(கண்ணுதல் உமை)
கண்ணுதல் உமைதவங் கண்டு நின்னையாம்
மண்ணவர் புகழ்வகை மணத்து மென்றதும்
விண்ணெழு முனிவரின் வினவி விட்டதும்
எண்ணினன் மகிழ்ந்தனன் இமையத் தண்ணலே. ......
1(கணிதமி லுயிரெ)
கணிதமி லுயிரெலாங் கலந்து மற்றவை
உணர்வுதொ றிருந்தவற் கொருதன் கன்னியை
மணமுறை புரிதிறம் மதித்துத் தேவர்தம்
பணிபுரி தச்சனைப் பரிவொ டுன்னினான். ......
2(உன்னிய போதினி)
உன்னிய போதினி லும்பர் கம்மியன்
மன்னவன் எதிருற வந்து கைதொழு
தென்னைகொல் கருதினை யாது செய்பணி
அன்னதை மொழிகென அறைதல் மேயினான். ......
3(என்னையாள் கண்ணு)
என்னையாள் கண்ணுத லிறைவற் கியான்பெறும்
அன்னையாம் உமைதனை யளிப்பன் இவ்வரைக்
கன்னிமா நகரெலாங் கவின்சி றந்திடப்
பொன்னினா டாமெனப் புனைதி யாலென்றான். ......
4(அப்பொழு தத்தினில்)
அப்பொழு தத்தினில் அடுக்கன் மேலையோன்
செப்பிய வாசகஞ் செவிக்கொண் டுள்ளமேன்
மெய்ப்பெரு மகிழ்ச்சியை மேவி யந்நகர்
ஒப்பனை செய்திட வுன்னி னானரோ. ......
5(நீடுறு தருநிரை)
நீடுறு தருநிரை நிமிருங் கால்களாய்ப்
பாடுறு கழிகளாய்ப் பரம்பும் பல்பணை
மூடுற அதன்மிசை முகில்க ளெங்கணும்
பீடுறு பந்தர்போற் பிறங்கும் வெற்பின்மேல். ......
6(மலையுறழ் கோபுர)
மலையுறழ் கோபுர மன்றஞ் சூளிகை
நிலைகெழு செய்யதேர் நிழற்று மண்டபம்
பலவுடன் நறுமலர்ப் பந்தர் அன்னவை
தொலைவறும் ஆவணந் தோறும் நல்கினான். ......
7(நீக்கமில் கதலிகை)
நீக்கமில் கதலிகை நெடிய கேதனம்
மேக்குயர் காவண மிசைத்தந் துள்ளிடை
ஆக்குறு கம்பல மணிசெய் தாயிடைத்
தூக்கினன் கவரியுஞ் சுடர்கொள் மாலையும். ......
8(குரகத முகம்புரை)
குரகத முகம்புரை குலைகள் தூங்கிய
மரகத வொளிபடு வாழை பூகநல்
நிரைகெழு தன்மையின் நிறுவிப் பூந்துணர்
விரைகெழு தோரணம் விசும்பின் நாற்றினான். ......
9(ஒண்ணிதி இயக்கர்)
ஒண்ணிதி இயக்கர்கோ னுறையு ளானதும்
விண்ணவர் தொழுதிட வீற்றி ருந்திடும்
அண்ணறன் கோயிலு மாக வீதிகள்
எண்ணருந் திருவுற எழில்ப டுத்தினான். ......
10(ஒருபுறத் தினை)
ஒருபுறத் தினைஇனி யுமைக்கு நல்குவோன்
இருபுறத் தினும்வரு மெண்ணில் தேவருந்
தருபுறப் பொருளெலாஞ் சாரச் சாலைகள்
திரிபுறத் திரிபுறச் செய்த மைத்தனன். ......
11(ஆயிரப் பத்தென)
ஆயிரப் பத்தென அறையும் யோசனை
போயதோ ரளவையிற் புரிசை யொன்றினைக்
கோயிலி னொருபுடை குயிற்றிக் கோபுரம்
வாயில்கள் நான்கினு மரபின் நல்கினான். ......
