(நாற்ற டம்புய)
நாற்ற டம்புயக் கண்ணுதல் நந்தியம் பெருமான்
போற்றி முன்செல அமரரும் முனிவரும் புகழ
வேற்ற தும்புரு நாரதர் விஞ்சையர் யாரும்
பாற்றி யக்கமும் நீழலு மாமெனப் பாட. ......
1(சொன்ம றைத்)
சொன்ம றைத்தொகை ஆகம முதலிய துதிப்பப்
பொன்மை பெற்றதன் கோநகர் நீங்கியே பொற்றாள்
வன்மை பெற்றகுண் டோதரன் மொய்ம்பிடை வைத்துச்
சின்ம யத்தனி மால்விடை ஏறினன் சிவனே. ......
2(விடையின் மீமிசை)
விடையின் மீமிசைத் தோன்றியே யெம்பிரான் விளங்கப்
புடையின் வந்தவ ரல்லது திருநகர்ப் புறத்துக்
கடையின் நின்றவர் யாவருங் கண்டுகண் களியா
அடைய வேபணிந் தேத்தினர் அளக்கரின் ஆர்த்தார். ......
3(நந்தி மேல்கொண்டு)
நந்தி மேல்கொண்டு நந்திமே வுறுதலும் நந்தித்
தந்தி மாமுகத் தவுணர்கோன் அலமரத் தடிந்தோன்
ஐந்து நூற்றெழு கோடிபூ தப்படை யணுக
வந்து வந்தனை செய்துமுன் போயினன் மாதோ. ......
4(கதிருஞ் சோமனுங்)
கதிருஞ் சோமனுங் கவிகையுஞ் சீகரங் காலும்
உததி யண்ணல்சாந் தாற்றியும் உம்பர்தங் கோமான்
புதிய கால்செயும் வட்டமு மெடுத்தனர் புடைபோய்
முதிரும் ஆர்வமோ டப்பணி புரிந்தனர் முறையால். ......
5(பேரி கொக்கரை)
பேரி கொக்கரை சல்லிகை கரடிகை பீலி
சாரி கைத்துடி தண்ணுமை குடமுழாத் தடாரி
போரி யற்படு காகளம் வயிர்முதற் புகலுஞ்
சீரி யத்தொகை இயம்பினர் பாரிடத் திறலோர். ......
6(அத்தன் ஏவலால்)
அத்தன் ஏவலால் உருத்திரர் குழுவுமா லயனும்
மெய்த்த வம்புரி முனிவரும் ஏனைவிண் ணவரும்
மொய்த்த தேரொடு மானமாப் புள்ளிவை முதலாந்
தத்த மூர்திமேல் கொண்டனர் செய்பணி தவாதோர். ......
7(தாழ்ந்து தன்பணி)
தாழ்ந்து தன்பணி புரியுமத் தலைவருந் தவத்தாற்
காழ்ந்த நெஞ்சுடைப் பூதரு மேனைய கணமுஞ்
சூழ்ந்து சென்றிடக் கயிலையை அகன்றுதொல் லுலகம்
வாழ்ந்தி டும்படி யேகினன் இமையமால் வரைமேல். ......
8(வார்ப்பெ ரும்பணை)
வார்ப்பெ ரும்பணை யாதிய வரம்பில்பல் லியத்தின்
ஆர்ப்பு மெங்கணும் வெள்ளிடை யின்றியே யகல்வான்
தூர்ப்பின் ஈண்டிய தானையின் ஓதையுஞ் சுரர்கள்
ஆர்ப்பும் வாழ்த்தொலி அரவமும் புணரியுண் டெழுமால். ......
9வேறு(அனைய தன்மையி லாதி)
அனைய தன்மையி லாதியம் பண்ணவன்
பனிகொள் வெற்பிற் படரஅம் மன்னவன்
இனிய கேளொ டெதிர்கொடு தாழ்ந்துதன்
புனித மாநக ரிற்கொடு போயினான். ......
10(போத லோடும்)
போத லோடும் புனிதன் வரத்தினைக்
காத லாற்கண்டு கண்களிப் பாகியே
ஆதம் எய்திநின் றஞ்சலித் தேத்தியே
வீதி யாவும் விழாவயர்ந் திட்டவே. ......
11(மிண்டி நின் றிடும்)
மிண்டி நின்றிடும் வீதியின் மாதரார்
அண்டர் நாயகன் அற்புதப் பேருருக்
கண்டு தாழ்ந்து கரைதவிர் காதலாந்
தெண்டி ரைப்படிந் தார்செயல் வேறிலார். ......
