(தீதறு முனிமைந்தர்)
தீதறு முனிமைந்தர் செல்லலும் அதுபோழ்தின்
மாதவ நெறிநிற்கும் மலைமக டனியன்புங்
காதலு மெனைவோர்க்குங் காட்டுத லருளாகிச்
சோதனை புரிவாரின் துண்ணென எழலுற்றான். ......
1(செறிதுவ ருடையாளன்)
செறிதுவ ருடையாளன் சிகையினன் அணிநீற்றின்
குறியினன் ஒளிர்நூலன் குண்டிகை யசைகையன்
உறைபனி கதிர்போற்று மோலையன் உயர்கோலன்
மறைபயில் முதியோர்போல் வடிவிது கொடுபோனான். ......
2(போயினன் இமைய)
போயினன் இமையத்திற் புவனமொ டுயிர்நல்குந்
தாய்தளர் வொடுநோற்குஞ் சாலையி னிடைசாரத்
தூயவ ரிவரென்றே தோகையர் கடைகாப்போ
ராயவர் பலர்வந்தே அடிதொழு துரைசெய்வார். ......
3(தளர்நடை முதியீர்)
தளர்நடை முதியீர்இத் தடவரை யிடைசேறல்
எளிதல அடிகேள்வந் தெய்திய தெவனென்ன
வளமலை யரசன்றன் மகள்புரி தவநாடற்
குளமுட னிவண்வந்தேன் உவகையி னுடனென்றான். ......
4(என்றலு மினிதென்)
என்றலு மினிதென்றே இமையவ ளிடைசில்லோர்
சென்றனர் கிழவோன்றன் செயலினை அறைகாலை
ஒன்றிய முதியோரேல் உய்க்குதிர் இவணென்ன
நின்றதொர் பெரியோனை நேரிழை முனமுய்த்தார். ......
5(உய்த்தலும் இவரெந்தை)
உய்த்தலும் இவரெந்தைக் குறுபரி வினரென்றே
பத்திமை படுபாலாற் பார்ப்பதி தொழலோடும்
மெய்த்துணை யெனநின்ற விசயையொர் தவிசிட்டு
நித்தனை உறைவித்தாள் நிமலையும் அயனின்றாள். ......
6(அப்பொழு துமை)
அப்பொழு துமைதன்னை யாதர வொடுபாராச்
செப்புத லரிதாமுன் றிருநலன் அழிவெய்த
மெய்ப்படு தசையொல்க மிகுதவ முயல்கின்றாய்
எப்பொருள் விழைவுற்றாய் எண்ணிய துரையென்றான். ......
7வேறு(முடிவி லானிவை)
முடிவி லானிவை யுரைத்தலும் விசயையை முகநோக்கிக்
கொடியி னொல்கிய நுசுப்புடை உமையவள் குறிப்பாலே
கடிதி னீங்கிவர்க் கெதிர்மொழி யீகெனக் கண்காட்ட
அடிய னேற்கிது பணித்தன ளெனஅறிந் தவள்சொல்வாள். ......
8(மன்னு யிர்க்குயி)
மன்னு யிர்க்குயி ராகிய கண்ணுதல் மணஞ்செய்து
தன்னி டத்தினி லிருத்தினன் கொள்வதே தானுன்னிக்
கன்னி மெய்த்தவ மியற்றின ளென்றுகா தலிகூற
முன்ன வர்க்குமுன் னானவன் நகைத்திவை மொழிகின்றான். ......
9(புவிய ளித்தருள்)
புவிய ளித்தருள் முதல்வரும் நாடரும் புனிதன்றான்
இவள்த வத்தினுக் கெய்துமோ எய்தினு மினையாளை
அவன்வி ருப்பொடு வரையுமோ உமையவ ளறியாமே
தவமி யற்றினள் எளியனோ சங்கரன் றனக்கம்மா. ......
10(அல்லல் பெற்றிட)
அல்லல் பெற்றிட நோற்றிடு பகுதியால் ஆம்பாலொன்
றில்லை யித்துணைப் பெறலரும் பொருளிவட் கெளிதாமோ
பல்ப கல்தன தெழில்நலம் வறிதுபட் டனவன்றோ
ஒல்லை இத்தவம் விடுவதே கடனினி உமைக்கென்றான். ......
11(இந்த வாசகங்)
இந்த வாசகங் கேட்டலு மெம்பிராற் கிவரன்பர்
அந்தண் மாமுது குரவரென் றுன்னினன் அறியேனால்
வந்து வெம்மொழி கூறுத லெனச்சின மனங்கொண்டு
நொந்து யிர்த்துநாண் நீக்கியே பொறாதுமை நுவல்கின்றாள். ......
