(அந்த வேலையிற் கயிலை)
அந்த வேலையிற் கயிலையில் எம்பிரா னருளால்
நந்தி தேவரை விளித்துநம் மணச்செயல் நாட
முந்து சீருடை யுருத்திர கணங்கள்மான் முதலோர்
இந்தி ராதியர் யாரையுந் தருதியென் றிசைத்தான். ......
1(இன்ன லின்பமின்)
இன்ன லின்பமின் றாகிய பரமன்ஈ துரைப்ப
நன்ன யப்புட னிசைந்துபின் நந்தியெம் பெருமான்
அன்னர் யாவரும் மணப்பொருட் டுற்றிட அகத்துள்
உன்னல் செய்தனன் அவரெலா மவ்வகை யுணர்ந்தார். ......
2(உலக முய்ந்திட)
உலக முய்ந்திட வெம்பிரான் மணம்புரி யுண்மை
புலன தாதலும் அவனருண் முறையினைப் போற்றி
மலியும் விம்மிதம் பத்திமை பெருமிதம் மகிழ்ச்சி
பலவும் உந்திடக் கயிலையை முன்னியே படர்வார். ......
3(பாலத் தீப்பொழி)
பாலத் தீப்பொழி விழியுடைப் பஞ்சவத் திரனே
மூலத் தீப்புரை விடைப்பெருங் கேதுவே முதலாஞ்
சூலத் தீக்கரத் தாயிர கோடியோர் சூழக்
காலத் தீப்பெயர் உருத்திரன் வந்தனன் கடிதில். ......
4(சுழல லுற்றிடு)
சுழல லுற்றிடு சூறையும் வடவையுந் தொலைய
முழுது யிர்த்தொகை அலமர வுயிர்க்குமொய்ம் புடையோர்
எழுப திற்றிரு கோடிபா ரிடத்தொகை யீண்ட
மழுவ லத்தின னாயகூர் மாண்டனும் வந்தான். ......
5(நீடு பாதலத் துறை)
நீடு பாதலத் துறைபவர் நெற்றியங் கண்ணர்
பீடு தங்கிய பல்வகை நிறத்தவர் பெரியர்
கோடி கோடியா முருத்திர கணத்தவர் குழுவோடு
ஆட கேசனா முருத்திரன் கயிலையில் அடைந்தான். ......
6(கோர மிக்குயர்)
கோர மிக்குயர் நூறுபத் தாயிர கோடி
சார தத்தொகை சூழ்தரச் சதுர்முகன் முதலோர்
ஆரு மச்சுறச் சரபமாய் வந்தருள் புரிந்த
வீர பத்திர வுருத்திரன் வந்தனன் விரைவில். ......
7(விண்டு தாங்குறு)
விண்டு தாங்குறு முலகுயிர் முழுதுமோர் விரலிற்
கொண்டு தாங்குறு குறட்படை கோடிநூ றீண்டப்
பண்டு தாங்கலந் தரியரன் இருவரும் பயந்த
செண்டு தாங்குகைம் மேலையோன் மால்வரை சென்றான். ......
8(முந்தை நான்முகன்)
முந்தை நான்முகன் விதிபெறான் மயங்கலும் முக்கட்
டந்தை யேவலால் ஆங்கவன் நெற்றியந் தலத்தின்
வந்து தோன்றிநல் லருள்செய்து வாலுணர் வளித்த
ஐந்து மாறுமா முருத்திரர் தாமும்வந் தடைந்தார். ......
9(இத்தி றத்தரா)
இத்தி றத்தரா முருத்திரர் அல்லதை யேனை
மெத்து பல்புவ னங்களு மளித்தவண் மேவி
நித்தன் அன்புறும் உருத்திர கணங்களும் நெறிசேர்
புத்தி யட்டக முதல்வரும் வந்தனர் பொருப்பில். ......
10(தொட்ட தெண்கடல்)
தொட்ட தெண்கடல் யாவையுந் துகளினால் தூர்க்கும்
எட்டு நூறெனுங் கோடிபா ரிடத்தொகை யீண்டக்
கட்டு செஞ்சடைப் பவர்முத லாகவே கழறும்
அட்ட மூர்த்திகள் தாங்களும் ஒருங்குடன் அடைந்தார். ......
11(ஏறு கொண்டிடு)
ஏறு கொண்டிடு தெழிப்பினர் எம்பிரான் விழிநீர்
நாறு கொண்டுள கலத்தொடு பொடிபுனை நலத்தோர்
நூறு கொண்டிடு கோடிபூ தத்தொடு நொடிப்பின்
வீறு கொண்டகுண் டோதரன் போந்தனன் வெற்பில். ......
12(அண்டம் யாவையும் உயிர்)
அண்டம் யாவையும் உயிர்த்தொகை யனைத்தையும் அழித்துப்
பண்டு போலவே தந்திட வல்லதோர் பரிசு
கொண்ட சாரதர் நூற்றிரு கோடியோர் குழுமக்
கண்ட கன்னனும் பினாகியும் வந்தனர் கயிலை. ......
13(ஆன னங்களோ)
ஆன னங்களோ ராயிரம் இராயிரம் அங்கை
மேனி வந்தபொன் மால்வரை புரைநிற மேவித்
தானை வீரர்நூற் றைம்பது கோடியோர் சாரப்
பானு கம்பனாந் தலைவன்ஒண் கயிலையிற் படர்ந்தான். ......
14(தங்கள் சீர்த்தியே)
தங்கள் சீர்த்தியே மதித்திடு கடவுளர் தலையும்
பங்கி யாகிய கேசமும் படைகளும் பறித்துத்
துங்க மெய்திய கணங்கள்பல் கோடியோர் சூழச்
சங்கு கன்னன்வந் திறுத்தனன் தடவரை தன்னில். ......