12(நிறைத்த பூண்)
நிறைத்த பூண்களும் நேர்ந்தபொன் னாடையும்
நறைத்த சாந்தமும் நாண்மலர்க் கண்ணியும்
பிறைத்தி ருச்சடைப் பிஞ்ஞகன் பேரெழில்
மறைத்த தென்று மனந்தளர் வார்சிலர். ......
13(உய்யு மாறென்)
உய்யு மாறென் உவர்தமைக் காண்டலும்
வெய்ய காமக் கனல்சுட வேவுறுந்
தைய லார்கள் தனுவுறு நீறுகொல்
ஐய ராகத் தணிந்ததென் பார்சிலர். ......
14(எழாலை யன்ன)
எழாலை யன்னசொல் ஏந்திழை மாதரார்
குழாம கன்று குழகனைச் சேர்தலுங்
கழாலு கின்றபல் காழுடை மேகலை
விழாதி றைஞ்சினர் மெல்லிய லார்சிலர். ......
15(அல்லி சேர்தரும்)
அல்லி சேர்தரும் அம்புய மீமிசை
வல்லி யன்னவர் வான்துகில் சோர்வுறா
மெல்ல வீழ்தலும் மின்னிடை யார்க்கெலாம்
இல்லை யோபுனை யென்றுரைப் பார்சிலர். ......
16(வாசம் வீழ்தலும்)
வாசம் வீழ்தலும் வந்துவந் தில்லிடைத்
தூசு டுத்தில மென்றொர் துகில்புனைந்
தாசை யோடுசென் றன்னதும் வீட்டியே
ஊசல் போன்றனர் ஒண்டொடி மார்சிலர். ......
17(மாண்ட சாயன்)
மாண்ட சாயன் மடந்தைய ரேதனை
வேண்டி மால்கொடு வீடுறும் வேலையில்
ஈண்டு போற்று கெனவுமெண் ணாததோ
ஆண்ட கைக்கிய லாகுமென் பார்சிலர். ......
18(கரும்பு நேர்மொழி)
கரும்பு நேர்மொழிக் காரிகை மாதரார்
விரும்பி வேண்டவு மேவலர் போலுமால்
அரும்பொன் மேனியெம் மண்ணலுக் குள்ளமும்
இரும்பு கொல்லென் றியம்பிடு வார்சிலர். ......
19(நெருக்கு பூண்முலை நேரி - 2)
நெருக்கு பூண்முலை நேரிழை யார்க்குமால்
பெருக்கி னாரவர் பேதுற லோர்கிலார்
உரைப்ப தென்கொல் உயிர்க்குயி ராகியே
இருக்கு மிங்கிவர் என்றுரைப் பார்சிலர். ......
20(திருகு வார்சடை)
திருகு வார்சடைச் செய்யனை நோக்கிநின்
றுருகு வார்சிலர் உள்ளுற வெம்பியே
கருகு வார்சிலர் காதலி மாரொடும்
பெருகு காதலைப் பேசுகின் றார்சிலர். ......
21(வேறு ளார்மெய்)
வேறு ளார்மெய் விளர்ப்பினை நோக்கியே
ஈறி லாரை இவரணைந் தார்கொலோ
நீறு மெய்யின் நிலவிய தென்றவர்ச்
சீறி யேயிகல் செய்திடு வார்சிலர். ......
22(கட்டு செஞ்சடைக் கான்)
கட்டு செஞ்சடைக் கான்மிசை யூர்தர
விட்ட வெண்மதி மெல்லிய லார்தமைச்
சுட்ட தம்ம சுமப்பதென் நீரெனாக்
கிட்டி நின்று கிளத்திடு வார்சிலர். ......
23(கஞ்ச மேலய)
கஞ்ச மேலய னாதிக் கடவுளர்
தஞ்ச மென்று சரண்புக வுண்டதோர்
நஞ்சின் வெய்யகொல் நங்கையர் கொங்கைமேல்
துஞ்சு கின்ற துயிலதென் பார்சிலர். ......
24(பின்ன ருள்ள)
பின்ன ருள்ள பொருந்தொழி லாற்றுவான்
துன்னு வீரெனில் தொல்குழு ஆடவர்
நன்ன லத்தொடு நண்ணமின் னாரையே
இன்னல் செய்வதென் என்றுரைப் பார்சிலர். ......
25(சாற்றி யிங்கினி)
சாற்றி யிங்கினி யாவதென் தையல்மீர்
ஏற்றின் மேவினர் எம்மை மணந்திட
மாற்றி லாத மலைமகள் போலயாம்
நோற்றி லேமென நொந்துயிர்ப் பார்சிலர். ......
26(தேவர் உய்ய)
தேவர் உய்யத் திருமணஞ் செய்திட
மேவு கின்றவர் மெல்லியல் மங்கையர்
ஆவி கொள்ள அமைந்தனர் இத்திறம்
ஏவர் செய்வ ரெனஉரைப் பார்சிலர். ......
