(பற்பக லினைய)
பற்பக லினைய வாற்றாற் படர்தலும் பின்னோர் வைகல்
முற்படும் அயன்மால் வேள்வி முதலவன் திசைகாப் பாளர்
சொற்படு முனிவர் வானோர் யாவருந் தொல்லை மேரு
வெற்பினிற் குழுமிச் சூரால் மிகமெலிந் திரங்கிச் சொல்வார். ......
1(உலகினை அவுணர்)
உலகினை அவுணர்க் கீந்தே யோகிபோல் வைகி நம்பால்
மெலிவினைப் படுத்தி யாம்போய் வேண்டலும் இரக்க மெய்தி
மலைமக டன்னை வேட்டான் மைந்தனைத் தந்து நம்மைத்
தலையளி புரியான் வாளா இருப்பதென் தாணு வானோன். ......
2(இவறலு மிகலு)
இவறலு மிகலு மின்றி யார்க்குமோர் பெற்றித் தாகி
அவரவர் வினைகள் நாடி அதற்படு பொருளை நல்குஞ்
சிவனையாம் வெறுத்தல் குற்றஞ் சிறந்தநோன் பியற்றி டாதே
தவறுசெய் தனமென் றெம்மை நோவதே தக்க தென்றார். ......
3(ஆயினு மவன்றாள்)
ஆயினு மவன்றாள் போற்றி அடையின்நன் கனைத்து மாகுந்
தீயன வகலு மீது திண்ணமாம் அதனால் இன்னுங்
காய்கதிர் மதிசூழ் கின்ற கயிலையங் கிரியின் முக்கண்
நாயகற் கிதனைக் கூற நாமெலாம் போது மென்றார். ......
4(போதர விசைந்த)
போதர விசைந்த காலைப் பொன்னலர் கமலப் புத்தேள்
மேதகு பரமன் செய்கை வினவியே ஏகல் வேண்டுந்
தூதுவ னொருவன் றன்னைத் தூண்டிமுன் னறிது மென்றே
ஊதையங் கடவு டன்னை நோக்கியீ துரைக்க லுற்றான். ......
5(வடவரை யதனில்)
வடவரை யதனில் மூன்று மாண்குவ டெறிந்து வௌவி
உடல்சின வரவ முட்க உததியி லுய்த்த மைந்த
படர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பண்ணவன் செயலை வெள்ளிக்
கடிவரை நகரத் தெய்திக் கண்டனை மீடி யென்றான். ......
6(பல்லிதழ் வனச)
பல்லிதழ் வனச மேலோன் இனையன பகர நோன்றாள்
வில்லுடை மதன வேளை விழித்தடு கடவுள் முன்னஞ்
செல்லுவ தரிது செல்லில் தீமையே பயக்கு மென்பால்
ஒல்லுவ தன்றிச் செய்கை உள்ளமும் வெருவு மென்றான். ......
7(கூற்றிது நிகழ்ந்த)
கூற்றிது நிகழ்ந்த வேலைக் கோகன தத்து மேலோன்
காற்றினுக் கரசை நோக்கிக் கம்பலை கொள்ளேல் யாண்டும்
ஊற்றமொ டுலவல் செய்யு மொருவனை நீயே யன்றி
வீற்றொரு தேவ ருண்டோ மேலிது புரிதற் பாலோர். ......
8(உற்றுழி உதவி)
உற்றுழி உதவி செய்வோர் உலப்புறா தெவையும் ஈவோர்
அற்றமில் தவத்தா றுற்றோர் அமர்புரி வீர ராவோர்
மற்றொரு பொருளும் வெஃகார் வருத்தமு மோரார் ஆவி
இற்றிட வரினும் எண்ணார் இனிதென மகிழ்வ ரன்றே. ......
9(ஆதலின் எங்கட்)
ஆதலின் எங்கட் கெல்லாம் ஆற்றிடு முதவிக் காகப்
போதியால் ஐய என்று புகழ்ச்சியால் இனைய பல்வே
றேதிடு பொருண்மை கூற இசைந்தனன் எழுந்து தீயின்
காதலன் விடைகொண் டேகிக் கயிலைமால் வரையிற் சென்றான். ......
10(குன்றதன் புடை)
குன்றதன் புடையில் வீழுங் குரைபுன லாற்றின் ஆடி
மன்றலங் காமர் காவின் மலர்மணம் அளாவி வாரித்
தென்றியா யசைந்து மெல்லச் சினகரம் புகுது மெல்லை
நின்றதோர் நந்தி காணூஉ வுரப்பினன் நெடிது சீறி. ......
11(பொற்பிரம் பொன்று)
பொற்பிரம் பொன்று பற்றிப் பொலன்முதற் கடையைப் போற்றி
நிற்புறும் ஆணை வள்ளல் நெடுஞ்சினத் துரப்ப லோடுங்
கற்பொழி யெழிலி கான்ற கனையொலி கேட்ட பாம்பின்
முற்படர் கின்ற காலோன் மொய்ம்பிலன் வெருவி வீழ்ந்தான். ......
12வேறு(ஒல்லென வீழ்வுறும்)
ஒல்லென வீழ்வுறும் உயிர்ப்பின் காவலன்
எல்லையில் அச்சமொ டிரங்கி யேயெழீஇத்
தொல்லையின் உருக்கொடு தோன்றி நந்திதன்
மல்லலங் கழல்களை வணங்கிக் கூறுவான். ......
13(மாலயன் மகபதி)
மாலயன் மகபதி வானு ளோரெலாம்
ஆலமர் கடவுளை யடைதல் முன்னிநீ
காலைய தறிந்தனை கடிது செல்கென
மேலுரை செய்தனர் வினையி னேனுடன். ......
14(கறுத்திடு மிடறுடைக் கட - 2)
கறுத்திடு மிடறுடைக் கடவு ளாடலைக்
குறிக்கரி தஞ்சுவல் குறுக என்றியான்
மறுத்தனன் அனையர்தம் வருத்தங் கூறியே
ஒறுத்தெனை விடுத்தன ருடைய வன்மையால். ......
