Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

previous padalam   4 - காமதகனப் படலம்   next padalamkAmadhaganap padalam

Ms Revathi Sankaran (4.21mb)
(1 - 53)Ms Revathi Sankaran (6.48mb)
(54 - 110)
(இந்திரன் வானவர்)

இந்திரன் வானவர் ஈட்டமொ டேகி
     முந்துறு கஞ்ச முகட்டிடை யுற்றோன்
          ஐந்திற னாகிய ஆசுக வில்வேள்
               வந்திடு மாறு மனத்தில் நினைந்தான். ......    1

(நினைந்திடு கின்று)

நினைந்திடு கின்றுழி நீனிற மாயோன்
     முனந்தரு கின்ற முரண்டகு வில்வேள்
          மனந்தனில் உன்னும் மலர்ப்பக வன்முன்
               இனந்தரு சூழலொ டிம்மென வந்தான். ......    2

(மாமறை யண்ணல்)

மாமறை யண்ணல்முன் வந்து பராவித்
     தாமரை நேர்தரு தாடொழு தென்னை
          நீமன மீது நினைந்ததெ னென்னாக்
               காமன் வினாவ அயன்கழ றுற்றான். ......    3

(கங்கை மிலைச்சிய)

கங்கை மிலைச்சிய கண்ணுதல் வெற்பின்
     மங்கையை மேவநின் வாளிக டூவி
          அங்குறை மோனம் அகற்றினை யின்னே
               எங்கள் பொருட்டினில் ஏகுதி யென்றான். ......    4

(வேதனிவ் வாறு)

வேதனிவ் வாறு விளம்பிய கூற்றாந்
     தீதுறு பொங்கழல் செய்யவள் சேயோன்
          காதிடை யேநெறி யாக்கடி திற்போய்
               ஏதமி லுள்ள மெரித்ததை யன்றே. ......    5

(கிட்டி யரன்செயல்)

கிட்டி யரன்செயல் கேடுசெ யென்னுங்
     கட்டுரை யேவரு காமனு ளெங்குஞ்
          சுட்ட தெனிற்பிறை சூடிய வன்மெய்
               அட்டிடு கின்றதும் அற்புத மாமோ. ......    6

(இத்திற மாமல)

இத்திற மாமல ரேந்தல் இயம்பக்
     கைத்துணை கொண்டிரு கன்னமும் வல்லே
          பொத்தியி னைந்து புராந்தகன் நாமஞ்
               சித்தச வேளுரை செய்தன னம்மா. ......    7

(ஈட்டுறு பல்பவ)

ஈட்டுறு பல்பவ மெய்துவ தோர்சொற்
     கேட்டன னென்று கிலேசம தாகி
          வாட்டிய மென்மலர் போல்அணி மாழ்கிப்
               பூட்டுவில் அண்ணல் புகன்றிடு கின்றான். ......    8

வேறு

(வன்கண் ணருமா)

வன்கண் ணருமா சறுகாட் சியர்பால்
     நன்கண் ணுறினுய் யுநலம் புகல்வார்
          உன்கண் ணுறின்இத் தவறோ தினையால்
               என்கண் ணடிகட் கிலையோ அருளே. ......    9

(வன்னப் புவிமங்கை)

வன்னப் புவிமங் கையைமா மலர்மேற்
     பொன்னைப் பிறரைப் புணர்வுற் றிடுவான்
          கன்னற் சிலைபூங் கணைகொண் டமர்செய்
               தென்னத் தனைவென் றிசைகொண் டிலனோ. ......    10

(வெள்ளைக் கமலத்)

வெள்ளைக் கமலத் தியைமெய் யுறவுந்
     தெள்ளுற் றணிசெய் ததிலோத் தமைபால்
          உள்ளப் புணர்வுற் றிடவும் முனையான்
               பிள்ளைச் சமர்செய் திசைபெற் றிலனோ. ......    11

(சீர்பெற் றிடுசெந்தி)

சீர்பெற் றிடுசெந் திருவைத் திருமால்
     மார்பிற் குடியா யுறவைத் திலனோ
          கார்பெற் றவிழிக் கலைமங் கையையுன்
               ஏர்பெற் றிடுநா விலிருத் திலனோ. ......    12

(தண்ணின் றகுழ)

தண்ணின் றகுழற் சசியென் றுரைசெய்
     பெண்ணின் றலையுற் றிடுபெற் றியலால்
          விண்ணின் தலைவற் குளமெய்ம் முழுதுங்
               கண்ணென் றிடுபல் குறிகண் டிலனோ. ......    13

(விசையுற் றிடுசெங்)

விசையுற் றிடுசெங் கதிர்மே லவர்கீழ்த்
     திசையுற் றவராங் கொருசே யிழைபோல்
          இசையுற் றிடுபா கனிடைப் புணரா
               வசையுற் றிடுபான் மைமயக் கிலனோ. ......    14

(கதனத் தொடுவந்து)

கதனத் தொடுவந் துகலந் தவர்பால்
     இதநட் புறுமா மதியென் கணையால்
          மதனத் தொடுதே சிகன்மா தையுறாப்
               புதனைத் தருபான் மைபுணர்த் திலனோ. ......    15

(முற்றே தின்மறை)

முற்றே தின்மறைத் தொகைமூ தறிவால்
     கற்றே துமுணர்ந் திடுகாட் சிபெறு
          நற்றே வர்கள்யா ரையுநா ரியர்தங்
               குற்றே வல்செயும் படிகூட் டிலனோ. ......    16

(மறைதே ரும்வசி)