27(மையல் வேழம்)
மையல் வேழம் வயப்புலி போல்வரும்
வெய்யர் தம்மை மெலிவிப்ப தன்றியே
நொய்ய மான்புரை நோக்கியர்க் குந்துயர்
செய்யு மோவெனச் செப்புகின் றார்சிலர். ......
28(நங்கள் கொற்ற)
நங்கள் கொற்றவன் நற்றவத் தாற்பெறு
மங்கை பாலின் மணப்பொருட் டேகினர்
இங்கெ மக்கினி மைத்திறஞ் செய்கலார்
சங்க ரர்க்குத் தகாதிதென் பார்சிலர். ......
29(பேதை நீரவர்)
பேதை நீரவர் பேரிளம் பெண்மையோர்
ஆதி யந்தத் தணங்கினர் இன்னணம்
வீதி தோறும் விரவியத் தாருக
மாத ராரினும் மாதர்பெற் றாரரோ. ......
30(பண்டை வேதன்)
பண்டை வேதன் பதத்தினும் பேரெழில்
கொண்டு நின்றவக் கோநகர் வீதியின்
அண்டம் வெஃக அணிபடுத் திட்டவை
கண்டு போந்தனன் கண்ணுத லண்ணலே. ......
31(செய்ய தான)
செய்ய தான செழுங்கம லாசனத்
தையல் காமுறத் தக்கன வீதிகள்
பைய நீங்கிப் பராபரை யாகிய
ஐயை கோயில் அணித்தென நண்ணினான். ......
32(வேந்தன் ஏவலின்)
வேந்தன் ஏவலின் வேதங்கள் இன்றுகா
றாய்ந்து நாடற் கரியவெம் மண்ணல்முன்
பூந்த டம்புனல் பூரித்த பல்குடம்
ஏந்தி வந்தனர் மாதவர் எண்ணிலார். ......
33(இருவ கைப்படு)
இருவ கைப்படு மெண்வகை மங்கலப்
பொருண்மை முற்றவும் பூவையர் பற்பல
வரிசை யிற்கொடு வந்தெதிர் எய்தினார்
அரிய யற்கரி தாகிய அண்ணல்முன். ......
34(அறுகு நிம்பம்)
அறுகு நிம்பம் அடிசில் அரிசனஞ்
சிறுகும் ஐயவி செம்பஞ்சின் வித்திவை
குறுகு தண்புனற் கொள்கல மேந்தியே
மறுகில் வந்தனர் மங்கையர் எண்ணிலார். ......
35(நெருக்கு பூண்முலை நேரி - 1)
நெருக்கு பூண்முலை நேரிழை யாரவர்
பொருக்கெ னாவெதிர் போந்துயிர் யாவினும்
இருக்கும் ஆதி யிறைவனை யேத்தியே
தருக்கொ டேநின்று தந்தொழி லாற்றினார். ......
36(எங்கள் நாதன் எதிரு)
எங்கள் நாதன் எதிருற எண்ணிலா
மங்கை மார்சுடர் மன்னிய தட்டைகள்
செங்கை யிற்கொடு சென்று வலன்வளைஇ
அங்கண் மும்முறை அன்பொடு சுற்றினார். ......
37(ஆன காலை அருமண)
ஆன காலை அருமணச் சாலைமுன்
ஞான நாயகன் நட்பொடு நண்ணியே
வானு லாய மழவிடை நீங்கினான்
யான மீதினின் றியாரும் இழிந்திட. ......
38(விடையி ழிந்து)
விடையி ழிந்துழி மேனைவிண் ணாட்டவர்
மடமின் னாரொடு வந்து பராபரன்
அடிகண் மீதினில் ஆன்பொழி பால்கொடு
கடிதின் ஆட்டினள் கைதொழு தேகினாள். ......
39(நாதன் அவ்வழி)
நாதன் அவ்வழி நந்திக ளுய்த்திடும்
பாது கைக்கட் பதமலர் சேர்த்தியே
போதன் மாதவன் பொற்கரந் தந்திடக்
கோதில் மாமணக் கோயிலுள் எய்தினான். ......
40வேறு(பல்லிய மியம்ப)
பல்லிய மியம்ப வானோர் பரவவிஞ் சையர்கள் பாட
ஒல்லெனக் கணங்க ளார்ப்ப உருத்திரர் யாருஞ் சூழ
மெல்லெனச் செல்லும் அண்ணல் விரிஞ்சனும் மாலும் வேண்ட
மல்லலங் கோயி லுள்ள வனப்பெலாம் நோக்க லுற்றான். ......