15(ஆதலின் அடியனேன்)
ஆதலின் அடியனேன் அஞ்சி யஞ்சியே
மேதகு தென்றியாய் மெல்ல வந்தனன்
ஓதிட நினைந்திலன் உனக்கு மற்றிது
பேதைமை உணர்வினேன் பிழைபொ றுத்திநீ. ......
16(தானவர் தொழவரு)
தானவர் தொழவரு தகையில் சூரனால்
மானம தொருவியே வருத்துற் றோய்ந்தனன்
ஆனதொன் றுணர்கிலேன் அறிவு மாழ்கினேன்
ஏனைய தேவரு மினைய நீரரே. ......
17(அறைதரு கணத்த)
அறைதரு கணத்தரு ளாதி யாகிய
இறைவநின் முனிவினுக் கிலக்குற் றாரிலை
சிறியவென் பொருட்டினாற் சீற்றங் கோடியோ
பொறைபுரிந் தருளெனப் போற்றி வேண்டினான். ......
18(ஆண்டகை நந்தி)
ஆண்டகை நந்தியெம் மடிகள் அவ்வழி
மூண்டெழு தன்பெரு முனிவு தீர்ந்தியாம்
ஈண்டுநின் னுயிர்தனை யீதும் நிற்கலை
மீண்டனை போகென விடைதந் தேவினான். ......
19(சீரிய நந்திய)
சீரிய நந்தியந் தேவன் ஏவலும்
மாருதன் அவனடி வணங்கி வல்லையின்
நேரறு கயிலையின் நீங்கி நீடுபொன்
மேருவில் விண்ணவர் குழுவை மேவினான். ......
20(மேவரு காலினான்)
மேவரு காலினான் விரிஞ்சன் மாயவன்
பூவடி வந்தனை புரிந்து நந்திதன்
காவலின் வன்மையும் நிகழ்ந்த காரியம்
யாவதும் முறைபட இயம்பி னானரோ. ......
21(காற்றுரை வினவி)
காற்றுரை வினவியே கமலக் கண்ணனும்
நாற்றிசை முகத்தனும் நாகர் செம்மலுஞ்
சாற்றருந் துன்பினர் தம்மி லோர்ந்திடாத்
தேற்றமொ டினையன செப்பல் மேயினார். ......
22(எந்தைதன் செய்கை)
எந்தைதன் செய்கைதோர்ந் தேகு நீயென
வெந்திறல் மருத்தினை விடுத்தும் ஆங்கவன்
நந்திதன் னாணையால் நடுக்க முற்றிவண்
வந்தனன் அச்சுறு மனத்த னாகியே. ......
23(மன்னிய கயிலை)
மன்னிய கயிலைமால் வரையின் யாமெலாம்
இன்னினி யேகியே ஈசன் றன்முனம்
உன்னருங் காலமொ டுற்ற நங்குறை
பன்னுதல் துணிபெனப் பலருங் கூறினார். ......
24(இவ்வகை யவரெ)
இவ்வகை யவரெலாம் இசைந்து செம்பொனின்
மெய்வரை நீங்கியே வெள்ளி வெற்பினில்
தெய்வதக் கோயின்முன் சென்று நந்தியை
அவ்விடை தொழுதிவை அறைதல் மேயினார். ......
25வேறு(நந்தியந் தேவுகேள்)
நந்தியந் தேவுகேள் நங்கள்பால் துன்பெலாஞ்
சிந்தைசெய் திடுதியத் தேவதே வற்கியாம்
வந்தவா றோதியே வல்லைநீ எமையவன்
முந்துறக் காட்டெனா முகமனோ டுரைசெய்தார். ......
26(மற்றிவா றுரை)
மற்றிவா றுரைசெய்யும் வானவத் தொகையினை
நிற்றிரால் என்றவண் நிறுவியே உறையுள்போய்ச்
கற்றைவார் சடைமுடிக் கண்ணுதற் கடவுடன்
பொற்றடந் தாள்களைத் தொழுதனன் புகலுவான். ......
27(அண்ணலே உனது)
அண்ணலே உனதுபொன் னடிகளைக் காணிய
விண்ணுளோர் யாவரும் வேந்தன்மா லயனொடு
நண்ணினா ரென்றலும் நந்தியைத் தெரிகுறீஇத்
தண்ணிலா வேணியான் தருதியென் றருள்செய்தான். ......
28(அருள்புரிந் திடுதலும் ஆதி)
அருள்புரிந் திடுதலும் ஆதியம் பண்ணவன்
திருமலர்த் தாள்களைச் சென்னியிற் சூடியே
விரைவுடன் மீண்டுறா வேதன்மா லாதியாஞ்
சுரரெலாம் வம்மெனத் தூயவன் கூவினான். ......
29(கூவியே அருடலு)
கூவியே அருடலுங் கொண்டல்பே ரொலியினால்
தாவிலா மகிழ்வுறுஞ் சாதகத் தன்மையாய்ப்
பூவினா யகன்முதற் புகலும்வா னவரெலாந்
தேவதே வன்முனஞ் செல்லுதல் மேயினார். ......
30(அம்மையோர் பங்கு)
அம்மையோர் பங்குற அரியணைக் கண்ணுறும்
எம்மையாள் இறைவன்முன் னெய்தியே ஆங்கவன்
செம்மைசேர் தாள்களைச் சென்னியால் தாழ்ந்தெழீஇப்
பொய்ம்மைதீர் அன்பினால் இனையவா போற்றுவார். ......
31வேறு(நோக்கினும் நுழைகிலை)
நோக்கினும் நுழைகிலை நுவலு கின்றதோர்
வாக்கினும் அமைகிலை மதிப்ப வொண்கிலை
நீக்கரும் நிலைமையின் நிற்றி எந்தைநீ
ஆக்கிய மாயமீ தறிகி லேமரோ. ......