மறைதே ரும்வசிட் டன்மரீ சிமிகக்
     குறிதா முனியத் திரிகோ தமன்நல்
          அறிவால் உயர்கா சிபனா தியராந்
               துறவோர் தமதாற் றல்தொலைத் திலனோ. ......    17

(மன்னான் மரபு)

மன்னான் மரபுற் றிடுமா னவரைப்
     பின்னா கியமும் மைகொள்பே தகரை
          மின்னார் கண்மயக் கினில்வீட் டிலனோ
               என்னா ணைகடந் தவர்யா ருளரே. ......    18

(அறைபெற் றிடுமி)

அறைபெற் றிடுமித் திறமா னவெலாம்
     முறைபெற் றிடுமென் னின்முடிந் திடுமோ
          பிறைபெற் றிடுகின் றபெருஞ் சடையெம்
               மிறைபெற் றிடுசத் தியியற் றிடுமே. ......    19

(மாலே முதலா கிய)

மாலே முதலா கியவா னவர்தம்
     பாலே அடல்வா கைபடைப் பதலால்
          மேலே நதிசூ டியமே லவன்மேற்
               கோலே வினன்வென் றிடல்கூ டுமதோ. ......    20

(ஐதா கியசீர் கொட)

ஐதா கியசீர் கொடவன் முறைசெய்
     நொய்தா னவர்போ லநுவன் றனையால்
          வெய்தா மழலா கியமே லவன்மேல்
               எய்தா லுமென்வா ளிகளெய் திடுமோ. ......    21

(கையுந் நகையுங் கதி)

கையுந் நகையுங் கதிரார் விழியும்
     மெய்யுந் தழலாம் விமலன் றனையான்
          எய்யும் படிசென் றிடினிவ் வுயிர்கொண்
               டுய்யுந் திறமும் உளதோ உரையாய். ......    22

(பற்றோ டிகலற்ற)

பற்றோ டிகலற் றபரம் பொருளை
     எற்றோ மயல்செய் குவதீ சனையும்
          மற்றோ ரெனநின் னின்மதித் தனையால்
               சற்றோ அவனாற் றல்தவிர்த் திடவே. ......    23

(சூறா வளிவை)

சூறா வளிவை கியசூ ழலின்வாய்
     ஏறா வொருபூ ளையெதிர்ந் துளதேல்
          நீறா டியமெய் யுடைநின் மலன்மேல்
               வீறாய் வினையேன் பொரமே வுவனே. ......    24

(ஆறுற் றிடுசெஞ் சடை)

ஆறுற் றிடுசெஞ் சடையண் ணலுடன்
     மாறுற் றவருண் டெனின்மற் றவர்தாம்
          ஊறுற் றனரல் லதுளத் துயர்கொண்
               டீறுற் றனரல் லதிருந் துளர்யார். ......    25

(இந்நா ரணனா )

இந்நா ரணனா தியர்யா வர்களும்
     அந்நா ளமலன் பணியாற் றிடலும்
          உன்னா வவர்சிந் தனைமொய்ந் நகையால்
               ஒன்னார் புரமட் டதுணர்ந் திலையோ. ......    26

(எந்தாய் அருளென்)

எந்தாய் அருளென் றொரிளங் குமரன்
     வந்தா தியையேத் தலும்வை துசினக்
          கொந்தா ரழல்போல் வருகூற் றுவனை
               அத்தாள் கொடுதைத் ததறிந் திலையோ. ......    27

(முன்னைப் பகல்ந)

முன்னைப் பகல்நீ யுமுகுந் தனுமாய்ப்
     பன்னகற் கரிதா யபரம் பொருள்யாம்
          என்னச் சிவனெய் தியிகழ்ந் தவுனைச்
               சென்னித் தலைகொண் டதுதேர் கிலையோ. ......    28

(அடன்மே வுசல)

அடன்மே வுசலந் தரனா தியராய்ப்
     படிமே லுளதோர் பஃறா னவர்தாம்
          முடிவார் அரனோ டுமுரண் டிடலுங்
               கெடுமா றுபுணர்த் ததுகேட் டிலையோ. ......    29

(வீடெய் துறுநின்)

வீடெய் துறுநின் மகன்வேள் விநிலத்
     தூடெய் தினர்யா வருமொப் பில்அரன்
          மாடெய் தியவீ ரனின்மா னமொரீஇப்
               பாடெய் தியபுன் செயல்பார்த் திலையோ. ......    30

(அண்டா தவகந்தை)

அண்டா தவகந் தையொடா ழியின்வாய்
     விண்டா னவரச் சுறமே வுவிடம்
          உண்டான் நிகழ்கங் கையையோ ரணுவிற்
               கொண்டான் அவன்வன் மைகுறிக் கிலையோ. ......    31

(தரியா வுளமால்)

தரியா வுளமால் கொடுதன் னிகழும்
     அரியோ டுகைம்மா வையடற் புலியை
          உரியா மிசைபோர் வையுடுக் கையெனப்
               பரியா அரனுற் றதுபார்த் திலையோ. ......    32

(ஓரார் தனதுண்மை)

ஓரார் தனதுண் மையையுள் ளமிசை
     யாரா யினுமாற் றவகந் தைபெறின்
          வாரா அவர்தம் வலிமாற் றிடுமால்
               தேராய் கொல்பரஞ் சுடர்செய் கையதே. ......    33

(இறுகின் றகடை)

இறுகின் றகடைப் பகலீ றிலதோர்
     கறைதுன் றுமிடற் றிறைகண் ணினும்வீழ்
          பொறியொன் றதனாற் பொடிபட் டிடுநீ
               அறிகின் றிலையோ அகிலங் களுமே. ......    34

(இப்பெற் றியனா)