41(உலாவுறு சுரும்பு)
உலாவுறு சுரும்பு மூசா ஒண்மலர்ச் சோலை வாவி
நிலாவுறழ் புனல்சே ரோடை நெடுந்தடம் நிறம்வே றாகிக்
குலாவுமண் டபங்க ளின்ன கொண்டியல் வனப்புக் காட்டிச்
சிலாதனன் மதலை கூறச் சென்றுசென் றிறைவன் கண்டான். ......
42(கண்டலுந் தம்)
கண்டலுந் தம்போல் தங்கள் காமர்விண் ணகரந் தானும்
மண்டல வரைப்பின் வந்து வைகிய தாங்கொ லென்னா
அண்டர்கள் வாவி கேணி அகன்புனல் குடைந்துங் காமர்
தண்டலை யாடல் செய்துந் தலைத்தலை திரிதந் துற்றார். ......
43(நந்தியந் தேவு)
நந்தியந் தேவு காட்ட நல்வனப் பனைத்தும் நோக்கிக்
கந்தமென் போது வேய்ந்த கடிமணச் சாலை தன்னில்
இந்திர நீலத் திட்ட எழில்நலத் தவிசி னும்பர்
வந்துவீற் றிருந்தான் எல்லா மறைகட்கும் மறையாய் நின்றான். ......
44(வீற்றிருந் தருளு மெல்லை - 1)
வீற்றிருந் தருளு மெல்லை வீரபத் திரன்தீப் பேரோன்
ஆற்றல்கொள் கூர்மாண் டேசன் ஆடகன் ஐயன் ஏனோர்
போற்றிசெய் அயனே மாலே புரந்தரன் முனிவர் தேவர்
ஏற்றிடு தவிசு தோறும் இருந்தனர் இறைவற் சூழ. ......
45வேறு(அமையப்படும் அப்)
அமையப்படும் அப்பொழு தத்தினில் ஆதி யண்ணல்
விமலத்திரு மாமணங் காணுற மேலை யண்டச்
சுமையுற்றிடும் எப்புவ னத்தருந் தொக்க நீரால்
இமையச்சயி லந்துளங் குற்ற திடுக்கண் எய்தி. ......
46(பொன்பா லிமை)
பொன்பா லிமையந் துளங்குற்றுழிப் போற்று சேடன்
தன்பால் அவனி யெனலாந் துலைத்தட்டி ரண்டின்
வன்பால தான வடபா லதுதாழ மற்றைத்
தென்பால தாற்ற உயர்ந்திட்டது தேவர் உட்க. ......
47(ஓங்குற் றதுதென்)
ஓங்குற் றதுதென் புவியாதலும் உம்ப ரெல்லாம்
ஏங்குற் றனர்மண் ணுலகோர்கள் இடுக்க ணுற்றுத்
தீங்குற் றனவோ எமக்கென்று தியக்க முற்றார்
பாங்குற் றிடுதொன் முனிவோரும் பரிய லுற்றார். ......
48(இன்னோ ரெவரு)
இன்னோ ரெவருஞ் சிவனேயென் றிரங்க லோடும்
முன்னோனு மன்ன செயல்கண்டு முறுவ லெய்தி
அன்னோர் குறைநீத் திடநந்தியை நோக்கி ஆழி
தன்னோர் கரத்திற் செறித்தானைத் தருதி யென்றான். ......
49(என்றா னதுகாலை)
என்றா னதுகாலையில் நந்தி யிறைஞ்சி யேகிக்
குன்றாத கும்ப முனிவன்றனைக் கூவ அங்கட்
சென்றான் அவனைக் கொடுபோய்ச்சிவன் முன்ன ருய்ப்ப
மன்றார் கழல்கள் பணிந்தான் மலயத்து வள்ளல். ......
50(தாழுந் தவத்தோ)
தாழுந் தவத்தோன் றனைக்கண்ணுதற் சாமி நோக்கித்
தாழுங் குறியோய் இவண்யாவருஞ் சார்த லாலே
தாழும் புவிதக் கிணமுத்தரஞ் சால ஓங்கத்
தாழுஞ் சுவர்க்க நிலனுந் நனிதாழு மன்றே. ......
51(தெருமந் துழலு)
தெருமந் துழலுந் தரைமன்னுயிர் செய்த தொல்லைக்
கருமந் தனைவிட் டயர்வெய்திக் கலங்குகின்ற
பெருமந் தரமே முதலாய பிறங்கல் யாவும்
அருமந்த மேரு வரையுந்தவ றாகு மம்மா. ......