32(இருமையு மொரு)
இருமையு மொருமையும் இரண்டு மொன்றிய
ஒருமையு மன்றென உலகம் யாவையும்
பெருமையின் இயற்றிய பெரும நின்செயல்
அருமறை யானவும் அறிதற் பாலவோ. ......
33(உருவொடு தொழில்)
உருவொடு தொழில்பெய ரொன்று மின்றியே
பரவிய நீயவை பரித்து நிற்பது
விரவிய வுயிர்க்கெலாம் வீடு தந்திடுங்
கருணைய தேயலாற் கருமம் யாவதே. ......
34(அவ்வுயிர் யாவுநின்)
அவ்வுயிர் யாவுநின் னருளி லாவழிச்
செய்வினை புரிகில சிறிதும் ஆதலால்
வெவ்விய நயப்பொடு வெறுப்பி லாதநீ
எவ்வகை யோவுல கியற்றுந் தன்மையே. ......
35(முன்னதின் முன்னெ)
முன்னதின் முன்னென மொழிது மேயெனிற்
பின்னதின் பின்னுமாப் பேச நிற்றியால்
அன்னவை யேயெனில் ஒழிந்த தல்லையோ
என்னென நின்னையாம் ஏத்து கின்றதே. ......
36(புல்லிய புரம்பொடி)
புல்லிய புரம்பொடித் ததுவுங் காமனை
ஒல்லென எரித்ததும் உனக்குச் சீர்த்தியோ
எல்லையில் விதிமுத லெனைத்தும் ஈண்டுநின்
நல்லருள் ஆணையே நடாத்து மென்கையால். ......
37(எங்களை முன்னரே)
எங்களை முன்னரே இயல்பின் ஈந்தனை
எங்களை இவ்வர சியற்று வித்தனை
எங்களொ டொருவனென் றிருத்தி நின்செயல்
எங்களின் அறிவரி தென்று போற்றினார். ......
38வேறு(அவ்வகை அமர)
அவ்வகை அமர ரெல்லாம் அன்புசெய் தேத்து மெல்லை
மைவரு மிடற்றுப் புத்தேள் மற்றவர் வதன நோக்கி
நொவ்வுற லெய்திச் சிந்தை நுணங்கினீர் நுங்கட் கின்னே
எவ்வர மெனினும் ஈதும் வேண்டிய திசைத்தி ரென்றான். ......
39(என்றலும் அமரர்)
என்றலும் அமரர் சொல்வார் யாமெலா மிந்நாள் காறும்
வன்றிறல் அவுணர் தம்மால் வருந்தினம் அதனை நீங்கி
நன்றிகொள் தொல்லை ஆக்கம் நண்ணுவா னாக நின்பால்
ஒன்றொரு வரம்வேண் டுற்றாம் அதனியல் புரைத்து மன்றே. ......
40(மும்மையின் உயிர்)
மும்மையின் உயிர்கள் பெற்ற முகிழ்முலைக் கன்னியாகும்
அம்மையை மணந்த தன்மை ஆங்கவள் இடமா ஈங்கோர்
செம்மலை யளித்தற் கன்றே தீவினைக் கடற்பட் டுள்ள
எம்மையாளு வதற் கேதுக் காட்டிய இயற்கை யல்லால். ......
41(ஆதியும் நடுவு)
ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும்
ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி
வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க வென்றார். ......
42(வந்திக்கு மலரோ)
வந்திக்கு மலரோ னாதி வானவர் உரைத்தல் கேளாப்
புந்திக்குள் இடர்செய் யற்க புதல்வனைத் தருது மென்னா
அந்திக்கு நிகர்மெய் யண்ணல் அருள்புரிந் தறிஞ ராயோர்
சிந்திக்குந் தனது தொல்லைத் திருமுகம் ஆறுங் கொண்டான். ......
43(நிற்புறும் அமரர்)
நிற்புறும் அமரர் யாரும் நெஞ்சுதுண் ணென்ன நீடும்
அற்புத நீர ராகி அருள்முறை யுன்னிப் போற்றச்
சிற்பரன் றான்கொண் டுள்ள திருமுகம் ஆறு தன்னில்
பொற்புறு நுதற்கண் டோறும் புலிங்கமொன் றொன்று தந்தான். ......
44(ஆவதோர் காலை ஈசன்)
ஆவதோர் காலை ஈசன் அறுமுக நுதற்கண் மாட்டே
மூவிரு பொறிகள் தோன்றி முளரியான் முதலா வுள்ளோர்
ஏவரும் அணுகல் செல்லா எல்லைதீர் வெம்மைத் தாகிப்
பூவுல கண்ட முற்றும் பொள்ளெனப் பராய வன்றே. ......
45(மாதண்டங் குலவு)
மாதண்டங் குலவு நேமி வால்வளை வயிர வொள்வாள்
கோதண்டம் பரித்தோன் வேதாக் குறித்துணர் வரிய சோதி
வேதண்டம் பரவிற் றென்ன மேதினி சூழ்ந்து விண்போய்
மூதண்டங் காறுஞ் சென்ற முதல்வன்கண் ணுதலிற் செந்தீ. ......
46வேறு(மங்கையோர் பங்குடை வள்)
மங்கையோர் பங்குடை வள்ளல் ஏந்திய
செங்கனல் ஊழியிற் செறிவ தாமென
அங்கவன் விழிபொழி அனலம் யாவையும்
எங்குள வுலகமும் ஈண்ட லுற்றவே. ......
47(ஆங்கனந் தழலெழ)
ஆங்கனந் தழலெழ அகில முற்றுமாய்
ஓங்கிய கால்களும் உலைவுற் றோய்ந்தன
வாங்கிய திரைக்கடல் வறந்த தாயிடைத்
தீங்கனல் வடவையுஞ் செருக்கு நீங்கிற்றால். ......