இப்பெற் றியனா கியவீ சனையென்
     கைப்பற் றியவிற் கொடுகந் தமலர்
          அப்பிற் பொருகின் றிலன்ஆ ருயிர்மேல்
               மெய்ப்பற் றிலரிச் செயல்வேண் டுவரே. ......    35

(மேனா ளகிலந் தர)

மேனா ளகிலந் தரமெல் லியலா
     ஆனா வருடன் னையளித் தொருபால்
          தானா கவிருத் தியதற் பரனை
               நானா மயல்செய் வதுநன் றிதுவே. ......    36

வேறு

(என்னா மதவேள்)

என்னா மதவேள் இசையா மறுத்திடலும்
     பொன்னார் கமலப் பொகுட்டுத் தலைவந்த
          மன்னான வேதா மனக்கவலை கொண்டுசில்போ
               துன்னா நெடிதே உயிரா வுரைக்கின்றான். ......    37

(வெண்மை யறிவால்)

வெண்மை யறிவால் தமைவியக்கும் விண்ணவர்பால்
     அண்மை யிலனாகும் அண்ணலியல் கூறினையால்
          உண்மை யிதுவாம் உவனைப் பொருவதுவும்
               எண்மை யதுவோ எவர்க்கு மரிதன்றோ. ......    38

(அன்ன பரிசே யெனி)

அன்ன பரிசே யெனினும் அடைந்தோர்தம்
     இன்ன லகற்று மிறையருளால் இக்கருமம்
          முன்னின் முடியும் ஒழிந்தோரால் முற்றுவதோ
               முன்னின் இதற்கு முதற்கா ரணம்நீகாண். ......    39

(எல்லார் செயலும்)

எல்லார் செயலும் இறைவன் இயற்றுவதே
     அல்லா திலையோ ரணுவுமசை யாதெவையும்
          நில்லா தருளின்றேல் நீயின் றவன்பாலிற்
               செல்லாய் உனது செயலுமவன் செய்கையதே. ......    40

(செம்மாந்து தற்புகழு)

செம்மாந்து தற்புகழுந் தேவர்குழு வும்மருள
     எம்மான் பிறன்போ லிருந்தோர் துரும்புநிறீஇ
          அம்மாதன் செய்கை யனைத்துமெனக் காட்டினனே
               நம்மாலும் முற்றுஞ் சிலவென்கை நாணன்றோ. ......    41

(பாடு திகழ்பாவை)

பாடு திகழ்பாவை பல்லுயிரு மல்லனவும்
     ஆடல்புரி விப்பான் அருவுருவாய் நின்றபரன்
          நாடில் அவனையின்றி நம்மாலொன் றாகவற்றோ
               ஏட இதனிலைமை இந்நாளு மோர்ந்திலையோ. ......    42

(கையம்பு பூட்டி)

கையம்பு பூட்டிக் கருப்புச் சிலைகோட்டி
     எய்யும் படிவழிக் கொண்டேகாய் இறுதியிலா
          ஐயன் றனைநீ யதுவும் அவனருள்காண்
               மெய்யங் கதற்கேது மேனாளே கண்டனம்யாம். ......    43

(ஈங்கிதுவு மன்றி)

ஈங்கிதுவு மன்றி யெவரேனுந் தம்மடங்காத்
     தீங்கு பெறினுதவி செய்யென் றிரந்திடலும்
          ஆங்கொருவன் செய்யா ததுமறுத்துத் தன்னுயிரைத்
               தாங்கல் உலக நடைதனக்குத் தக்கதுவோ. ......    44

(என்னானு மோரு)

என்னானு மோருதவி யாதொருவன் யார்க்கெனினுந்
     தன்னால் முடிவதெனில் தானே முடித்தல்தலை
          சொன்னால் முடித்த லிடையாகுஞ் சொல்லுகினும்
               பன்னாள் மறுத்துப் புரிதல்கடைப் பான்மையதே. ......    45

(ஏவ ரெனினும்)

ஏவ ரெனினும் இடருற் றனராகி
     ஓவில் குறையொன் றுளரே லதுமுடித்தற்
          காவி விடினும் அறனே மறுத்துளரேற்
               பாவம் அலது பழியும் ஒழியாதே. ......    46

(உய்கை பொருளா)

உய்கை பொருளா வொருவர்க்கு மோருதவி
     செய்கை யிலனேற் சிறியோன் கழித்தபகல்
          வைகல் அதுவோ வறிதே அவன்வாழ்க்கை
               பொய்கை மலர்ந்தகொட்டி போலும் பொலிந்துளதே. ......    47

(அந்நா ரணனோ)

அந்நா ரணனோ டமர்முற் றியமுனியைப்
     பொன்னா டருளும் புலவோ ரிறையிரப்ப
          வென்னாரு மென்பு விருத்திரனுக் காவுதவித்
               தன்னா ருயிர்விட்ட தன்மைதனைக் கேட்டிலையோ. ......    48

(மேலொன் றுளதோ)

மேலொன் றுளதோ விளம்ப எவரெவர்க்கும்
     மூலந் தலைதெரியா முன்னோன் கடலெழுந்த
          ஆலந் தனையுண் டமரர்க் கமுதளித்த
               சீலந் தனைநீ சிறிதுந் தெளிந்திலையோ. ......    49

(தேக்குஞ் சலதி)

தேக்குஞ் சலதியிடைத் தீப்போ லெழுந்தவிடந்
     தாக்கும் பொழுது தளரே லெனவுரையா
          ஊக்கங் கொடுமா லொருகணநின் றேநம்மைக்
               காக்கும் படிக்குக் கறுத்தசெயல் கண்டிலையோ. ......    50