52(ஆனான் முனிகேள்)
ஆனான் முனிகேள் ஒருநீயிவ் வசலம் நீங்கித்
தேனார் மருத வளமேயதென் னாடு நண்ணி
வானார் பொதிய மலைமேவுதி வைய மெல்லாம்
மேனா ளெனவே நிகராகி விளங்கு மென்றான். ......
53(பிறையொன்று வேணி)
பிறையொன்று வேணிப் பரனிங்கிது பேச லோடும்
அறையொன்று தீஞ்சொற் றமிழ்மாமுனி அச்ச மெய்திக்
குறையொன் றியான்செய் துளனோகொடி யேனை ஈண்டே
உறையென் றிலைசே ணிடைச்செல்ல வுரைத்தி எந்தாய். ......
54(என்னக் குறிய முனி)
என்னக் குறிய முனிவன்றனை எந்தை நோக்கி
உன்னைப் பொருவும் முனிவோர் உலகத்தி லுண்டோ
அன்னத் தவனும் உனைநேர்கிலன் ஆத லால்நீ
முன்னிற் றெவையுந் தவறின்றி முடித்தி மன்னோ. ......
55(வேறுற்றிடு தொன்)
வேறுற்றிடு தொன்முனி வோர்களின் விண்ணு ளோரின்
ஈறுற்றிடு மோவிது செய்கை எவர்க்கும் மேலாம்
பேறுற்ற நின்னால் முடிவாகும் பெயரு கென்று
கூறுற் றிடலும் முனியீது குறித்து ரைப்பான். ......
56(வான்செய்த மேனி)
வான்செய்த மேனி நெடுமான் மகவேள்வி மன்னன்
தேன்செய்த கஞ்சத் தயனிற்கவிச் செய்கை தீயேன்
தான்செய் திடவே பணித்திட்டனை தன்மை யீதேல்
நான்செய் ததுவே தவம்போலும் நலத்த தெந்தாய். ......
57(ஈங்கிப் பணியை)
ஈங்கிப் பணியை யளித்தாயெனில் எந்தை யுன்றன்
பாங்குற்ற புத்தேள் மணக்காட்சி பணிந்தி டாமல்
நீங்கற் கரிதாங் கலல்கின்றதென் னெஞ்ச மென்ன
ஓங்கற் கயிலைத் தனிநாயகன் ஓத லுற்றான். ......
58வேறு(சிந்தைய தழுங்க)
சிந்தைய தழுங்க லின்றித் தென்மலைச் சேறி அங்கண்
வந்துநம் வதுவைக் காட்சி வழங்குதும் மகிழ்ந்து காண்டி
நந்தமை யுன்னி யாங்கே நாள்சில இருத்தி பின்னர்
முந்தையி லெமது பாங்கர் வருதியால் முனிவ என்றான். ......
59(என்றிவை அமலன்)
என்றிவை அமலன் செப்ப இசைதரு புலத்தனாகி
மன்றமர் கழல்க டம்மைப் பன்முறை வணக்கஞ் செய்து
நின்றுகை தொழுது போற்றி நெடிதுயிர்த் தரிதின் நீங்கித்
தென்றிசை யெல்லை நோக்கிச் சிறுமுனி கடிது போனான். ......
60(கிற்புறு மாயை)
கிற்புறு மாயை வல்ல கிரவுஞ்ச வரையும் விந்த
வெற்பதும் வன்மை சிந்த வில்வல னொடுவா தாவி
கற்பனை யகன்று மாயக் காவிரி நீத்தத் தோடு
முற்பகல் படர்ந்த தென்ன முனிவரன் தென்பாற் போனான். ......
61(மறைபுகல் வேள்)
மறைபுகல் வேள்வி யாற்று மாவலி வலிகொள் காட்சிக்
குறியவன் துணையாய் மற்றோர் குறளுமுண் டாங்கொ லென்னா
நெறியெதிர் அவுணர் தம்முள் ஒருசிலர் நில்லா தோடச்
சிறுமுனி வானம் நீந்திச் சிமையமா மலயம் புக்கான். ......
62(முண்டகன் வலி)
முண்டகன் வலிகொண் டுற்ற மூவெயில் அழிப்பான் முன்னி
அண்டரும் புவன முற்று மாகிய கொடிஞ்சி மான்றேர்
பண்டொரு பதத்தா லூன்றிப் பாதலத் திட்ட அண்ணல்
கொண்டதொல் லுருவ முன்னிக் குறுமுனி அங்கண் உற்றான். ......
63(பொதியம தென்னும்)
பொதியம தென்னும் வெற்பிற் புனிதமா முனிவன் வைகத்
துதியுறு வடபாற் றென்பாற் புவனியோர் துலைபோ லொப்ப
அதுபொழு துயிர்க ளானோர் அணங்கொரீஇ அரனை யேத்தி
மதிமகிழ்ந் தமர்ந்தார் தொல்லை வதுவையின் செய்கை சொல்வாம். ......
