தவெண் கதிர்போல்
          திரள வல்லினை அனையபூண் முலையுடைத் தெய்வத்
               தரள வல்லிபால் தோன்றினன் வீரகே சரியே. ......    26

(மக்கள் வானவர்)

மக்கள் வானவர்க் கருந்துயர் புரியும்வல் லவுணர்
     தொக்க வீரமா மகேந்திரப் பெருவளந் தொலையச்
          செக்கர் நூபுரப் புட்பரா கத்திபாற் சிறப்பால்
               தக்க வீரமா மகேந்திரன் வந்தவ தரித்தான். ......    27

(ஆத வத்தனிக் கட)

ஆத வத்தனிக் கடவுளும் வடவையா ரழலுஞ்
     சீத ளப்புது மதியமும் வெள்குறத் திகழ்கோ
          மேத கத்தமர் பாவைபால் விண்ணவர் புரியும்
               மாத வத்தினால் வீரமா மகேச்சுரன் வந்தான். ......    28

(தான மாநிலத் தேவர்)

தான மாநிலத் தேவர்கள் மகிழ்வுறத் தகுவ
     ரான பேரெலா முடிவுற அறந்தலை யெடுப்பக்
          கானல் சேர்வயி டூரிய மின்னிடைக் கழற்கால்
               மான வீரமா புரந்தரன் என்பவன் வந்தான். ......    29

(சூர ராக்கமுந்)

சூர ராக்கமுந் துணைவர்தம் மாக்கமுஞ் சூழுந்
     தீர ராக்கமும் வானவ ரேக்கமுஞ் சிதைய
          வார ராக்கமழ் கொன்றைவே ணியன்அரு ளதனால்
               வீர ராக்கதன் வந்தனன் வயிரமெல் லியல்பால். ......    30

(கரக தத்தனி மால்)

கரக தத்தனி மால்வரை எடுத்தொரு கணத்தில்
     புரக தத்தினை இழைத்தவன் அருளினாற் புணரிக்
          குரக தத்திடைப் பைங்கனல் கொம்மென எழல்போல்
               மரக தத்திபால் வீரமார்த் தாண்டன் வந்தனனே. ......    31

(மையல் மாக்கரி)

மையல் மாக்கரி வாம்பரி விரவிய மணித்தேர்
     வெய்ய தானவர் பஃறொகை இமைப்பினில் விளிய
          மொய்யி னார்த்தடு மானவன் பவளமா மொழிப்பேர்த்
               தையல் தன்வயின் வலியவீ ராந்தகன் சனித்தான். ......    32

(கந்து தித்திடும்)

கந்து தித்திடும் வியன்நர மடங்கலுங் கடலின்
     முந்து தித்திடும் ஆலமும் வடவையும் முரண
          நந்து தித்தநற் களமணிப் பாவைநற் றவத்தால்
               வந்து தித்தனன் வீரதீ ரப்பெயர் வலியோன். ......    33

(இந்த வீரரொன்)

இந்த வீரரொன் பதின்மரும் ஈசன தருளால்
     தந்தம் அன்னையர் நிறங்கொடே பொலந்துகில் தாங்கி
          வந்து பற்பகல் வளர்தரும் உறுப்பொடு மடவார்
               உந்தி யின்வழி நான்முகத் தண்ணல்போல் உதித்தார். ......    34

வேறு

(உதிதருமத் திறல்)

உதிதருமத் திறல்வீரர் அரியணைமேல் அம்மையுட னுறைந்த நாதன்
     பதமலர்கள் பணிந்தெழலும் அவர்க்கண்டு பார்ப்பதியைப் பரிவால் நோக்கி
          மதியுடையர் திறலுடையர் மானவருங் கலத்தினர்நம் மைந்தர் இன்னோர்
               புதியரலர் நந்திதனிக் கணத்தவரென் றான்சுருதிப் பொருளாய் நின்றான். ......    35

(தேவியது கேட்டு)

தேவியது கேட்டுமைந்தர்க் கருள்புரிய அவர்க்கெல்லாஞ் சிவன்வெவ் வேறு
     தாவில்சுடர் வாளுதவி வியர்ப்பில்வரும் ஓரிலக்கந் தனய ரோடு
          நீவிர்களு மொன்றிநுங்கட் கிறையவனா கியசேயை நீங்க லின்றி
               ஏவலவன் பணித்தனசெய் தொழுகுதிரென் றான்அவரும் இசைந்து தாழ்ந்தார். ......    36

(ஒன்பானாம் இலக்க)

ஒன்பானாம் இலக்கத்தோர் ஓரிலக்கத் தோர்தம்மோ டொன்றிப் புல்லி
     அன்பாகி எம்பெருமான் சினகரத்தை அகலாமல் அங்கண் வைக
          மென்பானல் புரையும்விழிச் சத்திகளொன் பதின்மர்களும் விமலக் கன்னி
               தன்பாலை யிகவாமல் அவள்பணித்த தொழில்புரிந்து சார்த லுற்றார். ......    37

ஆகத் திருவிருத்தம் - 1014



previous padalam   12 - துணைவர்வரு படலம்   next padalamthuNaivarvaru padalam

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]