(ஆரா யினுமொருவர்)

ஆரா யினுமொருவர் அன்பிற் றலைப்பட்டுப்
     பேரா தரத்தாற் பிறர்க்குதவி செய்வாரேல்
          தீராத வெந்துயரிற் சேர்தலே மாய்தலிவை
               பாரார் புகழே பயனென்று கொள்வாரே. ......    51

(சூரந் தனில்வலிசேர்)

சூரந் தனில்வலிசேர் சூரபன்மன் ஏவலின்யாம்
     ஆருந் துயர்கொண் டழுங்கினோம் அன்னதினித்
          தீரும் படிக்குச் சிவனொருசே யைத்தருவான்
               ஓரைம் படைசெலுத்த உன்னையாம் வேண்டினமே. ......    52

(ஆதலினால் எங்கள்)

ஆதலினால் எங்கள் அலக்கணகற் றும்பொருட்டுச்
     சாதல் வரினுந் தவறோ புகழ்செய்வார்
          ஏது வரினு மெதிர்செல்வார் எம்பணியிற்
               போதி யினிமாறு புகலே லெனவுரைத்தான். ......    53

வேறு

(பங்க யப்பொ குட்டி)

பங்க யப்பொ குட்டி ருந்த பகவன் ஈது புகறலும்
     ஐங்க ணைக்க ரத்தி னோன ரந்தை யெய்தி யாதியாம்
          புங்க வற்கு மாறு கொண்டு பொருகி லேன்இ தன்றியே
               இங்கெ னக்க டுத்த தொன்றி யம்பு செய்வல் என்றனன். ......    54

(என்னும் வேலை அமர)

என்னும் வேலை அமர ரோடி ருந்த வேதன் முனிவுறா
     நன்ன யந்த ழீஇயு ரைத்த நமது சொன்ம றுத்தியால்
          அன்ன பான்மை புரியின் உய்தி அல்ல தேலு னக்கியாம்
               துன்னு சாப மிடுதும் யாது துணிவு சொல்லு கென்றனன். ......    55

(வெய்ய சாப மிடுது)

வெய்ய சாப மிடுது மென்று வெகுளி யால்மொ ழிந்தகேட்
     டைய மேனி மதன வேள் அழுங்கி வெய்து யிர்த்தினிச்
          செய்ய லாவ தென்னெ னத்தெ ரிந்து சிந்தை தேற்றியே
               வைய கம்ப டைத்த அண்ணல் வதன நோக்கி யுரைசெய்வான். ......    56

(கேளி தொன்று)

கேளி தொன்று ரைப்பல் வேத கேடு சூழும் நினதுவாய்ச்
     சூளின் மேலை யியல்ப கன்று துன்பு ழந்து படுதலிற்
          காள கண்டன் முன்பு சென்று கடிய வெய்ய கணைகடூஉய்
               மாளி னுஞ்சி றந்த தம்ம மற்றும் உய்ய லாகுமே. ......    57

(செற்ற நீர்மை கொள்)

செற்ற நீர்மை கொள்ளல் ஐய செஞ்ச டைப்பி ரானிடத்
     திற்றை வைகல் அமரி யற்ற ஏகு வேனி யானெனக்
          கொற்ற வேளு ரைத்த லுங்கு ளிர்ந்த பூவி ருக்கைமேல்
               உற்ற போதன் மகிழ்சி றந்து ளங்க ளித்து மொழிகுவான். ......    58

(பணிந்த சொல்ல)

பணிந்த சொல்ல னாகி நாம்ப ணித்த வாபு ரிந்திடத்
     துணிந்த வாறு நன்று நன்று சூலி பாலி னுனைவிடாத்
          தணந்தி டேந்தொ டர்ந்து பின்பு சார்து மஞ்சல் போகெனா
               உணர்ந்து கூறி மார வேளை ஓவி லன்பொ டேவினான். ......    59

(ஏவு காலை மதனை)

ஏவு காலை மதனை வேள்வி யிறைதெ ரிந்து மைந்தயான்
     தேவ ரோடு துயரு ழந்து சிறுமை பெற்ற தறிதியே
          ஓவில் வாழ்வு தருதி யென்னின் உமைம டந்தை தனையரன்
               மேவு மாறு புரிகெ னாவி ரைந்து செல்ல நல்கினான். ......    60

(நல்க லுங்க ரங்கள்)

நல்க லுங்க ரங்கள் கூப்பி நான்மு கத்தன் உலகொரீஇ
     அல்கு தன்பு ரத்து நண்ணி அவ்வி யற்கை கூறியே
          ஒல்கு தேவி யைத்தெ ளித்தொ ருப்ப டுத்தி நறியதேன்
               பில்கு வாளி யிட்ட தூணி பின்னி யாத்தி றுக்கினான். ......    61

(கயக்க ணின்ற பூவின்)

கயக்க ணின்ற பூவின் மிக்க காம காண்டங் கன்னல்வில்
     இயக்க மான பார வில்லெ டுத்து மொய்மபி லேந்தியே
          தயக்க முற்று லாய செய்ய தண்ணென் மாவி ளந்தளிர்
               வயக்க டுங்கண் வாள மொன்று மாம ருங்கு வைத்தரோ. ......    62

(கோகி லங்க ளான)

கோகி லங்க ளான வுங்கு ழாங்கொள் வேலை யானவுங்
     காக ளங்கண் முரச மாய்க்க றங்க ஓதம் யாவதுஞ்
          சீக ரங்க ளாய சைந்து செல்ல மீன கேதன
               மாக வும்ப ருலவ வெண்ம திக்கு டைநி ழற்றவே. ......    63