64(கதுமென மலய)
கதுமென மலயந் தன்னிற் கடமுனி சேற லோடு
முதுமைகொ ளிமையம் புக்க முனிவருஞ் சுரருந் தேர்ந்து
மதிமலி சடையெம் மண்ணல் வரம்பில்பே ரருளும் அன்னோன்
பதமுறை வழிபட் டோர்தம் பான்மையும் பரவ லுற்றார். ......
65(அங்கது பொழுது)
அங்கது பொழுது தன்னில் அரசன திசைவால் எங்கள்
சங்கரி ஐயை காப்பச் சசியென்பாள் அடைப்பை ஏந்தக்
கங்கைகள் கவரி வீசக் காளிகள் கவிகை பற்றப்
பங்கய மான்கை பற்றிப் பாரதி பரவ வந்தாள். ......
66(வந்திடு முலகை)
வந்திடு முலகை ஈன்றாள் வதுவையஞ் சாலை நண்ணி
அந்தமொ டாதி யில்லான் அடிகளை வணங்க முன்னோன்
முந்துறு தவிசின் றன்பான் முற்றிழை யிருத்தி யென்ன
இந்திரை முதலோர் யாரு மேத்திட இருந்தா ளன்றே. ......
67(இருந்திடு மெல்லை)
இருந்திடு மெல்லை தன்னில் ஏலவார் குழலி யென்னுங்
கருந்தடங் கண்ணி னாளைக் கண்ணுதற் பராப ரற்கு
விரைந்தருள் செய்ய வுன்னி வேந்தன திசைவான் மேனை
பெருந்தடம் புனலுஞ் சந்து மலர்களும் பிறவுந் தந்தாள். ......
68(தருதலு மிமைய)
தருதலு மிமையத் தண்ணல் தாழ்ந்தன னிருந்து தேவி
சிரகநீர் விடுப்ப ஆதி திருவடி விளக்கிச் சாந்தம்
விரைமலர் புனைந்து நின்ற வியன்கடன் பலவுஞ் செய்து
பொருவரு மகிழ்ச்சி யோடு பூசனை புரிந்தான் மாதோ. ......
69(பூசனை புரிந்த)
பூசனை புரிந்த பின்னர்ப் புவனமீன் றாடன் கையைப்
பாசம தகன்ற தொல்சீர்ப் பரஞ்சுடர் கரத்துள் வைத்து
நேசமொ டளித்தே னென்னா நெடுமறை மனுக்கள் கூறி
வாசநல் லுதக முய்த்தான் மருகனென் றவனை யுன்னி. ......
70(எங்குள பொருளு)
எங்குள பொருளுங் கோளு மீதலுந் தானே யாகுஞ்
சங்கரன் உலக மெல்லாந் தந்திடுங் கன்னி தன்னை
மங்கல முறையாற் கொண்டான் மலைமகன் கொடுப்ப வென்றால்
அங்கவன் அருளின் நீர்மை யாரறிந் துரைக்கற் பாலார். ......
71(ஆனதோ ரமைய)
ஆனதோ ரமையந் தன்னில் ஆடினர் அமரர் மாதர்
கானம திசைத்தார் சித்தர் கந்தரு வத்த ரானோர்
ஏனைய விருவர் தாமு மேழிசைக் கீதஞ் செய்தார்
வானவர் முனிவர் யாரும் மறைகளை யறைய லுற்றார். ......
72(அல்லியங் கமலந் தன்)
அல்லியங் கமலந் தன்னில் அரிவையும் புண்டரீக
வல்லியும் மற்று ளோரும் மங்கலம் பாட லுற்றார்
சல்லரி திமிலை காளந் தண்ணுமை சங்க மாதிப்
பல்லிய மியம்பிச் சூழ்ந்து பாரிடத் தொகையோர் ஆர்த்தார். ......
73(அதுபொழு திமை)
அதுபொழு திமையத் தண்ணல் ஆபொழிந் திட்ட தீம்பால்
கதலிமாப் பலவின் தீய கனிவகை நெய்தே னாதி
மதுரமாஞ் சுவையின் வர்க்கம் வரம்பில வீற்று வீற்று
நிதிகொள்பா சனத்தி லிட்டு நிருமலன் முன்ன ருய்த்தான். ......
74(மறைநெறி யினை)
மறைநெறி யினைய வெல்லாம் மலைமக னுய்த்து மற்றெம்
மிறையிவை நுகர்தல் வேண்டு மெனத்தொழ இனிதே யென்னாக்
கறைமிடற் றணிந்த மேலோன் கரத்தினால் அவற்றைத் தொட்டாங்
குறுபெருங் கருணை செய்தே உவந்தனங் கோடி யென்றான். ......