48(பக்கன பாரகம்)
பக்கன பாரகம் பதலை முற்றுற
நெக்கன பணிகள்மெய் நெளித்து நீங்கிய
திக்கயம் அரற்றியே தியக்க முற்றன
தொக்கன உயிர்த்தொகை துளக்க முற்றவே. ......
49(காரண மில்லவன்)
காரண மில்லவன் கண்ணிற் கான்றதீப்
பேரருள் புரிந்திடப் பிறந்த பான்மையால்
ஓருயிர் தன்னையும் ஒழிவு செய்தில
ஆரையும் எவற்றையும் அச்சஞ் செய்தவே. ......
50(அன்னதன் வெம்மை)
அன்னதன் வெம்மைகண் டமலன் பாங்குறை
கன்னியும் வியர்த்தனள் கலங்கி யேயெழீஇப்
பொன்னடி நூபுரம் புலம்பித் தாக்குறத்
தன்னதோ ருறையுளைச் சார ஓடினாள். ......
51(முண்டக னாதியா)
முண்டக னாதியா முன்னர் நின்றுள
அண்டர்கள் யாருமவ் வழல்கண் டஞ்சியே
விண்டனர் தலைத்தலை வெருவி யோடினார்
பண்டெழு விடத்தினாற் பட்ட பான்மைபோல். ......
52(தீங்கனல் அடர்த)
தீங்கனல் அடர்தலுஞ் செம்பொற் கோயிலின்
யாங்கணு மாகியே இரிந்த பண்ணவர்
வீங்கிய வுயிர்ப்பொடு மீண்டும் எந்தைதன்
பாங்கரில் வந்தனர் பரியும் நெஞ்சினார். ......
53(வலைத்தலை மானெ)
வலைத்தலை மானென வன்னி சூழ்ந்துழித்
தலைத்தலை இரிந்துளோர் தம்மின் மீள்குறா
நலத்தகு கண்ணுதல் நாதற் சேர்ந்தனர்
கலத்தலை அகன்றிடாக் காகம் போலவே. ......
54(தோற்றிய நுதல்)
தோற்றிய நுதல்விழிச் சுடரின் சூழ்வினுக்
காற்றல ராகியே அடைந்த வானவர்
நாற்றடம் புயமுடை ஞான நாயகற்
போற்றிசெய் தினையன புகல்வ தாயினார். ......
55(வெந்திற லவுண)
வெந்திற லவுணரை வீட்டு தற்கொரு
மைந்தனை அருள்கென வந்து வேண்டினேம்
அந்தமில் அழலைநீ யருடல் செய்தனை
எந்தையே எங்ஙனம் யாங்க ளுய்வதே. ......
56(பங்குறை உமைய)
பங்குறை உமையவள் பாணி யின்வரு
கங்கையெவ் வுலகமுங் கலந்த தாமென
இங்குநின் னுதல்விழி யிருந்து நீங்கிய
பொங்கழ லெங்கணும் பொள்ளென் றீண்டிய. ......
57(கற்றையஞ் சுடர்பொழி)
கற்றையஞ் சுடர்பொழி கனல்க ளின்றொகை
சுற்றியெவ் வுலகமுந் துவன்ற லுற்றவால்
மற்றொரு கணத்தவை மாற்றி டாயெனின்
முற்றுயிர்த் தொகையையும் முடிவு செய்யுமால். ......
58(விஞ்சிய பேரழல்)
விஞ்சிய பேரழல் வெம்மை யாற்றலா
தஞ்சினம் இரிந்தயாம் ஐய நின்னிரு
செஞ்சரண் அடைந்தனம் தெரியின் நீயலால்
தஞ்சம துளதுகொல் எம்மைத் தாங்கவே. ......
59(மலக்குறு மனத்தி)
மலக்குறு மனத்தினேம் வருத்த முற்றவும்
உலக்குற நீக்குநீ யொல்லை எம்மிடை
அலக்கண தியற்றுதி யாயின் அன்னதை
விலக்குறு நீரினார் வேறி யாவரே. ......
60(நிறைமுடிப் பணி)
நிறைமுடிப் பணிமிசை நிலனும் வானமும்
இறைமுடிக் கின்றவிவ் வெரியை நீக்கியே
பிறைமுடிக் கொண்டிடு பெரும எம்முடைக்
குறைமுடித் தருளெனக் கூறி வேண்டினார். ......
61(அஞ்சலி னவர்புகழ்)
அஞ்சலி னவர்புகழ் அண்ண லாதியோர்
அஞ்சலி செய்திவை யறைந்து வேண்டலும்
அஞ்சலி லஞ்சடை யணிந்த நாயகன்
அஞ்சலிர் என்றுகை அமைத்துக் கூறினான். ......
62(பொன்மலை வில்லி)
பொன்மலை வில்லினான் புதிதின் வந்திடு
தன்முகம் ஐந்தையுங் கரந்து தாவில்சீர்
நன்முக மொன்றொடு நண்ணி யத்துணைத்
தொன்மையின் இயற்கையாய்த் தோன்றி வைகினான். ......
63(தன்னருள் நிலை)
தன்னருள் நிலைமையாற் சண்மு கத்திடை
நன்னுதல் விழிகளின் நல்கு தீப்பொறி
இந்நில வரைப்புவான் ஈண்டல் உற்றவை
முன்னுற வரும்வகை முதல்வன் முன்னினான். ......
64(அந்தியம் பெருநிற)
அந்தியம் பெருநிறத் தமலன் அவ்வகை
சிந்தைகொண் டிடுவழிச் செறிந்த பேரழன்
முந்தையின் வெம்பொறி மூவி ரண்டவாய்
வந்துமுன் குறுகலும் மகிழ்ந்து நோக்கினான். ......
65(ஆதகு காலையில்)
ஆதகு காலையில் அமரர் தங்களுள்
ஓதகு செயலிலா உலவைத் தேவையும்
மூதகு தீயையும் முகத்தை நோக்குறா
மேதகு கருணையால் விமலன் கூறுவான். ......