(பொருவில் கிள்ளை)

பொருவில் கிள்ளை யென்னு மாக்கள் பூண்ட தென்றல் வையமேல்
     இரதி யோடு மேறி வேளி ருந்த தொல்லை யுலகினை
          அரித கன்று குறிகள் வெய்ய அளவை யின்றி நிகழவே
               பரமன் வைகு கயிலை யம்ப ருப்ப தத்தை யணுகினான். ......    64

(கயிலை கண்டு தொழு)

கயிலை கண்டு தொழுது தேரி ழிந்து காம வேள்தனக்
     கயலில் வந்த பரிச னத்தை அவண்நி றுத்தி மாதுடன்
          பயிலும் வில்லும் வாளி யும்ப ரித்து வல்லி யத்தினைத்
               துயிலூ ணர்த்தும் மான்எ னத்து ணிந்து போதல் மேயினான். ......    65

(கூறு லாவு மதி)

கூறு லாவு மதிமி லைந்த குழகன் வைகு கயிலைமேல்
     ஏறி யேத னாது கையி ருந்த கார்மு கம்வளைஇ
          மாறில் ஏவு பூட்டி யங்கண் வைகு புள்ளும் மாக்களும்
               ஊறி லாதி ருந்த காம முன்னு வித்தல் முன்னினான். ......    66

(பொருலில் காமனின்)

பொருலில் காம னின்ன தன்மை புந்தி கொண்டு மற்றவண்
     விரவு புள்ளின் மீதி னும்வி லங்கின் மீதி னும்மலர்ச்
          சரமெ லாம்வி டுப்ப வாதி தனது மந்தி ரத்துமுன்
               அருளி னோடி ருந்த நந்தி யடிகள் அன்ன கண்டரோ. ......    67

(கொம்மெ னச்சி னம்பு)

கொம்மெ னச்சி னம்பு ரிந்து கொடிய பூசல் மதனனார்
     தம்மி யற்கை யாமி தம்ம சரத மென்று நினைவுறா
          உம்மெ னத்தெ ழித்து ரப்ப வொலிகொள் புள்வி லங்கின்மேல்
               வெம்மை யிற்செ லாது மாரன் விசிகம் விண்ணின் நின்றவே. ......    68

(நிற்ற லோடு மவ்வி)

நிற்ற லோடு மவ்வி யற்கை நின்று நோக்கி நெடியவேள்
     கொற்ற நீடு சூர லொன்று கொண்டு கோபு ரத்தலைத்
          தெற்றி மேலி ருந்த நந்தி தேவர் காப்பும் ஆணையும்
               முற்று நோக்கி நெடிது யிர்த்து ளந்து ளங்கி விம்மினான். ......    69

(விம்மி நந்தி தேவர்)

விம்மி நந்தி தேவர் முன்வி ரைந்து சென்று தாழ்ந்தெழூஉச்
     செம்மை செய்க ருத்த னாய்த்தி கழ்ந்து போற்றெ டுத்தலும்
          இம்ம லைக்கண் வந்த தென்னை யெனஅ யன்பு ணர்ப்பெலாம்
               மெய்ம்மை யாவு ணர்த்த லும்வி னாவி ஈது ளங்கொள்வான். ......    70

(வேத னாதி யான)

வேத னாதி யான தேவர் விழும நோய கன்றிடும்
     ஏது வால்வி டுத்து ளார்க ளிவனை யீசன் யோகுறும்
          போதில் யாவர் வருகி னும்பு காது செய்தி மதனவேள்
               சாத லெய்து வான்வ ரின்த டேலெ னாவி யம்பினான். ......    71

(புன்மை யாம்ப சுத்த)

புன்மை யாம்ப சுத்த டிந்து புரையில் வேள்வி யாற்றியே
     தொன்மை போலெ ழுப்பு மாறு சுருதி சொற்ற வாறுபோல்
          மன்ம தன்ற னைப்ப டுத்து மாதை வேட்டு மற்றதன்
               பின்மு றைக்கண் நல்க எம்பி ரானி னைந்த னன்கொலாம். ......    72

(ஆகை யாலி தருள)

ஆகை யாலி தருள தேயி வன்வ ரத்தும் ஆணையென்
     றோகை யாலு ணர்ந்து வேளை நோக்கி உம்ப ராகுலம்
          போகு மாறி யற்றல் செய்த பொருவி லாத கருணைசேர்
               ஏக நாய கன்றன் முன்ன ரேகல் வேண்டு மோவென்றான். ......    73

(நந்தி தேவன் இனை)

நந்தி தேவன் இனைய வாறு நவில வேயு ணர்ந்துவேள்
     எந்தை கேட்டி யாலி தொன்றெ னக்கொ ரீறு குறுகினும்
          அந்தி வேணி யண்ணல் முன்னம் அணுகு மாற மைந்திவண்
               வந்த னன்ன தற்கி யைந்த வகைமை நல்கு வாயென. ......    74

(இகலு மன்பு மிறை)

இகலு மன்பு மிறையு யின்றி யெவ்வு யிர்க்கு முள்ளதோர்
     புகுதி நாடி முறையி னைப்பு ரிந்து சேர்ப வர்க்குமேல்
          தகுதி செய்து கருணை கூர்ச யம்பு முன்பு சார்தியேல்
               மிகுதி கொண்ட மேலை வாய்தல் மேவி யேகு கென்றனன். ......    75

(என்ற லுங்க ரங்கு)

