(இரதி இன்னணம்)
இரதி இன்னணம் வருந்திடத் தொன்மைபோல் எங்கோமான்
விரத மோனமோ டிருத்தலும் முன்னரே விறற்காமன்
கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார்
சுருதி நன்றுணர் திசைமுகன் முதலிய சுரரெல்லாம். ......
1(சிதலை மெய்த்தொகை)
சிதலை மெய்த்தொகை வன்மிகத் தெழுந்தெனச் செலக்கண்ணீர்
பதலை யொத்தன அல்லல்கூர்ந் தரற்றிடப் பகுவாய்கள்
விதலை பெற்றுமெய் வியர்ப்புற வுளநனி விதிர்ப்பெய்த
மதலை யிற்றுழி நாய்கர்போல் துயர்க்கடல் மறிகின்றார். ......
2(மையு லாவரு கறை)
மையு லாவரு கறைமிடற் றிறையவன் மருங்காக
எய்யும் மாரனை விடுத்தனம் அவனையு மிறச்செய்தான்
பொய்யி றன்னிலை தவிர்ந்திலன் தொன்மையே போலுற்றான்
ஐய கோவினிச் செய்வதென் னோவெனா அயர்கின்றார். ......
3(புத்த ருங்கணை மார)
பூத்த ருங்கணை மாரனை விழியினாற் பொடிசெய்த
ஆத்த னாற்றலைப் புணர்ப்பினால் நீக்குவ தரிதன்னான்
காத்து நந்துயர் அகற்றிட வேண்டுமேற் கடிதேயாம்
ஏத்தல் செய்வதே கடனென யாவரு மிசைவுற்றார். ......
4(எகின மூர்பவன்)
எகின மூர்பவன் முதலிய கடவுள ரெல்லோரும்
அகன மர்ந்திவை யிசைந்துதொல் கயிலையி னகநாப்பட்
புகல தாயபொன் னகரிடைக் கோபுரப் புறனேகித்
தொகுதி யோடெம திறைவனை ஒல்லெனத் துதிக்கின்றார். ......
5(நஞ்ச ருந்தியும் நதி)
நஞ்ச ருந்தியும் நதியினைச் சூடியும் நடுநெற்றித்
துஞ்சும் வெங்கனல் பரித்தும்வெவ் வலியரைத் தொலைத்திட்டும்
அஞ்ச லென்றுமுற் காத்தனை இன்றெமக் கருளாயேல்
தஞ்ச மாருளர் தாதையே யல்லது*
1 தனயர்க்கே. ......
6(கோளில் அன்பர்கள்)
கோளில் அன்பர்கள் இழுக்கிய புரியினுங் குணனாக்கொண்
டாளு மெம்பிரான் நின்னடி அரணமென் றடைந்தேங்கண்
நாளும் வெந்திறற் சூரபன் மாவினால் நலிவெய்தி
மாளு கின்றதோ சிறிதுமெம் முறுதுயர் மதியாயோ. ......
7(தைய லைப்பிரீ)
தைய லைப்பிரீஇ யோகியல் காட்டிடு தனிச்செய்கை
ஐய நிற்கிதோ ரிறைவரை யாகுமால் அதுகாலை
நையு மெங்களுக் குகம்பல சென்றன நாமெல்லாம்
உய்வ தெப்படி இன்னுநீ புறக்கணித் துறுவாயேல். ......
8(நோற்று மாயவன்)
நோற்று மாயவன் முதலினோர் யாவரும் நுனதாளைப்
போற்றி யர்ச்சனை புரியவித் திருவெலாம் புரிந்துற்றாய்
தோற்ற மின்றியே ஐந்தொழி லியற்றிய தொல்லோய்நீ
ஆற்று கின்றதோர் தவநிலை எம்பொருட் டளவன்றோ. ......
9(எய்த்தி டுஞ்சிறி)
எய்த்தி டுஞ்சிறி யேங்களைத் தவறுகூ ரிடர்வாளால்
நித்த லுந்துணித் தீருதி செய்வினை நெறிநேடி
அத்த இங்கினிக் காத்தரு ளல்லதேல் அடுவல்லே
சித்த மென்னுனக் கன்னவா றொன்றினைச் செய்வாயே. ......
10(கங்கை வேணியாய்)
கங்கை வேணியாய் அம்மையை மணந்தெமைக் கடிகொள்ளத்
திங்கள் வெண்குடை மதனனை விடுத்தனந் தெளிவில்லேம்
அங்க வன்புரம் பொடித்தனை முன்புபோ லமர்ந்துற்றாய்
இங்கி யாந்தளர் கின்றதே இனிச்சிறி திரங்காயோ. ......