66(நீங்களிச் சுடர்களை)
நீங்களிச் சுடர்களை நெறியிற் றாங்கியே
வீங்குநீர்க் கங்கையில் விடுத்திர் அன்னவை
ஆங்கவள் சரவணம் அமர வுய்க்குமால்
ஈங்கிது நும்பணி யென்றி யம்பினான். ......
67(கூற்றுயி ருண்ட)
கூற்றுயி ருண்டதாட் குழகன் இவ்வகை
சாற்றிய துணர்தலுந் தாழ்ந்து மும்முறை
போற்றினர் நடுங்கினர் புலம்பு நெஞ்சினர்
காற்றொடு கனலிவை கழறல் மேயினார். ......
68(ஒருனொடி யளவை)
ஒருநொடி யளவையின் உலகம் யாவுமாய்ப்
பெருகிய இத்தழல் பெரும நின்னுடைத்
திருவருள் நிலைமையாற் சிறுகிற் றாதலால்
அரிதரி தடியரேம் ஆற்ற லாகுமோ. ......
69(ஈற்றினை யுலகினு)
ஈற்றினை யுலகினுக் கிழைக்கு நின்கணே
தோற்றிய கனலினைச் சுமத்தற் கோர்கணம்
ஆற்றலை யுடையரோ அவனி கேள்வனும்
நாற்றிசை முகமுடை நளினத் தேவுமே. ......
70(பண்டெழு விடத்தி)
பண்டெழு விடத்தினிற் பரந்த தீச்சுடர்
கண்டலும் நின்றிலங் கவலுற் றோடினம்
அண்டவும் வெருவுதும் அவற்றை யாந்தலைக்
கொண்டனம் ஏகுதல் கூடற் பாலதோ. ......
71(அப்பெருங் கனலி)
அப்பெருங் கனலினை அடைதற் குன்னினும்
வெப்புறும் எமதுளம் வியர்க்கும் யாக்கையும்
எப்பரி சேந்துவம் யாங்கள் என்றலுந்
துப்புறழ் படர்சடைப் பகவன் சொல்லுவான். ......
72(ஒன்றொரு நொடி)
ஒன்றொரு நொடியினின் உலக முற்றுமாய்த்
துன்றிய இச்சுடர் சுமந்து கங்கையிற்
சென்றிட நுங்கள்பால் திண்மை யெய்துக
என்றலும் நன்றென இசைந்து போற்றினார். ......
73(மற்றது தெரிதலும்)
மற்றது தெரிதலும் மால யன்முதற்
சொற்றிடும் அமரர்கள் துளக்கம் நீங்குறா
இற்றது கொல்லெம தின்னல் இன்றெனா
உற்றனர் உவகையை யுடலம் விம்மினார். ......
74(ஆங்கனம் அவர்)
ஆங்கனம் அவர்தமை ஆதி நோக்கியித்
தீங்கனல் சரவணஞ் செறிந்தொர் செம்மலாய்
ஓங்குபு சூர்கிளைக் கொழிவு செய்யுமால்
ஈங்கினி யாவரும் ஏகு வீரென்றான். ......
75(இறையவன் இனை)
இறையவன் இனையன இயம்ப உய்ந்தனங்
குறையிலம் இனியெனக் கூறிக் கஞ்சமேல்
உறைபவ னாதியாம் உம்பர் அன்னவன்
அறைகழ லடிதொழு தங்கண் நீங்கினார். ......
76(முன்னுற மாருதன்)
முன்னுற மாருதன் முதல்வன் றாள்களை
வன்னியந் தேவொடு வணங்கி யேயெழீஇ
அன்னவன் அருளினாற் சுடர்கள் ஆறையுஞ்
சென்னியின் மேற்கொடு சேறல் மேயினான். ......
77(அரனுறு கடிநகர்)
அரனுறு கடிநகர் அதனைத் தீர்ந்தொராய்
எரிகெழு சுடர்முடி யேந்தி மாருதன்
வருதலும் அயன்முதல் வானு ளோரெலாங்
கருதரு மகிழ்வொடு கண்டு கூறுவார். ......
78(செந்தழல் மேனியன்)
செந்தழல் மேனியன் தீயின் வண்ணமாத்
தந்தனன் குமரனைத் தனாது கண்ணினால்
உய்ந்திட யாமெலாம் உலகின் முன்னரே
வந்திடும் வீரனாம் மதலை மானவே. ......
79(தொன்னிலை யாம்)
தொன்னிலை யாம்பெறச் சூரன் பாடுற
இன்னமுஞ் சில்பகல் இருத்த லால்அரன்
தன்னிகர் திருமகன் சரவ ணத்திடை
மன்னுபு குழவியாய் வளர நல்கினான். ......
80(போற்றலர் புரமடு)
போற்றலர் புரமடு புனித நாயகன்
ஆற்றிடு செய்கைகள் அருளின் நீர்மையால்
ஏற்றதோர் சான்றிவண் எரியைத் தந்ததுஞ்
சாற்றருங் கருணையிற் றலைமை யானதே. ......
81(என்றிவை பற்பல இயம்)
என்றிவை பற்பல இயம்பி இன்னினிப்
பொன்றினர் அவுணர்கள் புலம்பு நங்குறை
நன்றிவண் முடிந்தது நாமும் அத்தடஞ்
சென்றிடு வாமெனச் செப்பி னாரரோ. ......
82(உருப்பம தாகிய)
உருப்பம தாகிய ஒளிறு தீஞ்சுடர்
தரிப்பதோர் மருத்துவன் றம்முன் சென்றிடத்
திருப்பயில் மான்முதற் றேவர் வெள்ளியம்
பருப்பதம் ஒருவியே படர்தல் மேயினார். ......
83(இறத்தலுங் கன்ன)
இறத்தலுங் கன்னலொன் றெரியின் தீஞ்சுடர்
பொறுத்திடல் அரிதெனப் புலம்பிக் காலினோன்
மறுத்தவிர் பிறைமுடி வரதன் ஆணையால்
திறற்படு வன்னிதன் சென்னி சேர்த்தினான். ......