என்ற லுங்க ரங்கு வித்தி றைஞ்சி மார னேர்புறீஇ
     நன்றி லங்கு வேத்தி ரக்கை நந்தி தேவர் விடைதரச்
          சென்று மேலை வாயில் சார்ந்து தேவ தேவன் நீற்றழற்
               குன்ற மென்ன மோன மோடி ருந்த வெல்லை குறுகினான். ......    76

வேறு

(ஒருதனிச் சிம்புள்)

ஒருதனிச் சிம்புள் வேந்தன் உறைந்தது கண்ட சீயக்
     குருளையின் அமலன் றன்னைக் கோலமால் புதல்வன் காணா
          வெருவரு முளத்த னாகி வியர்த்துமெய் பனியா வுட்கிப்
               பருவர லுழந்து கொண்ட படையொடுங் கடிதில் வீழ்ந்தான். ......    77

(எழுதரு மதனா)

எழுதரு மதனா மேகம் இறைவனைக் கண்டே யஞ்சி
     விழியிருண் மூடக் கோல வில்லிட்டு வியர்ப்பின் வாரி
          மழைபட இடியார்ப் பெய்த மார்புமற் றதுவீழ் கின்ற
               தொழின்முறை புதரங் காட்டத் துளங்கிவீழ்ந் திட்ட தன்றே. ......    78

(அஞ்சிவீழ் குற்ற)

அஞ்சிவீழ் குற்ற மாரன் அறிவிலா தவச மாகத்
     துஞ்சினன் கொல்லோ வென்னாத் துயருழந் தெடுத்துத் தேவி
          கஞ்சநேர் கரத்திற் றாங்கிக் கடிவகை யுய்த்துத் தேற்ற
               நெஞ்சமே லுணர்ச்சி கூட இனையவை நினைந்து நைவான். ......    79

(முறுவலின் எயின்)

முறுவலின் எயின்மூன் றட்ட முதல்வனைப் பொருதி யென்றே
     நறைமலர் அயனு மேனைத் தேவரும் நாகர் கோனும்
          உறுதுய ரகல இங்ஙன் உய்த்தனர் வினையேற் கின்னே
               இறுதிவந் தணுகிற் றாகும் இதற்குமோ ரைய முண்டோ. ......    80

(எண்டகு குணத்தின்)

எண்டகு குணத்தின் மேலாம் இறையவன் இருந்த வண்ணங்
     கண்டலும் வெருவி யாவி காண்கிலன் அவனை யென்கைக்
          கொண்டதோர் கணைகள் வாகை கொள்ளுமோ இனைய பான்மை
               அண்டரும் அயனும் யாரு மறிகிலர் போலு மன்றே. ......    81

(தாக்கினால் வலி)

தாக்கினால் வலிபெற் றுள்ள மருத்தின்முன் தனித்த தீபம்
     போக்கினால் நிற்ப துண்டோ அனையது போலத் தேவர்
          வாக்கினால் மனத்தா லெட்டா வள்ளன்மு னுய்த்தா ரன்னான்
               நோக்கினால் இனிச்சில் போதின் நுண்பொடி யாவன் போலாம். ......    82

(ஏமுற வுலக மெல்லா)

ஏமுற வுலக மெல்லா மீறுசெய் முதல்வன் றன்னைப்
     பூமலர் கொண்டி யானே பொருகின்றேன் நகையீ தன்றோ
          ஆமிது விதியின் செய்கை யதனையார் கடக்க வல்லார்
               தாமரை முதல்வற் கேனுந் தள்ளருந் தகைய தன்றோ. ......    83

(ஈங்கிவை யமலன்)

ஈங்கிவை யமலன் சூழ்ச்சி யாவதோ முடிவ தோரேன்
     தூங்கியான் கிடத்த லொல்லா துண்ணென வெழுந்து வில்லும்
          வாங்கினன் சரமும் பூட்டி வல்லவா றிழைப்பன் ஐயன்
               பாங்குற நின்று மேலே பட்டவா படுக வென்றான். ......    84

(இனையன பலவு)

இனையன பலவு முன்னி யெழுந்துமா மதவே ளிட்ட
     தனுவினை யெடுத்து வாங்கித் தண்மலர் விசிகம் பூட்டி
          மனைவிதன் னகலாள் செல்ல மதிக்குறை தவழ்ந்த சென்னிப்
               புனிதன தொருசார் போகிப் பொருவகை முயன்று நின்றான். ......    85

(மாரவே ளீண்டு நிற்ப)

மாரவே ளீண்டு நிற்ப மனோவதி நகரின் மேய
     ஆரண முதல்வன் றன்னை அமரர்கோன் தொழுது நோக்கிக்
          காருறழ் கண்டன் றன்பாற் காமனை விடுத்தி யன்னான்
               போரிய லுணர்வான் அங்கட் போதரல் வேண்டு மென்றான். ......    86

(சதமகன் இனைய)

சதமகன் இனைய கூறத் தண்மலர்க் கடவு ணேராக்
     கதுமென வெழுந்து வானோர் கணத்துட னனையன் போற்றப்
          பொதிதரு கயிலை யந்தண் பொருப்பின்மே லொருசார் போகி
               மதனியல் தெரிந்து முக்கண் வள்ளலை வழுத்தி நின்றார். ......    87

(எறிதரு கணிச்சி)

எறிதரு கணிச்சிச் செங்கை யீசன்மே லிலக்க நாடுங்
     குறியினர் போல நின்ற கொடுந்தொழில் மாரன் றுஞ்சு
          நெறியினர்க் கச்ச முண்டோ நினைத்தது முடிப்ப னென்னா
               நறுமலர் வாளி ஐந்து நாதன்மேற் செல்ல விட்டான். ......    88

(விட்டவெம் படழி)