11(ஆர ழற்சின வயப்புலி)
ஆர ழற்சின வயப்புலி முதலிய அடன்மாவின்
பேரு ரித்திறந் தரித்தனை சிறுவிதி பெருவேள்வி
வீர னைக்கொடு தடிந்தனை அஃதென மிகவெய்ய
சூர பன்மனைத் தொலைவுசெய் தெந்துயர் தொலைக்கென்றார். ......
12(முரற்கொள் வண்டு)
முரற்கொள் வண்டுசூழ் சததளப் பண்ணவன் முதலோர்கள்
உருக்க ரக்கென மெய்தளர்ந் திவ்வகை யுளநொந்தே
அரற்றி யேத்தலும் அவர்பவ முடிவதற் கணித்தாக
இரக்க மாய்அரு ணந்தியை நினைந்தனன் இறையோனே. ......
13(எந்தை நந்தியை)
எந்தை நந்தியை உன்னலு மவனறிந் திறைவன்முன்
வந்து வந்தனை செய்துகை தொழுதலும் மறைமேலோன்
கந்த மாமலர்க் கடவுளா தியர்தமைக் கடிதெம்முன்
தந்தி டென்றனன் நன்றென முதற்கடை தனில்வந்தான். ......
14(கணங்கள் காப்புறு)
கணங்கள் காப்புறு முதற்கடை குறுகலுங் கண்டேத்தித்
தணங்கொள் பங்கயன் வாசவன் விண்ணவர் தாமெல்லாம்
வணங்க எம்பிரான் உமைத்தரு கென்றனன் வறிதேனும்
அணங்கு கொள்ளலீர் வம்மினோ நீவிரென் றருள்செய்தான். ......
15(சீர்த்த நந்திவந் திவ்)
சீர்த்த நந்திவந் திவ்வகை யுரைத்தசொற் செவிதோறும்
வார்த்த பேரமு தாதலும் உவகையின் மதர்ப்பாகிப்
பேர்த்தொர் மாற்றமு முரைத்திலர் பிரமனே முதற்றேவர்
ஆர்த்து நாதனைப் பாடினர் ஆடினர் அலமந்தார். ......
16(பெரிது நோயுழந் தருள்)
பெரிது நோயுழந் தருள்பவர் இன்றியே பெருங்காலம்
நிரய முற்றுளோர் தங்களை எடுத்திடும் நிலைத்தன்றோ
அருளின் நீர்மையா லுமையரன் விளித்தனன் அனைவீரும்
வருதி ரென்றசொற் பங்கயன் முதலிய வானோர்க்கே. ......
17(செய்ய லாவதொன்)
செய்ய லாவதொன் றின்றியே மகிழ்ச்சியிற் றிளைத்தோராய்
மைய லாகிய பண்ணவர் தங்களை வல்லேகொண்
டையன் முன்னுற வுய்த்தனன் இருவகை யறத்தோரும்
உய்ய வெஞ்சம னுடைதரப் புவியினி லுதிக்கின்றோன். ......
18வேறு(வண்டுளர் கமலமேல்)
வண்டுளர் கமலமேல் மதலை வாசவன்
அண்டர்க ளனைவரும் அன்பொ டேகியே
பண்டுயிர் முழுதருள் பரனைக் கண்களாற்
கண்டனர் வழுத்தினர் கரங்கள் கூப்பினார். ......
19(விண்மதி படர்சடை)
விண்மதி படர்சடை வேத கீதனை
அண்மினர் வணங்கினர் அரிமுன் ஆற்றிய
உண்மகிழ் பூசனை யொப்பப் போதநீர்
கண்மல ரதனொடு கழல்கள் சேரவே. ......
20(வணங்கிய பண்ணவர்)
வணங்கிய பண்ணவர் வல்ல வல்லவா
பணங்கிளர் அரவரைப் பரமற் போற்றலும்
உணங்கிய சிந்தையீர் உமது வேண்டலும்
அணங்குறு நிலைமையும் அறைமி னென்னவே. ......
21(பேருக மளப்பில)
பேருக மளப்பில பெயர்த லின்றியே
சூரன தாணையில் துயர்ப்பட் டாழ்ந்தனங்
காருறழ் கந்தரக் கடவுள் நீயலா
தாருளர் அடியரேம் அலக்கண் நீக்குவார். ......
22(ஆயவெஞ் சூரன)
ஆயவெஞ் சூரன தாவி நீக்கவோர்
சேயினை யருளுவான் சிமைய மாகிய
மீயுயர் வரையிடை மேவி நோற்றிடும்
மாயையின் முதல்வியை மணத்தல் வேண்டுநீ. ......