12(முடிவிலாதுறை பகவ)
முடிவிலாதுறை பகவனென் வேட்கையை முடியாது
விடுவ னென்னினுந் தவத்தினை விடுவனோ மிகவின்னங்
கடிய நோன்பினை யளப்பில செய்துயிர் கழிப்பேன்நான்
நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீயென்றாள். ......
13(ஈட்டு மாருயிர்)
ஈட்டு மாருயிர்த் தொகையெலா மளித்தவள் இவைகூற
மீட்டு மோர்புணர்ப் புன்னியே மாதுநீ வெஃகுற்ற
நாட்ட மூன்றுடைப் பிஞ்ஞகன் வளத்தியல் நன்றாய்ந்து
கேட்டி லாய்கொலா முணர்த்துவன் அஃதெனக் கிளக்கின்றான். ......
14(ஆடை தோல்விடை)
ஆடை தோல்விடை யேறுவ தணிகல மரவென்பு
கேடில் வெண்டலை மாலிகை கேழலின் மருப்பின்ன
ஓடு கொள்கல மூண்பலி வெய்யநஞ் சுலப்புற்றோர்
காட தேநடம் புரியிடங் கண்ணுதற் கடவுட்கே. ......
15(வேய்ந்து கொள்வது)
வேய்ந்து கொள்வது வெள்ளெருக் கறுகுநீர் வியன்கொன்றை
பாந்தள் நொச்சியே மத்தமென் றினையன பலவுண்டால்
சாந்தம் வெண்பொடி சூலமான் மழுத்துடி தழலங்கை
ஏந்து கின்றது பாரிடஞ் சூழ்படை இறையோற்கே. ......
16(அன்னை தாதைகேள்)
அன்னை தாதைகேள் வடிவொடு குணங்களி லனையானுக்
கின்ன வாகிய பலவள னுண்டவை எவையுந்தாம்
நின்ன வாகவோ தவம்புரிந் தெய்த்தனை நெடுந்தொல்சீர்
மன்னன் மாமகட் கியைவதே இத்துணை வழக்கென்றான். ......
17வேறு(புரங்கண்மூன் றினை)
புரங்கண்மூன் றினையு மட்ட புங்கவன் இனைய கூற
வரங்கண்மே தகைய வெற்பின் மடமயில் கேட்ட லோடுங்
கரங்களாற் செவிகள் பொத்திக் கண்ணுதல் நாமம் போற்றி
இரங்கிவெஞ் சினத்த ளாகி இடருழந் தினைய சொல்வாள். ......
18(கேட்டியால் அந்த)
கேட்டியால் அந்தணாள கேடிலா வெம்பி ரான்றன்
மாட்டொரு சிறிது மன்பு மனத்திடை நிகழ்ந்த தில்லை
காட்டுறு புள்ளின் சூழல் கவருவான் புதன்மேற் கொண்ட
வேட்டுவன் இயல்போல் மேலோன் வேடநீ கொண்ட தன்மை. ......
19(நேசமி லாது தக்கன்)
நேசமி லாது தக்கன் நிமலனை யிழித்து நின்போற்
பேசிய திறனும் அன்னான் பெற்றதுங் கேட்டி லாயோ
ஈசனை யிங்ஙன் என்முன் இகழ்ந்தனை இந்நாள் காறும்
ஆசறு மறைக ளேது மாய்ந்திலை போலு மன்றே. ......
20(முறைபடு சுருதி)
முறைபடு சுருதி யெல்லா மொழியினும் அதுவே சார்வா
உறுகில ராகிப் பொல்லா வொழுக்கமே கொண்டு முக்கண்
இறைவனை யிகழ்ந்து முத்தி யெய்திடா துழல முன்னாள்
மறையவர் பெற்ற சாபம் நின்னையும் மயக்கு றாதோ. ......
21(தாதையாய்த் தம்மை)
தாதையாய்த் தம்மை நல்கித் தந்தொழிற் குரிய னாகி
ஆதியாய்த் தங்கட் கின்றி யமைவுறாச் சிவனை நீங்கி
ஏதிலார் பக்க மாகி இல்லொழுக் கிறந்தார் போலும்
வேதியர் முறையே செய்தாய் வெறுப்பதென் நின்னை யானே. ......
22(ஆயினும் மறையோர்)
ஆயினும் மறையோர் தம்மி னருமறை முறையே வேடம்
தூயன தாங்கி யெங்கோன் தொண்டுசெய் வோரு முண்டால்
நீயவர் தன்மைத் தாயும் நித்தனை யிகழ்ந்தா யென்னில்
தீயவ ருனைப்போ லில்லை அவுணர்தந் திறத்து மாதோ. ......