விட்டவெம் பகழி யைந்தும் வியத்தகு விமலன் மீது
     பட்டலுஞ் சிறிதே வேளைப் பார்த்தனன் பார்த்த லோடுங்
          கட்டழல் பொதிந்த நெற்றிக் கண்ணது கடிதே காமற்
               சுட்டது கயிலை முற்றுஞ் சூழ்புகை பரவிற் றன்றே. ......    89

(ஆலையஞ் சிலைவேள்)

ஆலையஞ் சிலைவேள் ஆகம் அழல்படக் கயிலை யின்கண்
     ஏலவெம் புகையுந் தீயு மெழுதரு மியற்கை நாடின்
          மாலயன் முதலோர் யாரு மதித்துழி விரைந்து பாலின்
               வேலையின் நடுவு தீய விடமெழுந் தனைய தம்மா. ......    90

(செறிந்ததீப் புகை)

செறிந்ததீப் புகையின் மாலை செல்லலுங் குணபால் வாய்தல்
     உறைந்ததோர் நந்தி தேவன் ஒல்லையி லதனைப் பாரா
          இறந்துபா டாயி னான்கொல் ஏகிய மதன னென்னா
               அறிந்தரோ உடைந்தார்க்*1 கோதி யொருசெய லறைய லுற்றான். ......    91

(நுண்ணிய வுணர்வின்)

நுண்ணிய வுணர்வின் மிக்கீர் நுமக்கிது புகல்வன் எங்கோன்
     கண்ணுத லுமிழ்ந்த செந்தீக் காமனைப் பொடித்த தன்றால்
          அண்ணலை யெய்வ னென்னா அனையவன் றுணிவிற் கூறித்
               துண்ணென ஈண்டு வந்த செயற்கையே சுட்ட போலும். ......    92

(இன்னினி மகிழ்நன்)

இன்னினி மகிழ்நன் றுஞ்சு மியற்கையை யிரதி நாடி
     வன்னிபெய் யலங்கல் போலாய் வயிறலைத் திரங்கி யெங்கோன்
          தன்னைவந் திரப்ப வேளைத் தருகுவன் காண்டிர் அந்த
               முன்னவன் அணுக்கட் காய முறைபுரி யருளா லென்றான். ......    93

(ஐந்தொகை யாற்றி)

ஐந்தொகை யாற்றின் மாடே யமலனை நினைந்து நோற்ற
     நந்தியந் தேவன் இன்ன நவிறலு மவற்சூழ் கின்ற
          அந்தமில் கணத்தோர் கேளா அகிலமுய் பொருட்டா லெங்கோன்
               புந்திகொ ளருளின் செய்கை போற்றெடுத் தனரா யுற்றார். ......    94

(வாவலங் கிள்ளை)

வாவலங் கிள்ளை மான்றேர் மதன்புரி வினையா லன்னான்
     வேவரப் புணர்த்து நோக்கி மிகைபடா தவன்சா ரான
          தேவியை முடிக்கு மாற்றல் செய்திலன் இகல்பற் றின்றி
               மூவரை விடுத்துத் தொன்னாள் முப்புரம் பொடித்த முன்னோன். ......    95

(கண்ணழல் சுடுத)

கண்ணழல் சுடுத லோடுங் காமவேள் யாக்கை முற்றுஞ்
     சுண்ணம தாகி வீழத் துஞ்சினன் போய பின்னை
          அண்ணலம் பகவன் தொல்லை யமைதியின் இருந்தா னெல்லாம்
               எண்ணிநின் றியற்றும் எங்கோற் கினையதோ அரிது மாதோ. ......    96

(பாடுறு கணவன்)

பாடுறு கணவன் செய்கை பார்த்தலு மிரதி யுள்ளங்
     கூடின துயரம் வீந்த கொண்டதொல் லுணர்ச்சி கண்ணீர்
          ஓடின வியர்த்த மெய்மூக் குயிர்த்தன வொடுங்கிற் றாவி
               வீடினள் இவளு மென்ன விரைந்துகீழ்த் தலத்தின் வீழ்ந்தாள். ......    97

(சுரிதரு குடிஞை)

சுரிதரு குடிஞை யாற்றிற் சுழித்தலைப் பட்ட மான்போல்
     பருவரல் வாரி நாப்பட் படிந்துபற் றின்றிச் சோரும்
          இரதிசில் பொழுதிற் பின்ன ரிறந்ததொல் லுணர்வு தன்பால்
               வருதலும் மறித்துச் செங்கை வயிறலைத் திரங்க லுற்றாள். ......    98

வேறு

(செம்பதுமை திருக்குமரா)

செம்பதுமை திருக்குமரா தமியேனுக் காருயிரே திருமால் மைந்தா
     சம்பரனுக் கொருபகைவா கன்னல்வரிச் சிலைபிடித்த தடக்கை வீரா
          அம்பவளக் குன்றனைய சிவன்விழியால் வெந்துடல மழிவுற் றாயே
               உம்பர்கடம் விழியெல்லா முறங்கிற்றோ அயனாரு முவப்புற் றாரோ. ......    99

(முன்னாளிற் புரமூன்று)

முன்னாளிற் புரமூன்று மட்டவன்மேற் பொரப்போதன் முறையோ வென்று
     சொன்னாலுங் கேட்டிலையே அமரர்பணி புரிவதுவே துணிந்திட் டாயே
          உன்னாகம் பொடியாகிப் போயினதே இதுகண்டும் உய்வா ருண்டோ
               என்னாவி யாகியநீ யிறந்தபின்னும் யான்றனியே யிருப்ப தேயோ. ......    100