12(அங்கதன் நடுவுற)
அங்கதன் நடுவுற அகன்ப ரப்பினின்
மங்கல மணஞ்செய வதுவைச் சாலையைச்
செங்கன கத்தினால் திகழச் செய்தனன்
கங்கையஞ் சடையினான் கயிலைக் கோயில்போல். ......
13(சாலையின் நில)
சாலையின் நிலத்திடைச் சந்த மான்மதம்
மேலுறு நாவிநீர் விரவிப் பூசியே
கோலமென் மலர்கடூஉய்க் குறுகும் வானவர்க்
கேலுறு பலதவி சிருப்பச் செய்தனன். ......
14(வானவில் மணிமுகில்)
வானவில் மணிமுகில் வனச மாமலர்
நீனிறம் விரிதரு நெய்தல் சண்பகம்
ஏனைய நிறங்களால் எண்ணில் வேதிகை
ஆனவை புரிந்தனன் அயனும் நாணவே. ......
15(கண்ணடி பூந்தொடை)
கண்ணடி பூந்தொடை கவரி பஃறுகின்
மண்ணிய செழுமணி மாலை தூங்குறப்
பண்ணுறு வித்தனன் பரமன் பால்வரும்
விண்ணவர் விழியெலாம் விருந்து கொள்ளவே. ......
16(தேவரு முனிவரு)
தேவரு முனிவருந் திருவ னார்களும்
பாவையின் உயிருறு பண்பி னாக்கியே
மேவரு கவரிதார் வீணை யேந்தியே
ஏவலர் தொழின்முறை இயற்ற நல்கினான். ......
17(பெண்ணிய லாரென)
பெண்ணிய லாரெனப் பிறங்கும் பாவைகள்
தண்ணுமை முதலிய தாக்கித் தண்டியல்
பண்ணொடு களிநடம் பயிலு வித்தனன்
விண்ணவர் அரம்பையர் யாரும் வெஃகவே. ......
18(நெருங்கிய கிளி)
நெருங்கிய கிளிமயில் நேமி தண்புறாப்
பொருங்கரி அரிபரி பொருநர் வானுளோர்
ஒருங்குடன் மணிகளா லோவி யப்பட
அருங்கடி யிருக்கையுள் அமர நல்கினான். ......
19(குறைதவிர் நிலை)
குறைதவிர் நிலைமையாற் குயிற்றுஞ் சாலையுள்
நிறைதரு மிந்திர நீலத் தாலொரு
திறலரி யணையினைச் சிறப்பிற் செய்தனன்
இறைவனு மிறைவியும் இனிது மேவவே. ......
20(குண்டமும் வேதி)
குண்டமும் வேதிகை வகையுங் கோதில்சீர்
மண்டல மானதும் வகுத்து வேள்விசெய்
பண்டம தானதும் படுத்திப் பண்ணவர்
எண்டொகை மங்கலம் இருத்தி னானரோ. ......
21(கண்டெறு கதிர்)
கண்டெறு கதிர்மதிக் காந்தங் காஞ்சனம்
ஒண்டுகிர் நித்தில மொளிறு வச்சிரம்
முண்டக வெயின்மணி முதல்வெ றுக்கையால்
மண்டப மெண்ணில மருங்கின் நல்கினான். ......
22(காவிகண் மலர்தரு)
காவிகண் மலர்தரு கயங்க ளோர்பல
ஓவறு முற்பல வோடை யோர்பல
பூவியல் வாரிசப் பொய்கை யோர்பல
வாவிக ளோர்பல மருங்கில் ஆக்கினான். ......
23(பாசடை மரகதம்)
பாசடை மரகதம் பளிங்கு வச்சிரங்
காசறு நன்மணி கனக மன்னதால்
தேசுறு நளிமலர் செறிந்த பூந்தடம்
வாசவன் கண்டுள மருளத் தந்தனன். ......
24(கற்பகஞ் சந்தகில்)
கற்பகஞ் சந்தகில் கதலி பூகமே
பொற்புறு வருக்கைமாப் புன்னை யாதிய
பற்பல மணிகளாற் படுத்தி அன்னவை
நற்பயன் வழங்கவும் நல்கி னானரோ. ......