15(காள கண்டனு)
காள கண்டனுந் தண்டியும் நீலனுங் கரனும்
வாள்வ யம்பெறு விச்சுவ மாலியும் மற்றும்
ஆளி மொய்ம்பின ராயபல் பூதரும் அனந்தம்
நீளி ருங்கடற் றானையோ டணைந்தனர் நெறியால். ......
16(கூற்றின் மொய்ம்)
கூற்றின் மொய்ம்பினைக் கடந்திடு சாரதக் குழுவோர்
நூற்று முப்பது கோடியோர் சூழ்ந்திட நொய்தின்
மாற்ற லார்புரம் அட்டவன் தாளிணை வழிபட்
டேற்ற மிக்கஈ சானன்அக் கயிலையில் இறுத்தான். ......
17(எகின மாகிய)
எகின மாகிய மால்அயன் வாசவன் இமையோர்
புகலு மாதிரங் காவலர் கதிர்மதி புறக்கோள்
மிகைய தாரகை அன்னைகள் வசுக்கள்வே றுள்ளார்
மகிழும் விஞ்சையர் முனிவரர் யாவரும் வந்தார். ......
18(வாலி தாகிய மறை)
வாலி தாகிய மறைகள்ஆ கமங்கள்மந் திரங்கள்
ஞால மாதிய பூதங்கள் உலகங்கள் நகர்கள்
கால மானவை ஏனைய பொருளெலாங் கடவுட்
கோல மெய்திவந் திறுத்தன கயிலையிற் குறுகி. ......
19(இந்த வாற்றினா)
இந்த வாற்றினாற் கயிலையில் யாவரும் யாவும்
வந்த தன்மையை நோக்கியே ஆற்றவு மகிழ்ந்து
நந்தி யுள்புகுந் தமலனுக் கித்திறம் நவில
முந்தை அன்னவர் யாரையுந் தருகென மொழிந்தான். ......
20(புராரி யித்திறம்)
புராரி யித்திறம் மொழிதலுஞ் சிலாதனார் புதல்வன்
ஒராய்மு தற்கடை குறுகியே உருத்திர கணங்கள்
முராரி யாதியாம் விண்ணவர் முனிவரெல் லோரும்
விராவு நீர்மையிற் சென்றிடக் கோயிலுள் விடுத்தான். ......
21(விடுத்த காலையில் அரி)
விடுத்த காலையில் அரியணை மீமிசை விளங்கிக்
கடுத்த யங்கிய கண்டன்வீற் றிருப்பது காணூஉ
அடுத்த வன்புடன் யாவரும் இறைஞ்சியே அவன்சீர்
எடுத்து நீடநின் றேத்தியே அணுகினர் இமைப்பில். ......
22(நீண்ட சீருருத்)
நீண்ட சீருருத் திரர்தமை நிறைந்தபல் கணத்தை
ஈண்டு தேவரை முனிவரை வீற்றுவீற் றிசையா
ஆண்டு தன்விரற் சுட்டியே ஆதிநா யகற்குக்
காண்டல் செய்துநின் றேத்தினன் வேத்திரக் கரத்தோன். ......
23(ஆர ழற்பெயர் அண்ணல்கூர்)
ஆர ழற்பெயர் அண்ணல்கூர் மாண்டன்ஆ டகத்தோன்
வீர பத்திரன் முதலுருத் திரகண மேத்தப்
பாரி டத்தவர் யாவரு மெம்பிரான் பாங்கிற்
சேர லுற்றுநின் றேத்தினர் பணிந்தசிந் தையராய். ......
24(அன்ன காலையில் நான்முக)
அன்ன காலையில் நான்முகன் எம்பிரான் அணிவான்
உன்னி யேமுடி முதலிய பல்கல னுதவிப்
பொன்னி னாயதோர் பீடிகை யிற்கொடு போந்து
முன்ன ராகவைத் திறைஞ்சியே இத்திறம் மொழிவான். ......
25(ஐய கேளுனக் கில்)
ஐய கேளுனக் கில்லையாற் பற்றிகல் அடியேம்
உய்யு மாறிவண் மணஞ்செய வுன்னினை உன்பால்
மையல் மாசுணப் பணியெலா மாற்றிமற் றிந்தச்
செய்ய பேரணி அணிந்தரு ளென்று செப்பினனே. ......
26(பங்க யாசனன்)
பங்க யாசனன் குறையிரந் தினையன பகர
அங்கண் மூரல்செய் தன்புடன் நீயளித் திடலால்
இங்கு நாமிவை அணிந்தென மகிழ்ந்தன மென்னாச்
செங்கை யாலணி கலத்தினைத் தொட்டருள் செய்தான். ......
27(பிரமன் அன்புகண்)
பிரமன் அன்புகண் டிவ்வகை யருள்செய்த பின்னர்
ஒருதன் மெய்யணி பணிகளே யணிகளா யுறுவான்
திருவுளங்கொள அவ்வகை யாகிய செகத்தை
அருள்பு ரிந்திடு பராபரற் கிச்செயல் அரிதோ. ......
28(கண்டி யாவரு)
கண்டி யாவரு மற்புத மடைந்துகை தொழலும்
வண்டு லாங்குழற் கவுரி*
1 பா லேகுவான் மனத்திற்
கொண்டு பாங்குறை தலைவருக் குணர்த்தியே குறிப்பாற்
பண்டு மாலயற் கரியவன் எழுந்தனன் படர. ......
29ஆகத் திருவிருத்தம் - 754