(மாறாகப் பரமன்)

மாறாகப் பரமன்விழி நின்னாற்ற லிலதாக மற்றுன் மெய்யும்
     நீறாக விண்டெல்லாம் நெருப்பாகக் கவலைவிண்ணோர் நெஞ்சத் தாக
          ஆறாத பெருந்துயர மெனக்காக எங்கொளித்தாய் அருவா யேனுங்
               கூறாயோ வறிந்திருந்தாய் என்கணவா யான்செய்த குறையுண் டோதான். ......    101

(உம்பர்கடம் பாலே)

உம்பர்கடம் பாலேயோ இந்திரனார் பாலேயோ வுன்னை யுய்த்த
     செம்பதுமத் திசைமுகத்தோன் பாலேயோ அரன்செயலைச் சிதைப்ப னென்னா
          இம்பரிடை வல்விரைந்து வந்திடுநின் பாலேயோ ஈசன் கண்ணால்
               வெம்பொடியாய் நீயிறந்த இப்பழிதான் எவர்பாலின் மேவிற் றையோ. ......    102

(வில்லான்முப் புரமெரி)

வில்லான்முப் புரமெரித்த பரம்பொருள்யோ கந்தவிர்க்க வேண்டில் விண்ணோர்
     எல்லாரு மிறந்தனரோ என்கணவா நீயோதான் இலக்காய் நின்றாய்
          கொல்லாது போலவுனைக் கொன்றனரே என்னுயிர்க்குங் கொலைசூழ்ந் தாரே
               பொல்லாத பேர்க்குநன்றி செய்வதுதம் முயிர்போகும் பொருட்டே யன்றோ. ......    103

(என்னபவஞ் செய்தே)

என்னபவஞ் செய்தேனோ என்போல்வார் தமக்கென்ன இடர்செய் தேனோ
     முன்னையுள விதிப்பயனை யறிவேனோ இப்படியே முடிந்த தையோ
          கன்னல்வரிச் சிலைபிடித்த காவலவோ தமியேனைக் காத்தி டாயோ
               வன்னிவிழி யாவுடைய பெருமானை நோவதற்கு வழக்கொன் றுண்டோ. ......    104

(பொன்செய்தார் முடி)

பொன்செய்தார் முடிகாணேன் அழகொழுகுந் திருமுகத்துப் பொலிவு காணேன்
     மின்செய்பூ ணணிகுலவும் புயங்காணேன் அகன்மார்பின் மேன்மை காணேன்
          கொன்செய்பூங் கணைகாணேன் சிலைகாணேன் ஆடல்புரி கோலங் காணேன்
               என்செய்வேன் என்கணவா என்னையொழித் தெவ்விடத்தே யிருக்கின் றாயே. ......    105

(அந்நாளி லழற்கடவுள்)

அந்நாளி லழற்கடவுள் கரியாக வானவரோ டயன்மால் காணப்
     பொன்னாரு மங்கலநாண் பூட்டியெனை மணஞ்செய்து புணர்ந்த காலை
          எந்நாளு மினியுன்னைப் பிரியலமென் றேவாய்மை யிசைத்தாய் வேனில்
               மன்னாவோ மன்னாவோ எனைத்தனியே விட்டேகல் வழக்கோ சொல்லாய். ......    106

(போவென்று வரவிட்ட)

போவென்று வரவிட்ட தேவரெலாம் பொடியாகிப் போனவுன்னை
     வாவென்று கடிதெழுப்ப மாட்டாரோ நின்றாதை வலியனென்பார்
          ஓவென்று நானிங்கே யரற்றிடவும் வந்திலனால் உறங்கினானோ
               வேவென்று நின்சிரத்தில் விதித்திருந்தால் அவரையெலாம் வெறுக்க லாமோ. ......    107

(நேயமொடு மறை)

நேயமொடு மறைபயிலுந் திசைமுகனைப் புரந்தரனை நின்னைத் தந்த
     மாயவனை முனிவர்களை யாவரையும் நின்கணையான் மருட்டி வென்றாய்
          ஆயதுபோல் மதிமுடித்த பரமனையும் நினைந்திவ்வா றழிவுற் றாயே
               தீயழலின் விளக்கத்திற் படுகின்ற பதங்கத்தின் செயலி தன்றோ. ......    108

(தண்பனிநீர்ச் சிவிறி)

தண்பனிநீர்ச் சிவிறிகொண்டு விளையாடி மலர்கொய்து தண்கா நண்ணி
     எண்படும்பூம் பள்ளிமிசைச் சிறுதென்றல் கவரிகளா யினிது செல்ல
          வெண்பளித நறுஞ்சாந்தச் சேறாடி இருவருமாய் விழைந்து கூடிக்
               கண்படைகொண் டமர்வாழ்வும் பொய்யாகிக் கனவுகண்ட கதையா யிற்றே. ......    109

(மருகென்றே அவமதி)

மருகென்றே அவமதித்த தக்கனார் வேள்விசெற்ற வள்ள றன்னைப்
     பொருகென்றே தேவரெலாம் விடுத்தாரே அவராலே பொடிபட் டாயே
          எரிகின்றேன் உனைப்போல ஆறாத பெருந்துயரால் யானு மங்கே
               வருகின்றேன் வருகின்றேன் என்னுயிரே யெனப்புலம்பி வருந்து கின்றாள். ......    110

ஆகத் திருவிருத்தம் - 601
* பா - ம் 1 - அடைந்தார்க்.previous padalam   4 - காமதகனப் படலம்   next padalamkAmadhaganap padalam

previous kandam   1 - உற்பத்தி காண்டம்   next kandam1 - uRpaththi kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]