23(என்றிவை கூறியே யாரு)
என்றிவை கூறியே யாரு மெம்பிரான்
மன்றலந் தாள்மலர் வணங்கிப் போற்றலும்
மின்றிகழ் பசுங்கதிர் மிலைச்சும் வேணியான்
நன்றென இசைந்திவை நவிறல் மேயினான். ......
24(புங்கவர் யாவரும்)
புங்கவர் யாவரும் பொருமல் கொள்ளலீர்
உங்கடம் பொருட்டிலவ் வோங்கல் வைகிய
மங்கையை மணந்துநும் வருத்தம் நீக்குதும்
இங்கினி யாவரு மேகு கென்றனன். ......
25(முழுதுணர் பரனிது)
முழுதுணர் பரனிது மொழியப் போதனுஞ்
செழுமையில் பொன்னகர்த் தேவும் யாவருந்
தொழுதனர் விடைகொடு துயரஞ் சிந்தியே
விழுமிய மேருவின் மிசைக்கண் ஏகினார். ......
26வேறு(அன்னார் விடை)
அன்னார் விடைகொண் டேகியபின்
அதுகண் டிரதி யெம்பெருமான்
முன்னா விறைஞ்சிப்*
2 போற்றிசெய்து
முறையோ முறையோ இறையோனே
பொன்னார் கமலத் தயன்முதலோர்
புணர்ப்பா லெங்கோன் போந்திங்கே
உன்னால் முடிந்தான் அவன்பிழையை
உளங்கொ ளாமல் அருளென்றாள். ......
27வேறு(இனைய கூறினள்)
இனைய கூறினள் இரதிவேண் டிடுதலும் இணைதீர்ந்த
புனிதன் நல்லரு ளெய்தியே மங்கைநீ புலம்பாய்கேள்
வனைக ருங்குழற் கவுரியை மேவியாம் வரைபோதில்
உனது கேள்வனை அளிக்குதும் போதியென் றுரைசெய்தான். ......
28(தன்னை யேதன)
தன்னை யேதனக் கொப்பவன் இரதியைத் தளரேலென்
றின்ன வாறருள் செய்தலும் மகிழ்ந்தடி இறைஞ்சிப்போய்ப்
பொன்னின் மாலிமை யக்கிரி புகுந்தொரு புடையுற்றாள்
வன்ன மாமுகில் வரவுபார்த் துறைதரு மயிலேபோல். ......
29வேறு(தமியளாய் இரதி)
தமியளாய் இரதிபோய்த் தானங் குற்றிட
அமரர்க ளாயுளா ரரந்தை தீர்க்கவும்
இமையமால் வரைமிசை யிருந்து நோற்றிடும்
உமைதனை மணப்பவும் முதல்வன் உன்னினான். ......
30(மனந்தனி லித்திறம்)
மனந்தனி லித்திறம் மதித்து வானதி
புனைந்தவன் சனகனென் றுரைக்கும் புங்கவன்
சனந்தனன் சனாதனன் சனற்கு மாரனாம்
இனந்தரு முனிவரை இனிது நோக்கினான். ......
31(நன்னல மைந்தர்காள்)
நன்னல மைந்தர்காள் ஞான போதகஞ்
சொன்னடை யன்றது துயர நீங்கியே
இந்நிலை மோனமோ டிருந்து நந்தமை
உன்னுத லேயென உணர வோதினான். ......
32(கட்படும் இமைத்து)
கட்படும் இமைத்துணை காட்சி யோகினை
நுட்பம தாகவே நுதலிக் காட்டினோன்
ஒட்பமொ டிவ்வகை உரைப்ப வாற்றவுந்
தெட்பம தடைந்தனர் விதியின் சேயினோர். ......
33(அந்தநல் வேலையில்)
அந்தநல் வேலையில் ஆற்றும் நோன்பினோர்
சிந்தைகொ ளன்பொடு சிவன்பொற் றாள்முறை
வந்தனை செய்துநம் மருட்கை நீங்கியே
உய்ந்தனம் யாமென உரைத்துப் போற்றினார். ......
34(போற்றலு மத்து)
போற்றலு மத்துணைப் புனிதன் இன்னினி
ஏற்றிடு நிட்டையி லிருந்து வீடுறீஇ
மேற்றிகழ் எம்பத மேவு வீரெனாச்
சாற்றினன் விடுத்தனன் தவத்தி னோர்தமை. ......
35ஆகத் திருவிருத்தம் - 636