(பொருடரு மலைக்கொடி)
பொருடரு மலைக்கொடி புரியும் நோன்புகண்
டருடனை நல்கிய வாதி நாயகன்
தெருடரு கயிலையிற் சேர்வுற் றேழ்வகை
இருடிகள் தங்களை இதயத் துன்னினான். ......
1(நினைதலுங் கண்ணு)
நினைதலுங் கண்ணுதல் நிமல னேழ்பெரு
முனிவரு மன்னதை முன்னி யுள்வெரீஇப்
பனிவரு மெய்யொடு படர்ந்து வல்லையில்
அனையனை இறைஞ்சிநின் றறைதல் மேயினார். ......
2(பங்கயன் மான்முதற்)
பங்கயன் மான்முதற் பகரும் பண்ணவர்
உங்குன தேவலுக் குரிய ராயுற
எங்களை யுன்னினை யாங்கள் செய்தவம்
அங்கவர் தவத்தினு மதிகம் போலுமால். ......
3(எந்தையெம் பெரும)
எந்தையெம் பெருமநீ யெம்மை வம்மென
முந்துறு கருணையின் முன்னிற் றாதலின்
உய்ந்தனம் அடியரே முடைய தீப்பவஞ்
சிந்தினம் இனியொரு தீதுண் டாகுமோ. ......
4(ஒருதலை யைந்தொழி)
ஒருதலை யைந்தொழி லுலப்பு றாவகை
புரிதரு பகவநம் புன்மை நீக்குவான்
கருணையொ டுன்னினை கடிதிற் செய்பணி
அருளுதி யென்றனர் ஆற்றும் நோன்பினோர். ......
5வேறு(அமலனம் முனிவர்)
அமலனம் முனிவர் மாற்றங் கேட்டலு மவரை நோக்கி
இமையமே லிறைவன் றன்பா லேகியே எமக்கிவ் வைகல்
உமைதனை வதுவை நீரா லுதவுவான் வினவி வல்லே
நமதுமுன் வம்மி னென்னா நன்றருள் புரிந்தா னன்றே. ......
6(நாயக னருளக் கேளா)
நாயக னருளக் கேளா நன்றென இறைஞ்சி யேகி
ஏயதொன் முனிவர் யாரும் இமையமே லிறைமுன் நண்ண
ஆயவன் மனைவி யோடு மடைந்தெதிர் கொண்டு தாழ்ந்து
நேயமொ டருச்சித் தேத்தி நின்றிது புகலு கின்றான். ......
7(படியறு நுந்தாள் ஈண்டு)
படியறு நுந்தாள் ஈண்டுப் படுதலால் இமைய மேருத்
தடவரை யதனில் தூய்தாய்த் தலைமையும் பெற்ற தன்றே
நெடியவென் பவமு மின்னே நீங்கின நீவி ரெல்லாம்
அடியனேன் றன்பால் வந்த நிமித்தமென் னறையு மென்றான். ......
8(அங்கது வினவு மெல்)
அங்கது வினவு மெல்லை அருந்தவ ரகில மீன்ற
மங்கையை வதுவை செய்வான் மன்னுயிர்க் குயிராய் நின்ற
சங்கரன் நினைந்துன் னோடு சாற்றுதற் கெம்மை யுய்த்தான்
இங்கிதெம் வரலா றென்ன இசைவுகொண் டிறைவன் சொல்வான். ......
9(துன்னிய வுயிர்கள்)
துன்னிய வுயிர்கள் யாவுந் தொல்லுல கனைத்து மீன்ற
கன்னிகை யுமையா டன்னைக் கடிமண முறையின் நல்கி
என்னையு மடிமை யாக ஈகுவன் இறைவற் கென்ன
மன்னவன் அயலே நின்ற மனைவியீ துரைக்க லுற்றாள். ......
10(மலரயன் புதல்வன்)
மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை மணத்தின் நல்க
அலைபுனற் சடிலத் தண்ணல் அவன்றலை கொண்டான் என்பர்
நிலைமையங் கதனை யுன்னி நெஞ்சக மஞ்சு மெங்கள்
குலமகள் தனைய வற்குக் கொடுத்திட லெவனோ வென்றாள். ......
11(என்றலு மவளை)
என்றலு மவளை நோக்கி எழுமுனி வோருஞ் சொல்வார்
ஒன்றுநீ யிரங்கல் வாழி யொப்பிலா முதல்வன் செய்கை
நன்றுதேர்ந் திலையால் தக்கன் நலத்தகும் அவியை மாற்றி
அன்றுதன் இகழ்த லாலே அவன்றலை முடிவு செய்தான். ......
12(அடைந்துளோர்க் கருளு)
அடைந்துளோர்க் கருளுமாறும் அல்லவர் தமக்குத் தண்டம்
படுந்துணை தெரிந்து கூட்டும் பான்மையும் பரமன் செய்கை
மடந்தையித் தன்மை யாரும் மனப்படுத் துணர்வ ரீதே
திடம்பட வுணர்தி வேறு சிந்தனை செய்யே லென்றார். ......
13வேறு(இயலுறு முனிவோர்கள்)
இயலுறு முனிவோர்கள் இவைமொழி தலுமோரா
மயலறு வரையண்ணல் வாய்மையி தெனலோடும்
அயலுறு மனைமேனை யஞ்சினள் அமலன்றன்
செயலிது வுணராதே செப்பினன் இவையென்றே. ......
14(உண்ணலி வொடு)
உண்ணலி வொடுமேனை உவர்மல ரடிதாழூஉப்
பெண்ணறி வெவையேனும் பேதைமை வழியன்றோ
அண்ணறன் அருணீர்மை யணுவது மறிகில்லேன்
புண்ணிய முனிவீரென் புன்மொழி பொறுமென்றாள். ......
15(பணிவுட னிவைமேனை)
பணிவுட னிவைமேனை பகர்தலும் அவடன்பாற்
கணிதமி லருள்செய்யக் காவல னதுகாணா
இணைதவிர் முனிவீர்காள் இவளுரை கருதன்மின்
மணமியல் இறையோனை வரமொழி குதிரென்றான். ......
16(பனிபடு வரையண்ணல்)
பனிபடு வரையண்ணல் பகர்மொழி யதுகேளா
மனமிக மகிழ்வாகி மற்றவர் தமையங்கண்
இனிமையொ டுறநல்கி யெழுவரும் அவணீங்கித்
தனைநிகர் பிறிதில்லாத் தண்கயி லையில்வந்தார். ......
17(வந்தெழு முனிவோரும்)
வந்தெழு முனிவோரும் மாநக ரிடைசாரா
நந்திகண் முறையுய்ப்ப நாதனை நணுகுற்றே
அந்தமில் அளியோடு மவனடி தொழுதேத்தி
எந்தையை இதுகேளென் றியாவது முரைசெய்தார். ......
18(வரைமிசை யரசாள்)
வரைமிசை யரசாள்வோன் மணவினை யிசைவெல்லாம்
உரைசெய வருள்செய்தே யும்பரின் முனிகாள்நீர்
புரிதரு செயலாற்றப் போகுதி ரெனலோடும்
அரனடி தொழுதேத்தி அவர்பதம் அணுகுற்றார். ......
19வேறு(எங்குறை தீர்ந்ததென்)
எங்குறை தீர்ந்ததென் றெழுத வத்தருந்
தங்கடம் பதத்திடைத் தணப்பின் றெய்தினார்
இங்கிது நின்றிட இமைய மேலிறை
அங்கினிச் செய்தவா றறியக் கூறுவாம். ......
20ஆகத் திருவிருத்தம் - 689