25(இன்னவா றளப்பில)
இன்னவா றளப்பில இமைய வர்க்கெலாம்
முன்னுறு கம்மியன் முன்னிச் செய்தலும்
பொன்னியல் இமகிரிப் புரத்து மேவிய
மன்னவன் கண்டவை மகிழ்ச்சி எய்தினான். ......
26(சீதரன் அயன்முத)
சீதரன் அயன்முதற் றேவர் மாத்தொகை
மாதவ முனிவரர் மடந்தை மாரொடு
காதலின் உமைமணங் காண வந்திடத்
தூதரை யெங்கணுந் தூண்டி னானரோ. ......
27(ஒற்றர்தம் முரை)
ஒற்றர்தம் முரைதெரிந் தும்பர் யாவருங்
குற்றமில் முனிவருங் குன்ற வில்லினால்
பற்றலர் புரமடு பரமற் போற்றியே
மற்றவன் றன்னொடு வருது மென்றனர். ......
28(வெற்றிகொள் வய)
வெற்றிகொள் வயப்புலி மிசையு யர்த்திடுங்
கொற்றவை யாமளை குழீஇய காளிகள்
சுற்றுறும் எழுநதி இமையத் தொல்கிரி
உற்றனர் தொழுதனர் உமைமுன் நண்ணினார். ......
29(செந்திரு நாமகள்)
செந்திரு நாமகள் சீர்பெ றுஞ்சசி
பந்தமில் தாபத பன்னி யாயுளார்
அந்தமில் அணங்கினர் யாரு மவ்வரை
வந்தனர் அவரவர் மகிழ்நர் ஏவலால். ......
30(பங்கய மிசைவரு பாவை)
பங்கய மிசைவரு பாவை யேமுதல்
நங்கையர் யாவரும் நற்ற வத்தினால்
அங்கநொந் துறைதரும் அம்மை தாடொழா
மங்கல வதுவையின் வனப்புச் செய்தனர். ......
31(நெறிதரு தவத்து)
நெறிதரு தவத்துரு நீக்கிக் காமருக்
குறையுள தாகிய உமைதன் மெய்யினைக்
குறைதவிர் நிலைமையிற் கோலஞ் செய்தனர்
இறைவனை வழிபடும் இயல்பி னாரென. ......
32(மேதகு பொலஞ்சுடர்)
மேதகு பொலஞ்சுடர் மேரு மந்தரம்
ஆதிய வாகிய அலகில் சுற்றமும்
ஓதருங் கடல்களும் உரக வேந்தரும்
மாதிர யானையும் பிறவும் வந்தவே. ......
33வேறு(ஈங்கிது காலை)
ஈங்கிது காலை தன்னில் இமகிரி புரக்கு மன்னன்
பாங்குறு தமர்க ளோடும் பரிவொடுஞ் சென்று வெள்ளி
ஓங்கலில் நந்தி யுய்ப்ப உயிர்க்குயி ரான அண்ணல்
பூங்கழல் வணங்கி நின்றாங் கினையன புகல லுற்றான். ......
34(ஆதியி னுலக மெல்)
ஆதியி னுலக மெல்லா மளித்திடு மன்னை தன்னைக்
காதலின் வதுவை செய்யக் கருதினை கணித நூலோர்
ஓதுபங் குனியின் திங்கள் உத்தரம் இன்றே யாகும்
ஈதுநன் முகூர்த்தம் எந்தாய் இமையமேல் வருதி யென்றான். ......
35(அல்லுறழ் கண்டத் தெந்)
அல்லுறழ் கண்டத் தெந்தை யரசனை நோக்கி யின்னே
எல்லையில் கணங்கள் சூழ இமையமேல் வருதும் முன்னஞ்
செல்லுதி யென்ற லோடுந் திருவடி வணங்கிப் போற்றி
வல்லையின் மீண்டு போய்த்தன் வளநகர் இருக்கை புக்கான். ......
36ஆகத் திருவிருத்தம் - 725