75(தொன்மைகொ ளரு)
தொன்மைகொ ளருளின் நீரால் துய்த்தன வாகத் தொட்ட
நின்மல வுணவை மன்னன் நேயமோ டங்கண் மாற்றி
இன்மலர் கந்தந் தீர்த்த மிவற்றொடு மொருசா ருய்ப்ப
நன்மகிழ் வோடு வேதா நாயகற் குரைக்க லுற்றான். ......
76(படங்கிளர் சேடன்)
படங்கிளர் சேடன் தாங்கும் பார்விசும் புறையும் நீரார்
அடங்கலும் மணஞ்செய் போதத் தவ்வவர்க் கடுத்த தாற்றி
நடந்திடு மொழுக்கம் எந்தை நடத்திடல் வேண்டும் மன்றற்
சடங்கினி யுளது முற்றத் தண்ணளி புரிதி யென்றான். ......
77(என்னலு முறுவல்)
என்னலு முறுவல் செய்தே இறையருள் புரிய வேதன்
வன்னியு மதற்கு வேண்டும் பொருள்களும் மரபிற் றந்து
பொன்னொடு புகரும் ஏனை முனிவரும் புடையிற் சூழத்
தன்னிக ரில்லா மன்றற் சடங்கெலாம் இயற்றல் செய்தான். ......
78(அந்தணர் கரண)
அந்தணர் கரண மெல்லா மாற்றியே முடிந்த பின்னர்த்
தந்தையுந் தாயுமாகி உலகெலாந் தந்தோர் தம்மை
முந்துற அயனும் பின்னர் முகுந்தனு மதற்குப் பின்னர்
இந்திரன் முனிவர் வானோர் யாவரும் இறைஞ்ச லுற்றார். ......
79(அரனுடன் உமை)
அரனுடன் உமையா டன்னை யாங்கவர் பணித லோடும்
உருகெழு நிலையுட் கொண்ட உருத்திரத் தலைவ ரேனோர்
பரிசனர் கணங்கள் யாரும் பணிந்தனர் அதன்பின் னாகக்
கிரியுறை யிறைவன் மைந்தன் கேளொடு வணக்கஞ் செய்தான். ......
80(தமதுமுன் பணிகின்)
தமதுமுன் பணிகின் றோர்கள் தமக்கெலா மீசன் றானும்
உமையும்நல் லருளைச் செய்ய வோர்ந்திது பதமென் றுன்னி
இமகிரி புரந்த வண்ணல் ஈண்டுறை நீரர்க் கெல்லாம்
அமலன துணவு மற்றும் அளிப்பனென் றகத்துட் கொண்டான். ......
81(ஆய்ந்திடு மறைகள்)
ஆய்ந்திடு மறைகள் போற்று மாதிதன் தீர்த்தம் போது
சாந்தமொ டவிகள் தம்மைச் சதுர்முகன் முதல்வா னோர்க்கும்
வாய்ந்திடு முனிவர் யார்க்கும் மற்றுளார் தமக்கும் மன்னன்
ஈந்திட வவற்றை அன்னோ ரியாவரும் அணிந்துட் கொண்டார். ......
82(ஆலமா மிடற்றோற்)
ஆலமா மிடற்றோற் கான அமலமாம் பொருளை யேற்றுச்
சீலமோ டணிந்துட் கொண்டு சிந்தையுள் மகிழ்ந்து நந்தம்
மூலமாம் வினைகட் கின்றே முடிபொருங் குற்ற தென்றார்
மேலவர் அன்று பெற்ற வியப்பினை விளம்ப லாமோ. ......
83(அனையதோர் காலை தன்)
அனையதோர் காலை தன்னில் அமலமாம் பொருள்க டம்மைப்
பனிவரை யிறைவன் றானும் பன்னியுந் தமரு ளாரும்
எனைவரு மருந்தி மேற்கொண் டெல்லையில் இன்ப முற்றார்
வினைவலி யொருவி மேலாம் வீடுபே றடைந்து ளார்போல். ......
84(தன்னுறு கணவன்)
தன்னுறு கணவன் துஞ்சத் தாபத நிலைய ளாகி
இன்னலை யடைந்தங் குற்ற இரதியவ் வெல்லை வந்து
மன்னுயிர் முழுது மீன்ற மங்கையை மணந்த வள்ளல்
பொன்னடி வணங்கித் தீயேன் புன்கணைத் தவிர்த்தி யென்றாள். ......