84(சேர்த்தலும் ஒரு)
சேர்த்தலும் ஒருபதந் தீயின் பண்ணவன்
வேர்த்துடல் புழுங்குற மெலிவில் தாங்கியே
பேர்த்தொரு பதமிடப் பெறாது வல்லைபோய்
ஆர்த்திடு கங்கையின் அகத்துய்த் தானரோ. ......
85(கூர்சுடர்ப் பண்ண)
கூர்சுடர்ப் பண்ணவன் கொடுவந் துய்த்திடும்
ஆர்சுடர்த் தொகுதிவந் தடைய மூவெயில்
ஊர்சுடச் சிவந்தகண் ணொருவன் துப்புறழ்
வார்சடைக் கரந்தென வறந்த கங்கைநீர். ......
86(அரனருள் முறை)
அரனருள் முறையினை யறிந்து கங்கைதன்
சிரமிசை யேந்தியே சென்றொர் கன்னலிற்
சரவண மெனுந்தடந் தன்னிற் சேர்த்தனள்
மரையித ழாயிடை மல்குற் றாலென. ......
87(ஆவயின் காறும்)
ஆவயின் காறும்வந் தரிய யன்முதல்
தேவர்கள் உவகையால் தெரிந்து சூழ்ந்தனர்
மேவர அணியதாம் விளைவு நாடியே
காவல்கொள் நிரப்புடைக் காத லோரென. ......
88(ஆரணன் விண்ண)
ஆரணன் விண்ணகம் அச்சு தன்புவி
வாரணன் முதலிய மாதி ரத்துளோர்
ஏரண வமரர்கள் எண்டிக் காகியே
சீரணி சரவணஞ் சேர்ந்து போற்றினார். ......
89வேறு(கங்கையு மொல்)
கங்கையு மொல்கப் புக்க கடுங்கனற் கடவுட் சோதி
அங்கிரு மூன்று முன்னர் அம்மைவாழ் இமையச் சாரற்
தங்கிய கமலம் பூத்த சரவணம் புகலும் முக்கட்
புங்கவன் அருளால் தொன்மை போன்றது வறத்த லின்றி. ......
90(விண்ணிடை யிழி)
விண்ணிடை யிழிந்த காலின் மேவரு கனலில் தோன்றும்
வண்ணவொண் கமலஞ் செய்ய முளரியை மாற தாகத்
தண்ணளி யோடு நல்கித் தரித்தெனச் சரவ ணப்பேர்க்
கண்ணகன் பொய்கை ஈசன் கட்டழல் மிசைக்கொண் டன்றே. ......
91(அருவமு முருவு)
அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய. ......
92(தோன்றல்வந் திட)
தோன்றல்வந் திடலும் விண்பால் துந்துபி கறங்க லுற்ற
ஆன்றதொல் மறைக ளெல்லாம் ஆர்த்தன அயனும் மாலும்
வான்றிகழ் மகத்தின் தேவும் முனிவரும் மலர்கள் தூவி
ஏன்றெமை யருளு கென்றே ஏத்திசை யெடுத்துச் சூழ்ந்தார். ......
93(ஏவர்தம் பாலு)
ஏவர்தம் பாலு மின்றி யெல்லைதீர் அமலற் குள்ள
மூவிரு குணனுஞ் சேய்க்கு முகங்களாய் வந்த தென்னப்
பூவியல் சரவ ணத்தண் பொய்கையில் வைகும் ஐயன்
ஆவிகள் அருளு மாற்றால் அறுமுகங் கொண்டா னன்றே. ......
94(மல்லலம் புவன)
மல்லலம் புவனத் துள்ள மன்னுயிர்க் கணங்கட் கெல்லாம்
ஒல்லையின் மகிழ்ச்சி யெய்தி உவகையின் குறிப்புண் டான
தொல்லையில் அவுண னாகுஞ் சூரனே முதலா வுள்ள
எல்லவர் தமக்கும் மாயும் இருங்குறிப் புற்ற அந்நாள். ......
95(மறைகளின் முடிவால்)
மறைகளின் முடிவால் வாக்கான் மனத்தினால் அளக்கொ ணாமல்
நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல மூர்த்தி
அறுமுக வுருவாய்த் தோன்றி அருளொடு சரவ ணத்தின்
வெறிகமழ் கமலப் போதின் வீற்றிருந் தருளி னானே. ......
96(பாங்குறு தருச்சூழ்)
பாங்குறு தருச்சூழ் காலாப் பஃறழைச் சினைமென் கொம்பர்
நீங்கறப் புடைபோய் வானின் நிரந்தரன பந்த ராகத்
தூங்கிய பழனுங் காயுந் துணர்களும் அகத்துட் டுன்ன
ஆங்கதன் நடுவட் பொய்கை அணிநிழல் அமர்ந்தான் ஐயன். ......
97(முடிபொறா தசை)
முடிபொறா தசையும் நாகர் முதியகால் பலகை வையந்
தொடர்கரை மரனே வானந் தூங்குபன் னாணந் தெண்ணீர்த்
தடமலர் பாய லாகச் சரவண மஞ்ச மீதில்
அடைதரு மைந்தன் மென்கால் அசைப்பவீற் றிருந்தா னன்றே. ......
98(எண்பெரு நாகர்)
எண்பெரு நாகர் சேடன் ஏந்தெழில் அரிமா னாகத்
தண்பொலி புனற்பூம் பொய்கை தவிசுரு வாக நாள்கோள்
விண்படர் விதான மாக வேலையந் தலைவன் காலை
ஒண்பகல் ஆடி காட்ட உமைமகன் அங்கண் உற்றான். ......