23(வேண்டுதல் வேண்டி)
வேண்டுதல் வேண்டி டாமை யில்லதோர் விமலன் றன்னை
ஈண்டுநீ யிகழ்ந்த வெல்லாம் யாரையு மளிக்கு மன்பு
பூண்டிடு குறிகாண் அற்றாற் புகழ்ச்சியா மன்றி முக்கண்
ஆண்டகை யியற்கை யெல்லா மார்கொலோ அறிய கிற்பார். ......
24(போதனே முதலா)
போதனே முதலா வுள்ள புங்கவர் வழிபட் டேத்த
வேதமி லிறைமை யாற்ற லியாவையும் புரிந்த நாதன்
காதலும் வெறுப்பு மின்றிக் கருணைசெய் நிலைமை யேகாண்
பேதைநீ யிகழ்ச்சி யேபோற் பேசிய தன்மை யெல்லாம். ......
25(இம்முறை மறைக)
இம்முறை மறைக ளாதி இசைத்தன இனைய வெல்லாஞ்
செம்மைகொ ளுணர்வின் ஆன்றோர் தெளிகுவ ரிறையை யெள்ளும்
வெம்மைகொள் குணத்தாய் நிற்கு விளம்பொணா விளம்பிற் பாவம்
பொய்ம்மறை வேடத் தோடும் போதிநீ புறத்தி லென்றாள். ......
26(அறத்தினைப் புரி)
அறத்தினைப் புரிவாள் இவ்வா றறைதலும் அணங்கே ஈங்குன்
திறத்தினி லார்வஞ் செய்து சென்றவென் செயல்கே ளாது
புறத்திடைப் போதி யென்றி புரைவதோ புகுந்த பான்மை
மறைச்சடங் கியற்றி நின்னை வரைந்திடற் காகு மென்றான். ......
27(வஞ்சக முதல்வன்)
வஞ்சக முதல்வன் சொற்ற வாசகம் இறைவி கேளா
அஞ்செவி பொத்தி யாற்றா தழுங்கிமெய் பதைப்ப விம்மி
எஞ்சலின் முதியோன் போகான் ஏகுவன் யானே யென்னாப்
பஞ்சடி சேப்ப ஆண்டோர் பாங்கரிற் படர்த லுற்றாள். ......
28(படர்ந்தனள் போத)
படர்ந்தனள் போத லோடும் பனிபடு மிமையம் வைகும்
மடந்தைதன் னியற்கை நோக்கி வரம்பிலா அருண்மீ தூர
அடைந்ததொல் பனவக்கோல மகன்றுமால் விடைமேல் கொண்டு
தொடர்ந்துபல் கணங்கள் போற்றத் தோன்றினன் றொலைவி லாதோன். ......
29(தொலைவறு பகவன்)
தொலைவறு பகவன் வான்மீத் தோன்றலுந் துளங்கி நாணி
மலைமகள் கண்டு பல்கால் வணங்கியஞ் சலியாற் போற்றி
அலகிலா வுணர்வால் எட்டா வாதிநின் மாயை தேறேன்
புலனிலாச் சிறியேன் நின்னை யிகழ்ந்தவா பொறுத்தி யென்றாள். ......
30(நற்றவ மடந்தை)
நற்றவ மடந்தை கேண்மோ நம்மிடத் தன்பால் நீமுன்
சொற்றன யாவு மீண்டே துதித்தன போலக் கொண்டாம்
குற்றமுண் டாயி னன்றே பொறுப்பது கொடிய நோன்பால்
மற்றினி வருந்தல் நாளை மணஞ்செய வருது மென்றான். ......
31(சிறந்தநின் வதுவை)
சிறந்தநின் வதுவை முற்றச் செல்லுது மென்று தொல்லோன்
மறைந்தனன் போத லோடும் மலைமக ளுள்ளந் தன்னில்
நிறைந்திடு மகிழ்ச்சி கொண்டு நித்தனை நினைந்து போற்றி
உறைந்தனள் இதனை வேந்தற் குரைத்திடச் சிலவர் போனார். ......
32(அண்ணல்வந் தரு)
அண்ணல்வந் தருளிச் செய்கை அரசனுக் குரைத்த லோடும்
உண்ணிக ழயர்ச்சி நீங்கி யொல்லைதன் னில்லி னோடு
நண்ணினன் உமையைக் கொண்டு நலங்கொள்தன் நகரத் துய்த்தான்
கண்ணுத லிறைவன் அங்கட் செய்தன கழற லுற்றேன். ......
33ஆகத் திருவிருத்தம் - 669