85(சீருறு கணவன்)
சீருறு கணவன் இல்லாள் செப்பிய மாற்றங் கேளா
ஆருயிர் முழுதும் நின்றே யனைத்தையு முணர்ந்து கூட்டும்
பேரரு ளுடைய நாதன் பேதுறல் மடந்தை யென்னா
மாரன்வந் துதிக்கும் வண்ணம் மனத்திடை நினைந்தா னன்றே. ......
86(நினைதரு மெல்லை)
நினைதரு மெல்லை தன்னில் நெடியமான் முதலா வுள்ள
அனைவரு மருட்கை யெய்த அழுங்கிய இரதி நோக்கி
மனமகிழ் சிறந்து கார்காண் மஞ்ஞையிற் களிப்ப அங்கட்
குனிசிலை கொண்ட மாரன் கொம்மெனத் தோன்றி னானே. ......
87(முன்பொடு தோன்று)
முன்பொடு தோன்று மாரன் முதல்வியோ டிருந்த நாதன்
பொன்புனை கமலத் தாள்முன் போந்தனன் தாழ்ந்து போற்றி
என்பிழை பொறுத்தி யென்ன யாம்உனை முனியின் அன்றோ
பின்பது தணிவ துள்ளம் பேதுறல் மைந்த என்றான். ......
88(எரிபுனை நமது)
எரிபுனை நமது நோக்கால் இறந்தநின் னுடலம் நீறாய்
விரைவொடு போயிற் றன்றே வேண்டினள் இரதி யன்னாட்
குருவமா யிருத்தி ஏனை உம்பரோ டிம்பர்க் கெல்லாம்
அருவினை யாகி யுன்றன் அரசியல் புரிதி என்றான். ......
89(செய்வினை முறை)
செய்வினை முறையால் ஈசன் சித்தசற் கினைய கூறி
அவ்வவன் அரசுஞ் சீரு மாணையும் வலியும் நல்கி
மைவிழி யிரதி யோடு மன்னுதொல் புரத்துச் செல்ல
மெய்விடை யுதவ அன்னோர் விரைந்துடன் தொழுது போனார். ......
90(இரதியும் மதனு)
இரதியும் மதனு மேக இந்திர நீலத் திட்ட
அரியணை யிருந்த நாதன் அம்மையொ டிழிந்து தன்னேர்
திருவுரு வுடைய மேலோர் தேவர்மா முனிவ ரேனோர்
பரவினர் செல்லப் பூதர் பல்லியந் தெழிப்பச் சென்றான். ......
91(மன்னுயிர்க் குயிராய் நின்)
மன்னுயிர்க் குயிராய் நின்றோன் மால்விடை யேறி மாதைத்
தன்னொரு பாங்கிற் கொண்டு தழீஇக்கொடு நடத்தி வானோர்
தொன்னிலை யமைந்து செல்லத் துவன்றியே கணங்கள் சுற்றப்
பொன்னிய லிமையந் தீர்ந்து வெள்ளியம் பொருப்பில் வந்தான். ......
92(அன்னதோர் காலை மாலை)
அன்னதோர் காலை மாலை அயனைவெற் பரசை வேள்வி
மன்னனை அமரர் தம்மை முனிவரை மாத ரார்கள்
என்னவர் தமையுந் தத்த மிடந்தொறு மேகும் வண்ணம்
முன்னுற விடுத்தா னென்ப மூலமும் முடிவு மில்லோன். ......
93(அடுகன லவன்கூர்)
அடுகன லவன்கூர் மாண்டன் ஆடகன் ஐயன் சிம்புள்
வடிவின னாதி யான வரம்பிலா உருத்தி ரர்க்குங்
கடகரி முகத்தி னாற்குங் கணங்களில் தலைமை யோர்க்கும்
விடையினை யுதவி ஐயன் வியன்பெருங் கோயில் புக்கான். ......
94(ஏறெனுங் கடவுள்)
ஏறெனுங் கடவுள் மீதில் இம்மென இழிந்து தன்னோர்
கூறுடை முதல்வி யோடுங் கோநகர் நடுவ ணெய்தி
ஆறணி சடையெம் மண்ணல் அரியணைப் பீட மீதில்
வீறொடு தொன்மை யேபோல் வீற்றிருந் தருளி னானே. ......
95(அன்பினர்க் கெளி)
அன்பினர்க் கெளிவந் துள்ள ஆதியம் பரமன் மாது
தன்புடை யாகச் சீயத் தவிசின்வீற் றிருத்த லோடுந்
துன்பகன் றிருபா லாகித் துவன்றிய உயிர்க ளெல்லாம்
இன்பொடு போக மாற்றி இனிதமர் வுற்ற வன்றே. ......
96ஆகத் திருவிருத்தம் - 850