99(தரணியின் நடுவ)
தரணியின் நடுவண் வைகுஞ் சரவணப் பொய்கை தன்னில்
விரைசெறி கமலப் போதில் வீற்றிருந் தருளுஞ் செவ்வேள்
பெருவடி வமைந்த மாயன் பிறங்கிய மனத்தில் தண்ணென்
றெரிசுடர் விளக்கத் துச்சி இருந்திடும் ஈசன் போன்றான். ......
100(பெருந்தரை நடுவ)
பெருந்தரை நடுவ ணாகிப் பிறங்கிய சரவ ணத்தில்
இருந்தனிக் கமல மொன்றில் குமரவேள் இருந்த பான்மை
திருந்துநல் லண்டப் புத்தேள் சிந்தையாம் புண்ட ரீக
புரந்தனில் விரும்பித் தாதை வைகிய இயற்கை போலும். ......
101(பாசிலை பரவி)
பாசிலை பரவித் துள்ளி படுவன உடுவைப் பாக
வீசுசை வலங்கா ராக வேறுசூழ் கமல மெல்லாம்
மாசறு பகலோ ராக அவற்றிடை மலர்ந்த கஞ்சந்
தேசுடை இரவி யாகச் சிவனெனச் சேய்அங் குற்றான். ......
102(மாலயன் எழிலி)
மாலயன் எழிலி மேலோன் வானவ ரேனோர் யாரும்
பாலுற மரனு மாவும் பறவையும் பிறவுஞ் சூழ
ஏலுறு குமரன் கஞ்சத் திருந்தது பரமன் ஆதிக்
காலையின் உயிர்கள் நல்கிக் கமலமேல் இருத்தல் போலும். ......
103(சலங்கிளர் தரங்க)
சலங்கிளர் தரங்கத் தெய்வச் சரவணக் கமலப் போதில்
நலங்கிளர் குமரன் சேர்தல் நான்முகற் சிறைமேல் வீட்டிப்
புலங்கிளர் உயிர்கள் நல்கப் பொருந்துநற் பகலின் முன்னர்
இலங்கெழிற் பதும பீடத் தேறிய இயற்கை போலும். ......
104(முண்டக மொன்)
முண்டக மொன்றில் வைகும் முருகனைச் சுற்றிச் செங்கேழ்
வண்டுளர் கமலக் காடு வான்புனற் றடத்தின் நிற்றல்
அண்டர்கள் முதல்வ ஓர்பால் அன்றியெம் மெல்லாம் பீடங்
கொண்டருள் முறையி னென்று நோற்றிடுங் கொள்கைத் தன்றே. ......
105(அணங்குசெய் தோற்ற)
அணங்குசெய் தோற்றத் துப்பின் அவிர்சுடர்க் குமரற் சூழ
மணங்கிளர் கமலக் காடு மலர்ந்தன அவனைச் சேர்வான்
தணங்கெழு புனலிற் புக்குத் தபனன்மேல் நாட்டஞ் சேர்த்தி
நுணங்கிடை மடவார் பல்லோர் நோற்றவண் நிற்றல் போலும். ......
106(ஒண்ணகை யுயிர்)
ஒண்ணகை யுயிர்க்குஞ் சங்க மொருசில கமலம் வைகத்
தண்ணுறு நறவைப் பஃறாட் டாமரை பரித்துச் சூழ்தல்
அண்ணலம் பொய்கை தற்சேர் அறுமுகப் பிள்ளை துய்ப்ப
எண்ணெயுஞ் சங்குஞ் சூழ இட்டது போலு மன்றே. ......
107(ஆரமும் வனச)
ஆரமும் வனசத் தோடும் அணிமக ரந்தச் சேறும்
வேரியம் பூந்தண் தேனும் முறைமுறை வீசிக் கையாற்
சேரவே கொண்டு மேலோன் திருவடி திளைப்ப உய்த்தல்
வாரியந் தடாகம் அன்பால் வழிபடும் வண்ணம் போலும். ......
108(பங்கயச் செம்ம)
பங்கயச் செம்மற் போது பதனழிந் தவிழ்ந்து பாங்கர்
அங்குள இலைமேல் வீழ அவைபுறத் தசையும் நீர்மை
சங்கரன் குமரற் சூழச் சரவணம் பசும்பூந் தட்டில்
துங்கநல் விளக்க மாட்டித் திரைக்கையாற் சுலவல் போலும். ......
109(காசுறழ் பதும)
காசுறழ் பதுமப் போது களாசிய தாக மீச்செல்
பாசடை கவிகை யாகப் பலநனை விளக்க மாக
வீசிகள் கவரி யாக மிழற்றுபுள் ளியம தாக
மாசறு பொய்கை சேய்க்கு வளம்பட ஒழுகிற் றன்றே. ......
110(அழல்நிவந் தன்ன)
அழல்நிவந் தன்ன கஞ்சத் தகல்தடத் திரைகள் நாப்பண்
உழிபட ராது சூழ்போந் துலவுவ தானை நீரால்
விழுமிய குமரன் பொய்கை வெளியுறா தமர ரிட்ட
எழினிகள் புடையே மென்கால் எறிதலின் இரட்டல் போலும். ......
111(கொன்படை சேவ)
கொன்படை சேவ லாகும் எகினமோர் கோடி ஈசன்
தன்பெருங் குமரற் சூழத் தடத்தினில் மிழற்றல் எந்தை
பொன்பிறழ் பதுமன் செய்கை புரியுநாள் ஊர்தி யாவல்
என்புடை யிருத்தி யென்றே தமித்தமி இரத்தல் போலும். ......
112(வளஞ்செறி இனை)
வளஞ்செறி இனைய பாலால் வான்சர வணமாம் பொய்கைத்
தளஞ்செறி பதும மொன்றில் சராசரம் யாவுங் காப்பான்
உளஞ்செறி கருணை யெய்தி ஒப்பிலாக் குமர மூர்த்தி
இளஞ்சிறு மதலை போல இனிதுவீற் றிருந்தான் மன்னோ. ......
113(தீர்த்திகைக் கங்கை)
தீர்த்திகை*
1 க் கங்கை தன்னில் திகழ்சர வணத்தில் வந்த
மூர்த்திகைக் குழவி யேபோல் முதற்புரி யாடல்*
2 நோக்கி
ஆர்த்திகை யுறாத உள்ளத் தரிமுதல் அமரர் யாருங்
கார்த்திகைத் தெரிவை மாரை விளித்திவை கழற லுற்றார். ......
114(சாற்றருஞ் சரவண)
சாற்றருஞ் சரவ ணத்தில் சண்முகத் தொருவ னாகி
வீற்றிருந் தருளு கின்ற விமலனோர் குழவி போலத்
தோற்றினன் அவனுக் குங்கள் துணைமுலை அமுத மூட்டிப்
போற்றுதிர் நாளு மென்ன நன்றெனப் புகன்று வந்தார். ......
115(மறுவறும் ஆர)
மறுவறும் ஆர லாகும் மாதர்மூ விருவர்*
3 தாமும்
நிறைதரு சரவ ணத்தின் நிமலனை அடைந்து போற்ற
உறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுவோன் ஆத லாலே
அறுமுக வொருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான். ......
116(ஆறுரு வாத லோடு)
ஆறுரு வாத லோடும் அறுவரும் மகிழ்ந்து வேறு
வேறுதா மெடுத்துத் தத்தம் வியத்தகு துணைமென் கொங்கை
ஊறுபா லமுதம் அன்னோற் குதவலும் முறுவல் செய்து
மாறிலா அருளால் ஆற்ற வருந்தினன் போல வுண்டான். ......
117(உண்டபின் அறுவ)
உண்டபின் அறுவ ராகும் ஒருபெரு முதல்வன் றன்னைத்
தண்டழை பொதுளும் நீபத் தண்ணிழற் பொய்கை தன்னில்
வண்டயி லுறாத கஞ்ச மாமலர்ப் பள்ளி சேர்த்திக்
கண்டுயில் செய்வித் தேத்தக் கருணையால் இனைய செய்வான். ......
118(துயிலவோ ருருவம்)
துயிலவோ ருருவம் துஞ்சித் துண்ணென எழுந்து மென்சொற்
பயிலவோ ருருவம் யாய்தன் பயோதரம் பவள வாய்வைத்
தயிலவோ ருருவம் நக்காங் கமரவோ ருருவம் ஆடல்
இயலவோ ருருவம் வாளா இரங்கவோ ருருவஞ் செய்தான். ......
119(ஓருருத் தவழ)
ஓருருத் தவழ மெல்ல ஓருருத் தளர்ந்து செல்ல
ஓருரு நிற்றல் செல்லா தொய்யென எழுந்து வீழ
ஓருரு இருக்கப் பொய்கை ஓருரு வுழக்கிச் சூழ
ஓருருத் தாய்கண் வைக ஒருவனே புரித லுற்றான். ......
120(ஆடவோ ருருவம்)
ஆடவோ ருருவம் செங்கை அறையவோ ருருவம் நின்று
பாடவோ ருருவம் நாடிப் பார்க்கவோ ருருவம் ஆங்கண்
ஓடவோ ருருவம் ஓர்பால் ஒளிக்கவோ ருருவம் யாண்டுந்
தேடவோ ருருவ மாகச் சிவன்மகன் புரித லுற்றான். ......
121(இத்திறம் இருமூன்)
இத்திறம் இருமூன் றான யாக்கையுங் கணம தொன்றில்
பத்துநூ றாய பேதப் படும்வகை பரமாய் நின்ற
உத்தம குமரன் றான்எவ் வுயிர்தொறும் ஆட லேபோல்
வித்தக விளையாட் டின்ன மாயையால் விரைந்து செய்தான். ......
122(சிற்பர னாகி வந்த)
சிற்பர னாகி வந்த செய்யவேள் ஆடற் றன்மை
பற்பல திறமும் நாடிப் பங்கயத் தயனு மாலுஞ்
சொற்படு மகத்தின் தேவும் முனிவருஞ் சுரரும் யாரும்
அற்புத மகிழ்ச்சி கொண்டாங் கின்னவா றறைத லுற்றார். ......
123(சேயிவன் ஒருவனெ)
சேயிவன் ஒருவ னேபல் சிறாருருக் கொண்டு நம்முன்
ஏயெனு மளவை தன்னில் எண்ணில்பே தத்த னாகும்
ஆயினிக் குமரன் ஆடல் அறிவரி தெமக்கும் எல்லா
மாயமு மியற்ற வல்லன் வரம்பிலா அறிவன் மாதோ. ......
124(கைப்பயில் குழவி)
கைப்பயில் குழவி போலக் காட்டிய கடவுள் செய்யும்
இப்பெரு மாயை போல யாவரும் புரிதல் தேற்றார்
செப்பியென் வேறி யாமுஞ் செய்ததொன் றில்லை அன்னான்
ஒப்பறு பரனே ஆம்என் றுரைசெய்து தொழுது நின்றார். ......
125(அழலெனும் மீன)
அழலெனும் மீன வர்க்கத் தறுவருங்*
4 குமரன் ஆடல்
முழுவது நோக்கி நோக்கி முதிருமற் புதநீ ரெய்திக்
குழவிக ளென்றே உள்ளங் கோடல்விட் டகலா தஞ்சி
வழிபடு கடவு ளோரில் போற்றினர் மனங்கொள் அன்பால். ......
126(அம்புயம் உறழு)
அம்புயம் உறழுஞ் செங்கேழ் அறுமுகம் படைத்த கோல
நம்பிதன் வரவு தன்னை நவின்றனம் இனிமேல் அங்கண்
எம்பெரு முதல்வி தன்பால் இலக்கத்தொன் பதின்மர் செவ்வேள்
தம்பிய ராகி வந்த தன்மையை விளம்ப லுற்றாம். ......
127ஆகத் திருவிருத்தம் - 977